எஸ், ராமகிருஷ்ணன்
2007 ஆண்டு மௌனியின் நூற்றாண்டுவிழா. ஆனால் புதுமைப்பித்தன் போல மௌனி பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. ஒரு வேளை மௌனி எந்த இலக்கியக் குழுவையும் சேராமலிருந்தது இதற்கு காரணமாக இருந்திருக்க கூடும். மௌனியின் படைப்புலகம் குறித்து சமகாலப் பார்வைகளுடன் கூடிய விமர்சனம் இன்று தேவையாக உள்ளது.
ஒரு முறை ஜெயகாந்தனிடம் அவருக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக சொன்னபோது அவர் மௌனியின் கதையைத் தேர்வு செய்ததோடு, தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது சக எழுத்தாளர்கள் போல இலக்கியச் சர்ச்சைகள், விவாதங்களை விட்டு ஒதுங்கி மௌனி மிகத் தனிமையாகவும், அகநெருக்கடியோடுமே வாழ்ந்திருக்கிறார். அவரது விருப்பம் எழுத்து சார்ந்து இருந்த போதும் அவர் தன்னை முன்நிறுத்த எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மௌனி தஞ்சாவூர் மாவட்டத்தின் செம்மங்குடியில் பிறந்தவர். கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பதிநான்கு வருடம் கும்பகோணத்திலும் பிறகு சிதம்பரத்திலும் வசித்தவர். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.மணிக்கொடியில் எழுதியவர்.
மௌனியின் எழுத்து இவ்வளவு கொண்டாடப்பட வேண்டியதில்லை என்ற பொதுவிமர்சனம் இன்று எழுந்துள்ளது. மறுபக்கம் மௌனியைச் சாதீய அடிவருடி என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஆனால் இவை அவரது எழுத்தின் வலுவை எந்த விதத்திலும் குறைந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.
மௌனி அதிகம் எழுதியவரில்லை. இருபது கதைகளுக்குள்ளாகவே எழுதியிருக்கிறார். ஆனால் அவருக்கு சிறுகதை குறித்த கச்சிதமான வடிவம் கைகூடியிருக்கிறது. அது போலவே கதையின் வழியே யதார்த்த உலகின் பிரச்சனைகளைக் கையாளுவதற்குப் பதிலாக காண் உலகிலிருந்து நழுவிச்செல்லும் மனநிலையை மௌனியின் கதைகள் முன்வைக்கின்றன. மௌனியோடு கொஞ்ச துரம் என்று எழுத்தாளர் திலிப்குமார் இலக்கியச் சிந்தனைக்காக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். மௌனியின் புனைகதைகளை அறிந்து கொள்ள அது ஒரு சிறந்த புத்தகம்.
மௌனி கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அவரது சமகால உலக எழுத்தாளர்களின் கதைகளில் இருந்த அதே மொழி வளம் மற்றும் நுட்பமிருப்பதை உணர முடிகிறது. மௌனி ஏன் ஒரு பிம்பமாகவே அறியப்பட்டுவருகிறார் என்பதற்கான முக்கிய காரணம். சிறுகதை குறித்து இதுவரை நமக்குள் உள்ள முடிவுகளும் அது சார்ந்த எதிர்வினைகளுமே.
பொதுவாகச் சிறுகதையை நாம் மிக எளிமையான இலக்கிய வடிவமாகவே எடுத்துக் கொள்கிறோம். அத்தோடு கதையின் வழியாக என்ன சொல்ல வருகிறோம் என்ற முடிவை நோக்கியே கதையை முன்னெடுத்து செல்கிறோம். அத்துடன் அன்றாடப் பழக்கத்தில் உள்ள மொழியும் விவரிப்புமே சிறுகதை என்று நம்புகிறோம்.
ஒருவிதத்தில் இது சரியானது.ஆனால் இவை மட்டும் சிறுகதைகள் அல்ல.சிறுகதை எளிமையான இலக்கிய வடிவமும் அல்ல. மாறாக சிறுகதை இன்று உலகம் முழுவதும் புனைவின் எல்லையற்ற சாத்தியங்களுக்கான வெளியாகவே அறியப்படுகிறது.
சிறுகதையும் கவிதையைப் போல மொழியின் நுட்பமும் பல தளங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களும் கொண்டிருக்க முடியும். அது போலவே உரையாடல் என்பது சிறுகதையின் மிக அவசியமான ஒன்றல்ல என்று பல முக்கியக் கதைகள் சாட்சி சொல்கின்றன.
நமது நவீன சிறுகதை குறித்த பிரக்ஞை ருஷ்யக் கதைகளின் வழியாகவும் பிரெஞ்சு கதைகளின் வழியாகவுமே உருவாக்கபட்டிருக்கிறது. தமிழ்க் கதைமரபிலிருந்து நமது கதைஎழுத்து உருவாக்கபடவில்லை. குறிப்பாக மாபசான் மற்றும் ஆன்டன் செகாவ்; தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய். கார்க்கி, கோகல். இவர்கள் சிறுகதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட அனுபவங்களின் சந்திப்பு வெளியாகவே எழுதினார்கள். சிறுகதை என்ற வடிவம் குறித்து இவர்கள் அணுகுமுறை வேறுவிதமாகவே இருந்தது. அதனால் தான் டால்ஸ்டாய் தனது ஒரு சிறுகதையை ஐம்பது அறுபது பக்கம் எழுதுகிறார்.
ஆனால் உலகமெங்கும் காப்காவும், காம்யூவும், ஹெமிங்வேயும், பாக்னரும் நவீன சிறுகதைகளுக்கு முன்மாதிரி கலைஞர்களாக கொண்டாப்படுகிறார்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்களில் புதுமைபித்தன் உலக இலக்கியங்களின் பரிச்சயம் கொண்டவர். மௌனிக்கும் தீவிரமான உலக இலக்கியப் பரிச்சயம் இருந்திருக்கிறது. அவர் ராபர்ட் ம்யூசிலின் நாவலைப் பற்றி அடிக்கடி சொல்வார் என்று பிரமிள் குறிப்பிடுகிறார். அது போலவே காப்காவின் எழுத்தோடு நெருக்கம் இருந்திருக்கிறது. ஆனால் இவை எதுவும் மௌனியின் எழுத்தை உருவாக்குவதில் காரணியாக இல்லை, மாறாக சிறுகதை என்ற வடிவம் குறித்த கச்சிதம் உருவாகத் துணை செய்திருக்கின்றன.
மௌனியின் கதையுலகம் நேரடி சம்பவங்களின் வழியே அதைக் கடந்த மனநிலையை விவரிப்பவை. குறிப்பாக உள்ளார்ந்த மௌனத்தையும்,வெளிப்படுத்த இயலாத உணர்வு எழுச்சிகளையும், இருப்பு சார்ந்த புதிர்மையையும் முன்வைக்கின்றன. கதை நிகழும் பின்புலத்தை விவரிப்பதில் கவித்துவமும் புதிர்மையும் கொண்டிருக்கிறார் மௌனி. அவரது சிறுகதையில் வரும் மாலை நேரம் நம் கண்முன்னே கடந்து போன மாலை நேரமல்ல. அந்தக் கடற்கரையும் காற்றும் பறவைகளும் கூட நாம் அறியாதது போன்றே வர்ணிக்கபடுகிறது. குறிப்பாக கோவில்களும் அது சார்ந்த மனவெழுச்சிகளும் மிக முக்கியமானவை.
அவரது கதைகளின் வழியே நிறைவேறாத காதலும் சாவும் முக்கிய அனுபவமாக தொடர்ந்து வருகிறது. காதல், சாவு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஏதோவொரு பிரிக்க முடியாத பந்தம் கொண்டிருக்கிறது. சாவைக் கடந்து செல்வதும், அதன் உக்கிரத்தால் எழுந்த மனச்சிதறல்களை பகிர்ந்து கொள்வதிலும் மௌனி அதிக அக்கறை கொள்கிறார். அவரது ஆரம்பக் கதைகளில் கூட சம்பிரதாயமான கதை சொல்லல் கிடையாது. அவரது சக எழுத்தாளர்கள் இவரைக் கண்டு மிரண்டு சித்தரைப் போல இவரை அணுகியதற்கு காரணம் மௌனி புனைவின் மீது கொண்டிருந்த அதீத ஈடுபாடும் தனித்துவமான பார்வைகளுமே .
மௌனி கதைகளை வாசிக்கும் போது அவை நேரடியான ஒற்றை அனுபவத்தைத் தருவதில்லை. மாறாக கவிதையைப் போல நமக்குள் உறைந்து போன அகவுணர்வுகளை மீட்டெடுக்கத் துவங்குகிறது. அத்தோடு வாசிப்பவனின் கற்பனைக்கு அதிக இடம் தருகிறது. நிழல்கள் குறித்த மௌனியின் விவரிப்புகள் கவிதையின் உயர்வு நிலை என்று சொல்லலாம்.
மௌனியின் சிறந்த கதைகளாக நான் கருதுவது அழியாச்சுடர் மற்றும் மனநிழல் இரண்டும் கதைகளின் வழியே பல்வேறு ஆழ்ந்த அனுபவங்களை உருவாக்குகின்றன. மௌனியின்சிறுகதைகள் ஆங்கிலத்தில் கதா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழில் பீகாக் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் மௌனி கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும். அத்தோடு சமகால சூழலில் மௌனி குறித்த மீள்பார்வைகள் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அவரது எழுத்திற்கு நாம் காட்டும் மரியாதையாகும்
0 comments:
Post a Comment