விக்ரமாதித்யன் நம்பி
கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது
*****
வினோத ரசமஞ்சரி
எல்லோருக்கும்
வாய்ப்பதில்லை மொழி
அதுவும் கவிதைமொழி
அமைவது பெரும்பேறு
கவிதை மொழியே
கவித்துவம் போல
யாருக்குக் கொடுக்கலாமென
பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள்
நூலறிவாளர்களை
நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான்
மரபறியாதவர்களை
பெரிதாய் மதிப்பதில்லை
ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களை
ஒரு பொருட்டாய் கருதுவதில்லை
மொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்
மடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்
****
பாவக்கதை
உன்னைப் பார்க்க
பாவமாகத்தான் இருக்கிறது
ஆனால்
அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது
அவன்
பார்க்க பாவம்தான்
எனில்
ஒன்றும் செய்வதற்கில்லை நான்
ஐயோ பாவம்
அவள்
அதற்கு
என்ன செய்ய முடியும்
பாவம்தான்
இவள்
நான்
என்ன செய்ய
என்ன தெரியுமா
பாவத்தைக் கட்டிச் சுமக்கமுடியாது
நானே பாவம்
உருகிவழிதல் மட்டுமல்ல உண்மை
உறைந்துபோதலும்தான்.
******
எந்த போதையிலும்
சங்கப் பாடல்கள்
திரும்பத்திரும்ப
சுழன்றுகொண்டிருக்கின்றன மனசுள்
சிலம்பின் வரிகள்
சிந்தையிலேயே
குடிகொண்டுவிட்டன எப்பொழுதோ
திருநாவுக்கரசு சுவாமிகள் போல
தேடினாலும்
கிடைக்கமாட்டான் ஒரு கவிஞன்
திரிகூடராசப்பகவிராயர்க்கு
யார்
சொல்லித் தந்திருப்பார்கள் கவிதை
பாரதி
ஒரு
கவிஞானி
கண்ணதாசன்
குற்றாலப்
பேரருவிதான்
பிறகு
எவர் வந்திருக்கிறார்
சிறுகுயிலே
*******
கவிதை
என்ன
நிறம் கேட்டார்கள் ஐயா
வெள்ளையா
இதோ எடுத்துக்கொள்ளுங்கள்
பச்சையா
வேண்டும்
இரண்டொரு நாள் கழித்து
வந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்
சிவப்பா
தோழரே
செய்வதற்கு
ஒரு பத்து நாளாகுமே
கறுப்பா
கொஞ்சம் கஷ்டம்
சற்று அவகாசம் தந்தால்
வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா
மஞ்சளா
திட்டுவார்களே அப்பா
சரி தருகிறேன்
நாலு நாள் பொறுங்கள்
நீங்கள் சொன்னது
நீலம்தானே
அடுத்த வாரம் தருகிறேன்
அன்பரே
என்ன நிறத்தில்
எப்பொழுது வேண்டும் சொல்லுங்கள்
உடனுக்குடன் செய்து தருகிறேன்
உங்கள் விருப்பம் போல
தரம்
நன்றாய் இருக்கும்
விலை கூட என்று
யோசிக்கக் கூடாது சரியா
****
மேலும் மேலும்
மேலும் மேலும்
குழப்புகிறார்கள்
மேலும் மேலும்
கொள்ளையடிக்கிறார்கள்
மேலும் மேலும்
நோகடிக்கிறார்கள்
மேலும் மேலும்
கவலையூட்டுகிறார்கள்
மேலும்மேலும்
யோசிக்கவைக்கிறார்கள்
மேலும்மேலும்
தொந்தரவுபடுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கலவரப்படுத்துகிறார்கள்
மேலும்மேலும்
பதறச்செய்கிறார்கள்
மேலும் மேலும்
கேள்வி கேட்கிறார்கள்
மேலும் மேலும்
விமர்சிக்கிறார்கள்
மேலும் மேலும்
பயப்படுத்துகிறார்கள்
மேலும் மேலும்
கோபம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
பொய்சொல்கிறார்கள்
மேலும்மேலும்
கோழையாகிறார்கள்
மேலும் மேலும்
வாழவே விருப்பம் கொள்கிறார்கள்
மேலும்மேலும்
சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்
மேலும் மேலும்
என்ன இருக்கிறது
மேலும் மேலும் எனும்
மனசுதான்
மேலும் மேலும்
என்ன எழுத.
****
கூட்டுக் கவிதை
காக்கைப்பாட்டு
காகமே எங்கே போனாய் நீ
எங்கேயும் போகவில்லை காகம்
எங்கே போனாலும்
கூடு திரும்பிவிடும் அந்திக்கு
காகமே எங்கே போனாய் நீ
பொன்மாலைப் பொழுதுகளை இழந்து
போகப் போகிறாயா நீ
இழந்ததெல்லாம் என்றும்
இழப்புதான் காகமே
இழக்காதே எதையுமே நீ
காகமே எங்கே போனாய் நீ
துணை தேடிப் போனாயா நீ
துணைதேடி அவ்வளவு
தூரம் போயிருக்க முடியாது
எங்கே போனாய் நீ
எல்லோரும் கலக்கமுறும்படி
காகமே எங்கே போனாய் நீ
காகத்துக்குத் தெரியும்
காகத்தைப் பற்றி
கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது
காகமே எங்கே போனாய் நீ
காகம் உள்ளூர்தாண்டிப் போகாது
காகத்துக்கு என்ன கவிதை
காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்
காகமே எங்கே போனாய் நீ
குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில்
கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை
கொத்தித் திங்கப் போனேன் போ
சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல்
மிச்சமிருக்கு எனக்கு போ
புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே
பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ
என்று சொல்வாயோ
திருநெல்வேலி மண் விட்டுப் போக
பிரியப்படாத காகம் நான்
மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்
லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான்
என் இஷ்டதெய்வம்
போடா போ போக்கத்தவனே போ
என கரையும் காகமே எங்கே போனாய் நீ
கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே
கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே
கேட்பது சுலபம் கிழவி போல
கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று
கேட்டு நீ இம்சிக்காதே
குஞ்சுமுகம் தேடுது
கூடு செல்ல நேரமாகுது
கொண்ட ஜோடி நினைவு வாட்டுது
கோபித்துக் கொள்ளாதே
போய் வருகிறேன் நான்
(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.கேள்விகள் எம்.டி.எம். உடையவை. பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை--விக்ரமாதித்யன் நம்பி)
******
0 comments:
Post a Comment