Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

தேவதேவன் கவிதைகள் : வீடு

Labels: ,

தேவதேவன்

1. வீடும் வீடும்

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒருகாலத்தில்
என்னை ஓய்வு கொள்ள விடாது
வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்தநூல்சேலையிலும்
உருக் கொண்டது
எப்போதும் நம் லட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல
நாம் ஒருக்காலும்
இருந்ததில்லை என்பதையும் .
----------------------------------------------------------------
131oldhousekerala2

2. வீடுகள்

வீதிவலைக் கண்ணிகளோ
இந்த வீடுகள் ?
கல்முகங்கள் சில வீடுகளுக்கு
சினேகத்தை பின் ஒதுக்கி
நாய்க்குரலில் வரவேற்கின்றன அவை
வீதியில் நடந்து செல்லும் மனிதனை
சந்தேகத்தோடும் அச்சத்தோடும்
நோக்குபவை
வீதியில் நடந்து செல்லும்
ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்
எளிய வீடுகளும் உண்டு
யாத்ரீகனோ தன் வீட்டை
எப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்
மலயுச்சி மீதிருக்கையிலோ
பறவைப்பார்வையில் பிடிக்கப்பட்ட
புகைப்படமொன்றிலோ
இந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்
தோன்றுகின்றன
சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்
தம் குறிக்கோளை அடைந்ததுமான
சாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்
படகுகள் போலவும் தோன்றுகின்றன
----------------------------------------------------------------

3. இரண்டுவீடுகள்

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.
மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.
----------------------------------------------------------------
4. அந்த இசை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை
புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை
வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்
விடியும்வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்
----------------------------------------------------------------
5. மொட்டைமாடிக்களம்

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை
----------------------------------------------------------------6.குருவிக்கூடு

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி
----------------------------------------------------------------
7. மரத்தின் வடிவம்

சிவந்த பூக்களுடன்
ஜன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்
கூரைமீதுகுனிந்து
உச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்
வாயிலை நோக்கி தாழ்ந்த
கிளை அசைவு உன் அழைப்பு
இமையாத விழிப்புடன்
இடம் பெயராஅத இருப்புநிலையில்
காணுகிறது உன் நித்தியத்துவம்
உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே
அக்கூரைமீது
ஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பி
முன்னேறினேன்
வெட்டப்பட்டு
இரத்தம் கொட்டும்
உன் மொட்டைவிரல்
மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி
திடுக்கிட்டு
இனி நான் என்ன செய்வது
என துடித்துக் மொண்டிருக்கையில்
அம்மொட்டை விரலை சுற்றிலும்
வீரிட்டு முளைத்திருந்தன
புதுத்தளிர்கள் .

----------------------------------------------------------------
8. உனது வீடு

நீ இளைப்பாற தேர்ந்தெடுத்த
மரத்தடியா,
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ்மண்டபமா,
எது உன்வீடு ?
இவை எல்லாமுமேவா ?
உனது வீட்டில்
உனது பிணத்தை நாடியே
உன்னோடு குடியேறியதுதான்
அந்தபிசாசு என நீ அறிவாயா ?
உனது வீட்டின் இருளை துடைப்பது
சூரியன் இல்லையா ?
சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?
உன் வீட்டை கடந்துசெல்லும்
மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?
நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?
சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?
பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?
புறப்பட்டுவிட்டாயா
உனது மக்களை விட்டுவிட்டா ?
அவர்கள் விழிக்கும் முன்
ஒருபுதிய பொக்கிஷத்துடன்
வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனா
அல்லது இந்த துறவேதானா
அந்த அரிய பொக்கிஷம் ?
போய்க் கொண்டிருக்கிறாயா ?
சரி
ஆனால்
எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்
வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும் பூமி
----------------------------------------------------------------
9. ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
----------------------------------------------------------------

கண்ணன் - லா.ச.ரா

Labels: , ,

லா.. ராமாமிருதம்

கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.

சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக் கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று 'க்ரீச்.....க்ரீச்..... ' என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களின் சலசலப்பு....

கண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம் ?.....

கல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய்சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.

கண்ணன் பரிஷையில் 'பெயில் '. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு 'பகீர் ' என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய், வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் 'சார், நான் பாஸா ? ' என்று கேட்டான். தொண்டை பக் பக் பக் பக்----

'பாஸா ? பாப்பாஸ்தான் ' நீ எங்கேடா பாஸ் ஆறது ? எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண்டிருக்கே ' ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு. அடிக்கறதுக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. 'ஹ்உம் ' ன்னா அரையோட போயிண்டுடறே '

'வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை தட்டுக்கெட்டுப் போறது ? இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்.... '

அவனுக்கு இதெல்லாம் புரியவில்லை. இப்போது ஒன்று தான் புரிந்தது. அவன் 'பெயில் '.

la_sa_ra வீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா ? தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே....நடுமுதுகிலே 'ஐஸ் 'வெச்சாப்போலே சில்லுன்னு அப்புறமும் கீழேஇறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை ஜாட்டியிலே இருவத்தியெட்டுஅடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம் அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா....அன்னிக்குக்கூட அப்படித்தான்.... அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே அன்னிக்கு....

தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபகமில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு.

மழை 'ஜோ 'வென்று கொட்டித்து ராத்திரி.

அம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும், குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி...பசியான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணிக் குடிச்சுட்டு இருக்க முடியும் ?

கதவு திறந்தது. அப்பொழுதான் மாமாவை முதல் முதலாகப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராத்தலைத் தூக்கிப்பிடிச்சுண்டு இன்னொரு கையைக் கதவின் மேல் வெச்சுண்டு பின்னால் இருட்டில் முஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.

'அண்ணா---- '

மாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன் ? மாமா முழியைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். மாரிலே ஐஸ் வெச்சாப்போல் ஏற்கெனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.

மாமா, அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா ? தெரியல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு, டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னம்மோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே தூக்கிண்டு கோணிண்டு---

'அண்ணா ' ' ---அம்மா குரல் கேக்கவே மாட்டேன்கறது.

'யாரு நீயா ? '

மாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது--- அதைவிட சுறீல்---

'ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன் ? குழந்தையும் கையுமா நிக்கறேன்--- '

'பேஷ் சுமை வேறையா ?--- '

'அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது.... '

அப்புறம் அதிகமாய்ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற்போலிருந்தது.... அப்புறம் சாப்பிட்டாற் போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள், ---துணுக்குகள்--- தண்ணியிலே போறாப்போல....

'சரி இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே ? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா ? '

அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா ? அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா----

'அண்ணா சொல்லாலே வதைக்காதே அவாபோயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா--- '

'மாப்பிள்ளை எந்த ஆபீஸஉக்குப் போயிட்டுவந்தாரோ ? '

'ஹோட்டல்லே வேலை. ' அம்மாகுரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. 'வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்--- '

'ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு ? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ' பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா ? நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா ? '

'அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸஉ வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண ?--- '

'ஆமாண்டி, இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா ? ' அப்புறம் தெரியவில்லை, அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து.... அப்புறம் ஞாபகமில்லை. மூடின கண்ணுக்குள்ளே மெத்து மெத்துன்னு ஒரே ரோஜா சிவப்பு அதுக்குள்ளே அமுங்கிப் போனதுதான் தெரியும் அவ்வளவுதான்.

அப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப் போய்விட்டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில், கண்மேல் ஒண்ணு ரெண்டு 'சுறீல், சுறீல் ' நெருப்புப் பொறி.

அம்மா ஏன் அழறாள் ? அம்மாவுக்கு மார் வெடிச்சுடுத்தா ? அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்கலாமா வேண்டாமா, என்ன கேக்கறது எப்படி கேக்கறதுன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துன்னு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே, ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.

அம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுக்கூடத் திணறும் அது பிரியமா, அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, தான் அவளைக் கட்டிக்கற மாதிரி தன்னைக் கட்டிக்கறாளா ? கால்சறுக்கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அது மாதிரி என்னைப் பிடிச்சுக்கறாளா '

ஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப்போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா ? இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் ? எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா ? தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தானே தோச்சுப் போட்டிருக்கா ?

பள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.

'என்னம்மா ' என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே ? '

அதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: 'மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காஷி. ' இதென்ன பாஷையோ ? அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக்கொண்டால் தேவலை நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கிறான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.

அப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகாயிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தாள், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமாயிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர். பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போ எல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள், தூனிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு......

சாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு நாள் கத்துவார். 'பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ ? தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா ? '

ஆனால், அம்மா பதில் பேசறதில்லை.

அப்புறம், ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

'கண்ணா, வா--- ' என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க் கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, 'போ 'ன்னாள்.

ஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் 'போயிட்டுவா ' என்பாள். இன்னிக்கு 'போ ' ன்னு மாத்திரம் சொன்னாள்.

அவன் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, 'அம்மங்கா, அம்மஞ்சி எல்லாரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு ' என்று அழைச்சுண்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்ந்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரிசிப் பாயஸம்; அப்புறம் பத்து பன்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.

என் அம்மா எங்கே ? அம்மா எங்கே மாமா ?

கொஞ்ச நாளைக்கு 'இதோ கொல்லைப்புறம் போயிருக்கா, இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா, இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா ' எல்லோரும் சாக்கு சொல்லி அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கல்லே. அவாளும் சொல்லல்லே. அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒத்தர் ரெண்டுபேர் 'த்ஸோ, த்ஸோ 'ங்கறா ரெண்டுபேர் 'சரிதான்; நாடோடி பயலுக்கு 'த்ஸோ ' ' என்ன வேண்டியிருக்கு ' என்கறா.

'குழந்தை என்ன பண்ணுவான் ? பெத்தவாபாவம் அவா பெத்ததன் தலை மேலேன்னு சரியாய்போச்சு. ' இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போத்தான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது...... அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி.......

'அம்மா '---- ' என்றான் கண்ணன். ஒரே இருட்டு......

'அம்மா ' '

அம்மா கிட்டத்தான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம்மாயிருக்கும் ' தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.

'அம்மா ' ' தூக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.

'அம்மா ' '

மலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சரியம் நிலா நடுவில் அம்மா முகம் '

'அம்மா ' அம்மா ' ' ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா 'நிலாவிலிருந்து ' குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.

'இதோ இருக்கேனடா கண்ணா '---அட அசடே, என்னடா இப்படி அழறே ?..... நான் எங்கேயும் போகலேடா---- நிஜமாத்தான்--- எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணாமூச்சி விளையாடினேன். அதுக்குள்ளே நான் காணாமே போயிட்டேன்னு கனாக்கண்டிருக்கே தோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு.....

'கண்ணா 'வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டான். 'கண்ணா 'வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெட்கமா வந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.

மறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர்மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.

'கண்ணா-----கண்ணா----டேய், எழுந்திருடா. ' ஆனால், அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.

முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்.

பொய் சிரிப்பு

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் -கதாவிலாசம்
ஜி.நாகராஜன்


நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, gnagaranஅவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் தலையசைத்தாள்.

ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கடகடவெனக் குடித்தாள். தண்ணீர் அவளது கழுத்திலிருந்து வழிந்தோடியது. இப்போது முகத்தில் சிரிப்பு துளிர்க்கத் துவங்கியது. விற்பனைப் பெண்களுக்கு என்றே ஒரு சிரிப்பு இருக்கிறது. அல்லது, அவர்கள் அப்படி சிரிக்கப் பழக்கப் படுத்தப்படுகிறார்கள். அந்தச் சிரிப்பு ஒரு காகிதத்தில் வரையப்பட்ட சித்திரம் போல அளவாகவும், சரியாகத் தோன்றி சரியாக நிறுத்தப்படு வதாகவும் இருக்கும். அதைப் பார்க்கும்போது, எவ்வளவு மில்லி மீட்டர் வாயைத் திறந்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்றுகூட பழக்கிவிடுகிறார் களோ என்று சற்று ஆத்திரமாக வும் இருக்கும்.

ஆனால், என் முன் நிற்பவள் முகத்தில் சிரிப்பு, பாலில் ஆடை மிதந்துகொண்டு இருப்பது போல உதட்டோடு ஒட்டி இருந் தது. வீட்டில் யாருமில்லையோ என்பதைக் கண்டுகொண்டவள் போல, ‘ஊருக்குப் போயிருக் காங்களா சார்?’ என்று கேட்டாள். தலையாட்டினேன். அவள் பார்வையில் நாற்காலி யில் கிடந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்க வேண்டும். தலை யைக் கோதியபடியே, ‘அந்த புக்கை பார்க்கலாமா?’ என்று கேட்டாள்.

நான் அந்தப் புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத் தேன். அது ஆதவனின் காகித மலர்கள். அவள் மிக ஆசையுடன் அதைப் புரட்டிப் பார்த்தபடி, ‘எனக்கு தி.ஜானகிராமன் எழுத்து ரொம்பப் பிடிக்கும் சார். படிச்சிருக்கேன்’ என்றபடி, அடுத்து எங்கே போவது என்று யோசித்தாள். ஆச்சர்ய மாக இருந்தது. தி.ஜானகிராமன் படித்த விற்பனைப் பிரதிநிதி ஒருத்தியை முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவ ளிடம் ஏனோ பேச வேண்டும் போல இருந்தது. ‘உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்குமா?’ என்று கேட்டேன்.

இதை எதிர்பாராத அவள், குடத்து தண்ணீர் விளிம்புக்கு உள்ளாகவே ததும்பிக் கொள்வது போன்று உதட்டுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு சிரித்த படியே, ‘இது தொழில் சார்! எனக்கு டீ குடிக்கத்தான் பிடிக்கும்’ என்றாள். ‘ஆமாம், இந்த வெயிலில் டீ குடிப்பது இதமாகத்தான் இருக்கும்’ என்று நான் சொன்னதும், உதட்டில் கரை தட்டி நின்ற சிரிப்பு வெளிப்பட்டு விட்டது. Ôஇப்போ இல்லை சார்! சாயங்காலம் குடிப் பேன். ஆனா, வழியில எங்கா வது டீக்கடையில நின்னு டீ குடிக்கலாம்னா ஒரே தொல்லையா இருக்கு. பொம்பளை ரோட்ல நின்னு டீ குடிக்கக் கூடாதாம். ஓட்டல்ல போயி காபி சாப்பிடச் சொல்றாங்க. இவங்க அசிங்கமா ரோட்ல நின்னு ஒண்ணுக்குப் போறது தப்பில்லையாம். நாங்க டீ குடிச்சா தப்பாம்!Õ என்றாள்.
அந்தக் கோபம் உண்மையாக இருந்தது. உண்மை தானே! கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சார வேலி பெண்களை நுழையவிடா மல் எத்தனையோ இடங் களில் தடுத்துக்கொண்டு தானே இருக்கிறது! விற்ப னைப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்டாள்... Ôஉங்க டாய்லெட்டை நான்கொஞ் சம் யூஸ் பண்ணிக்கலாமா?Õ
‘தாராளமாக!’ என்றேன்.

ஐஸ்கிரீம் பேக்கை ஓர மாக வைத்துவிட்டு, உள்ளே சென்றாள். விளக்கிச் சொல்ல முடியாத ஆயிரம் பிரச்னைகளை சுமந்துகொண்டுதான் விற்பனைப் பிரதிநிதிகள் தெருக்களில் அலை கிறார்கள். நினைக்கை யில் மாநகர் மீது ஆத்திர மாக வந்தது. சுகாதாரமான கழிப்பறைகளைக்கூட உருவாக்கித் தர முடியாத இந்த நகருக்கு எதற்காக இத்தனை பேர் தினமும் வந்து குவிகிறார்கள்?
விற்பனை பிரதிநிதியின் முகத்தில் ஈரம் வழிந்தது. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்!’ என்றவள், Ôரெண்டு வருஷமா இந்த வேலை பாக்குறேன். வீடு வீடா நடந்து கால் தேய்ஞ்சு போச்சு சார்! அது கூடப் பரவாயில்லை... தனியா வர்ற பொண்ணு தானேனு பல்லை இளிக்கிறாங்க பாருங்க, அதைத்தான் சகிக்க முடியலை. அப்படியே பல்லைத் தட்டி உடைக்கலாமானு வருது. ஒரு நாள் வேலை செஞ்சா ஐம்பது ரூபா கிடைக்கும். அதுக்குத் தெரு நாய் போல அலையுறோம். இருபது வயசு ஆனாலும் சரி, அறுபது வயசு ஆனாலும் சரி... ஆம்பிளைப் புத்தி ஒண்ணுதான் சார். பொம்பளைன்னா வாயிலே தானா எச்சில் ஒழுகுது பாருங்க. சகிக்க முடியலைÕ என்றபடி தனது சுமைகளைத் தூக்கிக் கொண்டாள். ஏதோ நினைத்துக் கொண்டவள் போல, ‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க. மனசிலே தோணுச்சு... பேசிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெயிலில் இறங்கிப் போய்விட்டாள்.
அவள் போன நெடுநேரத்துக்கு அந்த உக்கிரம் அறையில் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. காமம்தான் இப்படி அலைக்கழிக்கிறதா... இல்லை, காம உணர்ச்சிகளின் போர்வையில் நமது மன வக்கிரங்கள் வெளிப் படுகின்றனவா?

மேற்கு மலைத் தொடரில் உள்ள ஆதிவாசிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கு ஆண்களும் பெண்களும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். பெண்களைக் கேலி செய்வதோ, அசிங்கமாக நடந்துகொள்வதோ கிடையாது. ஆண்களைவிடவும் பெண்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள். கர்ப்பிணிப் பெண் தலையில் ஒரு சுமையும், இடுப்பில் ஒரு சுமையுமாக சர்வ சாதாரணமாகப் பாறையில் ஏறி, நடந்து வந்துகொண்டு இருப்பாள். உண்மையில் காலத்தில் பின்தங்கிப் போனது நாமா, அவர்களா?

சரித்திரம் முழுவதும் பெண்களின் உடல்மீது படிந்த ரத்தக் கறையைத்தான் காண முடிகிறது. இந்தியப் பிரிவினை யின்போது கொல்லப்பட்ட வர்களை விடவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்தான் அதிகம். இதைவிடவும் மிகக் கொடுமையானது, அப்படி வன்கொடுமையால் பாலியல் உறவு கொள்ளப்பட்ட பெண்கள் கர்ப்பமாகி, அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசே முகாம்களை நடத்தியது. ஒரே நாளில் இருபதாயிரம் பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்கள். சூறையாடப்பட்ட நகரங்களைவிட சிதைக்கப்பட்ட பெண் உடல்கள் அதிகம். வன்முறையின் இலக்கு எப்போதுமே பெண் உடல்தான்!
எத்தனையோ இரவுகளில் காரில் பயணம் செய்யும்போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் புளிய மரங்களின் அடியில் நின்றபடி லாரி களின் முகப்பு வெளிச்சத்துக்கு கண் கூசி நிற்கும் பெண்களைக் கண்டிருக்கிறேன். வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை. அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது.
தான் வாழ வேண்டும் என்பதற்காக எவரையும் ஏமாற்றி, திருடி வாழத் தயங்காதவன் ஆண். தன் உடலில் ஒரு சிறிய வேனல் கொப்பளம் வந்தால்கூடக் கூச்சல் போடுகின்றவன். உடல் அவனுக்கு கேளிக்கையின் சாதனம். புல்தரையைக் கண்ட பசு மேய்வது போல, அவனுக்குப் பெண்கள் வெறும் இச்சையை தீர்க்கும் பொருள் மட்டும்தான்!
வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பெண்களை நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவே இல்லை. பெண்கள் மீதான ஒடுக்குமுறை யும் வன்முறையும் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு பெண்கள் மீது செலுத்தி வரும் வன்முறை குறித்து இன்று இலக்கியத்தில் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தக் கேள்விகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுப்பியவர் ஜி.நாகராஜன். இவர் தமிழின் விதிவிலக்கான எழுத்தாளர். மரபான கதை உலகை விட்டு விலகிய கலகக்குரல் இவருடையது. இவரது கதையுலகம் முழுவதும் பெண்களால் நிரம்பியது. இந்தப் பெண்களில் பெரும்பான்மையோர் பாலியல் தொழிலாளர்கள். ஒடுக்கப்பட்ட இந்தப் பெண்களின் வாழ்வை, அக நெருக்கடிகளை, மூச்சுத் திணறலை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்தவர் ஜி.நாகராஜன். இவரது ஆண்மை என்ற கதை மிகச் சிறப்பானது.

பாலியல் தொழில் புரியும் ஒரு பெண்ணைப் பற்றியது இக்கதை. அவள் தன் அப்பா மற்றும் தம்பியோடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றுகொண்டு ஆள் பிடிக்கிறாள். அவளிடம் காசு கொடுத்து இன்பம் பெறுவதற்காக வந்து சேர்கிறான் ஓர் இளைஞன். படுக்கை அறையில் அந்தப் பெண்ணிடம், எதற்காக அவள் அப்பாவும் தம்பியும் இது போன்ற வேலைக்கு துணை செய்வதற்கு நிற்கிறார்கள் என்று மனச் சங்கடத்துடன் கேட்கிறான்.

தன் அப்பா பிசினஸ் செய்து அதில் தோற்றுப் போய்விட்டதாகவும். அப்பாவின் நிலையை நினைத்து நினைத்து அம்மாவுக்குப் புத்தி பேதலித்துப் போனதாகவும், அன்றிலிருந்து அம்மாவைக் குணப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்றும், ‘வீட்டை மாமாதான் பராமரிக்கிறார். அவருக்கு நான் இப்படியரு தொழில் செய்வது தெரிந்தால் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்’ என்றும் சொல்கிறாள்.

குடும்பச் சுமையின் காரணமாக பெத்த பெண்ணைத் தகப்பனே கூட்டிக்கொடுப்பதை இளைஞனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான். ஏன் அவளோடு உறவுகொள்ளவில்லை என்று அவள் கேட்டதற்கு, தான் ஒரு பேடி, ஆண்மையற்றவன் என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறி விடுகிறான் என்பதோடு கதை முடிகிறது.
கதையை வாசித்து முடிக்கும்போது ஒரு கத்தி ஆழமாக உடலில் இறங்குவது போல வலியும் துக்கமும் ஏற்படுகின்றன. அதிநவீன கணிப்பொறியும், அணு ஆயுதங்களுமாக உலகம் தனது வெற்றியின் களிப்பை ஒருபக்கம் கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு பக்கம் துடைத்துப் போட்ட காகிதங்களைப் போல பெண்களைச் சர்வ அலட்சியமாக நடத்தும் சூழலும் இருந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஆறுகளுக்கெல் லாம் பெண் பெயரிட்டது ஆற்றைப் போலவே பெண்களும் எவரும் கவனிக்கப்படாமலும், ஆக்ரமிப்புக்கும் அத்துமீறலுக்கும் உள்ளதாவதால்தானோ என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது..! நாடே கொண்டாடும் சத்தியவான் அரிச்சந்திரன்கூட தன் மனைவியை ஏலம் போட்டு விற்றவன் தானே? ஜி.நாகராஜன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சிறுகதையுலகில் இவருக்கென்று தனியான இடம் உண்டு. பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது.

கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கிய நாகராஜன், போதையின் பிடியில் சிக்குண்டு நாற்பது வயதுக்குள்ளாகவே சுய அழிவைத் தேர்வு செய்துகொண்டவரானார். இவரது கதைகள் வாழ்வின் போலித்தனத்தை, இழிவை விமர்சனம் செய்கின்றன. நிழல் உலகமாக இருந்து வரும்பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு இவரது படைப்புகள் எங்கும் உக்கிரமாக வெளிப்படுகின்றன.
குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே போன்றவை இவரது முக்கிய படைப்புகள்!

பசுவைய்யாவின் கவிதைகள்

Labels: , ,

sura1

ஓவியத்தில் எரியும் சுடர்

அந்த ஓவியத்தில் எரியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எரியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எரித்துக்கொண்டே
ஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியாவின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எரியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது ?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.


காற்றில் எழுதப்படும் கவிதை

அந்தப் பூ காற்றில் எழுதிக் கொண்டிருக்கும்
கவிதையின் பொருள் எனக்குப் புரியவில்லை
அது தன்னைப் பற்றி தன் அழகைப் பற்றி
எழுதவில்லை என்பது தொவிந்த்து
அது துக்கம் கொண்டிருப்பது தொவிந்தது
அந்த துக்கம் மாலையில்
தான் வாடிவிடுவது பற்றி அல்ல
என்பது தொவிந்த்து
அது தான் பூத்த செடி பற்றியும்
கொடிகள் பற்றியும்
மரங்கள் பற்றியும்
எழுத விரும்புகிறது
அது வெயிலைப் பற்றியும்
காற்றைப் பற்றியும்
கடலைப் பற்றியும்
சொல்லத் துடிக்கிறது.
அது எழுத விரும்பாத விஷயம்
எதுவும் இல்லை என்று எனக்குப் பட்டபோது
என்னையும் சேர்த்துச் சொல்ல
விரும்புவாயா என்று
நான் அதனிடம் கேட்டேன்
அதன் முகத்தில் விசனம் படர்ந்தது
அதன் உலகத்தில் நான் இல்லை என்பதை
ஏற்றுக்கொள்ள எனக்குக்
கஷ்டமாக இருக்கிறது.


மின்விசிறிகள் சம்பந்தமாக ஒரு வருத்தம்

இந்த மின்விசிறிகளின் சுழற்சியில்
இவற்றின் விட்டம் அதிகரிக்க
வழியேதும் இல்லையென்பதை அறியும்போது
என் மனம் வருத்தம் கொள்கிறது.
பூமியை ஒருபோதும் இவை ஸ்பரிசித்தது இல்லை
என நினைக்கும்போதும்
ஒருபோதும் இவை வானத்தைக் கண்டதில்லை
என எண்ணும்போதும்
வருத்தம் என் மனதைக் கவ்வுகிறது.
இந்த மின்விசிறிகளின் சுழற்சியும் சரி ஓய்வும் சரி
இவற்றின் கையில் இல்லை என்பதை உணரும்போது
என் மனத்தில் சங்கடம் படர்கிறது.
தாம் வேர்வை ஆற்றுபவர்கள்
யார் என்பதைக்கூட அறியாத
மின்விசிறிகள் இவை.


வாழும் கணங்கள்

மூளை நரம்பொன்று அறுந்து
ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது
மனவெளியும் நிலவொளியில் குளிர
செவிப்பறை சுயமாய் அதிர
மண்ணில் ஒருபோதும் கேட்டிராத
ஓசை உபகைகள் எழும்பின
பாஷை உருகி ஓடிற்று
ஒரு சொல் மிச்சமில்லை
என் பிரக்ஞை திரவமாகி
பிரபஞ்சத்தின் சருமமாய்
நெடுகிலும் படர்ந்த்து
ஒரு கணம்தான்
மறு கணம்
லாரியின் இரைச்சல்
எதிரே காலி நாற்காலி.


வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேடல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்


இளிப்பு

தூங்கும் என் செவிப்பறை அதிர
அதிகாலை கத்தும் அந்தப் பறவை,
உண்மையில் கத்தல் அல்ல; இளிப்பு
என்னை நினைத்து
என் அல்லல்களைக் கண்டு
என்னை ஆட்டிக்குலைக்கும் புதைப்பயங்கள் மணந்தறிந்து
என் பிழைப்பின் பஞ்சாங்கம்
வரிவரியாய்ப் படித்தது போல்
அதிகாலை இளிக்கத் தொடங்குகிறது அது.

இருப்பினும் ஒன்று அதற்கு தெரியாது
நான் ஆயுள் காப்பில் பணம் கட்டி வருகிறேன்.
இறப்பின் மூலம் இருப்பவர் பெறும்
மனிதத் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது
அந்த இளிக்கும் பறவைக்கு.


நிலா பார்த்தல்

Labels: , , ,

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

பி.எஸ்.ராமையா

முதன் முறையாக என் பையனை சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு அழைத்துப்போன நாளில் அவன் படம் துவங்கியதும், ‘அப்பா ரிமோட்டைக் குடு... சவுண்டைக் குறைக்கணும்!’ என்று கைகளை நீட்டினான். ரிமோட் கிடையாது என்று விளக்கினால் அவனுக்குப் psramiyahபுரியவில்லை. பிடிவாதமாக, ‘ரிமோட் வேண்டும்!’ என்று கத்தி கூப்பாடுபோட்டு, அரங்கத்தைவிட்டு வெளியே வரும்படி செய்தான். வீடு வந்த பிறகு ஓடிச் சென்று டி.வி&யின் ரிமோட்டை எடுத்துக்கொண்டு, ‘இதை தியேட்டருக்கு எடுத்துப் போயிருந்தால் சத்தத்தைக் குறைந்திருக் கலாமே...’ என்று சிரித்தான்.

குழந்தைகள் ரிமோட் கன்ட்ரோல் உலகுக்குப் பழகி விட்டார்கள். ரிமோட்டின் உதவியால் தொலைக்காட்சி யின் சேனல்கள் மாறுவது போல, ஏன் தெருவும் வீடும் பொருட்களும் மாறுவதில்லை என்று அவர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒரே டெலிவிஷனில் வேறு வேறு காட்சிகள் தோன்றி மறைவது போல, ஒரே புத்தகம் ஏன் வேறு வேறு புத்தகமாக மாறவில்லை என்று ஆத்திரப்படுகிறார்கள். மாபெரும் ரிமோட் ஒன்று இருந்தால்... மொத்த உலகத் தையும் தன் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள லாம் என்று கனவு காணுகிறார்கள்.

அதை நனவாக்குவது போல விளையாட்டுக் காரில் துவங்கி வீட்டின் குளிர்சாதனம் வரை யாவும் ரிமோட்டுக்குள் அடங்கிவிட்டது. திடீரென உலகம் ஒரு நெல்லிக்காயை விடவும் சிறியதைப் போலச் சுருங்கி விட்டது போன்று தோன்றுகிறது. தொலைவு என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது. காரணம், மின்சாரமும் நவீன விஞ்ஞான சாதனங்களின் வளர்ச்சியும், நம் இருப்பிடத்துக்குள் உலகைச் சுருக்கிட்டு இழுத்து வந்துவிட்டன.

தண்ணீரை விடவும் மின்சாரம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. மின்சாரமில்லாத வாழ்வைப் பற்றி நினைவுகொள்வது கூட அர்த்தமற்றதாகி விட்டது!
ஆனாலும் மின்சாரம் நுழையாத காலத்தின் இரவுகள் தந்த நெருக்கமும், அரிக்கேன் விளக்கொளியிலிருந்து கசிந்து வரும் மஞ்சள் திரவம் போன்ற வெளிச்சமும் மனதின் மூலையில் அப்படியே படிந்து போயிருக்கின்றன. அந்த நாட்களில் சிறுவர்களுக்கு இருந்த ஒரே விளையாட்டு நிலா பார்த்தல்! இரவானதும் நிலா எங்கேயிருக்கிறது, எந்தப் பக்கம் போகிறது என்று அண்ணாந்து பார்த்தபடி, அதைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு தெருத்தெருவாக அலைவது ஒரு தீராத விளையாட்டு!

தெருவில் இருந்த அத்தனை பையன் களும் தங்களோடு ஒரு நிலவை தன் வீட்டுக்கு கூடவே கூட்டிப்போவதும் வழியில் அது மேகத்தில் மறைந்த போது அங்கே நின்று நிலவை வெளியே வரும்படி கூப்பிட்டுக் கத்தியதும் எல்லா இரவுகளிலும் நடந்தேறியது. அந்த நாட்களில் வானில் ஒரேயரு நிலவுதான் இருந்தது என்று எவராவது சொன்னால், யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் என் வீட்டுக்கு கூட்டிவந்த நிலவு என் ஜன்னலுக்கு வெளியில்தான் நின்றிருந்தது. அதுபோல இன்னொரு நண்பன் அவனது நிலவை தன் வீட்டுக்குக் கூட்டிப் போயிருப்பான். இப்படி எத்தனை சிறுவர்கள் கிராமத்தில் இருந்தார்களோ, அத்தனை நிலவுகள் இருந்தன.

நிலா வராத நாட்களில் நட்சத்திரங்களை ஆகாசத்திலிருந்து பறிப்பதற்காகச் கிறுகிறுவென தட்டாமாலை சுற்றுவோம். நிலா முற்றிய நாட்களில் அதன் பால் வெளிச்சம் தெருக்களை, வீடுகளை குளிர்மை செய்யத் துவங்கும். தெருவில் பாயை விரித்து தூங்குபவர்கள் யாரோ தங்களை நெருக்கமாக நின்று பார்த்துக்கொண்டு இருப்பது போல வெட்கமடைவார்கள். அது போன்ற நாட்களில் கல் உரல்களில் தேங்கி நிற்கும் நிலா வெளிச்சத்தை ஆசையோடு நாய்கள் நக்குவதைக் கண்டிருக்கிறேன்.

நிலா பார்த்தல், தாயின் இடுப்பில் அமர்ந்த நாளில் துவங்கி இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பால்யத்தில் என் வீடு வரை கூட்டிவந்த நிலவு இன்றும் எனது பயணத்தில் எப்போதும் கூடவே வந்துகொண்டு இருந்தது. எந்த ஊருக்குப் போகும்போதும் தெரிந்த நபர் கூட இருப்பது போல ஒரு நெருக்கம் கூடிவிடுகிறது.

கையில் காசில்லாமல் சுற்றியலைந்த நாட்களில் கர்நாடக மாநிலத்தின் பட்டக்கல், பதாமி என்ற இடங்களில் உள்ள புராதனக் கோயிலையும் சௌந்தர்யமிக்க சிற்பங் களையும் பார்த்துவிட்டு, பீஜப்பூரை நோக்கி லாரியில் பயணம் செய்ய நேர்ந்தது. டிசம்பர் மாதத்தின் இரவு என்பதால் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. மேகம் இருண்டிருந்தது. லாரியில் ஓட்டுநரும் இரண்டு உதவியாளர்களும் முன்னால் இருந்ததால் என்னையும் இன்னொரு வயதான நபரை யும் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள். அந்த லாரியில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந் தன. லாரியில் ஏறியதும் தூங்கிவிட வேண்டியதுதான் என்று சுருண்டு படுத்தேன். ஆனால், குளிர்காற்றும் திறந்த ஆகாசமும் தூக்கத்தை நெருங்கவிடாமல் செய்தன. குளிர் தாங்கமுடியாமல் உடல் நடுங்கத் துவங்கியது. உட்கார முடியவில்லை. என் மீதே எனக்குக் கோபமாக வந்தது.
எதற்காக இப்படிக் காரணமில்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன்? எனக்கு என்னதான் வேண்டும்? ஏன் இப்படிக் குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்? என யோசனை நீண்டு விரிய விரிய... என் மீதான ஆத்திரம் அதிகமாகிக்கொண்டு இருந்தது.

குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடியே வந்தேன். லாரி ஒரு மலைப்பாதையில் செல்லத் துவங்கியபோது, பள்ளத்தாக்கின் மீது ஒரு பருந்து வட்டமிடுவது போல தனியே மிதந்துகொண்டு இருந்தது நிலா. அது பௌர்ணமியின் மறுநாள் போலும். மரங்களும் பாறைகளும்s.ramakrish ஏன் அந்த மொத்த நிலப்பரப்பே வெண்ணிற வெளிச்சத்தின் சல்லாத்துணியை போர்த்திக்கொண்டு இருப்பது போலிருந்தது. இரவு எத்தனை அழகானது என்பதை அந்த இரவில்தான் தெரிந்து கொண்டேன்.

ஏதோ என் வீட்டின் வாசலில் கயிற்றுக்கட்டிலை போட்டுப் படுத்துக் கொண்டு நிலவைக் காண்பது போல அத்தனை நெருக்கம் கூடியது. அதோடு அது வரை அழுத்திக்கொண்டு இருந்த எண்ணங்கள் கரைந்துபோய் இது போல ஒரு காட்சியைக் காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்கு கிடைக்கப்போகிறது என்று மனது சந்தோஷத்தில் பொங்கியது.

குழந்தைகள் நிலவைப் பார்த்துப் பாடுவது போல சத்தமாகப் பாட வேண்டும் போலிருந்தது. தானறியாமல் வாய் ஒரு பாடலை முணுமுணுக்கத் துவங்கியது. லாரியில் இருந்தபடி எழுந்து வட்டம் சுற்ற வேண்டும் என்று நினைத்தேன். அருகில் சுருண்டுகிடந்த நபர் வேடிக்கையாக என்னையும் நிலவையும் பார்த்தார். இதே நிலவைத்தானே சிறுவயதிலிருந்து துரத்துகிறேன். இந்தச் சந்திரன்தானே என்வீட்டுக் கிணற்றில் வீழ்ந்துகிடந்தது. கனவுகள் சூழ நான் உறங்கிக் கிடந்தபோது என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே நிலவுதானே! ஏனோ ஆகாசமும், நட்சத்திரமும், நிலவும் திடீரென கை தொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டன போலிருந்தது.

லாரியில் நன்றாகப் படுத்துக்கொண்டேன். என் தலைக்கு மேலாகக் கூடவே வந்து கொண்டு இருந்தது நிலா. புகை போல குளிர் நிரம்பிய பாதைகளில் லாரி கடந்து சென்றுகொண்டு இருந்தது. உலகில் ஒரேயரு மனிதனும் ஒரு நிலவும் மட்டுமே விழித்திருக்கிறோம் என்பது போல நிலாவைக் கூடவே அழைத்துச் சென்றுகொண்டு இருந்தேன்.
விடிகாலையின் மணம் காற்றில் படரத் துவங்கியபோது, திடீரெனத் தோன்றியது... வீட்டிலிருந்து வெளியேறித் துறவியாக அலைந்த நாட்களில் கௌதம புத்தரும் இதே நிலவைத்தானே பார்த்திருப்பார்! என்றால் இந்த நிலவு புத்தரின் தோழன் இல்லையா? சங்க இலக்கியத்தில் வரும் பாணன் தன் காட்டு வழியில் கண்டதும் இதே நிலவுதானே? சிறைச்சாலையின் ஜன்னல் வழியாக பகத்சிங் இதே நிலவைப் பார்த்திருப்பார் அல்லவா? காலத்தின் நிசப்தமான சாட்சியின் பெயர்தான் நிலவா? மனதில் இருந்த கசடுகள், வலிகள் யாவும் கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன போலானது.

பொழுது புலர்ந்து, முதல் வெளிச்சத்தின் கீற்றுகள் வானில் தோன்றத் துவங்கியபோது நிலா மேற்கில் கரை தட்டி நின்ற படகைப் போல அசைவற்று அப்படியே நின்றிருந்தது. ஓரிடத்தில் லாரி நின்றபோது கீழே இறங்கினேன். சூரியன் உதயமாகியிருந்தபோது, மெதுவாக நிலா மறைந்துகொண்டு இருந்தது. என் கூடவே நிலவு துணைக்கு வரும்வரை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் என்று மன தைரியம் உண்டானது. அதன் பிறகு இன்று வரை ரயிலில், பேருந்தில், கார்களில் பயணம் செய்யும்போது, நிசப்தமாக ஒரு மீன் தண்ணீரில் நீந்துவது போல நிலவு தொலைவில் அலைவதைப் பார்த்தபடி நீள்கிறது பயணம்.
தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால், ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு யாவரும் மொட்டைமாடியில் உறங்க வேண்டியதாகியது. நகரத்துக்கு வந்த பிறகு குழந்தைகள் முதன்முறையாக நிலா பார்த்தபடி உறங்கும் முதல் நாள் அது. நட்சத்திரங்களையும், நிலவையும், வழி தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக் கிடந்தோம்.

ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்று பையன் கேட்டதும் என் நினைவில் வந்த கதை பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள். இக்கதையை எனது கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறேன். ஒரு கூழாங்கல் தண்ணீருக்குள் அமிழ்ந்துகிடப்பது போல இன்று வரை ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது. பி.எஸ்.ராமையா மணிக்கொடி இதழை நடத்தியவர். சிறந்த சிறுகதையாசிரியர். அவரது இக்கதை சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள் யாவிலும் இடம் பெற்றுள்ளது.

நட்சத்திரக் குழந்தைகள் கதையில் ரோகிணி என்ற ஆறு வயதுச் சிறுமியும் அவளது அப்பாவும் ஒரு நாள் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நட்சத்திரங்களுக்கு அப்பா இருக்கிறாரா என்று ரோகிணி கேட்கிறாள். சுவாமிதான் நட்சத்திரங்களுக்கு அப்பா என்று பதில் சொல்கிறார். உடனேசிறுமி கேட்கிறாள்...‘சுவாமி உன்னைப் போல அழகாக இருப்பாரா அப்பா?Õ அவரும், Ôசுவாமியைப் போல அழகானவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது!’ என்கிறார்.

ரோகிணிஅதை ஆமோதிப்பது போல சொல் கிறாள்... Ôஅதனால்தான் நட்சத்திரங்கள் இத்தனை அழகாக ஜொலிக்கின்றன!Õ அப்போது ஒரு நட்சத்திரம் எரிந்து கீழே விழுகிறது. அதைக் கண்ட சிறுமியின் தந்தை, ‘யாராவது பொய் சொல்லிவிட்டால் ஒரு நட்சத்திரம் இப்படி உதிர்ந்து விழுந்துவிடும்!’ என்கிறார். ரோகிணியும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு இரவில் வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்றைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் ரோகிணி அழுகிறாள். அப்பா சமாதானப்படுத்தும்போது, ‘நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள் அப்பா. ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போனால் கடவுள் எவ்வளவு வேதனைப்படுவார். அதை நினைத்துதான் வருத்தப்படுகிறேன்!’ என்கிறாள் குழந்தை.

குழந்தையின் மனதும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துக்கமும்கொண்ட கதை இது. எப்போதாவது பின்னிரவில் விழித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்து பார்க்கும்போது சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது நிலா. குற்றவாளியைப் போல அதை நேர்கொள்ளத் துணிவின்றி கவிழ்ந்துகொள்கிறது தலை!

பொய் சொல்வதால் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால், இன்று வானில் ஒரு நட்சத்திரம் கூட இருக்காது. ஆனாலும், இக்கதையை வாசிக்கும்போது, கடவுளுக்காக வருத்தப்பட குழந்தைகளைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பி.எஸ்.ராமையா. மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில் 1905\ம் ஆண்டு பிறந்தவர். 1933&ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். கச்சிதமான வடிவத்துடனும், தேர்ந்த மொழி நடையுடனும் சிறுகதைகள் எழுதியவர். சில காலம் திரைப்படத் துறையிலும் பணியாற்றியிருக்கிறார். இவரது தேரோட்டி மகன் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது. மணிக்கொடி என்ற இலக்கிய இதழை நடத்தி, தமிழ்ச் சிறுகதை உலகுக்கு புதிய பாதையை உருவாக்கியவர். புதுமைக் கோவில், பூவும் பொன்னும் போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள்.

மறந்து போன மௌனி

Labels: , ,

எஸ், ராமகிருஷ்ணன்

2007 ஆண்டு மௌனியின் நூற்றாண்டுவிழா. ஆனால் புதுமைப்பித்தன் போல மௌனி பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. ஒரு வேளை மௌனி எந்த இலக்கியக் குழுவையும் சேராமலிருந்தது இதற்கு காரணமாக இருந்திருக்க கூடும். மௌனியின் படைப்புலகம் குறித்து சமகாலப் பார்வைகளுடன் கூடிய விமர்சனம் இன்று தேவையாக உள்ளது.

13_mouni1 ஒரு முறை ஜெயகாந்தனிடம் அவருக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக சொன்னபோது அவர் மௌனியின் கதையைத் தேர்வு செய்ததோடு, தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது சக எழுத்தாளர்கள் போல இலக்கியச் சர்ச்சைகள், விவாதங்களை விட்டு ஒதுங்கி மௌனி மிகத் தனிமையாகவும், அகநெருக்கடியோடுமே வாழ்ந்திருக்கிறார். அவரது விருப்பம் எழுத்து சார்ந்து இருந்த போதும் அவர் தன்னை முன்நிறுத்த எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மௌனி தஞ்சாவூர் மாவட்டத்தின் செம்மங்குடியில் பிறந்தவர். கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பதிநான்கு வருடம் கும்பகோணத்திலும் பிறகு சிதம்பரத்திலும் வசித்தவர். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.மணிக்கொடியில் எழுதியவர்.
மௌனியின் எழுத்து இவ்வளவு கொண்டாடப்பட வேண்டியதில்லை என்ற பொதுவிமர்சனம் இன்று எழுந்துள்ளது. மறுபக்கம் மௌனியைச் சாதீய அடிவருடி என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஆனால் இவை அவரது எழுத்தின் வலுவை எந்த விதத்திலும் குறைந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.
மௌனி அதிகம் எழுதியவரில்லை. இருபது கs.ramakrishnanதைகளுக்குள்ளாகவே எழுதியிருக்கிறார். ஆனால் அவருக்கு சிறுகதை குறித்த கச்சிதமான வடிவம் கைகூடியிருக்கிறது. அது போலவே கதையின் வழியே யதார்த்த உலகின் பிரச்சனைகளைக் கையாளுவதற்குப் பதிலாக காண் உலகிலிருந்து நழுவிச்செல்லும் மனநிலையை மௌனியின் கதைகள் முன்வைக்கின்றன. மௌனியோடு கொஞ்ச துரம் என்று எழுத்தாளர் திலிப்குமார் இலக்கியச் சிந்தனைக்காக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். மௌனியின் புனைகதைகளை அறிந்து கொள்ள அது ஒரு சிறந்த புத்தகம்.

மௌனி கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அவரது  சமகால உலக எழுத்தாளர்களின் கதைகளில் இருந்த அதே மொழி வளம் மற்றும் நுட்பமிருப்பதை உணர முடிகிறது. மௌனி ஏன் ஒரு பிம்பமாகவே அறியப்பட்டுவருகிறார் என்பதற்கான முக்கிய காரணம். சிறுகதை குறித்து இதுவரை நமக்குள் உள்ள முடிவுகளும் அது சார்ந்த எதிர்வினைகளுமே.

பொதுவாகச் சிறுகதையை நாம் மிக எளிமையான இலக்கிய வடிவமாகவே எடுத்துக் கொள்கிறோம். அத்தோடு கதையின் வழியாக என்ன சொல்ல வருகிறோம் என்ற முடிவை நோக்கியே கதையை முன்னெடுத்து செல்கிறோம். அத்துடன் அன்றாடப் பழக்கத்தில் உள்ள மொழியும் விவரிப்புமே சிறுகதை என்று நம்புகிறோம்.

ஒருவிதத்தில் இது சரியானது.ஆனால் இவை மட்டும் சிறுகதைகள் அல்ல.சிறுகதை எளிமையான இலக்கிய வடிவமும் அல்ல. மாறாக சிறுகதை இன்று உலகம் முழுவதும் புனைவின் எல்லையற்ற சாத்தியங்களுக்கான வெளியாகவே அறியப்படுகிறது.

சிறுகதையும் கவிதையைப் போல மொழியின் நுட்பமும் பல தளங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களும் கொண்டிருக்க முடியும். அது போலவே உரையாடல் என்பது சிறுகதையின் மிக அவசியமான ஒன்றல்ல என்று பல முக்கியக் கதைகள் சாட்சி சொல்கின்றன.

நமது நவீன சிறுகதை குறித்த பிரக்ஞை ருஷ்யக் கதைகளின் வழியாகவும் பிரெஞ்சு கதைகளின் வழியாகவுமே உருவாக்கபட்டிருக்கிறது. தமிழ்க் கதைமரபிலிருந்து நமது கதைஎழுத்து உருவாக்கபடவில்லை. குறிப்பாக மாபசான் மற்றும் ஆன்டன் செகாவ்; தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய். கார்க்கி, கோகல். இவர்கள் சிறுகதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட அனுபவங்களின் சந்திப்பு வெளியாகவே எழுதினார்கள். சிறுகதை என்ற வடிவம் குறித்து இவர்கள் அணுகுமுறை வேறுவிதமாகவே இருந்தது. அதனால் தான் டால்ஸ்டாய் தனது ஒரு சிறுகதையை ஐம்பது அறுபது பக்கம் எழுதுகிறார்.

ஆனால் உலகமெங்கும் காப்காவும், காம்யூவும், ஹெமிங்வேயும், பாக்னரும் நவீன சிறுகதைகளுக்கு முன்மாதிரி கலைஞர்களாக கொண்டாப்படுகிறார்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்களில் புதுமைபித்தன் உலக இலக்கியங்களின் பரிச்சயம் கொண்டவர். மௌனிக்கும் தீவிரமான உலக இலக்கியப் பரிச்சயம் இருந்திருக்கிறது. அவர் ராபர்ட் ம்யூசிலின் நாவலைப் பற்றி அடிக்கடி சொல்வார் என்று பிரமிள் குறிப்பிடுகிறார். அது போலவே காப்காவின் எழுத்தோடு நெருக்கம் இருந்திருக்கிறது. ஆனால் இவை எதுவும் மௌனியின் எழுத்தை உருவாக்குவதில் காரணியாக இல்லை, மாறாக சிறுகதை என்ற வடிவம் குறித்த கச்சிதம் உருவாகத் துணை செய்திருக்கின்றன.
மௌனியின் கதையுலகம் நேரடி சம்பவங்களின் வழியே அதைக் கடந்த மனநிலையை விவரிப்பவை. குறிப்பாக உள்ளார்ந்த மௌனத்தையும்,வெளிப்படுத்த இயலாத உணர்வு எழுச்சிகளையும், இருப்பு சார்ந்த புதிர்மையையும் முன்வைக்கின்றன. கதை நிகழும் பின்புலத்தை விவரிப்பதில் கவித்துவமும் புதிர்மையும் கொண்டிருக்கிறார் மௌனி. அவரது சிறுகதையில் வரும் மாலை நேரம் நம் கண்முன்னே கடந்து போன மாலை நேரமல்ல. அந்தக் கடற்கரையும் காற்றும் பறவைகளும் கூட நாம் அறியாதது போன்றே வர்ணிக்கபடுகிறது. குறிப்பாக கோவில்களும் அது சார்ந்த மனவெழுச்சிகளும் மிக முக்கியமானவை.
அவரது கதைகளின் வழியே நிறைவேறாத காதலும் சாவும் முக்கிய அனுபவமாக தொடர்ந்து வருகிறது. காதல், சாவு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஏதோவொரு பிரிக்க முடியாத பந்தம் கொண்டிருக்கிறது. சாவைக் கடந்து செல்வதும், அதன் உக்கிரத்தால் எழுந்த மனச்சிதறல்களை பகிர்ந்து கொள்வதிலும் மௌனி அதிக அக்கறை கொள்கிறார். அவரது ஆரம்பக் கதைகளில் கூட சம்பிரதாயமான கதை சொல்லல் கிடையாது. அவரது சக எழுத்தாளர்கள் இவரைக் கண்டு மிரண்டு சித்தரைப் போல இவரை அணுகியதற்கு காரணம் மௌனி புனைவின் மீது கொண்டிருந்த அதீத ஈடுபாடும் தனித்துவமான பார்வைகளுமே .
மௌனி கதைகளை வாசிக்கும் போது அவை நேரடியான ஒற்றை அனுபவத்தைத் தருவதில்லை. மாறாக கவிதையைப் போல நமக்குள் உறைந்து போன அகவுணர்வுகளை மீட்டெடுக்கத் துவங்குகிறது. அத்தோடு வாசிப்பவனின் கற்பனைக்கு அதிக இடம் தருகிறது. நிழல்கள் குறித்த மௌனியின் விவரிப்புகள் கவிதையின் உயர்வு நிலை என்று சொல்லலாம்.

மௌனியின் சிறந்த கதைகளாக நான் கருதுவது அழியாச்சுடர் மற்றும் மனநிழல் இரண்டும் கதைகளின் வழியே பல்வேறு ஆழ்ந்த அனுபவங்களை உருவாக்குகின்றன. மௌனியின்சிறுகதைகள் ஆங்கிலத்தில் கதா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழில் பீகாக் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் மௌனி கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும். அத்தோடு சமகால சூழலில் மௌனி குறித்த மீள்பார்வைகள் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அவரது எழுத்திற்கு நாம் காட்டும் மரியாதையாகும்

நூருன்னிசா

Labels: ,

கு..ராஜகோபாலன்

நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசிய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுதும் சிதைவுற்றுக் கிடந்தது.

2638

தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். தன்னந்தனியாக எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக் கூடுமென்று எண்ணிக் கொண்டே அதை உடைத்துப் படித்தேன். பின்வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.

மதராஸ்

குலாம் காதர் கான், எம்.ஏ.,

ப்ரோ. டிப்டி கலெக்டர்.

என் அருமைத் தோழா,

நீ என்னை மறந்திருப்பாயென நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாகக் கடிதம் எழுதாதற்குக் காரணம், எனக்கு நீ இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும், இந்தக் கடிதத்திற்கு மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை நூருன்னிசா. நாம் படித்தபொழுது நம்முடன் விளையாடினவள், நினைவு இருக்கிறதா ? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதிப் பத்திரிகையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன் 'இன்சியல் 'களைக் கூட நினைவில் வைத்திருந்ததால்தான் நீ என்று நிச்சயிக்க முடிந்தது. உடனே அவள் சொன்னதன் பேரில், உன் முகவரியைக் கேட்டு வேலூருக்கு, 'டெமி அபிஷியலா 'கத் தந்தி அடித்துப் பதில் வரவழைத்தேன். அது இன்று கிடைத்தது.

நமது பன்னிரண்டாவது வயதில், திருச்சியில் படிக்கும் போது, ஒரு சிறுபிள்ளை சபதம் செய்து கொண்டோமே, நினைவு இருக்கிறதா; நாம் ஒருவரை ஒருவர் அறியாமல் மணம் செய்து கொள்வதில்லை என்று ? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் எனக்குத் திருமணம். பத்திரிகை இதனுடன் இருக்கிறது. நீ வந்தே தீர வேண்டும்.

உன் அன்புள்ள

குலாம் காதர்.

இந்தக் கடிதம் மின்னலைப் போல் என் மனத்தின் மறதி இருளை அப்பொழுது பளிச்சென்று போக்கிற்று. இந்த பத்து ஆண்டுகளாகப் பரதேசிபோல் திரிந்த பொழுதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறுமாதம் சிறையில் இருந்தபொழுதும் அடிக்கடி என் மனத்தில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது என்று தவித்தேன்; அப்பா, அது நூருன்னிசாவுடையதுதான்!

ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று அசைந்தாடும் இரண்டு குறைகூறும் விழிகள். ரோஜாக்களினிடையே மல்லிகை போல கீழ் இதழைச் சற்றே கடித்து வெளியே தொற்றின பல்வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனத்தில் குடிகொண்டு ஆட்டி வைத்ததே - அது அவளுடையது!

அவளுடைய மனநிலையும் என் மனநிலையை ஒத்திருக்கக் கூடுமா என்ன! இல்லாவிட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்/ கூட்டத்திற் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ அவள் கூப்பிடுவது போலிருக்கிறது!

2

குலாம் காதருக்கும் எனக்கும் இருக்கும் இந்த நட்பு தொடங்கியதே மிகவும் வேடிக்கையான செய்தி. எனது பத்தாம் வயதில் என்னை என் தகப்பனார் திருச்சியில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என் 'பக்கத்துப் பையன் '. பெண்சாயல் கொண்ட வளர்ந்த வாலிபன்.

ஒருநாள் கணக்குப் போடும்பொழுது குலாம் என் சிலேட்டைப் பார்த்துக் 'காப்பி ' அடித்து விட்டான். அது எப்படி வெளியாயிற்றென்றால், நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய சிலேட்டிலும் காணப்பட்டது. உடனே, ஆசிரியர், நான் 'காப்பி ' அடித்தேனென்று என்னைப் பிரம்பால் அடித்தார்.

குலாம் அன்று மாலை வீட்டுக்குப் போகும்பொழுது என்னைக் கைதட்டிக் கூப்பிட்டான்.

'நீ ஏன் என்மீது குற்றஞ் சாட்டவில்லை ? ' என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.

அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது.

'அடே, என்னோடு எங்க மோட்டாரில் எங்க வீட்டுக்கு வா. அப்புறம் உங்க வீட்டில் கொண்டு விடுகிறேன் ' என்றான்.

காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் விருப்பம் பூர்த்தியாயிற்று. பதினைந்து நிமிடத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குக் கார் விர்ரென்று போய் நின்றது.

கயாசுதீன் சாகேப் ஒரு பெரிய வியாபாரி. ஆற்க்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவராம். வீட்டின் முன் கூடத்தில் பெரிய வெல்வெட்டுத் திண்டுகள் போட்டுச் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரில் உக்காவும் பாத்திரம் ஒன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும், நிலைக் கண்ணாடிகள், பெரிய பெரிய மொகலாயப் படங்கள், பளிங்கு மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று. காலுக்கு மெத்தின்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன.

குலாம் குதித்துக் கொண்டு போய் அவரிடம் ஏதோ சொன்னான். திகைத்துப் போயிருந்த என்னைப் பார்த்து அவர், 'இங்கே வா! ' என்று கூப்பிட்டார். பிற்காலத்தில் நான் மெளலானா செளகத் அலியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம் என்னை அவரிடம் இழுத்துக் கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தம் மனைவியைக் கூப்பிட்டார். உள்ளேயிருந்து அந்த அம்மாளும் அவளுடைய இரண்டு பெண்களும் வந்தார்கள். இப்பொழுது நினைவிலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது வயசு இருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான மாது. அவள் மெதுவாக ஒவ்வோர் அடி எடுத்து வைத்து வந்த பொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சத்தம் செய்தது. மூத்த பெண் அலிமா குட்டையாயும் பருமனாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிசாவோ குலாமைப்போலவே இருந்தாள்.

அப்பொழுது அவளுக்கு எட்டு வயசு இருக்கலாம். இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்கு அப்பொழுது இருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம், கிடையாது. ஆனால் என் மனத்தில் 'போட்டோ ' பிடித்ததுபோல் பதிந்திருக்கிற அம்சங்களையே இப்போது எடுத்து எழுதுகிறேன்.

நூருன்னிசாவின் உருவம் என் மனத்தில் வரைந்த சித்திரம்போல் நிற்கிறது. நான் முதல்முதலில் பார்த்த அன்று அவள் சரிகை மயமாயிருந்த பச்சைப் பாவாடை உடுத்திருந்தாள். இலேசான மஞ்சள் பட்டு இரவிக்கையும், ரோஜாப் பட்டுத் தாவணியும் அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதரசம், கையில் காப்புகள், விரல்களில் மோதிரங்கள், கர்நாடக முஸ்லீம்களைப் போல குருடு முதலியன இல்லை. முகம் என் மனத்தில் அப்படியே இருக்கிறது. நீண்ட புருவங்களும் தலைமுடியும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல் தலைமுடியை முடிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அவளது உடலின் சிவப்புக்கு ஈடே சொல்ல முடியாது. அவளுடைய கண்கள் அவற்றின் தன்மையை எடுத்துச் சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றவை, மீனுருவம் கொண்டவை என்று கவியைப்போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

கயாசுதீன் தம் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒருதரம் பார்த்துவிட்டு அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளே போய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப் பார்வையை நான் மறக்கவே முடியாது. என் கன்னத்தை ஒருதரம் தாய்போல தடவிக் கொடுத்தாள்.

குலாம் என்னைக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம். புறப்படும்பொழுது வாசற்பக்கம் கண்ணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிசா முக்காட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் கண்களைச் சந்தித்த நிமிடமே உள்ளே ஓடிவிட்டாள்.

அன்று முதல் நானும் குலாம் காதரும் இணைபிரியாமல் திரிந்தோம்; விளையாடினோம்; அரட்டைகள் அடித்தோம். ஆகாயக் கோட்டைகள் கட்டி மகிழ்ந்தோம். எந்நேரமும் நான் அவனுடைய வீட்டில்தன் இருப்பேன். நூருன்னிசாவும் எங்களுடன்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பாள். தானும்கூட விளையாடுவாள். தெரியாமல் பின்னால் ஒளிந்து வந்து, என் கண்களைப் பொத்துவதில் அவளுக்கு ஓர் ஆனந்தம். ஏன், எனக்குந்தான் ஒருவித மகிழ்ச்சி அப்பொழுது உண்டாகும். அவளுடைய கைகள், மென்மையாக ரோஜா மலர்போல இருக்கும். கைகளை எடுத்து விட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவளுடைய கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனம் என்னவோ நான் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியை அடையும்.

நாலாம் பாரம் வரையில் நானும் குலாமும் இபடி இருந்தோம். திடாரென்று என் தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றி விட்டார்கள் பிறகு எனக்கும் குலாமுக்கும் சந்திப்பே கிடையாது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருக்கிறதென்றால் என் மகிழ்ச்சியை என்னென்பது ?

மறுநாள் இரவு வண்டியில் சென்னைக்குப் புறப்படேன்.

3

உறவினர்கள் நிறைந்த அந்தப் பங்களாவில் குலாம் என்னைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பழைய நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான். முகம்மது காசிம் என்ற பாடகரின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா மலர்கள்! அத்தரும் பன்னீரும் நீர் பட்டபாடாய் வழங்கப்பட்டன. குலாம் என்னைப் பங்களாவின் மேல் மாடியிலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

குலாமின் தாய் மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். நான் இருப்பதைப் பார்த்துச் சட்டென்று பின்வாங்கி முகத்தை மூடிக் கொண்டாள்.

'அம்மா யாரென்று எண்ணுகிறாய் ? நம்... ' என்று குலாம் பேச்சைத் தொடங்கினான்.

'ஆம். நினைவிருக்கிறது. நலந்தானே, தம்பி ? ' என்று கேட்டுக் கொண்டே மெதுவாக அந்த அம்மாள் முன் வந்தாள்.

'நலந்தான், அம்மா! '

'எங்கே இருக்கிறாய் ? '

'திருச்சியில் இருக்கிறேன். '

'திருமணம் ஆயிற்றோ ? '

'இல்லை! '

பேசும்பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால், இன்னும் ஓர் இளம் உருவம் நிழல் போல நிற்பது போன்ற பிரமை தட்டியது எனக்கு. ஒரு நிமிடம், நூருன்னிசாவே என் முன் தோன்றுவாளோ என்ற ஆசை! மறுநிமிடம், 'சே! அது எப்படி முடியும் ? அவள் பர்தாப் பெண் அல்லவா ? குலாமும் கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில் அவளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே ? ' என்ற நினைப்பு ஏற்பட்டது. அவளைப் பற்றிக் கேட்கக்கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான் குலாமுடன் வழக்கம் போல் பேசலானேன்.

இரவு பத்து மணிக்குக் குலாம் படுத்துக்கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள்.

என் தனியறையின் தனிமையில் நான் படுக்கையில் படுத்துப் புரண்டேன். மின்சார விளக்கின் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால், அதை அணைத்துவிட்டுச் சாளரத்தைத் திறந்து வைத்தேன். அதன் வழியாக முழுநிலவு என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பியது. படுக்கையில் உட்கார்ந்து கொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன்.

அதே வீட்டின் ஒரு பாகத்தில் 'அவளும் ' அப்பொழுது உலவிக் கொண்டிருந்தாளல்லவா!

என் இருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ? முடியாதுதான்! அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு என்னை ஏன் இங்கு வரவழைத்தாள் பின்னே ? என்னிடத்தில் அவளுக்கு ஓர்... அதெப்படி நான் சொல்லுவது ?

இப்படி என் பேதை மனம் கேள்விகளும் மறுகேள்விகளும் போட்டுக் கொண்டு கடல்போல அலையலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது.

நடுநிசி ஆயிற்று. எனக்குத் தூக்கம் வரவே இல்லை. பட்டணத்தின் ஓசையும் அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து கடலின் ஓலந்தான் காற்றில் மிதந்து வந்தது. திடாரென்று மனத்தில் ஓர் ஆவல் மூண்டது. 'ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிசா பார்க்க வரக் கூடுமா ? அல்லது என்னைத்தான் எங்கேயாவது எதிர்ப்பார்க்கிறாளோ ? ' என்று நினைத்தேன்.

மெதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிசாதான்! வந்து எனக்கு அருகே இருந்த சாளரத்தின் அப்புறத்தில் நின்றாள். அதே உருவந்தான்! வயதிற்கு ஏற்ற வாட்டசாட்டம் மட்டுமே வேறாக இருந்தது. நிலவில் முகம் தெளிவாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று, 'எண்ணினபடி ஆயிற்றே! ' என்றேன்.

ஒருவிரலால் தன் உதடுகளை அவள் பொத்திக் காட்டினாள். தன் மார்பில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தாள்.

'இதை ஊருக்குப் போய்ப் படி, நாளைக்குக் காலையிலேயே புறப்பட்டு விடு! பார்த்தாய்விட்டது. ஒரு நிமிடம் தாமதிக்கக் கூடாது ' என்று சொல்லித் திரும்பினாள்.

சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தாள்! நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய அழகான முகத்தில், கலவரத்தினால் முத்து முத்தாய் வேர்வை துளித்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப் பற்றினேன்.

ஒரு நிமிடம் அப்படியே நின்றோம்!

மறுநொடியில் மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு போய்விட்டாள்.

4

மறுநாள் காலை நான் பயணத்திற்குத் தயாராயிருந்ததைக் கண்டு குலாமிம் முகம் வாட்டமடைந்தது.

'என்ன சேதி ' என்றான்.

'அதுதான் ஒருநாள் இருந்தாயிற்றே; மற்றொரு சமயம் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் அலுவல் இருக்கிறது ' என்றேன்.

அரைமணிக்குள் அந்தப் பங்களாவை விட்டு வெளியேறி விட்டேன்.

திருச்சியில் காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து சாளரத்தின் வழியாகத் திரும்பவும் அதே சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன், எவ்வளவு மாறுபட்ட மனநிலையில்! கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.

'இக்கடிதத்தை என் வாக்காகவும் என் அடையாளமாகவும் நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனத்தில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னம் அகலவில்லை. ஏனென்றால், உன் உருவம் எப்போதும் சிலைபோல என்முன் நிற்கிறது.

நான் என்றென்றும் இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இந்தப் பிறவியில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை முன்பு அவுரங்கசீப்பின் தங்கை ஜெபுன்னிசா கழித்ததுபோல கழிக்கப் போகிறேன். என் தாயிடம் உனக்குத் திருமணமாகவில்லை என்று நீ சொன்னது எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இனிமேல் நீ வேறொரு பெண்ணிடம் ஈடுபடாமல் உன் வாழ்நாட்களை என் மனத்தோடு மட்டும் ஒன்றும்படி காலம் கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ எனக்குப் பதில் எழுத வேண்டாம். நீ செய்வாய் என்று எனக்கு ஒரு திடநம்பிக்கை இருக்கிறது. அதுவே என் உயிர்நாடி.

நான் மெய்ம்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாம் இருவரும் இவ்வுலகில் கணவன் மனைவியல்ல. எப்போதும், உடல் ஆசை வேண்டாம் நமக்கு. நினைவென்னும் வானத்தில் ஒளிரும் இன்பமெனும் முழுநிலவுக்குக் களங்கம் உண்டாக்காதிருப்போம்! சரிதானே.

நூருன்னிசா '

அவ்வொளி மயக்கத்தில் அவளே முழு மதியின் உருவில் வந்து என்னிடம் வாக்கு வாங்குவதுபோல் இருந்தது.

என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலகவழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் எல்லாச் செயல்களிலும் நான் நினைத்ததும் என் முன் தங்கப் பதுமை போல வந்து நின்று என்னை ஊக்கி வருகிறாள். அவள் என் சோர்விலும் என் மனத்தின்முன் குதித்துக் கொண்டு வந்து நின்று எனக்கு ஆறுதல் தருகிறாள்.

நன்றி: கு.ப.ரா. எழுத்துக்கள் - தொகுதி ஒன்று - முதற்பதிப்பு: அக்டோபர் 2002 - அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, சென்னை - 4.