ஜி. நாகராஜன் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி பெற்றோர்களின் சொந்த ஊரான மதுரையில் அவர்களின் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை பெயர் கணேச அய்யர்; பழனியில் வக்கில் தொழிலை மேற்கொண்டு வந்தார். நாகராஜனின் நான்காவது வயதில் அவரது தாயார். தமது ஒன்பதாவது பிரசவத்தின்போது மரணமடைந்தார். நான்கு குழந்தைகள் பிறப்பின் போதும், பிறந்து சில மாதங்களுக்குள்ளாகவும் இறந்துவிட்ட நிலையில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஜி. நாகராஜனுக்கு இரண்டு சகோதரிகள், ஒரு
அண்ணன், ஒரு தம்பி.
ஜி. நாகராஜன் மதுரையிலேயே அவரது தாய்வழிப் பாட்டி வீட்டில் சகோதர சகோதரிகளுடன் வளர்ந்தார். பிறகு மதுரை _ திருநெல்வேலி சாலையில் மதுரைக்கு பக்கமாக உள்ள திருமங்கலத்தில் அவரது தாய்மாமன் வீட்டில் தங்கி நான்காம் வகுப்பு வரை படித்தார். அப்புறம் கணேச அய்யர் ஜி. நாகராஜன் உட்பட குழந்தைகள் ஐந்து பேரையும் தன்னிடம் பழனிக்கு அழைத்துக்கொண்டார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் ஜி. நாகராஜனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் தானே பாடங்களை சொல்லிக்கொடுத்தார். நாகராஜன் எட்டு, ஒன்பதாம் வகுப்புகளை மாமா வீட்டில் தங்கி திருமங்கலம் பி.கே. நாடார் உயர்நிலைப்பள்ளியிலும், பத்து, பதினொன்றாம் வகுப்புகளை தந்தையுடன் தங்கி பழனி எம்.ஹெச் பள்ளியிலும் பயின்றார். இன்டர் மீடியட்டை மதுரை, மதுரைக் கல்லூரியில் படித்து சிறப்பான முறையில் தேறினார். அப்போது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதற்காக சி.வி.ராமன், நாகராஜனுக்கு தங்கப் பதக்கத்தை பரிசாக வழங்கினார்.
பட்டம் பெற்ற பின்னர் ஜி. நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் டியூட்டராக ஒரு வருடம் பணியாற்றினார். பிறகு சென்னை அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வருடம் பணியாற்றினார். அங்கிருந்து விலகியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியில்தான் அவருக்கு கம்யூனிச இயக்கத் தோடும் இலக்கியத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டது. நாகராஜனுடைய அறிவாற்றலும் கற்பிக்கும் திறனும் மாணவர்களிடையேயும், சக ஆசிரியர்களிடையேயும், நிர்வாகத்திடமும் அவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது. அவரை அமெரிக்காவுக்கு அனுப்பவும் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அப்புறம் அவர் கம்யூனிச கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிந்தபோது நிர்வாகம் அவரை வேலைநீக்கம் செய்தது. பின்னர் வந்த நாட்களில் நாகராஜன் கட்சிப் பணிகளில் ஈடுபட்டபடியே மாணவர்களுக்கு தனியாக பாடம் கற்பித்து அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு சில மாதங்களை நகர்த்தினார்.
1952 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாகராஜன், பேராசிரியர் நா. வானமாமலை திருநெல்வேலியில் நடத்திக்கொண்டிருந்த தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். அடுத்து வந்த நான்கு ஆண்டுகள் தான் நாகராஜனின் வாழ்வையும் ஆளுமையையும் அனைத்து தளங்களில் தீர்மானித் தவை. கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஏ. நல்லசிவம், முருகானந்தம் போன்ற கம்யூனிச இயக்கத் தலைவர்களுடனும் தொ.மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, டி.செல்வராஜ், நெல்லை எஸ். வேலாயுதம் போன்றோருடனும் நாகராஜனுக்கு திருநெல்வேலியில் நெருக்கம் ஏற்பட்டது. இக்கால கட்டத்தில்தான் `சாந்தி’ பத்திரிகையும் திருநெல் வேலியில் இருந்து வந்து கொண்டிருந்தது.
பிறகு நாகராஜன் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு நெல்லை நகரக் கமிட்டி செயலாளரானார். நெல்லைக்கு பக்கத்து ஊரான மேலப்பாளையத்தில் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், மக்கள் வரி கொடுக்க வில்லை என்பதற்காக நகரசபை ஜப்தி நடவடிக்கை களில் ஈடுபட்டபோது, நாகராஜன் மக்களை திரட்டி போராட்டங்களை நடத்தினார். காவல்துறை அவரை கைது செய்து சிறையிலடைத்தது. இது தவிரவும் நாகராஜன் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார். பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக கட்சிப் பேரவையைக் கூட்டி தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரினார். ராஜினாமாவை அவர் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுமென்று பேரவை கேட்டுக்கொண்டதை ஜி. நாகராஜன் ஏற்கவில்லை. அடுத்த சில மாதங்களில் நா. வானமாமலையின் தனிப்பயிற்சி கல்லூரியிலிருந்தும் விலகினார்.
1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருநெல் வேலியிலிருந்து மதுரைக்கு திரும்பிய நாகராஜன், அவருடன் அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்தவரும் கட்சித் தோழருமான சங்கர நாராயணன் நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். 1956 முதல் 1970களின் தொடக்கம் வரை தனிப்பயிற்சிக் கல்லூரி களில் பணியாற்றியதன் மூலம் கிடைத்த வருமா னத்தை மட்டும் கொண்டே இவருடைய வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. திரையரங்குகளில் _ ஜி. நாகராஜன் எங்கள் கல்லூரியில் வகுப்பு எடுக்கிறார்’ என்று விளம்பர ஸ்லைடு காட்டும் அளவிற்கு அவரது கற்பிக்கும் திறனும் முறையும் அத்துறையில் அவருக்கு நட்சத்திர மதிப்பை ஏற்படுத்தித் தந்தன. அவரது புகழ் உச்ச நிலையில் இருந்தது.
1959 ஆம் ஆண்டு நாகராஜன் ஆனந்தாவை மணந்தார். கலப்புத் திருமணம். காதல் திருமணமல்ல, மணமான நான்காவது மாதம் ஆனந்தி ஸ்டவ் வெடித்து மருத்துவமனையில் மரணமடைந்தார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1962 ஆம் ஆண்டு நாகராஜன் அவரது தங்கை ஏற்பாட்டின்படி மதுரையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவந்த நாகலட்சுமியை மணந்துகொண்டார். நாகராஜன்_நாகலட்சுமிக்கு இரண்டு குழந்தைகள், மகள் ஆனந்தி, மகன் கண்ணன்.
ஆரம்பத்தில் மார்க்சியப் பிடிப்போடு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த நாகராஜன் 1960களுக்கு பின்னர் மார்க்சிய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார். இக்காலத்தில் அரவிந்தர் மீது அலாதியான ஈடுபாடு கொண்டார். பின்னர் காந்தியின் மீது பற்று கொண்டார்.
தந்தை கணேச அய்யருடன் ஜி. நாகராஜன் இருந்தது கொஞ்ச காலமே என்றாலும் அவரிடமிருந்துதான் வாசிப்பு பழக்கம் இவரைப் பற்றிக்கொண்டது. இரவில் நாகராஜனை அருகில் படுக்கவைத்துக் கொண்டு தான் படித்தவற்றைக் கூறும் வழக்கம் அவருக்கு இருந்திருக் கிறது. கணேச அய்யருக்கு தெய்வ நம்பிக்கையோ சடங்குகளில் பற்றோ இருக்கவில்லை. பந்த பாசங்களிலும் அவர் அதிகம் பட்டுக்கொள்ளாதவர். தந்தையின் இக்குணங்கள் இளம் வயதிலேயே நாகராஜன் மீது படிந்துவிட்டன. தந்தையுடன் நட்பு ரீதியான நெருக்கத்தை நாகராஜன் உணர்ந்திருக்கிறார். கணேச அய்யரின் இறுதிக் காலங்களில் அவரால் முடியாமல் இருந்தபோது, மதுரைக்கு அவரை அழைத்து தனி வீடும் பராமரிக்க ஒரு உதவியாளரையும் நாகராஜன் நியமித்தார். கணேச அய்யர் 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
1957 ஆம் ஆண்டு ஜனசக்தி வாரமலரில் பிரசுரமான `அணுயுகம்’ கதையிலிருந்துதான் ஜி. நாகராஜனின் படைப்புலகம் தொடங்குகிறது. சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா போன்ற இதழ்களில் நாகராஜனின் எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவந்தன. ஆங்கிலத்திலும் சில சிறுகதைகள் எழுதினார். கீவீtலீ திணீtமீ சிஷீஸீsஜீவீக்ஷீமீs என்றொரு ஆங்கில நாவலும் எழுதியிருக்கிறார்.
ஜி. நாகராஜனின் முதல் புத்தகமாக வெளிவந்தது `குறத்தி முடுக்கு’ குறுநாவல்தான். `பித்தன் பட்டறை’ என்ற பதிப்பகமொன்றை ஆரம்பித்து 1963ஆம் ஆண்டு நாகராஜனே இதனைப் புத்தகமாக கொண்டு வந்தார். முறையாக விநியோகிக்கப்படாமல் முடங்கிய நிலையில் `குறத்தி முடுக்கு’ சரியாக கவனிப்புக்கு ஆளாகவில்லை. 1971ஆம் ஆண்டு அதுவரை எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 கதைகளைக் கொண்ட `கண்டதும் கேட்டதும்’ தொகுப்பைக் கொண்டு வந்தார். 1973ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை `ஞான ரதம்’ பத்திரிகையில் `நாளை மற்றுமொரு நாளே’ நாவல் தொடராக வெளி வந்தது. `பித்தன் பட்டறை’ வெளியீடாக 1974ஆம் ஆண்டு நாகராஜனே இந்நாவலையும் புத்தகமாக கொண்டு வந்தார்.
ஜி. நாகராஜன் மொத்தம் 33 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவற்றுள் 10 கதைகளை 1972_74களில் எழுதினார். கடைசி ஆறேழு வருடங்களில் அவர் எழுதிய ஒரே கதையான ’ஓடிய கால்கள்’ அவரது மறைவுக்குப் பின்னர் `விழிகள்’ சிற்றிதழில் பிரசுரமானது.
கல்லூரி பாட நூலாக்கும் நோக்கத்துடன் டார்வின், கலிலியோ, மார்க்ஸ் ஆகிய மூவரைப் பற்றியும் ‘ஜிலீக்ஷீமீமீ ரீக்ஷீமீணீt ஷிநீவீமீஸீtவீsts’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இப்பிரதிகளும், ஒரே ஆங்கில நாவலான கீவீtலீ திணீtமீ சிஷீஸீsஜீவீக்ஷீமீs_ம், காந்தியின் நெருங்கிய நண்பரும் காங்கிரசின் பொருளாளருமான பஜாஜ் பற்றிய நாடகமும், `தீரன் மார்க்ஸ்’ என்ற கூலி விவசாயியைப் பற்றிய நாடகமும் இதுவரை புத்தக வடிவம் பெறவில்லை. இதில் `தீரன் மார்க்ஸ்’ நாடகத்தின் கைப்பிரதி தொலைந்துவிட்டது.
நாகராஜனின் மறைவுக்குப் பின்னர் 1991 ஆகஸ்டில் கனடாவிலிருந்து செல்வம் கொண்டுவந்த `காலம்’ சிற்றிதழில் `குறத்தி முடுக்கு’ குறுநாவல் மறுபிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் 1994இல் மதுரை வர்ஷா பதிப்பகம் `குறத்தி முடுக்கு’_ன் மறுபதிப்பைக் கொண்டு வந்தது. 1983இல் `க்ரியா’ பதிப்பகம் `நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் இரண்டாம் பதிப்பைக் கொண்டு வந்தது. 1997 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பகம் `நாளை மற்றுமொரு நாளே’, `குறத்தி முடுக்கு’, 35 சிறுகதைகள், 10 கட்டுரைகள் மற்றும் `கண்டதும் கேட்டதும்’ சிறுகதை தொகுப்பிற்கு சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரையும் கொண்ட நாகராஜனின் முழுமையான தொகுப்பைக் கொண்டு வந்தது. ஜி. நாகராஜன் ஒருமுறை ``சாவும் அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’’ என்று கூறினார். சாவை எதிர்கொள்ள அவர் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட தருணமும் வந்தது. 1981ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அதிகாலைக்கு சற்று முன்பே, நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் நாகராஜனின் உயிர் பிரிந்தது.
0 comments:
Post a Comment