ஜெயகாந்தன்
'எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே..... ' என்று முனகிக்கொண்டே, வாசற்படியை ஒரு கையால் பற்றியவாறு, பாதித்தெருவரை உடம்பை வளைத்து நீட்டித் தெருக்கோடி வரை பார்த்தாள் பங்கஜம் அம்மாள்.
அப்பொழுதுதான் அடுத்த வீட்டு வாசலில், சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றாள் மரகதம்.
'என்ன மரகதம்....பகலெல்லாம் காணவே இல்லியே ? வேலை சாஸ்தியோ ? ' என்று ஆரம்பித்தாள் பங்கஜம்.
'அதெல்லாம் ஒண்ணுமில்லே அக்கா; என்னவோ நெனப்பிலேயே நேரம் போயிடுச்சி... '
அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அந்தச் சாய்வுத் திண்ணையின் இரு புறங்களிலும் இருவரும் உட்கார்ந்து கொண்டனர்.
---இரண்டு பெண்கள் கூடிப் பேசுவதென்றால் அந்தப் பரஸ்பர இன்பம் அவர்களுக்கல்லவா தெரியும் ?
'மணி எட்டு இருக்குமா ? ' என்றாள் பங்கஜம்.
'இப்பத்தானே ஏழரை அடிச்சிது ? வேலையெல்லாம் ஆச்சுதா ?... '
'ஆச்சு.... வேலை ஆயி என்ன பண்றது ? 'பொழுதோட வீட்டுக்கு வந்தமாம், சாப்பிட்டமாம் 'கிற பேச்சேதான் எங்க வூட்டு ஐயாவுக்கு கெடையாதே ' கோயிலும் கொளமும் சுத்திப்பிட்டு ராத்திரி மணி ஒம்பதோ, பத்தோ ?---அவுக போறதுமில்லாம அந்தப் பய சோமுவையும் கூட்டிக்கிட்டுப் போயிடறாவ.... '
'சோமு வீட்டிலே இல்லே ?---குரல் கேட்டுதே ' '
--மரகதம் பேச்சை வளர்க்கவே அப்படிக் கேட்டு வைத்தாள்.
'அவன் அடிக்கிற கூத்தை எங்கே போயிச் சொல்றதம்மா... பக்தி ரொம்ப மீந்து போச்சி...வெளக்கு வெச்சா வீட்டிலே தங்கமாட்டேங்கிறான். உபந்நியாசம் கேக்கப் போயிடறான்....போன வருசமே பெயில்...எப்பப் பார்த்தாலும் சாமியும், பாட்டும்தான்.... கறி திங்கமாட்டானாம்; முட்டைகூட வேண்டாம்கிறான்....அவுகளுக்கோ அந்த வாசமில்லாம சோறு எறங்காது. இவனோ, அதைத் தொட்ட கையைக் களுவாம, சோத்தெத் தொடாதேங்கிறான்...இந்த ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையல் பண்ண என்னால் ஆகுமா ?.... கெடக்குக் களுதைன்னு வெறும் ரஸத்தோட விட்டுட்டேன் இன்னக்கி.... '
'என்ன அக்கா சமையல் ? '
'ஆறு மணிக்குமேலே குப்பம்மா வந்தா, கடைக்குப் போறேன்னா... ஒரு எட்டணாவெ குடுத்து அனுப்பிச்சேன், ஆறணாவுக்கு--- தோ...இத்தினி இத்தினி நீளத்துக்கு எட்டு கெளுத்தி வாங்கியாந்தா...அதோட ரெண்டு மாங்கா கெடந்தது, அதையும் போட்டுக் கொளம்பு வச்சேன்... அவனுக்குத் தொட்டுக்க என்ன பண்றதுன்னு ஒண்ணுந் தோணலே... வெறும் ரசத்தோட விட்டுட்டேன்... எனக்கு ஒண்ணுமே முடியலே... காத்தாலே இருந்து ரெண்டுத் தோளும் என்னா கொடைச்சல் ' அப்படியே இத்துப் போவுது... சின்னப்பையன் ரமணி வேறே ராவிக்கெல்லாம் இருமித் தொலைக்கறான்... தூக்கமா வருது ? இந்த லெட்சணத்திலே ரெண்டு கறி, ரெண்டு கொளம்பு வைக்க யாராலே முடியும் ? பிள்ளையா பொறந்ததுவ, இருக்கறதைச் சாப்பிடணும்... 'அது வேணாம், இது வேணாம் '...சைவமாம், சைவம் '...இவனும் இவன் சைவமும்...நான் என்னத்தைப் பண்ண...மூஞ்சியை மூணு மொளம் நீட்டிக்கிட்டு வெறும் ரசத்தை ஊத்தித்திங்கும்...ஹ்உம்...
--பங்கஜம் அம்மாள் மூச்சுவிடாமல் கொட்டி அளந்து சலித்துப்போய்ப் பெருமூச்செறிந்தாள் ' மரகதம் ஆரம்பித்தாள்:
'அதை ஏன் கேக்கறீங்க அக்கா....எங்க வீட்டிலே இருக்கறவரு... மத்தியானம் அப்பிடித்தான், பாருங்க.... காலையிலே ஆபீசுக்குப் போகும்போது, 'முருங்கைக்காய் சாம்பார் வச்சி, உருளைக்கிழங்கு வறுவல் பண்ணு 'ன்னு சொல்லிட்டு போனாவ....பதினோரு மணி வரைக்கும் சாம்பாரை வச்சி, சாதத்தையும் வடிச்சிட்டு உக்காந்திருந்தேன், உக்காந்திருந்தேனோ அப்பிடி உக்காந்திருந்தேன். கட்டையிலே போற காய் கறிக்காரனைக் காணவே இல்லை....மணியோ பதினொண்ணு ஆயிடுச்சி. அதுக்கு மேலே யாரைப் புடிச்சிக் கடைக்கு அனுப்ப ? அவுவ பன்னெண்டு மணிக்கெல்லாம் வந்து எலையெப் போடுன்னு பறப்பாவளேன்னு, ரெண்டு வாளக்காய் கெடந்தது; அதை வறுத்து வச்சேன்...எலை முன்னே வந்து உக்காந்ததும் மனுசனுக்கு ஏன்தான் அப்பிடி ஒரு கோவம் வருமோ, ஆண்டவனே.... 'எளவெடுத்த வாளைக்காய்க் கருமந்தானா ?ன்னு தட்டோட வீசி, எறிஞ்சாவ பாருங்க...நா என்னக்கா பண்ணுவேன் என்று சொல்லும்போதே கண்களை முந்தானையால் கசக்கிக்கொண்டாள், கடைசியிலே....நானும் அதெக் கையாலே தொடலே...அப்பிடியே கெடக்கு.... '
மரகதம் எதையெதையோ சொல்லி வருத்தப்படவே, பங்கஜம் பேச்சைத் திருப்பினாள்:
'அது கெடக்கு...ஒன் நாத்தனார் முளுவாம இருந்து 'அபார்ஸ 'னாயி ஆசுபத்திரியிலே கெடக்கான்னியே....என்னாச்சு ?...காயிதம் வந்துதா... '
மரகதம் குரலின் தொனி இறங்கி ஒலிக்கப் பேசினாள்:
'பாத்தீங்களா, மறந்தே போனேனே...அபார்ஸனும் இல்லே, கிபார்ஸனும் இல்லே.... அவளுக்குத்தான் ஏழுமாசம் ஆயிடுச்சே...என்னாநடந்துதோ.... காத்தாலேருந்தே வயித்துப் புள்ளெ அசையிலியாம்---தடபுடலா போயி ஆசுபத்திரிக்கிக் கொண்டு போயிருக்காவ.... வயித்தை அறுத்து.....
----மிகவும் மும்முரமாக சம்பாஷணை 'கிளைமாக்ஸ் ' அடையும் தருணத்தில் வாசற்படியில் செருப்பின் மிதியோசை கேட்டது ' --சப்தத்திலிருந்தே, வருவது தன் கணவர்தான் என்பதைப் புரிந்துக்கொள்வாள் பங்கஜம்---ரெண்டு பெணகளும் எழுந்து நின்றனர்.
பங்கஜம் அம்மாளின் கணவன் சதாசிவம் பிள்ளையும், மகன் சோமுவும் திருநீறு துலங்கும் நெற்றியுடன் சிவப் பழங்களாய் உள்ளே நுழைந்தனர்.
மரகதம் குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவது போல் கூறினாள்:
'ராஜியை அனுப்புங்க அக்கா.....வாளைக்காய் குடுத்தனுப்பறேன் சோமுவுக்கு... '
'எதுக்கம்மா ? என்று தயங்கினாள் பங்கஜம்.
'தம்பிக்குத்தான்...கெடக்கு, ராஜியை அனுப்புங்க அக்கா..... ' என்று புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே போனாள் மரகதம்.
அடுக்களைக்கு வந்த பங்கஜம், மகனுக்கும் கணவனுக்கும் இலையிட்டு, மணைபோட்டு....
'ஏட்டி, ராஜி ' அடுத்த வீட்டு அக்கா, என்னமோ தாரேன்னா...போயி வாங்கியா... ' என்றாள்.
'என்னது ?....என்ன வாங்கியாரச் சொல்றே, இன்னேரத்திலே.... ' என்று அதட்டல் குரல் போட்டார் பிள்ளை.
'அதுவா ? நீங்க பெத்து வச்சிருக்கீங்களே சைவப்பளமா, ஒரு பிள்ளை, அதுக்கு, சாதத்துக்குத் தொட்டுக்க ஒண்ணுமில்லே...அதுக்காவத்தான்...இல்லாட்டி தொரை கோவிச்சிக்குவாரில்லே.... ' என்று இரைந்தாள் பங்கஜம்.
---அவளுக்குத் தெரியும், பிள்ளையிடம் எந்தச் சமயத்தில் எந்த ஸ்தாயியில், எந்த பாவத்தில் குரலை முடுக்கிப் பேசினால், சொன்னதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று.
முற்றத்தில் கைகால் அலம்பிக்கொண்டிருந்த சோமு இந்த அஞ்ஞானிகளுக்காக வருந்துவதுபோல் மெல்லச் சிரித்தான். பிறகு, மாடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு கூடத்திலிருந்த திருநீற்றை அள்ளிப் பூசிக் கொண்டு கூடத்திலிருந்த படங்களின் முன் நின்று 'அருட்சோதி தெய்வமென்னை ' என்று கசிந்துருக ஆரம்பித்தான்.
சோமுவுக்கு வயது பதினைந்துதான்---அதுதான் மனிதனுக்குப் 'பித்து 'ப் பிடிக்கும் பருவம்.
---அது சமயப் பித்தாகவோ, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ அல்லது பெண் பித்தாகவோகூடப் பிடிக்கலாம் '
சோமுவுக்கு அங்க வளர்ச்சிகளும், ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. முகம் குழந்தை மாதிரிதான் இருந்தது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சம்பந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது. உலகையும், வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது. 'தான் புதிதாக அறிந்த விஷயங்கள் எல்லாம் புதிதாகப் பிறந்தவை ' என்று நம்பி, அவற்றை மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்ற எண்ணத்தினால், மற்றவர்களைவிடத் தன்னை உயர்த்திப் பாவித்தது. மனசில் வாழ்வும், உற்றாரும், உறவினரும் ---எல்லாமே வெறுப்புத்தான், சதா நேரமும் 'சிடுமூஞ்சி 'யும் கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவதுபோலவும், ஏகாந்தத்தை நாடுவதும்.... வீடே வெறுத்தது '
சோமுவுக்கு வேதாந்தப் பித்துதான் '
பொழுதோடு வீட்டுக்கு வராமல் பள்ளிக்கூடத்திலிருந்து ஓடக்கரைக்கும், கொய்யாத் தோப்புக்கும் போய் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கோ, எட்டு மணிக்கோ வீடு திரும்பி, ஆடிய களைப்பில் உண்ட மயக்கத்துடன் உறங்கிப் போவதையே வழக்கமாக கொண்டிருந்த சோமு போன வருஷம் எட்டாம் வகுப்பில் 'கோட் ' அடித்து விட்டான்.
வீட்டில் வசவுகளும் கண்டிப்பும் அதிகமாகி இனிமேல் பள்ளிக்கூடம் விட்டவுடன் நேரே வந்து வீட்டு வாசலைத்தான் மிதிக்கவேண்டும் என்ற கட்டளை பிறந்தது. இரவு சாப்பாடு வரை படிக்கவேண்டும் என்ற தண்டனை வேறு.
வீட்டுக் கூடத்தில் அவனது தம்பிகளான சீனாவும் ரமணியும் கொஞ்ச நேரம் படித்துவிட்டு, மற்ற நேரமெல்லாம் தங்கை ராஜியுடன் விளையாடிக்கொண்டிருக்க, சோமு மட்டும், துயரமும் கவலையும் தோய்ந்த முகத்துடன் --- புத்தகத்தையும், சன்னல் வழியே வெளியுலகத்தையும் பார்த்தவாறு -- தந்தையின் உத்தரவை மீற முடியாமல் படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பங்கஜம் அம்மாளுக்குப் பாவமாய் இருந்தது.
'போதும் ' நீ படிச்சிக் கிளிக்கிறது. கொஞ்சம் காத்தாட வெளியிலே போயி வா....உம்... ' என்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தாள்.
சோமு தந்தையை எண்ணித் தயங்கி நின்றான்.
'நீ போயிட்டு வா....அவுக வந்தா நா ' சொல்லிக்கிறேன், அவுக மட்டும் வீட்டிலேயேதானே இருக்காவ ?.... கோயிலுக்கு போவாம அவுவளாலே, ஒரு நாளு இருக்க முடியுதா ?.... நீயும் போயி அந்த நடராஜா கிட்டே 'எனக்கு நல்ல புத்தியெயும், தீர்க்காயுசையும், படிப்பையும் குடுடா ஆண்டவனே 'ன்னு வேண்டிக்கிட்டுவா....அவுவ வந்தா நான் சொல்லிக்கறேன்.
அவள் சொல்லி முடிக்கும் முன் சட்டையை மாட்டிக் கொண்டு ஒரே ஓட்டம்....
'சீக்கிரம் வந்துடுடா சோமு... ' என்று இரைந்து கூவிச் சொல்லும் தூரத்துக்குப் போய்விட்டான் அவன். காதில் விழுந்ததோ, என்னவோ...
எட்டு மணிக்கு, சதாசிவம் பிள்ளை வரும்போதோ, 'சோமு எங்கே ?.... ' என்று கேட்டுக்கொண்டு வந்தார்.
'ஆமா.... சோமு சோமுன்னு அவனை வறுத்துக் கொட்டிக்கிங்க.... அவனுக்கு மட்டும் வீடே கதியா ?..... நான்தான் என்ன பாவம் பண்ணிப்பிட்டோ இந்த ஜெயில்லே கெடக்கேன்.... ஒரு கோயில் உண்டா, கொளம் உண்டா ?.... திருநாள் உண்டா, பெருநாள் உண்டா ?.... என் தலைவிதி ஒங்களுக்குகெல்லாம் உளைச்சிக் கொட்டிச் சாகணும்னு..... என் வயித்திலே பொறந்தததுக்குமா, அந்த பாவம்.... பிள்ளையப் பார்த்தா பாவமா இருக்கு.... என்ன தான் அதிகாரம்னாலும் இப்பிடியா ? ' என்று கண்ணைத் துடைத்து. மூக்கைச் சிந்தி, முந்தானையை மடக்கி, முன்கையை நீட்டிக்கொண்டு எழுந்து வந்தாள் பங்கஜம்.
'எங்கே சோமுன்னுதானே கேட்டேன் ' என்று பம்மிப் பதில் கொடுத்தார் பிள்ளை.
----இனிமேல் விஷயத்தைத் தெரிவித்தால் ஒன்றும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு சாந்தமான குரலில் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் பங்கஜம்;
'கோயிலுக்கு போயிருக்கான்... நான் தான் அனுப்பிச்சேன். நீங்க அவனை ஒண்ணும் மூஞ்சியைக் காட்டாதீங்க. பையனைப் பார்த்தா பாவமா இருக்கு.... '
முற்றத்தில் இறங்கி கால் அலம்பிக்கொண்டிருந்த பிள்ளை, 'சரி, சரி, நானே நெனச்சேன்... நாளையிலேருந்து வடக்கே இருந்து ஒரு பெரிய மகான் வந்து 'லெக்சர் ' பண்ணப்போறார்.... அவர் பேரு அருளானந்தராம்.... பெரிய இவுராம்.... '
பங்கஜம் தந்த டவலில் முகம் துடைத்துக்கொண்டார் மாடத்திலிருந்த திருநீற்றை எடுத்துப் பூசிக்கொண்டார். 'சரி, எலையெப் போடு.....என்ன வச்சிருக்கே ?.... ' என்று சொல்லிவிட்டு, படங்களுக்கு முன்னே கரம்கூப்பி நின்றார்.
'கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு....அப்பளம் ' '
---கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்த அவர் முகத்தில் ஒரு சுளிப்பு '.....
சேவிப்பு முடிந்தது; முகம் கடுகடுத்தது '
'என்னடி வச்சிருக்கேன்னே.... '
'கத்திரிக்காய் வதக்கிக் கொளம்பு; அப்பளம் ' '
'சனியன்.....ரெண்டு கருவாடு கூடவா கெடைக்கலே....அதுகூடப் போட்டுக் கொதிக்க வைக்க... சீ சீ, நாளு பூரா மனிசன் கொரங்குத் தீனியா திம்பான்.... ' என்று சலித்துக் கொண்டார்.
----சதாசிவம் பிள்ளை சிவபக்தர்; நர மாமிசம் கேட்காமலிருக்கிறாரே போதாதா ?....
மறுநாளிலிருந்து சோமு தந்தையுடன் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தான்.
'சாமி ஆண்டவனே....இந்த வருஷம் நான் பாஸாகணும் ' என்று ஆரம்பித்த பக்தி, ஜீவகாருண்யமே திறவுகோல் என்று வளர்ந்து, 'வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம் ' என்று சோமுவின் மனத்தில் கனியலாயிற்று.
சுவாமி அருளானந்தரின் பிரசங்கம் தொடர்ந்து இருபத்தியேழு நாட்கள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது அல்லவா ?....
சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.
'ஆமாம்....தாய் தந்தை, உடன்பிறந்தார், செல்வம், சுற்றம், உலகம் எல்லாம் பொய்தானே.... சாவு வரும்; அது மட்டும்தான் உண்மை. அந்த பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய் '
'படிப்பு ஏன் ?....சம்பாதனை எதற்கு ?.....
'முடிவில் ஒருநாள் செத்துப்போவேனே.... அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று....யாராவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன ?....
'தாய் அல்லது தந்தை இவர்களில் யாரேனும். யாராயிருந்தாலும் முடிவில் எல்லோரும் ஒருநாள் செத்துப் போவார்கள்...இவர்களில் யாரையாவது நான், அல்லது என் கல்வி, எனது சம்பாதனை காப்பாற்ற இயலுமா என்ன ?....
'முடியாது ' '
'அப்படியானால் இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு ?....நான் யார் ?....இவர்கள் யார் ? வீடு என்பதும், பந்துக்கள் என்போரும் அந்நியர் என்போரும், இன்பம் என்பதும் துன்பம் என்பதும்.....
'எல்லாம் வெறும் பொய் ' '
'மரணத்தை மனிதன் வெல்லமுடியாது. ஆனால் ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையமுடியும்.
'கடவுளை அடைவது என்றால் ?.....
'கடவுளை அடைவது என்றால்--- உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இப்படிப்பட்ட பாசபந்தச் சுழலில் சிக்கி, பாவகிருத்தியங்கள் புரிந்து மீளா நரகத்தில் விழாதிருக்க, பிறவி நீத்துக் கடவுளின் பாதாரவிந்தைகளை அடைந்து.....
'ஆமாம்....ஆசைகளைத் துறக்கவேண்டும் ' இந்த அற்ப வாழ்வில் ஆசைகொள்ள என்ன இருக்கிறது ?.... '
---அந்த இளம் உள்ளம் ஏகாந்தத்தை நாடித் தவித்தது. அவன் கற்பனையில் ஒரு தவலோகமே விரிந்தது.....
....ஹிமவானின் சிகரத்தில், பனிச் செதில்கள் பாளம் பாளமாய், அடுக்கடுக்காய் மின்னிப் பளபளக்கும் அந்தப் பாழ்வெளியில், மேகம் திரண்டு ஒழுகுவதுபோன்ற---ஹிமவானின் புத்திரி கோதிவிடும் வெண் கூந்தல் கற்றைபோல் விழும் --- நீரருவியில், அதன் அடிமடியில் ஓங்காரமாய் ஜபிக்கும் பிரணவ மந்திர உச்சாடனம் போன்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சலில், சிவனின் புகழ்பாடும் எண்ணிறந்த பறவை இனங்களின் இன்னிசையில்.... எதிலுமே மனம் லயிக்காமல், பற்றாமல், உலகத்தின் அர்த்தத்தையே தேர்ந்த பெருமிதத்தில், தெளிவில் மின்னிப் புரளும் விழிகளை மூடி, இயற்கையின் கம்பீரத்துடன் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறாரே அந்த ரிஷிக் கிழவர்.... அவர்தான் லோக குரு '
---அருளானந்த சுவாமிகள்விட்ட கவிதாநயம் மிகுந்த சரடு சோமுவைப் பின்னிப் பிடித்துக் கொண்டது.
அங்கே சென்று லோக குருவைத் தரிசித்து அவர் பாதங்களிலே வீழ்ந்து, அவருக்கு பணிவிடை செய்ய வேண்டுமாம். அதையே பிறவியின் பயனாகக் கொள்ள வேண்டுமாம். மற்றக் கருமங்கள் யாவையும் மறந்து ஆசைகளை, பந்தங்களை, தன்னை, உலகை யாவற்றையும் துறந்து.....
---துறந்துவிட்டால் லோக குருவாகப்பட்டவர் சோமுவை ஒரே தூக்காகத் தூக்கி, இமயமலைக்கு மேலே, எவரஸ்டையும் தாண்டி, கைலாயத்திற்கும் அப்பால் சுவர்க்கத்திற்கு அனுப்பி விடுவாரல்லவா ?....
'சம்போ மஹாதேவா '..... ' என்றவாறு படுக்கையை விட்டு எழுந்தான் சோமு.
'ஏது, பிள்ளையாண்டான் இன்னக்கி இவ்வளவு விடிய எழுந்திரிச்சிட்டாரு. வா வா ' எண்ண தேச்சுக்க.... ' என்று கூப்பிட்டாள் பங்கஜம்.
'இந்த கட்டைக்கு இதெல்லாம் எதற்கு ? ' என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. 'இன்றைக்கு ஒரு நாள்தானே ' என்ற சமாதானத்தில் அவன் ஒன்றும் பேசவில்லை.
'என்ன நாளைக்கு ?.... நாளைக்கு என்ன ஆய்விடப்போகிறாய் ? '
அதை நினைக்கும்பொழுதே மாய வாழ்வை உதறியெறிந்த எக்களிப்பு முகத்தில் தோன்றியது.
'ஏ, மூதி ' நிஜாரோட நிக்கிறதைப் பாரு... போயி கோமணத்தைக் கட்டிக்கிட்டு வா... '
'அப்பா ' தலையிலே எவ்வளவு முடி ?... முடி வெட்டிக்கிட்டா என்னா ?... ' என்று முனகிக்கொண்டே தலையில் எண்ணெயை வைத்துத் தேய்த்தாள்.
'முடி வெட்டிக் கொள்வது என்ன, மொட்டையே அடித்துக்கொள்ள வேண்டியதுதான் ' ' என்று மனம் முணகியது.
--அவனுக்குத் தலைமுடி ஒரே அடர்த்தி. சுருள் சுருளாக, வளையம் வளையமாக, வாரிவிட்டால் வங்கி வங்கியாக...
'ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்த மாதிரி சுருட்டை முடி... '
--மகனின் முடிப் பெருமையைப்பற்றி அவள் அடிக்கடி பேசிக் கொள்வாள் '
'எல்லாப் பெருமையும் நாளைக்கு... '
-- 'சம்போ மகாதேவா ' என்று சோமுவின் மனம் கோஷித்தது.
'நாளைக்கு...நாளைக்கு ' என்று மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.
அந்த 'நாளை ' யும் வந்தது.
மூன்று மாதங்களுக்குமுன் ஒரு 'பிளாஸ்டிக் பெல்ட் ' வாங்கவேண்டுமென்ற பெரும் லட்சியத்திற்காக, பள்ளிக் கூடத்தருகே விற்கும் வேர்க்கடலை, பட்டாணி, நாவற்பழம் இத்தியாதி வகையறாக்களைத் தியாகம் செய்து கிடைத்த காசையெல்லாம் சேர்த்துவைத்த செல்வம் மேஜை டிராயரில் 'புரூக்லாக்ஸ் ' டப்பியொன்றில் இருந்தது, அதை எடுத்து எண்ணிப் பார்த்தான். கிட்டத்தட்ட ஒரு ரூபாய் ' அந்தப் 'பாப மூட்டை ' யைச் சுமக்க மனமில்லாமல் தர்மம் செய்து விடுவது என்று தீர்மானத்தான் சோமு.
கொஞ்ச காலமாகவே அவன் தனது நண்பர்களை--அவர்கள் ஞானமேதுமறியா ஈனஜன்மங்கள் என்பதனால்--விட்டு விலகி ஒதுங்கி நடந்தான்.
உபாத்தியாயரோ-- 'மாணவர்களோடு சேர்ந்து கொச்சையாகவும் விரசமாகவும் கேலி பேசி மகிழும் அந்தத் தமிழ் வாத்தியார் இருக்கிறாரே, அவர் ரெளத்ரவாதி நரகத்துக்குத் தான் போகப்போகிறார் ' என்று டிக்கட் கொடுத்த புக்கிங் கிளார்க் மாதிரி முடிவு கட்டிவிட்டான் சோமு.
'ஊனைத் தின்று ஊனை வளர்க்கும் தகப்பனார் என்ன கதி ஆகப்போகிறாரோ ? ' என்று வருந்தினான்.
தாயா ?--அது ஒரு மூடாத்மா...
'இந்த அஞ்ஞான இருளில் அமிழ்ந்து கிடக்கும் மானிடப் பிறவிகளுக்கு மெய்ஞ்ஞான தீபத்தின் ஒளி என்றுதான் கிட்டுமோ ?... '
'ஸ்வாமி அருளானந்தரும், அவருக்கும் மேலாக ஹிமாலயத்தின் அடிவாரத்தில் தபஸில் லயித்திருக்கும் லோக குருவு இவ்விருவருக்கும் அடுத்தபடியாய்த் தானும் ஆகவேண்டிய பிறவி லட்சியம்... '
'சம்போ மஹாதேவா ' '
அடுத்த நாள் அதிகாலை, சட்டை நிஜார் அனைத்தையும் துறந்து--இடையில் ஒரு துண்டு மட்டும் உண்டு--மடியில் தனது 'மாயா செல் ' வத்தை முடிந்துகொண்டு, எல்லோரும் எழுந்திருக்கும் முன்னே சித்தார்த்தன் கிளம்பிச் சென்றது போல் நழுவினான் சோமு.
வெளியிற் கலக்க எண்ணி, வீட்டை வெளியேறிய சோமு நேரே மேலச் சந்நிதிக் கோபுரத்தடிக்குப் போனான்.
அங்கே ஒரு டஜன் பண்டாரங்கள் நின்றிருந்தன. அவர்கள் எல்லோருக்கும் தலைக்கு ஓரணாவாகத் தனது செல்வத்தைத் தானமிட்டுவிட்டு, தில்லைநாயகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நேரே குளத்தங்கரைக்கு ஓடினான். அங்கே அரசமரத்தடியில் காலையிலிருந்து தவமிருக்கும் 'பழனிநாத ' னிடம், இருந்த சில்லரையைக் கொடுத்துவிட்டுக் குரு உபதேசம் கொள்வதுபோல் குனிந்து உட்கார்ந்தான்.
'குரு ' அவன் காதில் குனிந்து கேட்டார்:
'என்ன தம்பி...மொட்டையா ? '
'ஆமாம்... '
வேணாம் தம்பி... கிராப்பு அளகா இருக்கே '... '
--மாயையை வென்ற ஞானிபோல் அவனைப் பார்த்துப் புன்னகை பூத்தான் சோமு.
'மகனே ' என்றழைத்து உபதேசம் செய்யப் போவது போல் இருந்தது அவன் தோற்றம்.
'அப்பனே...முடியை இழக்க யோசனை செய்கிறோமே, முடிவில் ஒருநாள் இந்தச் சடலத்தையே வைத்து எரிப்பார்களே அதைப்பற்றிச் சிந்திக்கிறோமா ?... முடிதரித்த மன்னர்கள் எல்லாம்கூட முடிவில் ஒருநாள் பிடி சாம்பராய்த்தானே போனார்கள் ' என்று 'குரு உபதேசம் ' செய்துவிட்டுக் குனிந்து கொண்டான்.
--அவனுக்குத் தான் பேசியதை நினைக்கும்போது, பேசியது தான்தானா என்றே ஆச்சரியமாய் இருந்தது. 'என்ன ஞானம் ' என்ன ஞானம் ' ' என்று தன்னையே மனசுக்குள் பாராட்டிக் கொண்டான்.
'பேசிப் பயனில்லை; ஞானம் முற்றிவிட்டது '
நினைத்த நாவிதன் அவனைப் 'பக்குவ 'ப்படுத்த ஆரம்பித்தான்.
உச்சந்தலைக்குக் கீழே நாவிதனின் கத்தி 'கருகரு 'வென்று வழிந்து இறங்கும்போது எதிரில் பெட்டியின்மீது சாத்தி வைத்திருந்த கண்ணாடியில் முகம் கோரமாய்த் தெரிந்தது.
அதைப் பார்த்த சோமுவின் கண்கள் ஏன் கலங்க வேண்டும் ?.....
'சம்போ மகாதேவா ' என்று மனசுக்குள் முனகி, தன்னை அடக்கிக் கொண்டான்.
பிறகு, குளத்தில் இறங்கி நாலு முழுக்குப்போட்டு விட்டு 'ஜெய் சம்போ ' என்ற குரலுடன் கரையேறினான்.
பாசம், பந்தம், சுற்றம் சொந்தம், செல்வம், செருக்கு யாவற்றையும் இழந்த ஏகாங்கியாய் அவன் வடதிசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
----ஆமாம்; இமயமலை அங்கேதான் இருக்கிறது '
'இமயமலை இங்கிருந்து ஆயிரம் மைல் இருக்குமா ?.....இருக்கலாம் ' '
'ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் நடக்க முடியாது ?....நிச்சயமாக முடியும் ' '
'அப்படியானால் மொத்தம் நூறு நாட்கள்---அதாவது மூன்று மாதமும் பத்து நாட்களும்.... '
'இரண்டாயிரம் மைலாக இருந்தால்.... அதுபோல் இரண்டு மடங்கு '.... எப்படி இருந்தாலும் போய்விட வேண்டியதுதானே '.....பிறகு, என்ன யோசனை ?.... '
'போகும் வழியெல்லாம் எவ்வளவு புண்ணிய ஷேத்திரங்கள் '.... எவ்வளவு தெய்வ பக்தர்கள் '.... எவ்வளவு மகான்கள் '.... எவ்வளவு முனிவர்கள் '......
சோமு தனது புனித யாத்திரையைத் துவங்கி ஆறு மணி நேரமாகி இருந்தது. போகும் வழியில்.....ஆம்; ஹிமாலயத்தை நோக்கிப் போகும் வழியில்தான்----குறுக்கிடுகிறது பரங்கிப்பேட்டை '
அந்த நகரில் அன்று சந்தை '
சோமு கடைத்தெரு வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்தான்.
கிராமத்து மக்கள் கும்பல் கும்பலாகப் போவதும் வருவதுமாய்....ஒரே சந்தடி '
மூட்டை முடிச்சுகளுடன் பறந்து பறந்து ஓடுகிறவர்கள், கூடைச்சுமைகளுடன் ஒய்யாரமாய் கைவீசி நடக்கிறவர்கள், தோளில் உட்கார்ந்து கொண்டு கரும்பு கடிக்கும் பிள்ளைச் சுமையுடன் துள்ளி நடப்பவர்கள், கட்டை வண்டிகளில் அழிகம்பைப் பிடித்துக்கொண்டு நகத்தை கடித்தவாறு சிரித்துச் செல்லும் கிராமத்து அழகிகள், தெரு ஓரங்களில் குந்தி இருந்து வியாபாரம் செய்பவர்கள், கூடியிருந்து பேசி மகிழ்பவர்கள், வியாபராம் செய்தவாறு வேடிக்கை பேசுபவர்கள், விலை கூவியவாறு பாட்டுப் பாடுபவர்கள். வேடிக்கை பார்த்தவாறு வழிவட்டம் போடுபவர்கள், கேலி பேசிவாறு 'கேளிக்கை 'க்கு ஆயத்தமாகிறவர்கள்--- மனிதர்கள் திருநாள்போல் மகிழ்ந்திருந்தனர். வாழ்வின் உயிர்ப்பு எத்தனையோ கோலத்தில் வளைய வந்துகொண்டிருந்தது அங்கே.
வாய்க்காலைத் தாண்டுவது போல் வாழ்க்கையைத் தாண்டிவிடலாம் என்று எண்ணி வந்த சோமு அந்தச் சந்தையைக் கடக்கும்போது --- வாழ்க்கையின் அந்தக் காட்சிகளில் தன்னை மறந்து லயித்துவிட்டான்.
அதோ, அந்த மர நிழலில் --- ஓர் இளம்பெண் நாவல் பழத்தை அம்பாரமாய்க் குவித்து வைத்துக்கொண்டு விலை கூவி விற்கிறாள். நாவல் பழ நிற மேனி; அந்தக் கருமேனியில் ---அவள் முகத்தில் முத்துப் பற்ற்களும், அவற்றிற்கு வரம்பமைத்த வெற்றிலைச் சாறூரும் உதடுகளும் எல்லோரையும் வலிய அழைத்து நாவற்பழம் தருகின்றன. அவளது கண்கள் வெள்ளை வெளேரென்று. அவற்றின் நடுவே இரண்டு நாவற்பழங்களைப் பதித்து வைத்ததுபோல் புரளும் கருவிழிகள்.....
அந்த விழிகள் சோமுவை, நாவல்பழத்தை வெறித்து நோக்கிய சோமுவின் விழிகளை நோக்கின.
'கல்கண்டு பளம்.....கருநாவப் பளம்....படி ஓரணா, படி ஓரணா.... ' என்று பாட்டுபாடி அவனை அழைத்தாள்.
'படி ஓரணா.... பரவாயில்லையே ...பள்ளிக்கூடத்துக்கு எதிரே வண்டியில் வைத்து நாலைந்து பழங்களைக் கூறுகட்டி கூறு காலணா என்று விற்பானே.... ' என்ற நினைவும் வரவே சோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
---அவனுக்கு நாவற்பழம் என்றால் உயிர் ' அதுவும் உப்புப் போட்டு தின்பதென்றால் ?....
அவன் வாயெல்லாம் நீர் சுரந்தது '
அதுவும் இந்தப் பழங்கள் '....
கன்னங்கறேலென்று, ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு..... கனிந்து லேசாக வெடித்த பழங்கள்... வெடிப்பின் இடையே சில பழங்களில், கறுமையும் சிவப்பும் கலந்த பழச்சாறு துளித்து நின்றது, பக்கத்தில் ஒரு சிறு கூடையில் உப்பும் வைத்திருந்தாள்...
கும்பலில் இருந்தவர்கள் காலணாவும் அரையணாவும் கொடுத்துக் கைநிறைய வாங்கிச் சென்றனர். சிலர் உப்பையும் சேர்த்துக் குலுக்கித் தின்றனர்.
அதோ, ஒரு கிழவர்....
அவர் வாயைப் பார்த்ததும் சோமுவுக்குச் சிரிப்பு வந்தது, அவர் மூக்குக்கும் மோவாய்க்கும் இடையே ஒரு நீளக்கோடு அசைந்து நெளிந்துகொண்டிருந்தது. அதுதான் உதடு, வாய், பற்கள் எல்லாம்....
'அரையணாவுக்கு பளம் குடு குட்டி ' ' அந்தக் கிழவர் பொக்கை வாயால் 'பளம் ' என்று சொல்லும்போது வெளியே தெரிந்த நாவையும் வாயின் அசைவையும் கண்ட சோமுவுக்குச் சிர்ப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
ஒரு காகிதத்தில் நாவல்பழத்தைப் பொறுக்கி வைத்து ஒரு கை உப்பையும் அள்ளித் தூவிக் கிழவரிடம் கொத்தாள் நாவற்பழக்காரி.
'ஏ, குட்டி, கெளவன்னு ஏமாத்தப் பாக்கிறியா ? இன்னம் ரெண்டு பளம் போடுடி...வயசுப் புள்ளைவளுக்கு மட்டும் வாரி வாரிக் குடுக்கிறியே... ' என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கேட்டார் கிழவர்.
'அடி ஆத்தே....இந்தக் கெழவனுக்கு இருக்கற குறும்பைப் பாரடி அம்மா ' ' என்று கையைத் தட்டிக் கன்னத்தில் வைத்துக்க்கொண்ட நாவர்பழக்காரி கண்களை அகல விரித்தவாறு சிரித்தாள்.
'மீதி சில்லறை குடு குட்டி...என்னமோ ஆம்படையான் சம்பாதிச்சுக் குடுத்த காசு கணக்கா வாங்கிப் போட்டுக்கிட்டு நிக்கறியே.... ' என்றார் கிழவர்.
'ஏ, தாத்தா...என்னா வாய் நீளுது.... ' என்று கிழவர் கன்னத்தில் லேசாக இடித்தாள் பழக்காரி.
'பாத்தியா...ஒரு ஆம்பிளை கன்னெத்தெ தொட்டுட்டா...எம்மேலே அம்மாம் பிரியமா, குட்டி... ? ஒங்கப்பங்கிட்டே சொல்லி நாளு பாக்கச் சொல்றேன்...எந்தப் பய கால்லேயாவது சீக்கிரம் கட்டாட்டி நீ எம்பின்னாலே வந்துடுவே போல இருக்கே... ' என்று சொல்லிக் கிழவர் அனுபவித்துச் சிரித்தார். பழக்காரி வெட்கத்தினால் இரண்டு கைகளினாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.
'போ...தாத்தா ' ' என்று கண்டிப்பதுபோல் கிழவரைப் பார்த்தாள்.
கிழவர் சிரித்துக்கொண்டே, கையிலிருந்த பழங்களில் ஒன்றை எடுத்து--உப்பில் நன்றாக அழுத்தி எடுத்து--இரண்டு விரல்களால் வாய்க்கு நேர உயர்த்திப் போட்டுக் குதப்பிச் சப்பிக் கொட்டையைத் துப்பினார்...
'அடெ, இத்தினூண்டு கொட்டை ' பழம், நல்ல பழம் தான் ' --கிழவரின் வாயசைப்பையும் சுவை ரசிப்பையும் கவனித்து அனுபவித்த சோமு வாயில் சுரந்த எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
இந்த மொட்டைத்தலைச் சிறுவன் தன்னையே கவனித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்த கிழவர்.
'இந்தாடா, பையா... ' என்று சோமுவிடம் ஒருகை பழத்தை அள்ளிக் கொடுத்தார்.
சோமுவுக்குச் செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது ' அந்த நாவற்பழக்காரி அவனைப் பார்த்தாள். சோமு, கிழவனையும், நாவற்பழக்காரியையும் மாறி மாறிப்பார்த்தான். அவனுக்கு ஆத்திரம் பொங்கி வந்தது '
'நா ஒண்ணும் எச்சப் பொறுக்கி இல்லே... ' என்று அவனிடம் நீட்டிய கிழவரின் கையிலிருந்த பழத்தைத் தட்டிவிட்டான்.
கிழவர் சிரித்தார்:
'அட, சுட்டிப்பயலே...என்னமோ ஒன்னெப் பாத்தா ஆசையா இருந்தது...எம் பேரப்பையன் மாதிரி...கோவிச்சிக்கிட்டியே...நான் ஒன் தாத்தா மாதிரி இல்லே... ' என்று வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தார்.
சோமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
'ஒங்க தாத்தாவுக்குத்தான் இந்தமாதிரி சுருட்டை மயிர் ' என்று சொல்லும் அவன் தாயின் குரல் செவிகளில் ஒலித்தது.
'இந்தாடா பையா...ஏதுக்கு அளுவுறே ? நீ யாரு வூட்டுப் பையன்... ' என்றார் கிழவர்.
சோமு ஒன்றும் பதில் பேசவில்லை.
'ஒனக்கு என் கிட்டே கோவம், இல்லே ?...பரவாயில்லே...தாத்தாதானே...இந்தா, பழம் தின்னு... '
'ஊஹ்உம்...எனக்கு வேணாம் '
'சேச்சே... அப்பறம் எனக்கு வருத்தமா இருக்கும். ஒண்ணே ஒண்ணு ' ' என்று அவன் கையில் வைத்தார். அவனால் மறுக்க முடியவில்லை. அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அந்த இடத்தில் நிற்க முடியாமல் நகர்ந்தான்.
'பாவம்...யாரோ அனாதை ' மொகத்தைப் பாத்தா பாவமா இருக்கு... '
'நான் அனாதையா ?...பிச்சைக்காரனா ?... ' வாயிலிருந்த பழத்தைச் சுவைத்துக் கொட்டையைத் துப்பினான். 'அந்தக் கிழவனின் முகத்தில் அறைவதுபோல் நானும் ஒரு காலணாவுக்குப் பழம் வாங்கித் தின்றால் ?... '
'திங்கலாம்...காசு ?... '
--அவன் தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே நடந்தான்.
அதோ, அந்த மரத்தடியில் வேர்க்கடலை, பட்டாணி வறுக்கிறார்கள். அப்பா '...என்ன வாசனை ?...
--திடாரென அவன் மனசில் மின்னல்போல் அந்த எண்ணம் விசிறி அடித்தது.
'நாம் எங்கே போகிறோம் ?...நமது லட்சியம் என்ன ?
--அவனுக்கு நெஞ்சில் 'திகீல் ' என்றது. அவனே தேர்ந்துகொண்ட அந்த முடிவு அவனை இப்பொழுது முதல் தடவையாக மிரட்டியது ' ஒருகணம் சித்தம் கலங்கியது; உணர்வற்று நின்றான், உடலிலும் நெஞ்சிலும் ஒரு துடிப்புப் பிறந்தது. தன்னை ஏதோ ஒன்று பின்னாலிருந்து திரும்ப அழைப்பதுபோல் உணர்ந்தான். அந்த அழைப்பின் பாசம், பிடிப்பு...அதிலிருந்து பிய்த்துக்கொண்டு விலகிவிட எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாய்ச் சந்தைத் திடலைவிட்டு ஓடினான்...கடைத்தெருவைக் கடந்து சாலை வழியே வந்தபின் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
வெகுதூரத்தில், வாழ்வின் கீதம்போல் ஒலிக்கும் சந்தை இரைச்சல் அவன் காதுகளில் மெல்லெனக் கேட்டுக் கொண்டே இருந்தது.
அவன் ஏன் அழுதுகொண்டே நடக்கிறான் ?...
சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட, பதினைந்தாவது மைலிலுள்ள ஆலப்பாக்கத்தருகே புழுதி படிந்த உடலுடன் நடக்க முடியாமல் தளர்ந்து தள்ளாடி நடந்து வருவது--ஹிமாலயத்தை நாடிச் செல்லும் ஞானச் செம்மல் சோமுதான்.
நடக்க முடியவில்லை; வயிற்றைப் புரட்டுகிறது ஒரு சமயம், வலிக்கிறது மறுசமயம்...பசிதான் '
--சுமைகளை உதறி எறிந்துவிட்டு வந்த சோமுவுக்கு,
சோறில்லாமல் வெற்றுடல் சுமையாய்க் கனக்கிறது '
இனிமேல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்ற ஸ்தம்பிப்பு ' நிற்கிறான்...பார்வை வெகுதூரம் வரை ஓடி வழியை அளக்கிறது....
பார்வை மறைகிறதே.....கண்ணீரா ? பசிக் கிறுகிறுப்பா ?....
இமயமலைக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கிறது '
சிரமப்பட்டு ஒரு அடி எடுத்து வைக்கக் காலை அசைத்தவுடன் காலில் பெருவிரலிலிருந்து அடித்தொண்டை வரைக்கும் ஒரு நரம்பு--கொரக்குப் பிடித்து சுண்டி இழுப்பது போல்....
'ஆ ?....என்ன வலி '..... ' பல்லைக் கடித்துக்கொண்டு தரையில் மெல்ல உட்காருகிறான்.
----எத்தனை நாழி ?....
எழுந்திருக்க மனமும் வரவில்லை; உடலும் வரவில்லை.
இருள் பரவ ஆரம்பித்தது;
மேற்குத் திசையில் வானம் சிவந்து கறுத்தது. அந்தச் சாலையின் நெடுகிலும் வளர்ந்து படர்ந்திருந்த ஆல விருக்ஷத்தின் விழுதுகள் சடைசடையாய் ஆடிக்கொண்டிருந்தன. இருளைக் கண்டதும்.... பாவம், பிள்ளைக்குப் பயத்தால் மனத்தில் உதறல் கண்டுவிட்டது.
அந்தச் சாலையில் விளக்குகளும் கிடையாது. 'இன்று நிலாவும் இல்லை ' என்று சொல்வதுபோல் நான்காம் பிறை கடைவானில் தலைக்காட்டிவிட்டு கீழிறங்கிக் கொண்டிருந்தது. 'எங்காவது ஒரு குடிசை கண்ணுக்குத் தெரிகிறதா ? ' என்று பார்த்தான்....ஹஉம், இன்னும் இரண்டு மைலாவது நடக்க வேண்டும்.
'இரவு படுக்கை ?..... '
---வீட்டில் படுக்கும் மெத்தையும், பஞ்சுத் தலையணையும், கம்பளிப் போர்வையும் நினைவுக்கு வந்தன.... 'இதெல்லாம் என்ன விதி '..... '
'பசிக்கிறதே '.... '
'யார் வீட்டிலேயாவது போயி, சம்போ மகாதேவான்னு நிக்கிறதா என்ன ? '
'யாராவது பிச்சைக்காரன்னு நெனைச்சி வெரட்டினா ?.... '
வீட்டில்--மெய்ஞ்ஞானம் கைவரப்பெறாத அம்மா, பாசத்தை விலக்க முடியாமல், மகனென்ற மாயையில் சிக்கி பக்கத்தில் அமர்ந்து பரிந்து பரிந்து சோறிட்டுப் பறிமாறுவாளே---அந்த அம்மா, ஆசை அம்மா---அவள் நினைவு வந்ததும்....
'அ...ம்....மா... ' என்று அழுகையில் உதடுகள் விம்மித் துடித்தன '
'சீ ' இதென்ன பைத்தியக்காரன்போல் ஓடிவந்தேனே ' இதென்ன கிறுக்கு ?.... ' என்று தன்னையே சினந்துகொண்டான்.
இந்நேரம் ஊரில், வீட்டில் அம்மா, தன்னைக் என்னென்ன நினைத்து, எப்படியெப்படிப் புலம்பி அழுவாள்.....
அப்பா ? அவர் ஊரெல்லாம் தெருத் தெருவாய் அலைந்து திரிந்து எல்லோரிடத்திலும் 'சோமுவைப் பார்த்தீர்களா சோமுவை... ' என்று விசாரித்தவாறு சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருப்பார்...
'ஐயோ ' என்னால் எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம் ' ' என்று எண்ணிய சோமு.
'அம்மா '...நா வீட்டுக்கு வந்துட்றேன் அம்மா...ஆ...ஹ்உ...ம்... ' என்று ஜன நடமாட்டமே இல்லாத அந்தச் சாலையில், திரண்டு வரும் இருளில் குரலெடுத்துக் கூவி அழுதான்.
சிறிது நேரம் மனம் குமுறி அழுது சோர்ந்தபின், மனம் தெளிந்து புத்தி செயல்பட ஆரம்பித்தது.
நேரமோ இருட்டுகிறது, நடந்துவந்த வழியை எண்ணினான். 'மீண்டும் திரும்பி நடப்பதென்றால் வீட்டுக்குப் போய்ச் சேருவது எப்போது ?......எப்படியும் விடியற்காலையிலாவது வீட்டுக்குப் போயாக வேண்டுமே...இந்த இருட்டை, ராத்திரியைக் கழிப்பது எங்கே ?...
அவனுக்கு அழுகை வந்தது.
'இதெல்லாம் என்ன விதி ? '
'விதியல்ல கொழுப்பு ' ' என்று பல்லைக் கடித்துக் கொண்டு வாய்விட்டுச் சொன்னான்.
பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் சற்றுப் பிடி தளர்ந்தன.
'பெற்றோர்க்கும் எனக்கும் என்ன பந்தம் ? '
'பெற்ற பந்தம்தான் ' பந்தமில்லாமலா என்னை வளர்த்தார்கள் ? நான் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது... '
'பாசத்தை யாரும் வலியச் சென்று ஏற்காமலே பிறக்கிறதே...அதுதானே
பந்தம் ' '
'ஆமாம் பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும். '
'பந்தமும் பாசமும் பொய்யென்றால், ஸ்வாமி அருளானந்தரின் மீதும், லோக குருவின்மீதும், பரம்பொருளின் மீதும் கொண்டுள்ள பக்தி...அதுவும் ஒரு பாசம்தானே ? '
சாலையில் கவிந்திருந்த இருளில் மரத்தடியில் அமர்ந்து தன்னைச் சூழ்ந்து பின்னிக்கொண்டிருந்த வேதாந்தச் சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் அவிழ்த்து, சிக்கறுத்துத் தள்ளித்தள்ளித் தன்நிலை உணர்ந்துகொண்டிருந்த சோமு, இருளும் நன்றாகப் பரவிவிட்டது என்று உணர்ந்தான்.
கண்ணுக்கெட்டிய தூரம் இருளின் கனம்தான் தெரிந்தது. வெகு தொலைவில் ரயில் சப்தம் கேட்டது. வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரச் சிதைவு இருளின் கருமையை மிகைப்படுத்திக் காட்டின. யாரோ ஒரு பிரம்ம ராக்ஷஸனின் வரவுக்காக 'பாரா 'க் கொடுத்து திண்டுமுண்டான ராக்ஷசக் கூட்டம் அணிவகுத்து நிற்பதுபோல் அசையாமல் தோன்றும் மரங்களின் கரிய பெரிய பரட்டைத் தலைகளின் மீது ஜிகினா வேலை செய்ததுபோல் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாய் மொய்த்தன.....
திடாரென் 'சரசர 'வென்ற அந்தச் சப்தம் '.....எங்கிருந்து வருகிறது ?....
சோமுவின் கண்கள் இருளைக் கிழித்து ஊடுருவின.... காதுகள் கூர்மையாயின....
'எங்கே '....என்னது ?..... '
'அதோ....அதுதான்; அதுவேதான் ' '
---சாலையின் வலது புறத்தில்---சோமு உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நேரே பத்தடி தூரம் தள்ளி---கடலைக் கொல்லையிலிருந்து மேலே உயரும் சாலைச் சரிவில், உதிர்ந்து நிரவிக் கிடக்கும் ஆலிலைச் சருகுக் குவியலின் நடுவே, நெல்லுக் குத்தும் மர உலக்கை ஒன்று லாகவம் பெற்று நெளிவதைப்போல நகர்ந்து வந்தது....இருளில்கூட என்ன மினுமினுப்பு '
'பாம்பு '....தப்பு....தப்பு.....சர்ப்பம்.... சர்ப்ப ராஜன்.... ' வாய் குழறிற்று. காலும் கையும் தன் வசமிழந்து உதறின. சாய்ந்து உட்கார்ந்திருந்த அடிமரத்தில் முதுகை ஒட்டிக் கொண்டு எழுந்தான். எழுந்திருக்கும்போது மொட்டைத் தலையில் 'நறுக் 'கென்று மரத்தின் முண்டு இடித்தது.
-அந்த 'உலக்கை ' மேட்டில் ஏறி, சாலையின் குறுக்கே நீண்டு நகர்ந்தது. நீளக் கிடந்து நகர்ந்த அந்த உலக்கை ஒரு துள்ளுத் துள்ளிச் சாடி நெளிந்தது.
'வ்வோ....மொ....ழொ....ழொ.... ' வென்று பயந்தடித்துக் குளறினான் சோமு. உலக்கையின் சாட்டத்தைத் தொடர்ந்து கிளம்பிய தவளை ஒன்றின் பரிதாப ஓலம் சில வினாடிகளில் ஓய்ந்து போயிற்று.
'ஏறுமயில்....ஏறிவிளையாடு முகம் ....ஒன்று ' என்று 'பய-பக்தி 'க் குரலில் முருக ஸ்தோத்திரம் செய்தான் சோமு.
அந்த 'உலக்கை ' சாலையின் மறு இறக்கத்தில் 'சரசர 'வென்ற ஓசையுடன் இறங்கி மறைந்தது.
திடாரென அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. 'திடாரென மரத்தின் மீதிருந்து ஒரு 'உலக்கை ' சுருண்டு விழுந்து தன் மீது புரண்டு சாடி.... '
'ஐயோ '.... '
தலையைத் தொட்டவாறு தொங்கும் ஆல விழுது. நாக்கை நீட்டித் தலையை நக்கும் பாம்புபோல்....
இன்னும் கொஞ்ச நேரத்தில் பாம்பின் படம் மொட்டைத்தலையின் மீது கவிந்து, 'பொத் 'தென அடித்து, மேலெல்லாம் புரண்டு, சுற்றி, இறுக்கி....
திடுதிடுவென இருண்ட சாலையின் நடுவே ஓடினான். கால் நரம்புகள் நொந்து வேதனை தந்தன....முழங்காலுக்குக் கீழே ஒரே பதட்டம்...ஓடிவந்த வேகத்தில் முழங்கால் மடங்க, குப்புற விழுந்தான்.
முன்காலில் அடிபட்டவுடன் கண்கள் இருண்டன....
அவன் தன் நினைவின்றி, பசி மயக்கத்தில், நடந்த களைப்பில் மிருதுவான செம்மண் புழுதியில் அசைவின்றிக் கிடந்தான்.
அடுக்கடுக்காய்த் திரண்டு வந்த இருள் திரட்சி அவன் மீது கனமாகக் கவிந்தது '
ஜல்....ஜல்....ஜல்.....ஜல்.....
'அது என்ன சப்தம் ? கைலயங்கிரியில் தாண்டவமாடும் சர்வேச்வரனின் கழலொலி நாதமா ?.... '
'தூரத்தில், வான்முகட்டில் கேட்கிறதே... '
'ஜல்....ஜல்... '
'தா...தா...ஹேய்.... '
'ஜல்...ஜல்....ஜல்.... '
'ஹாவ்....ஹாவ்.....அதார்ரா அவன், நடுரோட்டிலே படுத்துக் கெடக்கிறது ?.... ' என்ற வண்டி ஓட்டுபவனின் குரலைத் தொடர்ந்து,
'எறங்கிப் போயிப் பாரேண்டா....நில்லு, நானும் வாரேன்.... ' என்ற மற்றொரு குரலும் சோமுவின் செவியில் விழத்தான் செய்தன....அனால் அவை எங்கோ சந்தையில் ஒலிக்கும் தூரத்துக் குரல்கள்போல் தோன்றின.
வண்டியிலிருந்து இறங்கிய மனிதர், வண்டிக்குக் கீழே புகை மண்டி எரியும் ராந்தல் விளக்கை அவிழ்த்துக் கொண்டு அவனை நெருங்கினார்.
சோமுவின் மூடிய இமைகளினூடே வெளிச்சத்தின் சாயை படரவே, கனத்து அழுத்திக்கொண்டிருக்கும் இமைகளைத் திறந்தான்....ஒளிபட்டுக் கண்கள் கூசின. இமைகள் பிரிந்து பிரிந்து ஒட்டின. அவன் கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். உட்கார்ந்ததும் கண்களைக் கசக்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதான்....
'அடடே....சந்தையிலே பாத்த பையனில்லே நீ..... '
சோமு அழுவதை நிறுத்திவிட்டு வெளிச்சத்தில் அவர் முகத்தைப் பார்த்தான்.
---ஆமாம்; சந்தையில் நாவற்பழம் தந்த பொக்கை வாய்க் கிழவர் '
'ஒனக்கு இவனைத் தெரியுமா, தாத்தா ? ' என்றான் வண்டி ஓட்டி வந்த வாலிபன்.
'தெரியாம என்னா ? ஒன்ன மாதிரி ஒரு பேரன் ' '
'நீ யாருடா, பயலே... இங்கே எப்படி வந்தே ?....அதுவும் இந்நேரத்திலே...எந்த ஊரு... என்னாடா பையா, எல்லாத்துக்கும் அளுவுறே.... சேச்சே.... ஆம்பிளைப்புள்ளே அளுவறதாவது... எனக்கு வெக்கமா இருக்கு.....சரி, நீ எங்கூட வா....தோ, பக்கத்திலேதான் வூடு இருக்கு; போயிப் பேசிக்கலாம்...வவுத்தெப் பசிக்குதடா, கெழவனுக்கு...உம் வா '.... ' என்று அருகே இழுத்து அணைத்துக்கொண்டார் கிழவர்.
இருக்கும் சொந்தத்தை உதறிவிட எண்ணிய சோமுவும், எல்லாரிடமும் சொந்தம் பாராட்டும் கிழவரும் ஒருவரையொருவர் ஒரு கணம் பார்த்துக்கொண்டனர். கிழவர் சிரித்தார்.
அந்த இரட்டை மாட்டுக் கட்டை வண்டியில் கூடைகளும், வாழையிலைச் சருகுகளும் குப்பைபோல் நிறைந்திருந்தன. உயரமான வண்டியின் சக்கரங்களில் காலை வைத்துத் தாவியேறினார் கிழவர்.
சோமுவால் ஏற முடியவில்லை; கிழவர் கைகொடுத்தார். கிழவரின் பேரன் வண்டியை ஓட்டினான். மடியிலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டே சோமுவிடம் பேச்சுக் கொடுத்தார் கிழவர்:
'பையா....நீ எங்கேருந்து வாரே....எங்கே போறே....கேக்கறத்துக்குச் சொல்லு..... '
'நா....நா '....வந்து....இமயமலைக்குப் போலாமின்னு.... ' அவனுக்குத் தொண்டை அடைத்தது.
'இமயமலையா ?....அது எங்கேல 'யிருக்கு ?..... '
'அதான் தாத்தா...நீ கைலாசம்னு சொல்லுவியே.... ' என்று குறுக்கிட்டான் அவர் பேரன்.
'அடெ பைத்தியக்காரப் புள்ளே....அந்த மலைக்கி இந்தச் சரீரத்தோட போவ முடியுமா 'லே.... காரைக்காலம்மையாரே தலையாலே நடந்தில்லே போனாவ....நாமெல்லாம் செத்தப்புறம்தான் போவமுடியும்...நீ பசலை...இன்னம் எவ்வளவோ அனுபவிக்கக் கெடக்கு...படிச்சி, சம்பாதிச்சு, கலியாணம் காச்சின்னு கட்டிக்கிட்டு, புள்ளெக் குட்டியெல்லாம் பெத்து, என்னெ மாதிரி ஆனப்புறம் இந்தப் புத்தி வந்தா சரிதான்....இப்பவேவா ?....இது என்னடா, கிறுக்குத்தனமால்லே இருக்கு....எனக்குக்கூட இல்லே அந்த மாதிரிப் புத்தி வரமாட்டேங்குது... ' என்று சொல்லிக்கொண்டிருந்த கிழவர் ஏதோ பழைய நிகழ்ச்சியில் லயித்தவர்போலச் சிரித்துக் கொண்டார்.
'தாத்தா '.... ' என்று சோமுவின் குரல் ஒலித்தது.
'என்னலே... ' என்று கிழவர் அவன் தோள்மீது கைவைத்தார்.
அவன் விம்மி விம்மி அழுதான்.
'தாத்தா இனிமே....நா ' எங்கேயும் போகமாட்டேன், தாத்தா...வீட்டிலே இருந்துகிட்டே சாமியெல்லாம் கும்பிட்டுக்குவேன் தாத்தா....அம்மா அப்பாகிட்டே சொல்லிக்காம இனிமே எங்கேயும் போகமாட்டேன்... நீங்க மட்டும்....என்னெ எப்படியாச்சும் செதம்பரத்திலே கொண்டுபோய் சேர்த்திடணும்....தாத்தா....நாளைக்கே, நான் வூட்டுக்குப் போயிடணும் ஒங்களெ நா ' மறக்கவே மாட்டேன் தாத்தா.... ' என்று கெஞ்சிக் கெஞ்சி அழுதான் சோமு.
கிழவர் சிரித்தார்.
'என்ன தாத்தா சிரிக்கிறீங்க....என்னெக் கொண்டு போயி விடமாட்டாங்களா ?.... செதம்பரத்துக்கு வேண்டாம், புவனகிரியிலே விட்டாகூட போதும். அங்கேருந்து போயிடுவேன்..... '
சோமுவுக்கு தான் வந்த வழியை...தூரத்தை....நினைக்கும்போது மலைப்பாய் இருந்தது. வந்ததுபோல் திரும்பி நடந்து போய்விடமுடியாது என்று தோன்றிற்று.
'கிளாஸ் டாச்சர் ராதாகிருஷ்ணய்யர் எவ்வளவு அன்பாகப் பேசுவார்.... எவ்வளவு செல்லமாகக் கொஞ்சுவார்....ஒருநாள் கூட 'ஆப்ஸன்ட் ' ஆகாதவன் என்று புகழ்ந்து பேசுவாரே.... இரண்டு நாட்கள் வராவிட்டால் வீட்டிலிருந்து போய் அவரைக் கேட்கமாட்டார்களா ?.... அவரும் வருத்தப்படுவாரே... ஸார், நா ' இனிமே இப்படிச் செய்யவே மாட்டேன்.... '
'....ஐயோ ' வண்டி இன்னும் வடக்கே போய்க்கொண்டிருக்கிறதே ' யார் இந்தக் கிழவன் ? என்னை கொண்டுவிடவும் மாட்டேன் என்கிறான்...இன்னும் அதிக தூரத்துக்கு இழுத்துக் கொண்டு போகிறானே.... '
'தம்பி...வீணா மனசைப் போட்டுக் கொளப்பிக்காதே ' மூணு மணிக்கு எவனாவது செதம்பரத்துக்கு எலைக்கட்டு ஏத்திக்கிட்டுப் போவான்...அப்போ உன்னையும் எளுப்பி வண்டியிலே ஏத்திவுடறேன்.... நீ போயிடலாம்...ராவிக்கு எங்கவூட்லே சாப்பிட்டுட்டுப் படுத்துக்க... நானும் ஒன் வயசிலே இப்படி ஓடியிருக்கேன்....அப்புறம்தான் தெரியும் அந்த சுகம் '.... ' என்று சொல்லிவிட்டுக் கிழவர் பழைய நினைவுகளில் லயித்துக் தனக்குள் சிரித்துக்கொண்டார்.....
---அவன் முகத்திலும் வாழ்வின் சுவைபோல் சிரிப்புப் பூத்தது '
விடிவுக்கால இருள் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது.
புவனகிரியின் எல்லையில் 'கடக் கடக் ' கென்று இரட்டை மாட்டுக் கட்டை வண்டியொன்று ஏற்றியிருந்த இலைக்கட்டுச் சுமையுடன் நகர்ந்துக்கொண்டிருந்தது. கழுத்து மணி 'சலசல 'த்தது; சக்கரத்தின் ஓசை விட்டுவிட்டுக் கிறீச்சிட்டது.
இலைக்கட்டுகளின்மேல், குளிருக்குக் கோணிப்பையைப் போர்த்தியவாறு உறக்கமும் விழிப்புமாய் உட்கார்ந்திருந்த சோமுவுக்கு ஊர் நெருங்குவதில் பயமும் மகிழ்ச்சியும் தோன்ற உறக்கம் கலைந்தது.
'சிதம்பரம் 1 மைல் ' ' ----என்ற கைக்காட்டி மரத்தைக் கண்டவுடன்,
'ஐயோ '---- ' என்று குதூகலிக்கும் குரலில் கூப்பிட்டான் சோமு.
வண்டிக்காரன் நுகத்தடியில் கால்களை உந்திக் கொண்டு, மாடுகளின் மூக்கணாங்கயிற்றை வலிந்திழுத்தான்; வண்டி நின்றது.
வண்டியிலிருந்து, சக்கரத்தைப் பற்றித் தொத்திக் கீழே இறங்கிய சோமு வண்டிக்காரனின் முன் கைகூப்பி நின்றான்.
'ஐயா, ஒனக்குக் கோடி நமஸ்காரம்...இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். தாத்தாகிட்ட போயி இதைச் சொல்லு....அவுரு தங்கமான தாத்தா... ' சோமுவின் குரல் தழுதழுத்தது....கண்களில் கண்ணீர் மல்கியது.
வண்டிக்காரன் வாய்விட்டு, மகிழ்வோடு சிரித்தான்:
'தம்பி....வண்டி ஒறவு. வண்டியோடப் போயிடக் கூடாது...நா ' வாரா வாரம் சந்தைக்கு வருவேன்....தாத்தாகூட வருவாரு....மாருகட்டுலே அந்த மேக்கால கேட்டு இருக்குல்ல.... அங்கதான்....வந்து பாக்கிறியா ?.... '
'அவசியம் வாரேன்...தாத்தாவுக்கு என் நமஸ்காரத்தைச் சொல்றியா ?...நா ' போயிட்டு வாரேன் ' என்று வார்த்தைகளைச் சொல்லி முடிக்காமல் வைகறை வானத்தை புலர் பொழுதின் வெள்ளிய வான்வெளியை, இருளிலிருந்து ஒளியை நோக்கி ஓடி மறைந்தான் சோமு.
தெருக்களின் நடுவே வரும்போது வீடுகளின் முன்னே பெண்கள் சாணம் தெளித்துக் கொண்டிருந்தனர்.
இடையில் ஒரு முழத் துண்டு மட்டும் தரித்த சோமு, குளிருக்கு அடக்கமாய், கைகளை மார்பின் குற்க்காகத் தோளில் சேர்த்துக் கட்டியவாறு வேக வேகமாய் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
அவன் வீட்டருகே நெருங்கும்போது, பங்கஜத்தம்மாள் வாசலில் கோலமிட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். வாசலில் நின்று, கோலத்தை ஒருமுறை கவனித்துவிட்டு...உள்ளே திரும்பும்போது சோமு ஓட்டமாய் ஓடிவந்து வாசலில் நின்று 'அம்மா ' ' என்று விக்கும் குரலில் கூப்பிட்டான்.
அந்தக் குரல் அவள் செவியில் அரைகுறையாகவே விழுந்தது.....
'போ போ....விடிஞ்சுதா--அதுக்குள்ளே..... ? ' என்று திரும்பினாள் '
பிரஷ்டம் செய்யப்பட்ட பாபியைப்போல் வாசலில் நின்று,
'அம்மா.... நாம்மா...சோமு ' என்று கூறிய சோமு 'ஓ 'வென்று அழுதுவிட்டான்.
'அடப்பாவி....இதென்னடா கோலம் '.... ' என்று கையிலிருந்த கோலப் பொடி டப்பாவைப் போட்டு விட்டு ஓடிவந்து பிள்ளையை வாரியணைத்துக் கொண்டாள் பங்கஜம் '
'நா '....நா '.....பண்டாரமா போயிடலாம்னு...நெனைச்சி...நெனைச்சி...போனேம்மா... போனா..போனா வழியிலே ஒன் ஞாபகம் வந்திடுச்சிம்மா...ஆ...ஆ... ' என்று குரலெடுத்து அழுதவாறு தாயை இறுக அணைத்துக்கொண்டு விக்கினான் சோமு.
'பைத்தியக்காரப் புள்ளே.... என்னெ விட்டுட்டு நீ போலாமா ?... 'தாயிற் சிறந்த கோயிலுமில்லே 'ன்னு நீ படிச்சதில்லையா ?....வா... உள்ளே வாடா.... ' என்று ஒரு கையில் அவனை அணைத்துக் கொண்டு, மறு கையால் கண்களைத் துடைத்துக் கொண்டான் பங்கஜம்.
உள்ளே----போகும்போதே, 'பாத்தீங்களா, உங்க பிள்ளையை....அத்தை வீட்டுக்குப் போயிருப்பான்னீங்களே ----சந்நியாசம் போயிட்டுத் திரும்பி இருக்கு.... ' என்று கண் கலங்க சிரித்துக்கொண்டே கூவினாள் அவன் தாய்.
'ஏண்டா, ஒனக்கு நல்ல எளுத்து நடுவே இருக்கையிலே கோண எளுத்து குறுக்கே போச்சி ?.... அட, பரதேசிப்பய புள்ளே.... அளகா இருந்த கிராப்பை எடுத்துப்பிட்டு....சரி சரி, அந்த மட்டிலே வந்து சேந்தியே... கண்ணும் மூஞ்சியும் பார்க்க சகிக்கலே....போ.... போயி, பல்லை வெளக்கி மூஞ்சி மொகத்தைக் களுவிப்பிட்டுச் சாப்பிடு....அடியே, வட்டிலெ எடுத்துவச்சி பழையதைப் போடு....இந்தா, நானும் வந்துட்டேன் ' என்று சாமி கும்பிடக் கூடத்துக்குச் சென்றார் சதாசிவம் பிள்ளை.
அண்ணனைக் கண்டதும், அப்பொழுதுதான் படுக்கையிலிருந்து எழுந்த இரண்டு தம்பிகளும், ராஜியும் அவனிடம் ஓடிவந்து அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு,
'எங்கேண்ணா போயிட்டே நேத்தெல்லாம் ?.... ' என்று விசாரித்தனர்.
ராஜி அவன் மொட்டைத் தலையைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
அவனுக்கு வெட்கமாயும், வருத்தமாயும் இருந்தது '
'இங்கே பாரும்மா, ராஜியை...என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கறா ' என்று கத்திக்கொண்டே அவனைப் பிடிப்பதற்கு ஓடினான்.....
கூடத்தில் சுவாமி படத்தருகே நின்று, நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு. கண்மூடி கரம்கூப்பி,
'ஆங்காரம் தனை அடக்கி ஆணவத்தைச் சுட்டெரித்துத் தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம் ' ' என்று உருகிக்கொண்டிருந்த சதாசிவம் பிள்ளையின் கால்களை ஓடிச் சென்று கட்டிக்கொண்டு, சோமுவை எட்டிப் பார்த்துப் பல்லைக் காட்டிப் பரிகாசித்தாள், ராஜி.
குழந்தையை ஒரு கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு, ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் பிள்ளை.
அதற்குள் அடுக்களையிலிருந்து தாயின் குரல் கேட்கவே சோமு சாப்பிடப் போனான்.
வட்டிலில் பழையதைப் பிழிந்துவைத்து, முதல்நாள் மீன் குழம்புச் சட்டையை அகப்பையால் துழவிக்கொண்டே,
'என்ன ஊத்தவா ? ' எனப்துபோல் சோமுவைப் பார்த்தாள் பங்கஜம்.
அவன் தலையைக் குனிந்துகொண்டான்.
0 comments:
Post a Comment