Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

சுந்தரி

Labels: ,

மெளனி

கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப்போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப்பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்துவிட்டேன். ஆனால் என் தலையை உதறிக்கொண்டால், பரிதாபம் ' சிரமங்கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படியவைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்ற ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டேன். இப்போதுதான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்.

Abstracts_Of_Modern_Art_Gallery_2007 கடுங்கோடையானதினால் கொஞ்சம் இளகிய என் மூளை நன்றாக உருக்கம்கொண்டு அபார அற்புதக் கற்பனைகளை ஏராளமாகக் கொட்டுகிறது. உருகி வழியும் கற்பனைகளைத் தாறுமாறாக ஓட்டம்கொள்ளாமல் தடை செய்வதில்தான் என் முழுப் பிரயாசையும் செலுத்தவேண்டியிருக்கிறது. எனினும் அநேகர் இப்பிரயாசையில்லாமலே எழுதுவதாக எனக்குப்படுவது, அவர்களிடம் எனக்குப் பொறாமை உண்டாகக் காரணமாகிறது.

நிற்க, நடந்ததைப்பற்றி எழுதுவது என்றாலோ--அது நவீனத்திற்கு அழகன்று என்பதினால்--அது என் மனத்திற்கு இப்போது பிடிக்கவில்லை. நடக்கப்போவதை எழுதினால், அது பவிஷ்யத் புராணமாகிவிடும் என்பதனால், அதுவும் அவ்வளவு நாஸ்உக்கு இல்லை. நடக்கிறதைப்பற்றியே நான் ஒரு கை பார்க்கிறேன்.

கலியில் எது வேண்டுமானாலும் நடக்க முடியும் என்று பண்டைக்காலத்திலேயே எழுதியிருப்பதாக எனக்குக் கேள்வி உண்டு. பழைய காலத்தில் எழுதியிருந்தாலும், எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டாலும், அதில் எனக்கு நல்ல நம்பிக்கை. இக் கலியில் எதுவும் நடக்க முடியுமென்றால், நான் எழுதுவதில் எனக்குக் கொஞ்சங்கூட ஆச்சரியமில்லை. மற்றும் இவ்வகைச் சிந்தனைப்போக்கில் நான் ஒரு விநோதம் கண்டேன். நடக்கிறதை எழுத வேண்டுமானால், உண்மையில் நடக்கிறதையே எழுத வேண்டுமென்பதில்லை. ஏனெனில், இக் கலியில் எதுவும் நடக்க முடியும் என்று சொல்லியிருப்பதன் நிமித்தம், ஏன் எழுதினதெல்லாம் நடக்கிறதாக இருக்கக்கூடாது ? இந்த எண்ணமே என் மனத்திற்குத் தோன்றியதை எழுதத் தைரியமாக மாறுகிறது. ஒருக்கால் நான் எழுதியதுதான் நடக்கிறதாக ஏன் இருக்கக்கூடாது ?

'பன்னிக் குட்டிக்குப் பதினாறு ' என்ற ஒரு பழைய மொழி உண்டு. பன்றிக்குட்டிக்கல்ல--பன்றிபோன்ற குட்டிக்கு, என்று ஒரு தமிழ்ப் பெரியார் அதன் பொருளை எனக்கு விளக்கியிருக்கிறார். பழைய மொழி அவ்வாறாயின், புதுக்காலத்தில், நாகரிகத்தில் தட்டுத் தடையின்றி மேலே போய்க்கொண்டிருக்கும் நமது பெண்மணிகள் விஷயத்தில், அதே மொழி புது மொழியாக எவ்வளவு தூரம் பொருத்தம் கொள்ளுகிறது ' மற்றும் பன்றிக் குட்டிக்கே இப்படி என்றால், சுந்தரி மாதிரியான குட்டிக்குப் பதினாறு வயது வந்தால்-- ?

சுந்தரி அவளுடைய பதினாறாவது வயதில் 'மிஸ் சுந்தரியாகப் ' பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பதினோராவது வயதில் ஒற்றைத் தலைவலி, இரண்டு கண்களுக்கும் கண்ணாடி போட்டுவிட்டுப் போய்விட்டது. மூக்குக் கண்ணாடியும், சப்பை மூக்கானால், அடிக்கடி நழுவிக் கடிவாளம்போன்று வாய்க்கு இறங்கும் என்பதில்லாது, அவளுடைய கிளி மூக்கின் பேரில் 'ஜம் 'மென்று பொருந்தி, அழகுக்கு அழகு செய்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணாடியுடன் அடிக்கடி அவள் மாலை நேரங்களில், காற்று வாங்கக் கடற்கரையில் உலாவுவது உண்டு.

மதுசூதனன் (இவனுக்கு விபரம் தெரிந்தபின்பே நாகரிகமான பழைய பெயரை இவன் தகப்பனார் வைத்தார் போலும்) அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இவனை இவன் தோழர்கள் பெயரை குறைத்துப் பிரியமாக 'மது 'வென அழைப்பது வழக்கம். இவனும் மாலை வேளையில் ஆரோக்கியத்திற்காக கடற்காற்று வாங்க போவான். இப்படியாக நடந்துவருங்கால், ஒரு நாள் இவ்விருவரும் ஒருவரையொருவர் பார்க்க நேர்ந்தது. சுந்தரி பத்துப் பெண்களின் நடுவில் ஒருவளாக இருந்தும், மதுவின் கண்களிலிருந்து உண்டான காதல் சுந்தரியின் மீதுதான் பார்வையாக விழுந்தது.

'அவளுக்கு--ம் ? ' என்பதை அவன் யோசித்துக் கொண்டு தன் அறையை அடைந்தான். நிச்சயமாக அம்மங்கை, இரவில் தன் மீது விழுந்த காதலில் தவித்து, தன் விடுதி மேன்மாடியில், வேதனையில் உலாவுவாள் என்று எண்ணிக் கொண்டே, தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மறுநாள்--- இப்படியே இருவரும் சந்தித்ததிலிருந்து, இருவருக்கும் பரஸ்பரம் 'லவ் ' விழுந்துவிட்டது.

சுந்தரி கெட்டிக்காரி. நவீன நாவல் கதாநாயகன் ஒருவன், திடாரென ஒருநாள் குறுக்காக வந்து தன்னைக் காதலிப்பான் என்று அவள் எண்ணியிருக்கலாம். மதுவே தன்னுடைய கடற்கரையில் உலவும் முழு 'டிரஸ்ஸில் ' அவளுக்கு ஏன் அப்படியான காதல் நாயகனாகத் தோன்றியிருக்ககூடாது ? மூன்று முழு உடுப்புக்களை முப்பது விதமாக அலங்கரித்து, நங்கையர் முன்னே முந்நூறுதரம் குறுக்காக அவனுக்கு நடக்க தெரியும்.

இருவர் காதலும், சிறிது காலத்திற்குப் பிறகு கலியாணமாக முடிந்தது.

மதுவின் படிப்பு முடிந்தவுடன், அவனுக்கு வேலையும் கிடைத்து விட்டது.

அவனுக்கு முப்பது ரூபாய்ச் சம்பளமானாலும், முதலில் இரண்டு வருஷத்திற்கு ஒரு தரம் ஒரு ரூபாயாக அது ஐம்பது ரூபாயாகும். பிறகு அந்த மாதச் சம்பளம் வருஷத்திற்கு ஒரு விழுக்காடு சேர்ந்து நூறு ரூபாய் ஆகும். மற்றும் நமது மதுவுக்கு ஜாம்பவான் வயது இருந்து, அவனுடைய வேலைக்கும் 'ரிடையரிங் ' காலமும் இல்லாது போனால், அவன் சம்பளம் படிப்படியாய் உயர்ந்து கொண்டே மாதம் ஆயிரம் ரூபாயாகவும் ஆகிவிடக்கூடும் '

வேலையானதும் இருவரும் சேர்ந்தே குடித்தனம் செய்தார்கள். அப்போது அவர்கள் என்னவெல்லாமோ மனத்தில் எண்ணியிருந்திருக்கலாம். 'ஐ.ஸி.எஸ். ' ஆத்துக்காரராகத் தனக்கு அகப்படவில்லையே என சுந்தரி ஏங்கியிருக்கலாம். என்னவோ சுந்தரியைத்தான் முதலில் கண்டது மாதிரி வாழ்க்கை இப்போது அவ்வளவு வசீகரமாக இல்லையே என்று ஏக்கமுற்றிருக்கலாம். எனக்கு அதெல்லாம் நிச்சயமாகத் தெரியாது. மற்றும் இவ்விஷயத்தில் என் மனக் கற்பனைகளுக்கு இடம் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை.

ஆனால், மாலையில் இருவரும் சேர்ந்து ஜோராக வெளியில் 'வாக்கிங் ' போகும்போது எல்லோரும் பார்த்திருக்க முடியும். அவர்கள் அப்போது பேசுவதைக் கவனித்தால், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஒன்றும் புலப்படாது, தெரிந்த சிலருக்கும் புரியாதுதான். அக்காட்சி இயற்கை அளிக்கக்கூடிய எதையும்விட மிகவும் கண் உறுத்தும் காட்சியாகத்தான் தோன்றும்.

அடிக்கடி மதுவுக்கு ஊருக்கூர் வேலை மாற்றம் உண்டு.

எங்கேயாவது, ரயிலடியில், காலில் சிலிப்பரும், மூக்கில் கண்ணாடியும், தலையில் கட்டுக் கனகாம்பரக் பூக்கொத்து நழுவி விழத் தொங்கும் தோரணையிலும், கையில் ஒரு வெள்ளிக் கூஜாவுடனும், ஒரு சுந்தரியையும் அவள் பக்கத்தில் பெட்டியுடன் ஒரு கரப்பான்மீசை ஆணும் நிற்க நீங்கள் கண்டால், நமது தம்பதிகள்தான் வேலை மாற்றப்பட்டு, வேறு ஊருக்குப் போக ரயிலுக்கு காத்திருக்கிறார்கள் என ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஒரு தரம் நான் அவர்களைத் தஞ்சாவூர் 'ஜங்ஷ 'னில் பார்த்தேன். அந்த ரயிலுக்கு நல்ல கூட்டம் காத்திருந்தது. எட்டி நின்ற ஆயிரம் ஆடவர்களும், மது கடற்கரையில் காதல் விழ எப்படிச் சுந்தரியை முதலில் பார்த்தானோ, அதே பார்வையில், பார்த்து நின்றார்கள். மதுவோ வெனில் அந்த நாகரிக நங்கை தன்னுடைய மனைவி என்பதில் அநேகர் ஐயங்கொள்ளுகிறார்கள் என்பதை அறிந்தவனே போலவும், மற்றும் அதைப் பிறருக்குப் புரியும்படி காட்டுவதில் ஆவல் கொண்டவனே போலவும், அவள் அருகில் வந்து, அடிக்கடி, 'மை டார்லிங் ' போட்டுப் பேசிக்கொண்டிருந்தான். சுந்தரி, சுருங்கிய முகத்துடன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்ததுடன் அடிக்கடி அண்ணாந்து கொட்டாவி விட்டுக்கொண்டும், தலையை கையால் அலட்சியமாகக் கோதிக்கொண்டும் இருந்தாள்.

காதல் பூர்த்தி கலியாணம், கலியாணப் பூர்த்தி விவாகரத்து என்று எவ்வளவோ வெகு அழகான கற்பனைகளுக்கும் நான் இப்போது உடன்படத் தயாராக இல்லை.

ஒரு சந்தேகம் யாருக்கும் தோன்றலாம்....எவ்வளவு தடையிருந்தாலும் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால்... என்ற எண்ணம் எழலாம். ஆமாம் அது அப்பாவைக் கொண்டால், கட்டை குட்டையாக, கறுப்பாக இருக்கும். இருந்தாலும் கரப்பான் மீசையோடும், கிராப்புடனும் முதலில் இருக்காது என்பது நிச்சயம். அம்மாவைக் கொண்டாலோ, ஏன், அதன் அழகிலிருந்து நீங்கள் பார்த்தவுடனே ஊகித்துக் கொண்டுவிடலாமே ' மற்றும் அது யாரைக் கொண்டாலும், முதலிலாவது 'நாகரிக ' மற்று, தமிழில்தான் பேச ஆரம்பிக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

0 comments: