Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

கிருஷ்ணன் நம்பி

Labels: ,

தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள்.

அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை

1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை clip_image002[6]ஆரம்பித்தார். நாந்சில் நாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட உரக்கடை அதுதான். வியாபாரம் நன்றாக நடைபெறவே 1940 ஆம் ஆண்டு நம்பியின் தந்தை குடியிருப்பை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவிலுக்கு மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ணன் நம்பிக்கு எட்டு வயது. நாகர்கோவிலில் அவரின் பள்ளிப் படிப்பு தொடங்கியது. ஆனால் பள்ளிப் படிப்பு அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக கணிதம் கடைசிவரை அவருக்கு வரவேயில்லை. எட்டாவதிலும், பள்ளி இறுதி வகுப்பிலும் அவர் முதல் முறை தேறாமல் மீண்டும் எழுதிதான் வெற்றிபெற்றார். பின்பு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை. அத்துடன் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.

படிக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவே நம்பியின் தந்தை, அவர்மீது தன்னுடைய வியாபாரத்தை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் வியாபாரத்திலும் நாட்டம் கொள்ள முடியவில்லை. அவர் கடைக்குச் சென்றுவரும் தினங்களில் வியாபாரமும் வசூலும் மிகவும் குறைவாக இருக்கவே நம்பியின் தந்தை அவரது அம்மாவிடம் ``இவன் உருப்பட மாட்டான்’’ என்பாராம். இந்நிலையில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. அப்பாவின் வியாபாரத்திலும் நாட்டமில்லை. வருமான உத்தரவாதமளிக்கும் வேறு வேலையும் கிடையாது. ஆனால் திருமணமாகிவிட்டதால் குடும்பத்தில் நம்பியின் பொறுப்பு அதிகமாகிவிட்டது. பின்பு காங்கிரஸ் தியாகி கொடுமுடி ராஜகோபாலன் சிபாரிசில் நம்பிக்கு `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை கிடைத்தது. மாதம் எண்பது ரூபாய் சம்பளம். சென்னையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே `சங்கர் லாட்ஜி’ல் அறை எடுத்துக் கொண்டார். `நவசக்தி’யில் பணிபுரிந்த காலகட்டத்தில் கிருஷ்ணன் நம்பிக்கு சென்னையிலிருந்த `ஜீவா’வின் நட்பு கிடைத்தது. உள்ளூர்க்காரர் என்பதால் ஜீவாவுக்கும் நம்பியிடம் அளவு கடந்த பிரியம்.

`நவசக்தி’யில் நம்பியினுடைய வேலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவரது உடல் நிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. எனவே அவர் ஊர் திரும்பி விடுவதென்று முடிவு செய்தார். ``ஏராளமான இருமல்களுடனும், அரைக் கிலோ திராட்சையுடனும் நம்பி வெற்றிகரமாக நாகர்கோவில் திரும்பினார்’’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் அவரது சகோதரர் கே. வெங்கடாசலம். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமாகி அவர் படுத்த படுக்கையானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வியாபாரத்தில் நம்பிக்கு அவரது தந்தையின் நண்பர்கள் உதவினர். தோவானைத் தாலுகாவுக்கான திகிசிஜி நிறுவனத்தாரின் மொத்த வியாபார உரிமத்தையும் நம்பி வாங்கினார். அப்புறம் பூதப்பாண்டியில் வியாபாரத்தை நிறுவுவது என்று தீர்மானித்து குடும்பத்துடன் 1963 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூதப்பாண்டிக்குச் சென்றார். இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவர் நாகர்கோவிலைவிட்டு பூர்வீகமான அழகியபாண்டியபுரம் வந்து குடியமர்ந்தார். எனவே நம்பியின் பொறுப்பு குடும்பத்தில் இன்னும் அதிகமானது. ஆனாலும் மிகவும் சிரமத்துடன்தான் அவர் சமாளித்து வந்தார். கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். ஒரு மகன் 1986 இல் மறைந்து விட்டார்.

கிருஷ்ணன் நம்பியின் இலக்கிய பிரவேசம் 1948_49 இல் அப்போது மிகவும் முக்கியமான பத்திரிகையான வை. கோவிந்தனின் சக்தியில் வெளிவந்த `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. பதினாறு வயதே ஆகியிருந்த அச்சமயம் அவர் பத்தாவது வகுப்புப் படித்து வந்தார். அக்காலங்களில் அவரது நெருங்கிய இலக்கிய நண்பர் எழுத்தாளர் ம. அரங்கநாதன். பின்னர் 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கலைமகள் நிறுவனத்திலிருந்து வந்து கொண்டிருந்த சிறுவர் பத்திரிகையான `கண்ணனில்’ தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. சிறுவயதிலேயே நம்பிக்கு குழந்தைகளிடம் அபரிமிதமான ஈடுபாடு இருந்தது. எனவே அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் குழந்தைப் பாடல்களாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இக்கதை குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே.

1950 இல் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும், ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி நட்பு ஏற்பட்டது. கிட்டதட்ட 25 வருடங்கள் இடைவெளியின்றி தொடர்ந்த நட்பு இது. சுந்தர ராமசாமியின் நட்பு நம்பியை மேலும் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று கிருஷ்ணன் நம்பியின் அப்பா எண்ணினார்.

விஜயபாஸ்கரன் `சரஸ்வதி’யை தொடங்கியபோது அதில் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகள் எழுதினார். தொடர்ந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். `ஜீவா’வுடன் நட்பாயிருந்த காலகட்டத்தில் அவர் நம்பியின் கதைகளை கேட்டு வாங்கி `தாமரை’யில் பிரசுரித்தார்.

1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து `யானை என்ன யானை?’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1974 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது காலை ஆபரேஷன் செய்து எடுக்கவேண்டியதாகிவிட்டது. காலை எடுத்தபிறகு ஒன்றரை ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி காலையில் நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. 

0 comments: