Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

கண்ணன்

Labels: , ,

லா.ச. ராமாமிருதம்

கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.

சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக் கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று 'க்ரீச்.....க்ரீச்..... ' என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களின் சலசலப்பு....

கண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம் ?.....

கல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய்சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.

கண்ணன் பரிஷையில் 'பெயில் '. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு 'பகீர் ' என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய், வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் 'சார், நான் பாஸா ? ' என்று கேட்டான். தொண்டை பக் பக் பக் பக்----

'பாஸா ? பாப்பாஸ்தான் ' நீ எங்கேடா பாஸ் ஆறது ? எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண்டிருக்கே ' ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு. அடிக்கறதுக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. 'ஹ்உம் ' ன்னா அரையோட போயிண்டுடறே '

'வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை தட்டுக்கெட்டுப் போறது ? இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்.... '

அவனுக்கு இதெல்லாம் புரியவில்லை. இப்போது ஒன்று தான் புரிந்தது. அவன் 'பெயில் '.

வீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா ? தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே....நடுமுதுகிலே 'ஐஸ் 'வெச்சாப்போலே சில்லுன்னு அப்புறமும் கீழேஇறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை ஜாட்டியிலே இருவத்தியெட்டுஅடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம் அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா....அன்னிக்குக்கூட அப்படித்தான்.... அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே அன்னிக்கு....

தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபகமில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு.

மழை 'ஜோ 'வென்று கொட்டித்து ராத்திரி.

அம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும், குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி...பசியான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணிக் குடிச்சுட்டு இருக்க முடியும் ?

கதவு திறந்தது. அப்பொழுதான் மாமாவை முதல் முதலாகப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராத்தலைத் தூக்கிப்பிடிச்சுண்டு இன்னொரு கையைக் கதவின் மேல் வெச்சுண்டு பின்னால் இருட்டில் முஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.

'அண்ணா---- '

மாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன் ? மாமா முழியைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். மாரிலே ஐஸ் வெச்சாப்போல் ஏற்கெனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.

மாமா, அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா ? தெரியல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு, டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னம்மோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே தூக்கிண்டு கோணிண்டு---

'அண்ணா ' ' ---அம்மா குரல் கேக்கவே மாட்டேன்கறது.

'யாரு நீயா ? '

மாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது--- அதைவிட சுறீல்---

'ஆமாண்ணா, எங்கேண்ணா போவேன் ? குழந்தையும் கையுமா நிக்கறேன்--- '

'பேஷ் சுமை வேறையா ?--- '

'அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது.... '

அப்புறம் அதிகமாய்ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற்போலிருந்தது.... அப்புறம் சாப்பிட்டாற் போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள், ---துணுக்குகள்--- தண்ணியிலே போறாப்போல....

'சரி இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே ? இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா ? '

அம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா ? அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா----

'அண்ணா சொல்லாலே வதைக்காதே அவாபோயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா--- '

'மாப்பிள்ளை எந்த ஆபீஸஉக்குப் போயிட்டுவந்தாரோ ? '

'ஹோட்டல்லே வேலை. ' அம்மாகுரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. 'வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்--- '

'ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு ? எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ' பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா ? நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா ? '

'அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸஉ வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண ?--- '

'ஆமாண்டி, இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா ? ' அப்புறம் தெரியவில்லை, அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து.... அப்புறம் ஞாபகமில்லை. மூடின கண்ணுக்குள்ளே மெத்து மெத்துன்னு ஒரே ரோஜா சிவப்பு அதுக்குள்ளே அமுங்கிப் போனதுதான் தெரியும் அவ்வளவுதான்.

அப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப் போய்விட்டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில், கண்மேல் ஒண்ணு ரெண்டு 'சுறீல், சுறீல் ' நெருப்புப் பொறி.

அம்மா ஏன் அழறாள் ? அம்மாவுக்கு மார் வெடிச்சுடுத்தா ? அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்கலாமா வேண்டாமா, என்ன கேக்கறது எப்படி கேக்கறதுன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துன்னு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே, ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.

அம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுக்கூடத் திணறும் அது பிரியமா, அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, தான் அவளைக் கட்டிக்கற மாதிரி தன்னைக் கட்டிக்கறாளா ? கால்சறுக்கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அது மாதிரி என்னைப் பிடிச்சுக்கறாளா '

ஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப்போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா ? இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் ? எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா ? தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தானே தோச்சுப் போட்டிருக்கா ?

பள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.

'என்னம்மா ' என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே ? '

அதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: 'மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காஷி. ' இதென்ன பாஷையோ ? அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக்கொண்டால் தேவலை நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கிறான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.

அப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகாயிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தாள், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமாயிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர். பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போ எல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள், தூனிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு......

சாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு நாள் கத்துவார். 'பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ ? தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா ? '

ஆனால், அம்மா பதில் பேசறதில்லை.

அப்புறம், ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.

'கண்ணா, வா--- ' என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க் கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, 'போ 'ன்னாள்.

ஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் 'போயிட்டுவா ' என்பாள். இன்னிக்கு 'போ ' ன்னு மாத்திரம் சொன்னாள்.

அவன் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, 'அம்மங்கா, அம்மஞ்சி எல்லாரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு ' என்று அழைச்சுண்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்ந்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரிசிப் பாயஸம்; அப்புறம் பத்து பன்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.

என் அம்மா எங்கே ? அம்மா எங்கே மாமா ?

கொஞ்ச நாளைக்கு 'இதோ கொல்லைப்புறம் போயிருக்கா, இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா, இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா ' எல்லோரும் சாக்கு சொல்லி அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கல்லே. அவாளும் சொல்லல்லே. அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒத்தர் ரெண்டுபேர் 'த்ஸோ, த்ஸோ 'ங்கறா ரெண்டுபேர் 'சரிதான்; நாடோடி பயலுக்கு 'த்ஸோ ' ' என்ன வேண்டியிருக்கு ' என்கறா.

'குழந்தை என்ன பண்ணுவான் ? பெத்தவாபாவம் அவா பெத்ததன் தலை மேலேன்னு சரியாய்போச்சு. ' இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போத்தான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது...... அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி.......

'அம்மா '---- ' என்றான் கண்ணன். ஒரே இருட்டு......

'அம்மா ' '

அம்மா கிட்டத்தான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம்மாயிருக்கும் ' தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.

'அம்மா ' ' தூக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.

'அம்மா ' '

மலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சரியம் நிலா நடுவில் அம்மா முகம் '

'அம்மா ' அம்மா ' ' ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா 'நிலாவிலிருந்து ' குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.

'இதோ இருக்கேனடா கண்ணா '---அட அசடே, என்னடா இப்படி அழறே ?..... நான் எங்கேயும் போகலேடா---- நிஜமாத்தான்--- எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணாமூச்சி விளையாடினேன். அதுக்குள்ளே நான் காணாமே போயிட்டேன்னு கனாக்கண்டிருக்கே தோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு.....

'கண்ணா 'வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டான். 'கண்ணா 'வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெட்கமா வந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.

மறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர்மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.

'கண்ணா-----கண்ணா----டேய், எழுந்திருடா. ' ஆனால், அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.

முடிந்தாலும் இஷ்டப்பட்டிருக்க மாட்டான்.

யுக சந்தி

Labels: ,

- ஜெயகாந்தன்

கெளரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.

'பாட்டி...பாட்டி ' பையைத் தூக்கியாரட்டா ? ஓரணா குடு பாட்டி. '

'வண்டி வேணுங்களா அம்மா ? '

'புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே....வாங்க, போவோம் ' ---என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச் சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:

'எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான் மெள்ள நடந்தே போயிடுவேன்.... ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு வெச்சிருக்காய்... நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு வண்டியிலே போனேன் ? ' என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.

பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது. மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும் வீட்டுக்குப் போன பின்தானே தெரியும் ?...

அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.

மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா ? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடாரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும் ? என்ன செய்தால்தான் என்ன ?

தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.

வழியில் சாலையோரத்தில் --- நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.

அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் --சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்-- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன.

'என்னப்பனே மகாதேவா ' ' என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.

பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப் பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே ' அவள் மோவாயின் வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி-- இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.

பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்-- மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்-- வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத் தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வெளித் தெரிந்தது.

---மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து, பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில் பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள் வரும்போது.....

பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக் கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய ---நாவிதன்.

'பாட்டியம்மா....எங்கே, நெய்வேலியிலிருந்தா ? ' என்று அன்புடன் விசாரித்தான்.

'யாரு வேலாயுதமா ?....ஆமா ' ....உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா ? ' என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.

'ஆச்சுங்க...ஆம்பளைப் பையன்தான். '

'நல்லாயிருக்கட்டும்....பகவான் செயல்.... ' இது மூணாவது பையனா ? '

'ஆமாமுங்க ' என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்

'நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா ? ' என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.

'அட அசடே, என்ன சிரிக்கிறாய் ? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான் சொல்றது ? ' என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள். பதிலுக்கு அவனும் சிரித்தான்.

'இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ ' என்று இடுப்பிலிருந்த பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.

'பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்.... கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன் ' என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ---தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான்.

சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கெளரியம்மாள், தனது பத்து வயதில் இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன் கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும், தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும் சென்றதில்லை.

எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம் பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப் பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கெளரிப் பாட்டி. தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில் அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக் கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி--- கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்---அதை மாற்றிக் கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.

கெளரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத் தன்னையே அவளில் கண்டாள்.

பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை--- அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு 'அம்மா பிள்ளை ' தான்.

விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப் பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை, உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கெளரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.

---பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...

பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப் போன வருஷம்-- புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகிய--- நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.

'அதற்கென்ன ? நான் போகிறேன் துணைக்கு.... ' என்று. பாட்டியம்மாள் இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.

இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும் வந்து தங்கிச் செல்வது தவிர, சனி--ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.

இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.

ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப் பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க, வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும் ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.

-- பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின் நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா, அன்பில் விளைந்த ஆர்வத்தோடு 'பாட்டி ' என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள்.

'கதவெத் தெறடி ' என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், 'அம்மா அம்மா... பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா '... ' என்று கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.

கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும் குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.

கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடாரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் 'ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே ' ' என்று குழந்தையை வைதுவிட்டு 'வாங்கோ... வெயில்லே நடந்தா வந்தேள்...... ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ ? ' என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள் பார்வதி.

'இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு ? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்... ' என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் 'நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி '... அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு ' என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.

'பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே... இன்னும் செத்தே படுத்திண்டிறேன்... ' என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தெளித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து 'என்னப்பனே... மகாதேவா ' என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம். அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.

'பாட்டி வெயில்லே வந்திருக்கா...சித்தே நகந்துக்கோ... வந்ததும் மேலே ஏறிண்டு... ' என்று விசிறிக் கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத் தட்டினார் கணேசய்யர்.

'இருக்கட்டும்டா....கொழந்தை ' நீ உக்காந்துக்கோ.... என்று குழந்தையை மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.

'இப்ப என்ன பண்ணுவியாம் ' என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.

ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள். முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில் போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத் தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.

'ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே ? காணோம் ? ' என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு 'இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா ' என்று கவரை நீட்டினாள் பாட்டி.

இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் ---எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, 'ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே.... போகட்டும்னு அனுப்பி வெச்சேன் ' என்றார் கணேசய்யர்.

'ஓ ' தொடர் கதையா வந்துதே....அந்தக் கதை தானா அது ?... பேரைப் பார்த்தேன்... ' என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின் பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. 'இதுக்காகப் போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய் ?... நோக்கும் எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது.... இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ... ' என்று மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, 'கவர்லே என்ன சொல்லு-- அவளைக் கேட்டப்போ, 'அப்பா சொல்லுவா ' ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள் ' என விளக்கினாள் பாட்டி.

கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் --- கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் 'குப் 'பென வியர்த்து உதடுகள் துடித்தன. படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின் மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்....

தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த கணேசய்யரின் முகம் திடாரென இருளடைந்தது ' நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

'என்ன விபரீதம் ' ' என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில் விழுந்த அக்கடிதத்தை வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும் '

'என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு....

இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தெளிந்த மனத்தோடுதான் எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப் போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும் தெரிந்தே எழுதுகிறேன்.

என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான். ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு-- இது பாபகரமான காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு-- போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்-- இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்-- இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே-- இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

என் காரியம் என் வரைக்கும் சரியானதே '

நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது... இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வெளிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.

இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா... இன்னும் ஒரு வாரமிருக்கிறது... உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை 'கீதா செத்துவிட்டாள் ' என்று தலை முழுகி விடுங்கள்.

ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து 'தியாகம் ' செய்துவிட்டார்கள் ? ஏன் செய்யவேண்டும் ?

உங்கள் மீது என்றும்

மாறாத அன்பு கொண்டுள்ள

கீதா '

'என்னடா.. இப்படி ஆயிடுத்தே ? ' என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து விழித்தாள் பாட்டி.

'அவ செத்துட்டா...தலையெ முழுகிட வேண்டியது தான் ' என்று நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.

பாட்டி திகைத்தாள் '

--தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ காத்திராமல் அந்த 'அம்மாப் பிள்ளை ' முதன் முதலில் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.

'அப்படியாடா சொல்றே ? ' என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக, வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள் பாட்டி.

'வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே ?...நீ பிறந்த வம்சத்திலே இந்தக்குடும்பத்திலே... ஐயோ... ' ' என்று இந்த அவலத்தைக் கற்பனை செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.

'நான் பிறந்த யுகமே வேறேடா ' என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில் வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:

'என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த குடும்பத்தில்... அதுபோல் தன் குடும்பமும் நடக்க -- நடத்தி வைக்கத் தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்-- அந்த யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கெளரவிப்பதன் பொருட்டே என் சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்... ' என்று தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும், தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மெளனமாய் வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.

அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி 'அடி, பாவி மகளே...என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி ' ' என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்....

'ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, 'தியாகம் ' செய்து விட்டார்கள் ? ' --பாட்டிக்குச் 'சுருக் ' கென்றது.....உதட்டைக் கடித்துக் கொண்டாள்....

இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப் புரியும்.

கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல், கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்-- 'அது அவள் விதி யென்று சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற தாயும் தந்தையும் ?... கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி, அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள் '...

--அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.

வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா ?

ஆனால்...

கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த, அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம் கொன்றிருந்த கெளரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள் ?

அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ... கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து.. அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் 'ஐயோ ' என்ன இப்படி ஆய்விட்டதே '... என்ன இப்படியாய் விட்டதே ' என்று கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள் பாட்டி.

பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப் போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில் கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,

'பாட்டிடா... ' என்று ரகசியமாக எச்சரித்தான்.

'எங்கே ? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா ? ' என்று பின் வாங்கி நின்றாள் மீனா.

'சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா... ' என்றான் அம்பி.

மீனா தோள் வழியே 'ஸ்டைலாக ' கொசுவித் தொங்கவிட்டிருந்த தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின் தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.

அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். 'பாட்டி வெள்ளரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே... ' என்ற ஜானாவின் குரல் கேட்டுப் பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.

'எப்ப வந்தேள் பாட்டி ? ' என்ரு கேட்டுவிட்டு 'என்ன விஷயம்-- இதெல்லாம் என்ன ? ' என்று சைகையால் கேட்டாள் மீனா.

பாட்டியின் கண்கள் குளமாயின.

மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்-- கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம், பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்--புரிந்தது பாட்டிக்கு.

அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.

'அதை நீ படிக்க வேண்டாம் ' என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு ஏனோ 'படிக்கட்டுமே ' என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக் கவனித்தாள்.

மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.

'அடி நாசமாப் போக ' என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப் படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.

வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.

இரவு முழுதும் கெளரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை; கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.

மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப் பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.

'வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக் கொண்டாயடி கீதா ? இப்போதல்லவா தெரிகிறது... பாட்டியை நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி நின்னுருக்கேன்னு... இப்பன்ன புரியறது... கண்ணிலே தூசு விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி '--

'என்னடி இப்படி பண்ணிட்டியே ' ' என்று அடிக்கடி தன்னுள் குமுறிக் குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.

விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.

தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து காத்திருந்தான் வேலாயுதம்.

கண் விழித்த பாட்டி-- நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று நினைத்து முடிக்கு முன் 'இது உண்மை ' என்பது போல் அந்தக் கடிதம் ஸ்டூலின் மீது கிடந்தது.

அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க் கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி 'அம்மா வேலாயுதம் வந்திருக்கான்... அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி தண்ணிலே போயி முழுகு... ' என்றார்.

'வாயை மூடுடா... ' என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு... இப்ப என்ன நடந்துட்டுதுன்னு அவளைச் சாகச் சொல்றே ?... ' என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி. பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.

'என்னடா தப்புப் பண்ணிட்டா அவ ?... என்ன தப்புப் பண்ணிட்டா, சொல்லு, ' என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு விநாடி ஒன்றுமே புரியவில்லை.

'என்ன தப்பா ?...... என்னம்மா பேசறே நீ ? உனக்குப் பைத்தியம் புடிச்சிடுத்தா ? ' என்று கத்தினார் கணேசய்யர்.

அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை.

பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: 'ஆமாம்டா... எனக்குப் பைத்தியந்தான் ... இப்பப் பிடிக்கலைடா... இது பழைய பைத்தியம் ? தீரமுடியாத பைத்தியம்... ஆனால் என்னோட பைத்தியம்-- என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் 'படார் ' னு தெளிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது ?...... அவதான் சொல்லிட்டாளே-- என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு... '

'அதனாலே சரியாகிடுமா அவ காரியம் ? ' என்று வெட்டிப் பேசினார் கணேசய்யர்.

'அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்... அதுக்கென்ன சொல்றே ? ' என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.

'சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த சனி -- செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு சொல்றேன் ' என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர். பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும் வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.

'நம்ம சாஸ்திரம்...ஆசாரம் ' அப்படான்னா நீ என்ன பண்ணியிருக்கணும் தெரியுமா ? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம் ?....அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா...எனக்குப் பதினைஞ்சி வயசுடா ' என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா.... ' பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே.... அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா ' அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு ?.....ஏன் பண்ணலே சொல்லு ' என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார் ' அவள் தொடர்ந்து பேசினாள்.

'ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச் சொல்லித்தோ ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம் போய்வரச் சொல்லித்தோ ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச் சாப்பிடச் சொல்லித்தோ ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான் சரின்னேன், ஏன் ?.... காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான் ' நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே.... எனக்கு நீ இருந்தே ' வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும் அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா.... எனக்கு உன் நிலைமையும் புரியறது---அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா....உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா ? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா....ஆனா, டேய் கணேசா.... என்னெ மன்னிச்சுக்கோடா... எனக்கு அவ வேணும் ' அவதாண்டா வேணும்.... எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு ' என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்.... அதனாலே நீங்க நன்னா இருங்கள்.... நான் போறேன்.... கீதாவோடேயே போயிடறேன்.... அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப் படலாம்---யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும் ஒரு முழுக்குப் போட்டுடு ' நான் வர்ரேன் ' என்று கூறியவாறே மாற்றுப் புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள் பாட்டியம்மாள்.

'அம்மா ' ஆ.... ' என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க் கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.

'அசடே....எதுக்கு அழறே ? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்... என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா ' என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள். 'பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ... ' என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.

'எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும் ' என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.

'நீ போடாப்பா....நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு ' என்று அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.

'இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை---அதற்கென்ன ? உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது ' நான் ஒரு நாவிதனைக்கூட மாற்றிக்கொள்ளக் கூடாதா ? ' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி, ஒரு முறை திரும்பி நின்று 'நான் போயிட்டு வரேன் ' என்று மீண்டும் விடை பெற்றுக்கொண்டாள்.

அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்.....

வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய் அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர் கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?......

ஓ ' அதற்கு ஒரு பக்குவம் தேவை '

கண்ணம்மா

Labels: ,

கு. அழகிரிசாமி

முதன் முதலாகக் கோலாலம்பூருக்குப் போன நாளிலிருந்தே நான் அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப் போனால், பினாங்குத் துறைமுகத்தில் நான் கப்பலை விட்டு இறங்கும் போதே, பிராயாணிகளை வரவேற்க வந்திருக்கும் கூட்டத்தில் அவளும் தன் பெற்றோர்களுடன் யாரையாவது எதிர்ப்பார்த்துக் கொண்டு நிற்கக் கூடுமோ என்று சுற்றுமுற்றும் துழாவிப் பார்த்தேன். சென்னையில் கப்பல் ஏறும் போது எனக்கு அவள் ஞாபகம்தான் முதலில் வந்தது. மலாயாவில் எனக்குத் தெரிந்தவர்களாக அப்போது இருந்தவர்கள் அவளும், அவளுடைய தமையனும், பெற்றோர்களும்தான். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மலாயாவுக்குப் போய் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்கள். அப்புறம் நான் அவர்களை பார்க்கவுமில்லை; அவர்கள் எந்த விலாசத்தில் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள், என்பதைக் கேள்விப்படவும் இல்லை. அப்போது எனக்கு எட்டு வயது. கண்ணம்மாவுக்கும் எட்டு வயது ஏறக்குறைய ஒரு தலைமுறைக்காலம் கழிந்துவிட்டது.

அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா, என்னைப் பார்த்ததும் இன்னான் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்களா, அப்படியே தெரிந்து கொண்டாலும் எனக்குள்ள ஆசையும் பாசமும் அவர்களுக்கு இருக்குமா என்றெல்லாம் எனக்குச் சில சந்தேகங்கள் இருந்தன. என்றாவது ஒரு நாள் சந்திக்க நேர்ந்து, என்னை அவர்கள் பொருட்படுத்தாமல் போய் விட்டாலும் சரி, நான் சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடிய கண்ணம்மாவும் பெருமாளும் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் எனபதை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

கோலாலம்பூரில் எனக்கு ஒரு லாயர் ஆபிசில் வேலை கிடைத்தது. செந்தூலைச் சேர்ந்த காசிப் பிள்ளை கம்பம் என்ற குடியிருப்புப் பகுதியில் வீடு பிடித்து ஜாகை அமர்த்திக் கொண்டேன். ஏறக்குறைய ஒரு வருஷம் அங்கே வாசம் செய்துவிட்டு, நவீன வசதிகளோடு கூடிய ஒரு புது வீட்டுக்கு மாற்றிப் போனேன். அது, நகரைவிட்டு ஒரு மைல் தள்ளி, ஈப்போ ரோட் நாலாங்கட்டையில் (மைலில்) இருந்தது. பிரதான சாலைக்கு இடதுபுறத்தில் கால் பர்லாங் தூரத்துக்குள் ஒரு சீனர் புதிதாகக் கட்டியிருந்த நான்கு வீடுகளில் இரண்டாவது வீடு அது. என் வீட்டுக்கு முன்புறம் சாலை வரையிலும் பல வீடுகள் இருந்தன. அதே போல் பின்புறத்திலும் தகரமும் அத்தாப்புக் (நாணல்) கூரையும் வேய்ந்த வீடுகளைக் கொண்ட ஜன நெருக்கடியான ஒரு பகுதி இருந்தது. அங்கே பெரும்பாலும் சீனர்களே வசித்து வந்தார்கள். ஏதோ ஒரு குக்கிராமத்தின் நடுவே பங்களாவில் வசிப்பது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டது எனக்கு. வாழ்நாளில் பெரும் பகுதியைக் கிராமத்திலேயே கழித்த எனக்கும் என் மனைவிக்கும் இந்தச் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

கோலாலம்பூர் நகரில் அந்த ஒரு வருஷ காலமும் நான் கண்ணம்மாவைத் தேடிக் கொண்டுதான் இருந்தேன். அதற்காக இதுவே வேலையாக அலைந்தேன் என்று அர்த்தமல்ல, எங்கே போனாலும், யாரைப் பார்த்தாலும் அவளை நினைத்து ஒரு பார்வை பார்ப்பேன். இது நித்திய வழக்கமாகவே ஆகி விட்டது. ஈப்போரோட் நாலங்கட்டைக்குக் குடித்தனம் வந்த பிறகும் இதுதான் நிலை. இப்படி அன்றாடம் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்தி வந்த இந்த விஷயத்தைப் பற்றி என் மனைவியிடம் நான் ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. வெளியே சொல்லிவிட்டால், காற்றுப்பட்ட மாத்திரத்திலேயே அந்த விஷயம் சுவையற்று, பொருளற்று, வாழ்வும் அற்றுப் போய்விடுமோ என்று எனக்கு ஒரு பயம்.

புது இடத்துக்கு வந்து சுமார் இருபது நாட்கள்தாம் ஆகியிருக்கும். அதற்குள்ளாகவே அவளை நேரில் காண வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை. சாயங்காலம் ஆபிஸிலிருந்து திரும்பி, பஸ்ஸை விட்டு இறங்கினேன். ஈப்போ ரோட்டிலிருந்து என் வீட்டுக்குச் செல்ல இடது புறம் திரும்பினேன். திரும்பும்போது எப்பொழுதும் போல் ஏதேச்சையாக வலது பக்கம் சாலையை நோக்கியுள்ள சீனர் கடையை ஏறிட்டுப் பார்த்தேன். அப்போது கடை வாசலில் இரண்டு சீனர் சிறுவர்களும் ஒரு தமிழ் பெண்ணும் நின்று சாமான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு அடி நெருங்கி வந்ததும் நான் ஆச்ரியத்தால் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். அந்தப் பெண்ணுடைய முகத்தின் பக்கத் தோற்றத்தையே என்னால் பார்க்க முடிந்தது என்றாலும் அதே மூக்கு; அதே வாய் அமைப்பு கண்களால் பார்க்கும் அலாதித் தோரணையும் அப்படியே இருந்தது. இருபத்திரண்டு வருஷங்களுக்குப் பிறகும் முகத் தோற்றத்தில் யாதொரு மாறுதலும் இன்றி, இப்படிப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவாறு இருக்க முடியுமா ? இவள் கண்ணம்மா தானா என்று நான் சந்தேகிப்பதும், தெளிவதுமாகக் குழம்பிக் கொண்டு நின்றேன். அவள் கடைக்காரனிடமிருந்து இரண்டொரு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள்: என்னை நோக்கித் திரும்பினாள். அப்போது அவள் முகத்தைப் பூரணமாகப் பார்க்க முடிந்தது. அரை முகத்தினால் காட்டிய அடையாளத்தை முழு முகத்தினால் ஊர்ஜிதமே செய்தாள். கதையா இது என்று திகைத்தேன்.

ஒரு கணம் எங்கள் கண்கள் சந்தித்தன. ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஆனால் நான்தான் அவளுடைய முகத் தோற்றத்தில் கண்ணம்மாவைப் பார்த்தேனே ஒழிய, என்னுடைய தோற்றம் அவளுக்கு எந்த வித நினைவையும் உண்டு பண்ணியதாகத் தெரியவில்லை. வலப் பக்கமாக திரும்பினாள்; பாதை வழியாக நடக்கத் தொடங்கி விட்டாள். அவளுடைய பின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டே நானும் நடந்தேன்.

மிகவும் மலிவான, மிகவும் பழைய, மிகவும் அழுக்கடைந்த ஒரு புடவையை அவள் உடுத்தியிருந்தாள். கழுத்திலோ கைகளிலோ ஒரு பொட்டுத் தங்கம்கூட இல்லை. கொண்டை போட்டிருந்த கூந்தல் வறண்டிருந்தது. காலில் செருப்பு இல்லை என்பதையும் கவனித்தேன்.

கண்ணம்மா இந்த நிலையில் இருப்பாள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஏனென்றால், ஊரில் எவ்வளவோ நல்ல நிலையில் இருந்தவர்கள் மலாயாவுக்கு வந்து அதைவிட பன்மடங்கு உயர்ந்த நிலையில் இருப்பார்கள் என்பதுதான் சகஜமாக எதிர் பார்க்கக் கூடிய விஷயம். தாழ்ந்திருந்தாலும் இந்த அளவுக்குத் தாழ்ந்திருக்க முடியாது.... இவள் கண்ணம்மாவாக இருக்க முடியுமா ?

சற்று வேகமாகச் சென்று விசாரித்து விடுவோமா என்றுகூட ஒரு சமயம் தோன்றியது. ஆனால் அவ்வாறு செய்ய என்னால் முடியவில்லை. என் நிலைக்கும் அவள் நிலைக்கும் இடையே இருந்த தூரம் அப்படி. அவள் உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும் பகிரங்கமாக பலர் முன்னிலையில் அதைக் காட்டிக் கொள்ளக் கூசும் அளவுக்கு அவள் பஞ்சையாக இருந்தாள். 'பார்ப்போம்; இந்த பகுதியில்தான் இவளும் குடியிருப்பதாக தெரிகிறது. மறை முகமாக மற்றவர்களை விசாரித்து தெரிந்து கொண்டு, அப்புறம் அவசியமானால் இவளோடு பேசலாம் ' என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

அவளை பார்த்த செய்தியைச் சரஸ்வதியிடம் --- என் மனைவியிடம் நான் சொல்லவில்லை.

மறு நாள் மாலையிலும் அதே இடத்தில் பஸ்ஸை விட்டு இறங்கினேன். சீனர் கடையையும் திரும்பிப் பார்த்தேன். சாலையிலிருந்து என் வீட்டுக்குப் பிரியும் நடைபாதையிலும் தேடினேன். எங்கும் அவள் தென்படவில்லை. பேசாமல் வீட்டுக்கு வந்தேன். அன்றும் சரஸ்வதியிடம் அவளைப் பற்றி சொல்லவில்லை.

அதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. ஒரு பகல் முழுவதையும் கண்ணம்மாவுக்காக நான் செலவழிக்க முடியும். வீட்டில் வேறு வேலையும் இல்லை.

மத்தியானச் சாப்பாடுக்குப் பிறகு, 'சரஸ்வதி இப்போ ஒரு சமாசாரம் சொல்லப் போகிறேன். உனக்கு ஆச்சரியமாயிருக்கும். சொல்லட்டுமா ? கடல் கடந்து ஆயிர்த்தைந்நூறு மைல்களுக்கு இப்பால் நாம்ப குடியிருக்கிற இந்தப் பகுதியிலேயே என் சினேகிதி ஒருத்தி இருக்கிறா ' இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னாலே என் சொந்த ஊரிலே என்னோடு சேர்ந்து விளையாடிய பக்கத்து வீட்டுச் சினேகிதி ' சொல்லப் போனா, எட்டு வயசு வரையிலே நாங்க இணை பிரிஞ்சதே கிடையாது...... '

'இங்கே இருக்கிறாளா ? ' என்று ஆச்சரியத்தோடு கேட்டாள். சரஸ்வதி.

'இங்கேயேதான் இருக்கிறாள்......முந்தாநாள் சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன் ' ஆனா...பேசல்லை ' '

'ஏன் ? '

'திடார்ன்னு பேசிற முடியுமா ? எவ்வளவோ காலத்துக்குப் பிறகு பார்க்கிறோம் ' '

'பேசுறதிலே என்ன தப்பு ? '

'தப்பு ஒண்ணுமில்லே. பேச வாய் வரல்லே. அவ்வளவுதான். அதோட ஒரு சின்ன சந்தேகம். அவள் வேறு யாராவது ஒரு பெண்ணா இருந்துவிட்டால் என்ன பண்றது ?.... ரொம்ப ஏழையாயும் இருந்தாள். '

'அது இருக்கட்டும். அவளை எங்கே பார்த்தீர்கள் ? ' என்று கேட்டாள் சரஸ்வதி.

'இங்கே இந்தச் சீனன் கடையிலே நம்ப வீட்டைத் தாண்டித்தான். நடந்து போனா, அதே ஜாடை, அதே மூக்கு, அதே நடை........ '

'அட பாவமே ' நீங்கள் பேசியே பார்த்திருக்கலாம். '

'என்ன அவசரம் ? இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே இன்னொரு தடவை அவளைப் பார்த்துட முடியும்னு நினைக்கிறேன். இந்த வழியாத் தானே அவள் கடை கண்ணிக்குப் போகணும்...... ? '

'பார்த்தால் என்னைக் கூப்பிடுங்க. போய்ப் பேசறேன். இங்கேயே கூட்டிக் கிட்டு வர்றேன். உங்க பேர் அவளுக்கு ஞாபகம் இருக்குமோ ? '

'என் பேர் மட்டுமில்லை. என்னையே அவளுக்கு ஞாபகம் இருக்கிற மாதிரித் தெரியல்லை. என்னைப் பார்த்துட்டு அவபாட்டிலே போயிட்டா ' '

'அப்படின்னா அது வேற யாரோ ? நல்ல வேளை ' நீங்க திடார்னு கூப்பிட்டுப் பேசாம வந்தீங்க. அவ எப்படிப்பட்டவள்னும் தெரியாது. அவ புருஷன் எப்படிபட்டவன் என்கிறதும் தெரியாது. ஆசாமி தண்ணி போடுறவனாயிருந்தா, பெரிய வம்பு ' '

எனக்குச் சிரிப்பு வந்தாலும் சங்கடமாக இருந்தது. கண்ணம்மாவைச் சுற்றி எப்படிப்பட்ட மோசமான விஷயங்களையெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறது என்று கஷ்டப்பட்டேன். தாங்க முடியாத வறுமை, குடிக்காரக் கணவன், அவளும் அப்படிப்பட்டவளாக இருப்பாளோ என்ற ஒரு சந்தேகம்.....அழகான சித்திரத்தில் தூசியும் ஒட்டடையும் படிந்து, முன்பக்கம் ஒரு சிலந்திக் கூடும். பின்பக்கம் ஒரு தேளும் இருக்க வேண்டுமா என்று வருந்தினேன்.

மணி நான்கு அடித்தது.

காப்பியை குடித்துவிட்டு வாசலில் சிமெண்ட் தளத்தில் ஒரு ஈசிச் சேரைப் போட்டு உட்கார்ந்து கொண்டேன். மேலே கட்டுமானம் இருந்ததால் அங்கே வெப்பமில்லை. நடைபாதையில் பார்வையைச் செலுத்தியவனாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

ஆறு மணி சுமாருக்குக் கண்ணம்மா----அப்படித்தானே சொல்ல வேண்டும் ?----காட்சி தந்தாள் ' பிரதான சாலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். நான் அவசர அவசரமாக, 'சரஸ்வதி ' என்று கூவி அழைத்தேன். அவளும் உடனே ஓடி வந்து நின்றாள்.

'அதோ ' '

கையை நீட்டிக் காட்டினேன்.

சரஸ்வதி பார்த்தாள். பார்த்துவிட்டு என்னை நோக்கித் திரும்பினாள். ஒரு நிமிஷம் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வருவது போல் தெரிந்தது.

'என்ன சரஸ்வதி ? '

உடனே அவள் முகத்தில் சிரிப்பின் சாயல் மறைந்தது,

'கடவுளே ' கடவுளே ' எழுந்து உள்ளே வாருங்கோ ' ' என்றால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக.

திகைத்துப் போய் நான் உள்ளே எழுந்து சென்றேன்.

சரஸ்வதி கேட்டாள் : இவளைத் தான் சொன்னீர்களா ' நிஜமா இவள்தான் நீங்க சொன்ன கண்ணம்மாவா ? '

'இவளேதான். ஆனால், இப்பவும் எனக்கு நிச்சயமில்லை ' என்று தடுமாறிக் கொண்டே சொன்னேன்.

'நிச்சயமில்லாமலே இருக்கட்டும். இவள் கண்ணம்மா இல்லேன்னா ரொம்ப நல்லது ' என்று சொன்னாள். அப்பொழுதுதான் லேசாகச் சிரித்தாள்.

'அதுதான் என் ஆசையும்கூட. என் கண்ணம்மா இந்த ஸ்திதியில் இருக்கக் கூடாது. '

'திரும்பியே பார்க்காதீங்க ஆமாம் '

'ஏன் ? '

'சரஸ்வதி, நீ என்ன சொன்னாலும் சரி, அவ யாராயிருந்தாலும் சரி, இவ்வளவு காலம் நான் ஆவலோடு தேடின தோஷத்துக்கு, ஒரு வார்த்தையாவது அவளோடு பேசினாத்தான் என் மனசு ஆறும். '

'பேசுங்கோ. ஒரு பத்து வெள்ளிநோட்டையும் தயாரா எடுத்து கையிலே வைச்சுக்குங்கோ. ஏன்னா, பின்னாலே அவ புருஷன் வருவான்----கடன் கேட்கிறதுக்கு ' '

'நீ என்ன சொல்றே ? '

'தெரிஞ்சுதான் சொல்றேன். இங்கே வந்து இருபது நாளைக்குள்ளேயே அவரோட கீர்த்தி என் காதுக்கு எட்டிட்டதுன்னா, அவர் எப்படிப் பிரபலமான ஆசாமின்னு பார்த்துக்கோங்க. '

'நீ என்ன கேள்விப்பட்டே ? விவரமாச் சொல்லு ' என்று சரஸ்வதியை வற்புறுத்திக் கேட்டேன்.

அவள் சுருக்கமாகத்தான் சொன்னாள். ஆனால் அவளுக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லி விட்டாள்.

'கண்ணம்மா 'வின் கணவன் ஊரெல்லாம் கடன் வாங்குகிறவன், ஒரு வேலையும் இல்லாத பரம தரித்திரம், வாங்கிய கடனைக் கொடுக்கச் சக்தியில்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு எங்காவது ஓடி விடுகிறவன் என்றெல்லாம் சொன்னாள். கடன்காரர்கள் வந்து தினமும் அவன் வீட்டில் கூச்சல் போட்டுவிட்டுப் போவார்களாம். இந்தத் தகவல்களை யெல்லாம் எங்கள் வீட்டு வேலைக்காரி சொன்னதாகவும் கூறினாள். என் வீட்டுக்குப் பின் புறத்தில், பக்கத்திலேயே உள்ள ஓர் அத்தாப்பு வீட்டில், 'கண்ணம்மா ' வின் குடும்பம் ஒரு வருஷமாகக் குடியிருந்து வருவதாகவும் இறுதியில் தெரிவித்தாள்.

என் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது, கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவள் கஷ்டத்தில் உழல்கிறாள் என்பது உண்மை. அவன் மோசமானவன் என்பதற்காக அவளுடைய கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பது நியாயமா ? அவள் கண்ணம்மா அல்ல, வேறொருத்திதான் என்று நினைக்கும் போதும் என் தர்ம சங்கடம் தீரவில்லை.

சரஸ்வதியோ, 'தப்பித் தவறிப் பேச்சுக் குடுத்திடாதீங்க ' ' என்று கடைசி எச்சரிக்கையையும் விடுத்தாள்.

2

அதற்குப் பிறகு தான் பல முறை 'கண்ணம்மா ' வைப் பார்த்து விட்டேன். நிச்சயமாக அவள் கண்ணம்மா அல்ல என்பதும் நிச்சயமாகி விட்டது. அவள் அவளாக இல்லாதது அவளுக்கும் எனக்கும் நடுவே ஒரு வேலியாக இருந்து தடுப்பது போன்ற உணர்ச்சியும் ஏற்பட்டது. இந்தக் கண்ணம்மாவிடத்திலும் என்னையறியாமல் இன்னதென்று புரியாத ஓர் அக்கறையும் பாசமும் வளர ஆரம்பித்தன.

ஏழெட்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை எட்டு மணிக்கெல்லாம் கண்ணம்மாவின் வீடு இருக்கும் திசையிலிருந்து ஒரு கூச்சல் கேட்டது. ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காதில் விழக்கூடிய தூரத்திலேயே கேட்டது. அப்போது சரஸ்வதி ஒரு வெற்றிப் பெருமிதத்துடன், ஒரு பரிகாசத்துடனும் என்னிடம் ஓடிவந்து, 'கேட்குதா ? கண்ணம்மாவின் வீட்டிலேதான் இடி முழங்குது ' நான் தினம் கேட்கிற முழக்கம் இது. இன்னிக்கு நீங்க வீட்டிலே இருக்கிறதனாலே கேட்கறீங்க ' என்று சொல்லிப் பின் பக்கத்துச் சுவரின் ஜன்னல் அருகே என்னை அழைத்துச் சென்றாள். அப்போது அந்தக் கூச்சல் சந்தர்ப்பவசமாகத் திடாரென்று நின்று விட்டது.

'யார் முழக்கம் தெரியுமா ? நம்ப மளிகைக் கடைக்காரர் முழக்கம் ' இப்படிப் பேசாத பேச்செல்லாம் பேசிப் பார்க்கிறார். பாக்கி வசூல் ஆவேனான்கிறது ' '

சரஸ்வதியின் பரிகாசப் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மளிகைக் கடைக்காரர் அந்தப் பாதை வழியாக நடந்து வந்தார். என்னையும் பார்த்தார். உடனே நான் முன்பின் யோசிக்காமல் அவரை அழைத்தேன். அவர் முகத்தில் கோபக் குறியை வைத்துக் கொண்டு, அதே சமயத்தில் எனக்காக ஒரு புன்னகையையும் வரவழைத்தவராக என்னை நோக்கி வந்தார்.

'உள்ளே வாருங்களேன் ' ' என்று அழைத்தேன்----சம்பிரதாயமாகத்தான்.

'இல்லே சார், வேலை கிடக்கு ' என்று சொன்னவர், அப்படியே போகாமல், புறவாசல் வழியாக என்னோடு என் வீட்டுக்குள்ளே வந்தார். முன்பக்கம் கூடத்துக்கு அவரை அழைத்துச் சென்றேன். உட்கார வைத்தேன். இதுதான் சமயம் என்று ஒவ்வொன்றாக விசாரித்தேன்.

'இந்தக் குபேர நாட்டிலேயும் இப்படி வாங்கின கடனைக் குடுக்க முடியாதவங்க இருக்கிறாங்க என்கிறது எனக்கு ஆச்சரியமாயிருக்கு ' ' என்று ஆரமித்தேன்.

'தரித்திரப் பயல்கள் எங்கேயும் தான் உண்டு. இவன், கையிலே இருந்தாலுமே குடுக்க மாட்டான். எத்தன் ' இப்போ இல்லவும் இல்லே. '

'ஏன் ? '

'வேலைவெட்டி கெடையாது. பயலுக்குச் சதா நோக்காடு. ஒரு மாதிரி இழுப்பு..... ' '

'இழுப்புன்னா ' '

'காசமா இருக்கும்....வேலையில்லாமல் இப்படிக் கடன் வாங்கியே காலத்தைத் தள்ளிக்கிட்டு வர்றான். '

'இந்த ஊர்தானா ? '

'எந்த ஊரோ ? இங்கேதான் ஒரு வருஷமா இருக்கிறான். எப்பவோ---எஸ்டேட்டிலே கிராணி (குமாஸ்தா) வேலை பார்த்திருக்கிறானாம். நெஜமோ ? பொய்யோ ? '

'அந்த பொம்பிளைதான் வேலை வெட்டி செஞ்சி குடும்பத்தைக் காப்பாத்தணும் போலிருக்கு ? '

'அப்படித்தான். நாலு வீட்டிலே துணி தொவைச்சுப் போடறா. நல்ல குணந்தான். இவனுக்கு வாக்கப்பட்டுட்டு அவ கெடந்து சீரழியறா. '

நான் அவள் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 'நம்ப வீட்டிலேயும் அவளை வேலை செய்யச் சொல்லலாமே ' இங்கேயும் ஆள் தேவைதான் ' என்று சொல்லிவிட்டு , 'அவ பேரு ? ' என்று பேச்சோடு பேச்சாகக் கேட்டு வைத்தேன்.

உடனே அவர் சிரித்தார். 'தங்கம் ' தங்கம்மா ' எப்படி ' பித்தளைப் பானைக்கே வழியில்லே ' பேரு தங்கம் ' '

தங்கம் '

தங்கம்மா '

மளிகைக் கடைக்காரருடன் அப்புறம் நான் அதிக நேரம். உட்கார்ந்து பேசவில்லை. அவரை அனுப்பி விட்டேன்.

தங்கம்மா ' கண்ணம்மா அல்ல ' ஆனாலும் பெயர் மட்டுமே மாறியிருக்கிறது என்று எனக்கு ஒரு பிரமை '

'சரஸ்வதி ' கேட்டியோ, கடைக்காரர் சொன்னதை ? பேரும் தங்கமாம்; குணமும் தங்கமாம் ' '

'அது இருக்கட்டும். இங்கே வேலைக்கு ஆள் தேவைன்னு சொன்னீங்களே, எதுக்கு ? '

'சும்மா சொல்லி வச்சேன். '

'அவ நாளைக்கு வந்து நின்னா ? '

'அப்படியெல்லாம் வந்துட மாட்டா. நீ பயப்படாதே ' '

'நான் அவளுக்கு பயப்படல்லியே ' அவ புருஷனுக்குக்கில்லே பயப்படுறேன் ' '

மளிகைக் கடைக்காரர் அப்புறம் எனக்குத் தெரிய இரண்டாவது தடவையும் கூச்சல் போட்டு விட்டார்.

'அதன்பின் மூன்று நாட்கள் கழிவதற்குள்ளாகவே, நான் தங்கம்மாவின் வீட்டுக்குப் போக வேண்டிய--- அதுவும் இரவு நேரத்தில் ஊர் அடங்கினபின் ஓடிப் போக வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது.

அன்று நிசப்தமான நிசி வேளையில் தங்கம்மாவும் அவள் குழந்தைகளும் திடாரென்று, 'குய்யோ முறையோ ' என்று கூப்பாடு போட்டார்கள்.

உடனே சரஸ்வதியை எழுப்பினேன். 'நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். இந்த பக்கத்திலே நாம்பதான் தமிழாட்களா இருக்கிறோம். நாம்ப போய் எட்டிப் பார்க்கலேன்னா, அது....அது நல்லா இல்லே ' ' என்று சொல்லிவிட்டு ஓடினேன்.

நான் போய்க் கதவைத் தட்டியதும் திறந்து விட்டார்கள். தங்கம்மா அழுகையை நிறுத்தி என்னைத் திகைப்போடு பார்த்தாள். குழந்தைகளும் அழுவதைப் பயத்தினால் நிறுத்திவிட்டார்கள்.

'என்ன விஷயம் ' என்று கேட்டேன்.

கணவன் படுத்திருக்கும் இடத்தைக் கையால் சுட்டிக் காட்டினாள். அவன் பேச்சு மூச்சில்லாமல் எலும்பும் தோலுமாக ஒரு பாயில் படுத்துக் கிடந்தான்.

'என்ன இவருக்கு ? '

'ஆஸ்துமா இழுப்பு ' என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் அழலானாள்.

நான் அவனைத் தொட்டுப் பார்த்தேன். உயிர் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு. 'அழாதீங்க.... இப்போ என்ன செய்யணும் ? வழக்கமா என்ன செய்வீங்க ' என்று அவளைக் கேட்டேன்.

'இப்படி ஒரு நாளும் ஆனதில்லையே '....கடவுளே ' ' என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

'அப்படியெல்லாம் நடந்துடாது. பயப்படாதே ' '

இன்னும் சில நிமிஷங்களில் அவன் செத்துப் போய் விடுவான் என்று நினைத்து விட்டவளைப் போல அவள் அழுதாள். எனக்குமே அப்படித்தான் நினைக்கத் தோன்றியது.

'சரி, இப்பவே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிறணும்.....கொஞ்சம் இருங்க. நான் வர்றேன். அழாதீங்க ' என்று சொல்லிவிட்டு வெளியே ஓடி வந்தேன்.

அங்கிருந்து மூன்று மைல் தூரத்துக்கு அப்பால் பஹாங் ரோடில் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அவனைக் கொண்டு போக வேண்டும். ஆனால் அது டாக்ஸி கிடைக்காத இடம். ஏறக்குறைய காட்டுப் பகுதி. எனக்குத் திடாரென்று அப்போது ஒரு யோசனை உதயமாயிற்று. நான் முன்பின் பேசியறியாத என் பக்கத்து வீட்டுச் சீனனிடம் போய்க் கார் கேட்டால் என்ன என்று நினைத்தேன். தைரியமாகப் போய் அவன் வீட்டுக் கதவைத் தட்டி விட்டேன். 'தவுக்கே ' தவுக்கே ' ' (ஐயா, ஐயா) என்று கூப்பிட்டேன். அவனுக்குப் பதிலாக அவன் மனைவிதான் எழுந்து வாசல் விளக்கைப் போட்டு ஜன்னலைத் திறந்து என்னைப் பார்த்தாள்.

'என்ன ? ' என்று மலாய் மொழியில் அதட்டலாகக் கேட்டாள்.

'நான் பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறேன். '

'தெரியும் '

'தயவு பண்ணி உங்க காரைக் கொஞ்சம் இரவல் கொடுக்க முடியுமா ? ஆஸ்பத்திரி வரைக்கும் போகணும் '

'டிரைவர் இல்லையே ' என் புருஷன் படுத்துத் தூங்கறார். நல்லாக் குடிச்சிருக்கிறார். இப்போ அவராலே கார் ஓட்ட முடியாது. '

'அப்படியா ?....அர்ஜெண்ட் கேஸ் ' '

'யாருக்கு ? '

'இங்கே ஒருத்தர் பிரக்ஞையில்லாமல் கிடக்கிறார். '

'உங்க அண்ணனா ? ' என்று எதற்கோ ஓர் உறவைக் கற்பித்துக் கொண்டு அவள் கேட்டாள்.

நான் உடனே 'ஆம் ' ' என்று சொல்லி விட்டேன்.

அவள் தன் மூத்த மகனை எழுப்பி காரை எடுக்கச் சொன்னாள், அவனும் மறு பேச்சுப் பேசாமல் வந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு காரைத் திறந்தான்.

பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குள், 'கண்ணம்மா ' வின் இல்லை, தங்கம்மாவின் கணவனைக் காரில் ஏற்றி விட்டோம். அவளும் குழந்தைகளோடு ஆஸ்பத்திரிக்கு வர விரும்பினாள். எங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளவும் செய்தாள். எல்லோரும் காரில் ஏறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் பறந்தோம்.

உடனடியாக அவனை 'அட்மிட் ' பண்ணி விட்டேன். அத்துடன் நான் வீட்டுக்குத் திரும்பி விடாமல், அவனுக்குச் செய்யப்படும் முதல் சிகிச்சைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன், அரை மணி நேரத்துக்குப் பிறகு டாக்டரைப் பார்த்து, 'நிலைமை எப்படி ? ஆபத்து ஒன்றுமில்லையே ? ' என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு வாரம் இங்கேயே இருந்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் ' என்றார் அவர்.

தங்கம்மாவுக்கு விஷயத்தைச் சொன்னேன். அவளும் ஆறுதல் பெற்றாள். ஆனால் வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்த போது வர மறுத்துவிட்டாள். விடியும் வரையில் அங்கேயே இருக்கப் போவதாக அவள் சொன்னாள். கடைசியில் நான் மட்டும்தான் வெளியில் வந்தேன். அந்த நேரத்தில் ஒரு டாக்ஸி அகப்பட வேண்டுமே என்று கவலைப் பட்டுக்கொண்டு வந்த நான், வெளியே நின்ற காரைப் பார்த்ததும் ஆச்சரியத்துக்குள்ளானேன். அந்தச் சீனப் பையன் இன்னும் அங்கேயே காரோடு காத்திருந்தான். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை.

இருவரும் காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். அப்போது இரவு மணி இரண்டு.

சரஸ்வதி அப்போது கோபமாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் 'இப்போ எப்படி இருக்கிறார் ? ' என்று மட்டுமே அவள் கேட்டாள்.

'ஆசாமி பிழைச்சுக்கிட்டான். இனி பயமில்லை. ஆனா, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இருந்திருந்தால், அவனை உசிரோட பார்த்திருக்க முடியாது. ஏதோ நம்மாலே ஆன தர்மம். இதுகூடச் செய்யலேன்னா எப்படி ? நம்ப இனம்; நம்ப தமிழ் ஜாதி..... '

இந்த சமாதானமெல்லாம் தேவையில்லை என்று நினைத்தவளைப் போல், 'சரி, சரி படுங்கோ. நாளை ஆபீசுக்குப் போகணும் ' என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள் சரஸ்வதி.

3

மறு நாள் நான் வேலைக்குப் புறப்படும் நேரம். அப்போது தங்கம்மா தன் குழந்தைகளோடு என் வீட்டுக்கு வந்துவிட்டாள். கணவன் புரக்ஞையடைந்து செளக்கியமாக இருக்கும் தகவலைக் கூறினாள். 'சந்தோஷம் ' என்று நான் சொல்லி வாய் மூடு முன்பே, அவள் கண்ணீரை உகுத்துக் கொண்டு, 'நீங்கதான் எனக்குக் கடவுள். இந்த மஞ்ச நூலு உங்களாலே தான் பிழைச்சது ' என்று சொல்லிக் கும்பிட்டாள்.

அப்போது திடாரென்று என்நெஞ்சில் ஒரு மின்னல் தாக்கியது. தங்கம்மாவுக்குப் பதிலாக அங்கே கண்ணம்மாவே நின்று கண்ணீர் விட்டுக்கொண்டு கும்பிடுவது போல் ஒரு தோற்றம், என்னால் அங்கே நிற்க முடியவில்லை.

'இது என்ன பிரமாதம் ? ' என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசாமல் ரோடைப் பார்த்து நடந்தேன். என் கண்கள் நனைந்ததை அவளும் பார்க்கவில்லை; சரஸ்வதியும் பார்க்கவில்லை.

தங்கம்மாவின் கணவன் பழனி மூன்று வாரங்களுக்குப் பிறகு ஆஸ்பத்திரியிலிருந்து குணமாகி வந்தான். நேரே என் வீட்டுக்குத்தான் வந்தான். வந்தவன் என் கால்களில் நெடுசாண்கிடையாக விழுந்தான். இதை நான் நன்றியறிவிப்பாகக் கருதாமல், அடைக்கலம் புகும் ஒரு செயலாகவே நினைத்து விட்டேன். அவனுடைய---என்னைவிட வயதில் மூத்தவன்---அவருடைய குடும்பத்துக்கு ஒரு எதிர்கால ஏற்பாடு செய்து வைத்துவிட நான் ஆசைப்பட்டேன். செத்துக் கொண்டிருப்பவனைப் பிழைக்க வைத்தால், அவன் ஒரு வருஷமாவது உயிரோடு வாழும்படி செய்யவேண்டும்; ஒரு மாதத்தில் திரும்பவும் சாவதற்காக ஒருவனை பிழைக்க வைப்பது அர்த்தமில்லாத காரியமாக மட்டுமல்ல, கொடுமையான காரியமாகவும் எனக்குத் தோன்றியது. பழனியை விசாரித்தேன். இந்த ஆஸ்த்துமா நோய்க் கொடுமையால்தான் முன்பு வேலையை இழந்ததாகவும், தமக்கு ஆங்கிலமும் டைப்ரைட்டிங்கும் தெரியும் என்றும் சொன்னார். இரண்டே மாதங்களில் என்னுடைய காரியாலயத்திலேயே அவருக்கு வேலை பண்ணி வைத்து முந்நூறு வெள்ளி சம்பளம் கிடைக்கவும் வழி செய்து விட்டேன்.

4

ஒவ்வொரு வருஷமாக இரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. எனக்கும் ஒரு பையன் பிறந்து விட்டான். பழனியின் குடும்பம் நான் குடியிருந்த வீட்டு வரிசையிலேயே கடைசி வீட்டுக்கு, நூற்றிருபது வெள்ளி சேவாய் (வாடகை) பேசிக் குடிவந்து விட்டது. அவர் இப்போது நானூறு வெள்ளிக்கு மேல் சம்பாதிக்கிறார் '

இந்த இரண்டு வருஷங்களில் என்றோ ஒரு நாள் என் பால்ய சிநேகிதி கண்ணம்மாவைப் பற்றி என் மனைவி ஒரு ஹாஸ்யக் கதை மாதிரி தங்கம்மாவிடம் சிரித்துச் சிரித்துச் சொன்னாளாம். நான் யாரோ ஒரு பெண்ணிடம் கொண்டுள்ள அன்பை அவளுடைய ஜாடையில் இருக்கும் தன்னிடம் சொரிந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டதும் தங்கம்மா உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கி, 'அப்படியா ? ' என்று கேட்டாளாம் கடைசியில் ஆகாயத்தை நோக்கிக் கைகூப்பி 'அந்தப் புண்ணியவாட்டி யாரோ ?.....தாயே ' நீ நல்லா இருக்கணும் ' உன் புண்ணியத்திலே என் குடும்பம் இன்னிக்குப் பசியாமல் சாப்பிடுது, தாயே ' ' என்று சொல்லித் தொழுதாளாம்.

கண்ணம்மாவின் கதை எப்படியெல்லாம் சுற்றி, எந்தெந்த விதமாகவெல்லாம் வடிவெடுத்துக் கொண்டு போகிறது என்று வியந்து கொண்டிருந்த நான் சீக்கிரத்திலேயே அந்தக் கதையை முடித்துவிடுவதற்கும் எனக்குச் சந்தர்ப்பங்கள் துணை செய்தன. 'அந்தப் புண்ணியவாட்டியை ' நான் நேரிலேயே பார்த்து விட்டேன். அதுவும் ஒரு வருஷத்துக்குள்ளேயே '

அவளைப் பார்க்க நேர்ந்தது சாதாரணமாக நம்பமுடியாத ஒரு சந்தர்ப்ப விசித்திரம்தான்.

தைப்பூச உற்சவத்திற்காக நானும் சில நண்பர்களும் பினாங்குக்குப் போயிருந்தோம். உற்சவக் கூட்டத்தில் நான் கண்ணம்மாவைத் தேடினேன் என்று சொல்லத் தேவையில்லை. அவளுடைய அப்பாவின் பெயரைச் சொல்லி ஒரு கடையில் விசாரித்துப் பார்க்கவும் செய்தேன். மறுநாள் எங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு நண்பர் சொந்தக் காரியமாகச் சுங்குரும்பைக்குப் போக விரும்பினார். நாங்களும் அவருடன் போனோம். பினாங்கில் விசாரித்தது போலவே சுங்குரும்பையிலும், 'இந்த ஊரிலே கோவில்பட்டிக்காரர் ஒருவர் இருக்கிறாராமே ' துரைசாமி என்கிறவர் ? ' என்று கேட்டு வைத்தேன்.

நான் எதிர்பாராவிதமாக அவர், 'ஆமா, இருக்கிறார். சோத்துக்கடை துரைசாமியைத்தானே கேட்கறீங்க ? ' என்று கேட்டார்.

என் ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு. 'சோத்துக்கடையா வச்சிருக்கிறார் ? ' என்று ஒரு கேள்வியைப் போட்டுவிட்டு, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு..... ' என்றேன்.

'இருக்காங்க, மகன் தைப்பிங்கிலே கடை வச்சிருக்கிறான். மக இங்கேதான் இருக்கிறா '.

'கல்யாணமாயிட்டுதா --- மகளுக்கு ? '

'கல்யாணமா ?.... ' என்று இழுத்தார். உடனே சிரிக்கவும் செய்தார்.

'ஏன் ? என்ன விஷயம் ? '

'வேறே ஒண்ணுமில்லை.......அது சரி, அவங்க உங்களுக்குச் சொந்தமா ? '

'சொந்தமில்லே. நம்ப ஊரு. '

'அதுக்கு வயசு முப்பது முப்பத்தஞ்சி இருக்கும் போலே இருக்கு. கல்யாணம் எங்கே ஆகிறது ? '

'அவரைப் பார்க்கணும் ' என்று சொல்லிவிட்டு எழுந்தேன். அவரிடமே வழி கேட்டுத் தெரிந்து கொண்டு, நேரே கடைக்குப் போனேன். துரைசாமி அப்போது கடையிலேயே இருந்தார். தலையும் மீசையும் நரைத்து, வயது முதிர்ந்து காணப்பட்டாலும் ஆள் மிகவும் கனத்து ஆஜானுபாகுவாகக் காட்சி அளித்தார். என்னை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நான்தான் சொன்னேன். உடனே அவர் ஆவலோடு எழுந்து என் கையைப் பிடித்தார். அவருடைய மகிழ்ச்சி முகமெல்லாம் பொங்கித் ததும்பியது. நான் மலாயாவுக்கு வந்ததையும் உத்தியோகம் குடும்ப நிலை போன்ற விவரங்களையும், என் பெற்றோரின் செளக்கியங்களையும் விசாரித்தார். பிறகு தம்முடைய காரிலேயே என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அவருடைய மனைவி எதிரே வந்து என்னை அன்போடு வரவேற்றாள்.

கண்ணம்மா அப்போது வீட்டில் இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் வெளியிலிருந்து வந்தாள்.

எட்டு வயதில் பார்த்த கண்ணம்மாவை, அப்போது முப்பத்து நான்கு வயதுப் பெண்ணாக பார்த்தேன் ஆனால், அவள் எப்படியெல்லாம் இருப்பாள் என்று நான் கற்பனை பண்ணியிருந்தேனோ அப்படி இல்லாமல், நேர் மாறாகக் காட்சியளித்தாள். அந்த மூக்கும், அந்த வாயமைப்பும், ஏறக்குறைய அந்தப் பார்வையுமே மாறாமல் அப்படியேதான் இருந்தன. ஆனால் நெட்டையாக -- சற்று விகாரமாகவே -- வளர்ந்து ஒல்லியாக இருந்தாள். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எத்தனையோவித நவநாகரிக ஒப்பனைகள். அவளுடைய தோற்றத்தையும் கோலத்தையும் பார்த்துக் கொஞ்சம் ஏமாற்றமும் அடைந்தேன்.

என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் துரைசாமி.

'ஓ ' ஐ ஸீ ' ' என்று சொல்லிவிட்டுச் சாயம் பூசிய உதடுகளால் ஒரு சிரிப்புச் சிரித்தாள். பிறகு என் எதிரே உட்கார்ந்தாள். என்னைப் பார்த்து ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான்தான் பேச்சைத் தொடங்கும்படி ஆயிற்று. பேசினேன். 'சின்ன வயசிலே ஒண்ணா விளையாடினோம் '...... '

'யெஸ் ' '---ஒரு புன்னகை.

'அதெல்லாம் ஞாபகம் இருக்கா ? '

'உம்.... ' என்று ஒருவித உணர்ச்சிப் பரபரப்புமின்றிப் பதில் சொன்னாள்.

அந்த நிலையிலும்கூட ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை, பரவசத்தோடும் இளமை பிராய நினைவின் இன்ப லயிப்போடும் அவள் வாயிலிருந்து வெளி வராதா என்று ஏங்கினேன். அவளோ எதுவும் பேசாமல் மெளனமாகவே உட்கார்ந்திருந்தாள்.

என்னால் அப்புறம் அங்கே இருக்க முடியவில்லை. டா வந்ததும் குடித்து விட்டுக் கிளம்பிவிட்டேன். துரைசாமியும் அந்த அம்மாவும் விடைகொடுக்கும்போது, குடும்பத்தோடு ஒரு தடவை நான் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவளோ, கையை அசைத்ததோடு சரி.

கோலாலம்பூருக்குத் திரும்பும்போது என் நஷ்டத்தை எண்ணி எண்ணிப் பெருமூச்செறிந்தேன்.

கண்ணம்மாவைப் பார்த்தது பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கசப்போடும் வெறுப்போடும் என் மனைவியிடம் சொன்னேன்.

'உங்களுக்கு இப்படிக் கோபம் வருவானேன் ? அவள் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணினா ?.... ' என்று சரஸ்வதி என்னைப் பரிகாசம் செய்தாள்.

நானும் பேச்சை நிறுத்திவிட்டேன்.

கண்ணம்மாவை நான் வெறுத்துப் பேசிய வார்த்தைகளை அடுத்த நாள் என் மனைவி மூலம் கேள்விப்பட்ட தங்கம்மா, உடனே என்னிடம் ஓடி வந்தாள். வந்ததும் பதைபதைப்போடு பேசினாள்:

'அந்தப் புண்ணியவாட்டியை நீங்கள் திட்டினீங்களாமே ? ஐயோ, உங்க வாயாலே அப்படிப் பேச வேண்டாம். எங்களுக்காகவாச்சியும் நீங்க திட்டக் கூடாது. இன்னிக்கு நாங்க சாப்பிடுறது அவ சாப்பாடு. '

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

அப்பொழுது சரஸ்வதி, உங்களுக்குக் கண்ணம்மா பேரிலே பழையபடியும் பிரியம் வரணும்னா இனி ஒரே ஒரு வழிதான் இருக்கு ' அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமோ ? ' என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள். பிறகு அவளே சொன்னாள்: 'அவள் தங்கம்மா ஜாடையிலே இருக்கிறாள்னு நினைச்சுக்கோங்க ' பிரியம் தானாவரும் ' தங்கம்மாவையே கண்ணம்மா ஆக்கிட்ட பிற்பாடு, கண்ணம்மாவை தங்கம்மா ஆக்க முடியாதா என்ன ? பிரியத்தைக் காட்டித்தான் யாரையும் மாத்த முடியும். வெறுப்பைக் காட்டி மாத்த முடியாது. '

சரஸ்வதி பேசும் போது நான் மெய் மறந்துவிட்டேன். உள்ளத்தினுள் ஒரு சிலிர்ப்பும் ஏற்பட்டது.

அப்பொழுது எனக்கும் அவளைப் போலவே தத்துவமாகப் பேச எப்படியோ தோன்றிவிட்டது; எப்படியோ தெரிந்தும்விட்டது. நான் சொன்னேன்:

'சரஸ்வதி, உண்மை நம்மிடத்திலே பிரியம் இருந்தால், உலகத்திலே உள்ள அத்தனை பெண்களையுமே கூடக் கண்ணம்மா ஆக்கிவிடலாம். ஒவ்வொரு பெண்ணோட முகத்திலும் கண்ணம்மாவோட ஜாடை இராது தான். ஆனால் மனசிலே இருக்கும். அது அப்போ தெரியும். இல்லையா சரஸ்வதி ? '

கண்ணம்மாவின் கதை திடாரென்று ஒரு புதுத்திருப்பத்தில் திரும்பி, புது வடிவமும் பெற்றதே ஒழிய இந்தக் கட்டத்திலும் முடிவடையவில்லை.

துக்க விசாரணை

Labels: ,

ஜி. நாகராஜன்  -சதங்கை, மே 1973

துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க விசாரணை என்ற சம்பிரதாயம் வேண்டாமா ?

நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு! அந்தப் பரப்பில்தான் எப்படி 'நான் ' என்ற உணர்வே கரைந்துவிடும் நிலையை எட்டி விடுகிறது! கடலின் அலைகள் கரையைத் தொடுவதும் தொடாததுமாக விளையாடிக்கொண்டிருந்தன. கீழ்வானத்தில் சில நிமிடங்கள் நிலைத்த சிவப்பொளி அவசர அவச்ரமாகக் கருமையைத் தொட ஆரம்பித்தது ஏதோ காணதததைக் கண்டுவிட்டது போல ஒருி ஈ மிகுந்த தன்னம்பிக்கையோடு என் மூக்கு நுனியில் வந்து உட்கார்ந்து கொண்டது, ஒரு கையால் அதனை விரட்டியத்தேன், என்மீது என்னவோ அதற்கு திடார் பாசம் ஏற்பட்டது போல 'ஈ ' என்று ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு என் காதில் மீண்டும் உட்கார்ந்து கொண்டது. தலையை அசைத்தேன். அது காதிலிருந்து தலைக்குத் தாவியது. தலையைச் சொறிந்தேன். அது மீண்டும் என் முன் 'ஈ ' என்று வட்டமிட்டது. செகண்டுக்கு தன் இறகுகளை ஆயிரந் தடவைகள் அடித்துக் கொள்ளும் அந்த ஈ! செகண்டுக்கு ஒரு முறை அடித்துக் கொள்ளும் மனித இதயம்.! ஈயின் இதயம் செகண்டுக்கு எத்தனை தடவைகள் அடித்துக் கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடும்; துக்க விசாரணைக்குச் செல்லவேண்டும்.

இடையே ஊதி அணைத்துவிட்ட மெழுகுவர்த்தியைப் போல ரோகிணி இறந்துவிட்டாள். ஒரு போதும் குரலை உயர்த்திப் பேசமாட்டாள். ஒரு முறை யாரோ ஒருவனோடு இருந்தாள். நான் வந்ததை அறிந்ததும் வந்து சமாதானம் கூறிச் சென்றாள். 'இது என் தலை எழுத்துங்க ' என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றாள். நான் காத்திருப்பேன் என்று எதிர்பார்த்தாள். இரண்டு நாட்களுக்குப் பின் தான் நான் அவளிடத்துக்குச் சென்றேன். அப்போது, 'அக்கா கடனையெல்லாம் தீர்த்திட்டு கன்னியாஸ்திரி ஆகிவிடுவேன் ' என்றாள். 'இல்லாட்டி தற்கொலை பண்ணிப்பேன் ' என்று பிறகு சேர்த்துக் கொண்டாள். 'தற்கொலையில் அர்த்தமில்லை ' என்றேன். 'பின்னே எதில் ? ' என்று கேட்டுக்கொண்டே என் கன்னங்களில் முத்தினாள். அந்தப் பத்துப் பதினைந்தைக் கொடுப்பதைத் தவிர நான் ரோகிணிக்கு எதுவும் செய்தது கிடையாது. ஆனால் அவளுக்குத் தெரியுமோ என்னமோ, அவளைப் பற்றிப் பல தடவைகள் நான் நினைத்ததுண்டு. நினைப்பு என்ன அவ்வளவு பெரிசா ? பின் இல்லையா ? இறந்து போனவர்களைப் பற்றியோ உயிரோடிருப்பவர்களைப்பற்றியோ அவ்வப்போது நினைத்துக் கொள்வது பெரிசில்லையா ? ரோகிணியைச் சந்தித்த முதல்நாள், 'நாளை உன்னை எங்கே பார்க்கலாம் ? ' என்றேன். 'எட்டு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் அக்கா வருகிறாள். அவளைச் சந்திக்க ஸ்டேஷனுக்குச் செல்வேன் ' என்றாள். காலை ஏழே முக்காலுக்கே ரயில் நிலையத்துக்குச் சென்று விட்டேன். ரயில் இருபது நிமிஷங்கள் தாமதமாக வந்தது. ரயில் முழுவதும், பிளாட்ஃபாரம் முழுவதும் தேடினேன். ரோகிணியையும் காணோம். அக்கா ஜெயத்தையும் காணோம். பிறகுதான் ஒரு முறை ஜெயத்தைப் பார்த்தேன். பிராண்டி குடித்துவிட்டு வெற்றிலைப் பாக்கு போட்டிருந்தாள். தடித்த வெண்மையான சரீரம்; ரோகிணியின் மென்மை இல்லை. சிலவகை ஆண்களைக் கவரும் முரட்டுத்தனம் அவளிடம் காணப்பட்டது.

ரோகிணி இறந்து இருபது நாட்களுக்கு மேலாகிறது. பத்திரிக்கையில் விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அவள் வீட்டுக்குச் சென்றபோது., 'மூணுவாரமா ஊரில் இல்லை ' என்று சால்ஜாப்பு சொன்னேன். வழக்கம்போல் வீடு அடைத்துக் கிடந்தது. நான் கதவைத் தட்டவும், பக்கத்து ஜன்னல் அரைகுறையாய்த் திறந்தது. 'நீங்களா ? ' என்றுவிட்டு கதவைத் திறந்தாள் ஜெயம். உள்ளே நான் நுழையவும் அவள் கதவையும் ஜன்னலையும் மூடினாள். 'ஒரு மாதமா ஊரிலே இல்லே. நேத்துத்தான் கேள்விப்பட்டேன் ' என்று ஆரம்பித்தேன்.

'உட்காருங்க ' என்றுவிட்டு, 'அது என் தலையெழுத்து ' என்றாள் ஜெயம்.

'டாக்டர்கிட்டே காட்டலயா ? ' என்றேன்.

'மொதல்லே மூணு நாலு நாளைக்கு வெள்ளை வெள்ளையாப் போச்சுனது. ஆச்சி சொன்னாங்களேன்னுட்டு சந்தனத் தைலம் வாங்கிப் போட்டேன். கேக்கலே. முள்ளங்கிச் சாறு, வெங்காயச் சாறு, சீரகம் வெல்லம் எல்லாம் கலந்து மூணுநாள் சாப்பிட்டாப் போதும்னிச்சு தங்கமணி. எல்லாத்தையும்தான் செஞ்சு பார்த்தோம் '

'இதுக்கெல்லாம் இப்போ இங்கிலீஷ் மருந்து இருக்கே. பென்சிலின்ஜி எம்பாங்க. அதை ஊசி போட்டாப் போதுமே ' என்றேன் நான்.

'அதுதான் டாக்டர்கிட்டே வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுதே! ரெண்டு மாதஹ்த்திலே எல்லாம் கொணமாயிட்ட மாதிரிதான் தெரிஞ்சிச்சு. ஆனா அப்பப்ப வயித்துவலி, வயித்துவலின்னு கத்திச்சு. நாமக்கட்டியை அரைச்சுப் போட்டோம். வலி கொஞ்சம் நின்னமாதிரி தெரிஞ்சது. நானும் அன்னைக்குச் சினிமாக்குப் போயிட்டேன். அத்தான் வளக்கம் போல சீட்டாடப் போயிட்டாரு. ஏதோ ஒரு தடியன் வந்து, 'ஏண்டி, எனக்கு சீக்கா வாங்கி கொடுத்தேன்னு ' கேட்டுக்கிட்டு, செருப்பைக் களத்தி அடிச்சிருக்கான். அவன் போகவும் ரயிலடிக்குப் போனவதான்... ' ஜெயம் மேற்கொண்டு பேசவில்லை.

'இந்த சீட்டாட்டம்தானே அத்தானைக் கெடுத்திரிச்சு ' என்றேன் நான், யோசனையோடு.

கனோரியாவைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். என் மாமா ஒருவர் அதனாலேயே கண்பார்வையை இழந்தார். சிறந்த டாக்டர்; இருந்தும் ஒன்றும் அந்தக் காலத்தில் செய்து கொள்ள முடியவில்லை. பிராண்டி குடித்தால் நோயின் கடுமையை மட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்று எண்ணி அதிகம் குடிக்க ஆரம்பித்தார். அவரது அட்டகாசம் அதிகமாகவே, மூத்த மகன் அவரை ஒருநாள், 'வீட்டை விட்டு வெளியே போங்க ' என்று உத்தரவிட்டான். மறுநாள் அவர் காலி. அவர்தான் ஒருமுறை சொன்னார். ஆயிரம் கனோரியாக் கிருமிகளை ஒன்றாக வைத்தால் ஒரு குண்டூசியின் தலையளவுக்குத்தான் வரும் என்று. ஆனால் இந்தக் கிருமிகள் ரொம்பவும் சொகுசாக வாழக்கூடியவை. மனித உடல்தான் இவற்றுக்கு லட்சிய இருப்பிடம். வேறு மிருகங்களின் உடல்களில் இவை உயிர் தரிப்பதில்லை. சுற்றுப் புறக் காற்று சற்று உலர்ந்து விட்டாலோ அல்லது உஷ்ணம் அடைந்தாலோ கூட இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவற்றுக்கு அப்படி ஒரு தலைவிதி; இல்லை, மனிதனுக்கு அப்படி ஒரு தலையெழுத்து.

'அந்தத் தடியன் அப்படி அடிச்சதுதான் ரோகிணி மனசைப் புண்படுத்தி இருக்கு. அவன் போனப்புறம் ரயிலடிக்குப் போனவதான்... ' என்று மீண்டும் ஆரம்பித்து அரைகுறையாய் நிறுத்தினாள் ஜெயம். ஆனால் ஜெயத்தின் மேலாடை சற்று அலங்கோலமாக இருப்பதைக் கண்டதும் எனக்கு விஷயம் புரிந்தது. பையினுள் கையை விட்டுப் பத்து ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். அப்பொதுதான் ஜெயத்தின் புன்சிரிப்பில் ரோகிணியின் சாயலைக் கண்டதாக நினைத்துக் கொண்டேன். மூடிய கதவைத் தாளிட்டுவிட்டு, சன்னலையும் அடைத்துவிட்டு, ரூபாயை வாங்கிக் கொண்டே, 'மேலே போகலாமா ? மெத்தை இருக்கு ' என்றாள் ஜெயம்.

அப்பாவிடம் என்ன சொல்வது ?

Labels: ,

அசோகமித்திரன் - கனவு - 1993 

இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும் பெட்டி படுக்கை மூட்டையைத் தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் அடியெடுத்து வைத்த போது அவர்கள் தகவல் விசாரிப்பதற்கு யாரும் கண்ணில் படவில்லை. 

fater

கிழவி அங்குமிங்கும் பார்க்க, அப்பெண் கேட்டாள், 'பொட்டியிலே என்னதான் வச்சிருக்கே பாட்டி ? ' 

'கை வலிக்கிறதா ? என் கிட்டே கொடு, நான் தூக்கிக்கிறேன் ' என்றாள் கிழவி. 

'நீதான் ரெண்டு மூட்டையைத் தூக்கிண்டிருக்கியே ? ' 

'உனக்கு வீட்டுக்குப் போகப் பஸ் இருக்கா ? ' 

'இருக்கு, பாட்டி. இல்லேன்னாக் கூட நடந்து போயிடுவேன் ' 

'இந்த இருட்டிலே தனியா நடந்து போகக்கூடாது. ' 

'இப்போ தனியாத்தானே வந்திருக்கோம். ' 

'உன் அப்பன் இன்னும் வீட்டுக்கு வரலியே ? என்னைப் போ போன்னு சொல்லிட்டு ரயிலேத்தக்கூட வரலே. ' 

பெண் பேசாதிருந்தாள். 

பிளாட்பாரத்து டாக்கடை உள்ளடங்கி இருந்தது. அருகில் இருந்த பத்திரிக்கைகள் கடையில் ஆள் இல்லை. 

'அந்த டாக்கடையிலே போய்க் கேட்டுண்டு வா. கன்யாகுமரி ரயில் இங்கே தானே வரதுன்னு ' பெண் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு டாக்கடைக்குள் சென்றாள். கிழவி பெட்டி மீது அவளுடைய இரு மூட்டைகளையும் வைத்தாள். 

கிழவியின் மூச்சு சர்புர்ரென்று இரண்டடி தூரத்திலும் கேட்கும்படி இருந்தது. 

'இங்கேதானாம் ' பெண் வந்து சொன்னாள். 

'அப்படியே போய் பெண்கள் பெட்டி எங்கே நிக்கும்னும் கேட்டுண்டு வந்துடு. ' 

பெண் முகத்திலொரு கீறல் சிணுங்கல் தெரிந்தது. அந்த டாக்கடைக்குத் தனியாக அந்த வேளையில் ஒரு பெண்ணை அனுப்பக்கூடாது. 

'நீ நில்லு. நான் போய்க் கேட்டுண்டு வரேன். ' அந்த கிழவி அசைந்து அசைந்து நடந்து போனாள். அவள் கால்களின் வலி அந்த நடையிலிருந்து தெரிந்தது. 

'வா, அந்தக் கோடிக்குத்தான் போகணுமாம். ' என்றாள். அவளே பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். திடாரென்று சற்றுக் குளிர ஆரம்பித்தது. நிலையக்கட்டிடத்தையும் தாண்டி பிளாட்பாரத்தை மட்டும் நீளப்படுத்தியிருந்தார்கள். அங்கு தலைக்கு மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டிருந்தது. இருபுறமும் திறந்த வெளி. குளிர். 

பிளாட்பாரத்தின் கோடியை அடைந்தபிறகுதான் கிழவி நின்றாள். இப்போது நிலையத்தில் சிறிது மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. எல்லாம் பத்து இருபது பேர்களுக்குள் அடங்கிவிடும். 

'நீ போடி பெண்ணே, நான் பாத்துக்கறேன் ' 

'போறேன், பாட்டி. ரயில் வரட்டும். ' 

'ரயில் வந்து நீ போகறதுக்குள்ளே இன்னும் ராத்திரியாகிவிடும். இவ்வளவு நேரமானதே சரியில்லை. உன்னை நான் கூட வரவே சொல்லலே. ' 

'நீ எப்படி பாட்டி எல்லாத்தையும் ஒண்டியாத் தூக்கிண்டு வந்திருக்கே! ' 

'நான் இங்கே வரப்போ எப்படித் தூக்கிண்டு வந்தேனோ அப்படி. இப்படி தூக்கி தூக்கிப் பழக்கம் ஆயிடுத்து. ' 

'ஆனாலும் உன் பொட்டி ரொம்ப கனம், பாட்டி. ' 

'அதுதான் நான் தூக்கிக்கறேன்னேன். நீ பிடிவாதமா அதையே தூக்கிண்டே. ' 

'மதராஸ்ஸே பெங்களூர் ஆனேவாலே பெங்களூர் எக்ஸ்பிரஸ்... ' என்று தெளிவற்ற கரகரத்த குரலில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வந்தது. பெண் பாட்டி ரயில் வரதாம் ' என்றாள். 

'இது இங்கே வர ரயில். போறது இல்லை. ' 

'உனக்கு எப்படிப் பாட்டி உடனே தெரிஞ்சுடறது ' 

'இதெல்லாம் தெரியறதுடி பெண்ணே, நான் எங்கே இருக்குறதுன்னுதான் தெரியலே ' 

'எங்களோடேயே இருந்திடலாமே, பாட்டி ' 

'நீ சொல்லிட்டா ஆயிடுத்தா ? ' பாட்டி பெட்டி மீது உட்கார்ந்தாள். திடாரென்று அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள். 

'இதோ பாரு இதோ பாரு... ஏன் அழறே ? என்ன ஆச்சு ? அழாதே அழாதே. ' பெண் தொடர்ந்து அழுது கொண்டு இருந்தாள். 

'அழுகையை நிறுத்து. கண்ணோல்லியோ ' 

பெண் மிகவும் சிரமப்பட்டு அழுகையைச் சற்றுக் குறைத்துக் கொண்டாள். 'எனக்கு ரொம்ப துக்கமா இருக்கு, பாட்டி ' என்றாள். 

கிழவி பேசாதிருந்தாள்.அவர்கள் அருகே ஒரு குடும்பம் வந்து சேர்ந்தது. கணவன், மனைவி, இரு குழந்தைகள். பத்து வயதுக்குட்பட்ட இரு சிறுவர்கள், ஒரு சிறுமி, ஒரு கைக்குழந்தை கிழவியையே பார்த்தபடி இருந்தது. மனைவி தன் கைக்குழந்தையைக் கணவனிடம் கொடுத்தாள். கிழவியைப் பார்த்து 'லேடாஸ் கம்பார்ட்மென்ட்தானே ? ' என்றாள். 

'ஆமாம். ' 

'கன்யாகுமரி வண்டிதானே ? ' 

'ஆமாம். ' 

'கூட்டமாக இருக்குமா ? ' 

'இந்த வண்டியிலே, ரொம்ப ஜனம் ஏறதில்லை. இரட்டையா ? ' 

'ஆமாம். ' என்று சோர்வோடு அப்பெண்மணி சொன்னாள். கிழவியை, 'பேத்தியா ? ' என்று கேட்டாள். 

'ஆமாம். பிள்ளை முனிரெட்டிப்பாளையத்திலே இருக்கான். அவன் பொண்ணு ? ' 

'எங்கே அழைச்சுட்டுப் போறீங்க ? ' 

'நான் அழைச்சுட்டுப் போகலே. என்னை ரயிலேத்தி விட வந்திருக்கா. ' 

அப்பெண்மணியின் கணவன், 'ரொம்ப லேட்டாயிடுமே ? ' என்றான். 

'நான் வேண்டாம் வேண்டாம்னுதான் சொன்னேன். பிடிவாதமா வந்தா. ' 

'முனிரெட்டிப்பாளையத்திலே எங்கே ? ' 

'மார்க்கெட்டுக்கு முன்னாலே. சுடுகாடு இருக்கில்லே. அதுக்குக் கொஞ்சம் பக்கத்துலே. ' 

'நான் கொண்டுபோய் விட்டுட்டுப் போறேன். ' 

பெண், 'வேண்டாம், வேண்டாம். நானே போய்க்கிறேன், ' என்றாள். 

கிழவி அந்த மனிதனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். அந்த மனைவி சொன்னாள். 'நீங்க இங்கிருந்தே நேரே உங்க டூடிக்குப் போறதுக்குத்தான் டைம் இருக்கும்.. அவருக்கு இன்னிக்கு நைட் டூடி. ' இதைக் கிழவியைப் பார்த்துச் சொன்னாள். 

பிளாட்பாரத்தில் இப்போது நிறைய மனிதர்கள் வந்து விட்டார்கள். மனைவி கிழவியைக் கேட்டாள். 

'ரொம்ப ஜனம் இருக்காதுன்னீங்களே ' 

'இவுங்க மெட்ராஸ் வண்டிக்குப் போறவங்க. இப்போத்தான் இங்கே இரண்டு மூன்று வண்டி வருமே ' 

'உங்களுக்கு எல்லாம் தெரியுது. ' 

கிழவி தன் பேத்தி முகத்தைப் பார்த்தாள். பேத்திக்கு மீண்டும் குப்பென்று அழுகை வீரிட்டது. கிழவி அவளை அணைத்தபடி ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்றாள். 

'நீயும் நானும் அழுது என்ன புண்ணியண்டா, கண்ணா ? ' என்றாள். 

'அப்பா அம்மா ஏன் அப்படி இருக்காங்க பாட்டி ? ' என்று பேத்தி அழுதுகொண்டே கேட்டாள். 

'என்னாச்சு ? அவங்க நல்லாத்தான் இருக்காங்க. குடும்பக் கஷ்டம் அப்படி. ' 

'இல்லே பாட்டி. நீங்க எங்க கூடவே இருந்திடலாம், இல்லையா ? போ போன்னுட்டாங்களே ? ' 

'சே சே! நான் போறேன்னு கிளம்பிட்டேன். நீ மனசிலே ஒண்ணும் வச்சிக்காதே கிளம்பு. இவங்க கூட நான் ரயிலேறிப்பேன். தனியாய்ப் போய்டுவேல்லே ? ' சிறுமி கண்ணைத் துடைத்துக் கொண்டாள். 'நான் போயிட்டு வரேன், பாட்டி ' என்றாள். கிழவி அவளை அழைத்து ஒரு முத்தம் கொடுத்தாள். 

அந்த ஆள், 'நான் பாப்பாவைக் கொண்டு போய் விட்டுடறேங்க ' என்றான். 

கிழவி, 'வேண்டாம். அவ போயிப்பா. முனிரெட்டிப்பாளையம் மெயின் ரோட்டிலே போனா ஒன்னும் பயமேயில்லே ' என்றாள். 'நீ போயிட்டு வா. அப்பா, அம்மாகிட்டே வரேன்னுதான் சொன்னான். வரலே. என்ன வேலையோ ? ' 

கண்களையும், கன்னங்களையும் துடைத்துக் கொண்டு அப்பெண் பாட்டியைப் பார்த்தவண்ணம் நகர்ந்தாள். பிளாட்பாரத்தில் மணியடித்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஒலிபெருக்கியில் ஒரு ரயில் வரப்போகும் செய்தி வந்தது. கிழவி அருகில் நின்ற குடும்பத்தின் தலைவன் குழந்தையை மனைவியிடம் கொடுத்துவிட்டு பெட்டியையும் பையையும் கையில் எடுத்துக்கொண்டான். தன் பெட்டி மூட்டைகளை ஒரு சேர வத்த கிழவி திடுக்கிட்டாள். அவள் பேத்தி மீண்டும் வந்து விட்டாள். 'என்னடாது ? ' என்று கிழவி கேட்டாள். 

'உன்னை ரயிலேத்திட்டே போறேன் பாட்டி. ' 

கிழவி கண்ணில் முதல் தடவையாக ஈரம் தெரிந்தது. 

மிகவும் மெதுவாக ஒரு ரயில் வந்து சேர்ந்தது. கிழவியுடன் நின்ற குடும்பம் ரயிலில் ஏறத் தயாராக இருந்தது. கிழவி மட்டும் சந்தேகத்துடன், 'இது கன்யாகுமரி திருப்பதி வண்டியான்னு கேட்டுக்குங்க ' என்றாள். அவள் சந்தேகம் சரிதான். அது திருப்பதி போகும் வண்டிதான். வழக்கத்தை விட அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. 

அந்த குடும்பத்தின் தலைவன், 'அப்போ நம்ம வண்டியும் லேட்டுத்தான் ' என்றான். பிறகு அவன் மனைவியிடம் 'நீ வண்டி ஏறிக்கிறியா ? இதோ இங்கே பெரிய அம்மாவும் இருக்காங்க. நான் டூடிக்குக் கிளம்பறேன், ' என்றான். 

அவன் மனைவி அரை மனதாக 'சரி ' என்றாள். 

அவன் கிழவி பக்கம் திரும்பி, 'பாப்பா வீட்டுக்குப் போகுதா ? நான் கொண்டுபோய் விட்டுட்டுப் போறேன். வரியா பாப்பா ? ' என்றான். 

கிழவி தன் பேத்திக்கு மட்டும் தெரியும் வண்ணம் தலையை அசைத்தாள். 'அவ அப்பன் வரேன்னுருக்கான். அதோ அங்கே தூரத்திலே வராப்பிலே இருக்கு ' என்று கூறினாள். சிறுமி கிழவி பார்த்த திசையில் பார்த்தாள். அவள் முகத்தில் யாரையும் அடையாளம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

கடைசியாக கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் வந்தபோது ஒன்பதேகாலுக்கும் மேலாகிவிட்டது. பிளாட்பாரத்தில் இப்போது சென்னை வண்டிக்காகக் காத்திருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஒரு சில இடங்களில் குவிந்திருந்தார்கள்.அவர்கள் ஏற வேண்டிய பெட்டிகள் அந்த இடங்களில்தான் நிற்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். கன்யாகுமரி ரயிலில் பெண்கள் பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை. கிழவி தன்பெட்டிமூட்டைகளுடன் ஏறும் போதே இரட்டைக் குழந்தைக்கரியும் இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறினாள்.கிழவிக்கு ஜன்னலருகே இடம் கிடைக்காத போதிலும் ஒரு ஜன்னலருகே முகத்தை வைத்துக்கொண்டாள். பேத்தியை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டி முகத்தைப் பார்க்க அச்சப்படுவதுபோல் பேத்தி வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். ரயில் நகரத்தொடங்கியபோது கிழவி 'இந்தா, இதை வச்சிக்கோ, ' என்றாள். பேத்தி அவளையுமறியாமல் கையை நீட்டினாள். கிழவி பேத்தி கையில் பத்து ரூபாய் நோட்டை வைத்து மூடினாள். 

'உங்கிட்டேயே ஒண்ணும் கிடையாதே பாட்டி ? ' என்று பேத்தி சொன்னாள். 'எனக்கு எல்லாம் இருக்கு. பத்திரமா வீட்டுக்குப் போ ' என்று கிழவி பதிலுக்கு கத்தினாள். பெண் ரயிலுடன் ஓடிவர முயன்றாள். ஆனால் மூன்று நா™ அடிகள்தான் நடக்க முடிந்தது. ரயில் போய் விட்டது. 

பெண் விடுவிடென்று நடந்து பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்தாள். 'பாட்டி போயாச்சா ? ' என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பினாள். அவள் அப்பா. 'ஏம்ப்பா உள்ளே வரலே ? ' என்று கேட்டாள். 

'பிளாட்பாரம் டிக்கெட் வாங்கலே. ரொம்ப கூட்டமா இருந்தது ' அவளும் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கவில்லை. அதை அவள் அப்பாவிடம் சொல்லவில்லை.

நிமிஷக்கதைகள்

Labels: ,

ஜி. நாகராஜன்

painting4-modern-art-work

1

'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

'ஆமாங்க ' என்றான் கைதி.

'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ' என்றார் மாஜிஸ்ட்ரேட்.

'அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ' என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, 'யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ' என்றார்.

மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.

 

2.

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

'சாமியார் சமாதியாகிவிட்டார். ' 'இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ' என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் 'சாமியார் சமாதியாகிவிட்டார் ' என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, 'டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ' என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், 'மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ' என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

3.

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

'பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ' என்று எழுத்தாளன் கேட்டான்.

'என்ன ? ... கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ' என்றாள் விபச்சாரி.

'இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ' என்றான் எழுத்தாளன்.

'கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ' என்றாள் விபச்சாரி.

'கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? '

'யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு '

'மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? '

'அப்படியா ? '

'பின்பு ? '

'சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? '

'ஊம், இருக்கு '

'நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க '

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

4.

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. 'வா, வா ' என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.

'யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ' என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

- சரஸ்வதி, ஏப்ரல், 1961

பொன் மொழிகள்

Labels: ,

-ஜி. நாகராஜன். -ஞானரதம், மே 1972

modernart-hydra1 சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன்மொழிகளை ' தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே ' இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில 'பொன் மொழிகளை ' உதிர்க்கிறேன்.

1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.

2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.

3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியை பொறுத்துக்கொள்ளமுடிகிறது.

4. தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.

5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.

6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறுகூட்டம் இருந்தேதீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.

7. 'மனிதாபிமான ' உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத்துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தை படைக்க வல்லது. இல்லையெனில் 'மேக்பெத் ' என்ற நாடகமோ 'கலிவரின் யாத்திரை ' என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது.

8. இயற்கையிலேயே பீறிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம், கன தனவான்கள் பதவியில் இருந்துகொண்டு 'புரட்சி ' பேசுவதைச் சகித்துக்கொண்டிருக்கிறோம்.

9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினக்கும் கலைஞனுக்கு, பனம் பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச்சொல்லுங்கள்.

10. மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் 'மனிதன் மகத்தான சல்லிப்பயல் ' என்றுதான் சொல்வேன்.

இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி, எள்ளுருண்டை, 'காலி சிந்த் ' புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப்பல், இத்யாதி இத்யாதி பற்றியும் 'பொன் மொழிகள் ' தர முடியும்.

- ஜி-நாகராஜன் படைப்புகள் பக்கம் 347, காலச்சுவடு பதிப்பகம்,