Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

கு.ப.ரா

Labels: ,

கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். திருச்சி நேஷனல் காலேஜில் `இண்டர் மீடியட்’ படித்துக்கொண்டிருந்தபோது clip_image001[13]அவரது தந்தை ஏ. பட்டாபிராமய்யர் இறந்துவிட, தாய் ஜானகி அம்மாளுடன் கும்பகோணத்திலிருந்த சொந்தமான மிகப் பழைய வீட்டிற்கு வந்தார். அங்கு, கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலனுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் ந. பிச்சமூர்த்தி. பிறகு கல்லூரியிலும், வாழ்விலும், ரஸனையிலும், இலக்கியத்திலும் தொடர்ந்து 20 ஆண்டு காலம் _கு.ப.ரா.வின் மரணம் வரை_ `கும்பகோணம் இரட்டையர்கள்’ என்று மற்றவர்கள் கூறும்படி இணைபிரியாதவர்களாய் இவர்கள் இருவரும் இருந்தனர்.

  1926ஆம் ஆண்டு கு.ப.ரா, அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா ஆபீஸில் அவருக்கு வேலை கிடைத்தது. விரைவில் `ரிவென்யூ இன்ஸ்பெக்டர்’ ஆகப் பதவி உயர்வு பெற்றார். ஆனால், அப்போது திடீரென்று அவருக்கு கண் பார்வை மிகக் குறைந்துவிட்டதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு 1936ஆம் ஆண்டு தொடங்கி சிறிது காலம் `தமிழ்நாடு’ என்ற தினசரியில் வ.ரா. ஆசிரியராக இருந்தபோது சி.சு. செல்லப்பாவும் கு.ப.ரா.வும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்கள். `தமிழ்நாடு’ தினசரி நின்றுவிட்டதும் கு.ப.ரா. மீண்டும் கும்பகோணம் வந்தார்.

  கும்பகோணத்தில் ஆர். மஹாலிங்கம், என்ற கண் மருத்துவர் செய்த சிகிச்சையால், ஒரளவு கண் பார்வை மீண்டது. உடனே சென்னைக்குத் திரும்பிவந்தார். குடும்பம் கும்பகோணத்தில் இருந்தது. 1937ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்துக்கொண்டார். நண்பர்களின் ஏற்பாட்டின் பேரில் கிடைத்த மொழிபெயர்ப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் சிரமப்பட்டுதான் இக்காலகட்டங்களில் கு.ப.ரா. வாழ்ந்தார். 1939ஆம் ஆண்டு ஜுலை மாதம் வ.ரா. வை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட `பாரத தேவி’ வாரப் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். மற்றொரு துணையாசிரியர் சி.சு. செல்லப்பா. `பாரத தேவி’யில் கு.ப.ரா `பாரத்வாஜன்’, `சத்யம்’, `கரிச்சான்’ ஆகிய புனைபெயர்களில் எழுதினார். `பாரத தேவி’யும் நீடிக்கவில்லை. பிறகு க.சீ.வெங்கட் ரமணி நடத்திய `பாரத மணி’ பத்திரிகையில் சேர்ந்தார்.

  பிறகு இரண்டாவது உலகப் போர் தொடங்கியதும் கு.ப.ரா. மீண்டும் கும்பகோணம் சென்றார். அங்கு `மறுமலர்ச்சி நிலையம்’ என்ற பெயரில் அவருடைய வீட்டுத் திண்ணையிலேயே புத்தக கடை ஒன்றைத் தொடங்கினார். விற்பனைக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை அவருக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்குப் பதிலாக பதிப்பகத்தார் கொடுத்தவை. விற்று காசாக்கிக் கொள்ளவேண்டியது அவர் பொறுப்பு, ஆனால், விற்பனைக்கு பதிலாக புத்தக கடை நூலகமாக மாறிவிட்டது. நண்பர்கள் பலர் வந்து கடையிலேயே படிக்கத் தொடங்கினர். சிலர் எடுத்துக்கொண்டு போய் படித்துவிட்டு திரும்பத் தந்தனர். சில நாட்களுக்குப் பின் கு.ப.ரா. சிரமப்படுவதைக் கண்டு மனம்பொறுக்காத தொண்டர் ஒருவர் புத்தகங்களை விற்றுத் தருவதாக எடுத்துக்கொண்டு போய் தன்கடையில் வைத்துக்கொண்டார்.

  புத்தகக் கடை முயற்சி தோல்வியில் முடிந்தபின் 1943 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள துறையூர் என்ற சிற்றூரில் இருந்து வெளிவந்த `கிராம ஊழியனில் கௌரவ ஆசிரியராகச் சேர்ந்தார். திருலோக சீதாராமை ஆசிரியராகக்கொண்ட கிராம ஊழியனுக்கு கு.ப.ரா. கும்பகோணத்தில் இருந்தவாறே எழுதினார்.

  கு.ப.ரா.வுக்கு இரண்டு சகோதரிகள். இளைய சகோதரிதான் கு.ப. சேது அம்மாள். மிகச் சிறிய வயதிலேயே கு.ப.சேது அம்மாள் கணவனை இழந்துவிட்டார். இது கு.ப.ராஜகோபலனைச் சங்கடம்கொள்ளச் செய்தது. 1943ஆம் ஆண்டு கு.ப.ரா. முயற்சிக்குப் பின் கு.ப. சேது அம்மாளுக்கு மறுமணம் நடைபெற்றது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு விரைவிலேயே சேது அம்மாள் காலமானார். கு.ப.ராஜகோபாலனுடைய பல கதைகள் சேது அம்மாளின் இளவயது வாழ்க்கையுடன் தொடர்புடையவை.

  கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தின் போதே கு.ப.ரா.வுக்கு இலக்கியத்தின் பேரிலும் எழுத்தின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காகவே வங்காளி கற்றுக்கொண்டார். கல்லூரியில் பிச்ச மூர்த்தி மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து `ஷேக்ஸ்பியர் சங்க’த்தைத் தொடங்கினார். தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் `ஷேக்ஸ்பியர் சங்க’ கூட்டங்களில் கு.ப.ரா. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வாசித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் பிச்சமூர்த்தியுடன் சேர்ந்து கும்பகோணத்தில் `பாரதி சங்கம்’ நிறுவினார். இக்காலகட்டத்தில் சுதந்திரச் சங்கு, மணிக்கொடி இரண்டு பத்திரிகைகளிலும் தொடர்ந்து கு.ப.ரா.வின் கதைகள், கவிதைகள் வெளிவந்தன. 1938ஆம் ஆண்டு நவயுகப் பிரசுராலயத்திற்காக ஸ்டீவன்ஸனின் ¡ `Dr. Jekyll and Mr. Hyde’ நாவலை இரட்டை மனிதன் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். பிறகு துர்கேச நந்தினி, தேவி சௌதுராணி என்ற இரண்டு வங்காளி நாவல்களை மொழிபெயர்த்தார்.

  1934ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டுவரை _ இடைப்பட்ட இந்தப் பத்து வருடங்களில், புத்தகங்களாக இப்போது கிடைக்கும்படி, கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறார். புத்தக உருப் பெறாதவை அனேகம். அவருடைய கட்டுரைகள் எவையும் புத்தகமாகத் தொகுக்கப்படவே இல்லை. 1943க்கு முன்பே முடிக்கப்பட்ட டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லயன்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

  செக்ஸ் விஷயங்களை எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டு கடைசிக் காலம் வரை கு.ப.ரா. மீது சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது. `கனகாம்பரம்’ என்கிற சிறுகதை வெளிவந்தபோது `பழகுகிற நண்பனின் மனைவி காமக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தினால் அதை எழுதலாமா?’ என்கிறவிதமாய் சர்ச்சை உருவானது. ராஜாஜி கு.ப.ரா பெயரைக் குறிப்பிடாமல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று எழுதினார்.

  `தாய்’ சிறுகதையைப் பத்திரிகைகள் பிரசுரம் செய்ய மறுத்துவிட்டன. 1943ஆம் ஆண்டு இன்னொரு சிறுகதையை இதே காரணம் சொல்லி கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் பிரசுரிக்க மறுத்துவிட்டார். கு.ப.ரா. சொன்னார்: ``ஸெக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில் _ அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி’’.

குறிப்பிட்டபடி கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த விஷயத்தை தவிர்த்து அவர் கதைகளையோ கவிதைகளையோ எழுதவில்லை என்றும்கூட சொல்லலாம். ஆண் பெண் உறவுகளை, குறிப்பாக பால் உணர்ச்சிகளை அப்பட்டமாகவும் உரக்கவும் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக ஆகிவிட்டது. ஆனால், அதை சூட்சுமமாகவும் கலையுணர்ச்சியுடனும், ஒரு சிறுகதையில் அதன் கட்டுக்கோப்பும் செறிவும் குலையாமல், முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற லாவகம் கு.ப.ரா.வுக்கு மிகவும்  சிறப்பாகக் கூடிவந்திருப்பதை இன்றும் படிக்கும் போது உணரமுடிகிறது. கு.ப. ராஜகோபாலனிடம் கூடிவந்த அந்த மென்மையும் கலை நேர்த்தியும், இன்று பக்கம்பக்கமாக பச்சையாக எழுதுவதாலேயே தன்னை ஒரு பெரிய புரட்சிகரமான எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்கள் உணராத ஒரு விஷயம். ஆபாசமாகவோ அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, துணிச்சலாக எழுதிவிட்டதாகவும் அவை பலத்த சர்ச்சைக்கு இடமாகி சூழலை மாற்றிவிடப் போவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவர்களிடம் இருக்கும் தன்மைகள் எப்போதும் கு.ப.ரா.விடம் காணப்பட்டதில்லை. சர்ச்சைகளை உருவாக்கவோ, புரட்சிகளை ஏற்படுத்தவோ கு.ப.ரா. எழுதவில்லை. அவர் வாழ்க்கையிலும் அநுபவத்திலும் கண்டவற்றை எழுதினார். புரட்சி பேசும் அந்தத் தமிழ் எழுத்தாளர்கள் பாடம் பெற்றுக் கொள்ளவேண்டிய நிலையில்தான் இன்றும் கு.ப.ரா இருக்கிறார் என்பதுதான் காலஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் முன்னேறி வரும் கு.ப.ரா.வின் முக்கியத்துவம்.

  1944ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் கலாமோஹினி ஆசிரியரான `சாலிவாஹனன்’ திருமணத்திற்குச் சென்று திரும்பிய வழியில் கு.ப.ரா.வுக்கு கால்களில் வலி எடுக்க ஆரம்பித்தது. கால்கள் வீக்கம் ஏற்பட்டு எரிச்சலுடன் தொல்லை தந்தபோதும் இரண்டு மூன்று நாட்களாக மருத்துவரிடம் போகமலே வீட்டிற்குள்ளேயே சிரமப்பட்டார். கண் மருத்துவர் ஆர்.மஹாலிங்கம் தற்செயலாக கு.ப.ரா.வை பார்க்க வந்தவர், கால் வீக்கத்தின் தீவிரம் உணர்ந்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு காங்கரின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. `காலின் சதைகள் உயிரற்றுவிட்டன. உடனே முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களையும் எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து’ என்று மருத்துவர்கள் கூறினர். தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சுவும் அப்போது மருத்துவமனையில் கு.ப.ரா. உடனிருந்தனர். இருவரும் மிகவும் கெஞ்சிக் கேட்டும் பிறகு கோபப்பட்டுக் கூறியபோதும் கு.ப.ரா. `ஆப்ரேஷன்’_க்கு மறுத்துவிட்டார். அவர் நனைந்த கண்களுடன் தி. ஜானகிராமனிடம் சொன்னார்: ``Let me die a peaceful death’’.

  42வது வயதில் 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் காரிலேயே கு.ப.ராஜகோபாலன் உயிர் பிரிந்துவிட்டது.

_ தளவாய் சுந்தரம்

கு. அழகிரிசாமி

Labels: ,

குருசாமி ஆச்சாரி அழகிரிசாமி என்கிற கு. அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் இடைச்செவல் என்கிற கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பிறந்தார். வீட்டில் அழகிரிசாமியை மற்றவர்கள், செல்லையா என்று அழைத்தனர். 1943ஆம் ஆண்டுமுதல் கு. அழகிரிசாமி சிறிது clip_image002[4]காலம் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள சுரண்டை என்ற ஊரில் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில்
வேலை பார்த்தார். பின்னர் சிறிது காலம் பத்திரிகையாளராக பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு ‘அழகிரிசாமி கதைகள்’ வெளிவந்தது. இதே வருடத்தில் மலேஷியா ‘தமிழ்நேசன்’ பத்திரிகையில் துணையாசிரியராக அழகிரிசாமி சேர்ந்தார். பின்னர் 1970ல் ‘சோவியத் நாடு’ பத்திரிகையின் துணையாசிரியரானார். சோவியத் நாடு பத்திரிகையில் சேர்ந்த அதே வருடம் ஜூன் 5ஆம் தேதி அழகிரிசாமி காலமானார். அழகிரிசாமியின் மறைவுக்குப் பின்னர் 1971ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது அவருக்கு வழங்கப்பட்டது. கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தையும், அருணாசலக்கவிராயர் காவடிச்சிந்தையும் கு.அழகிரிசாமி பதிப்பித்துள்ளார். சங்கீதத்தில் அழகிரிசாமிக்கு அபார ஈடுபாடு இருந்தது. Ðல சங்கீத வித்வான்கள் அழகிரிசாமியின் நண்பர்கள். “எனக்கு நான்கு விஷயங்கள் முக்கியம். முதலாவது பாரதி, இன்னொன்று கம்பன், அடுத்து ராமாயணக் கதாநாயகன் ராமன். பிறகு தியாகய்யர். இந்த நான்கு பேரையும் பற்றி யாரும் குறைவாகப் பேசினால் அவர் வீட்டில் நான் கை நனைக்க மாட்டேன்” என்று அழகிரிசாமி அடிக்கடி சொல்வாராம். ‘கரிசல் வட்டார இலக்கியவாதிகளுக்கு முன்னத்தி ஏர் பிடித்தவர்’ என்று அழகிரிசாமியை குறிப்பிடுவார்கள்.

குமாரபுரம் ஸ்டேஷன்

Labels: ,

கு. அழகிரிசாமி

குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது. ஆனாலும், ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயரையாவது வைத்துவிடத்தானே வேண்டும்? அந்தக் கணக்கில்தான் குமாரபுரம் என்ற பெயரை வைத்திருக்கிறார்களே ஒழிய, மற்றபடி கிழக்கே ஒரு மைலுக்கு அப்பால் உள்ள குமாரபுரம் என்ற கிராமம் முக்கால் நூற்றாண்டாக ஸ்டேஷனைப் பகிஷ்காரம் செய்துகொண்டுதானிருக்கிறது. தாது வருஷப் பஞ்சத்தின்போது ஜனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் ரயில் பாதை போடப்பட்டதாகச் சொல்லுவார்கள். அந்தப் பாதையில் கோவில்பட்டிக்குத் தெற்கே ஏழாவது மைலில் இருக்கிறது இந்த ஸ்டேஷன். சுற்றுக்கிராமவாசிகள் வாழ்நாளில் ஒரு முறையோ, இரு முறையோதான் கோவில், குளம் என்று யாத்திரை கிளம்புவார்கள். பத்து மைல் தூரத்தில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அதற்குப் போய்ப் பொங்கலிட்டுவிட்டு வருவது வழக்கம். இந்த க்ஷேத்திராடனத்துக்கு ரயிலும் வேண்டாம்; மோட்டாரும் வேண்டாம். பெரும்பாலான சமயங்களில் அவர்கள் போகவேண்டிய ஊர் ஸ்டேஷனை விடவும் அருகில் இருக்கும். நேரே ஊருக்கு நடந்து போகாமல் ஸ்டேஷனுக்கு வந்து யாரும் ரயில் ஏறுவார்களா?

Modern-Art-Paintings-Prints-6

இந்த ஸ்டேஷனின் வரலாற்றில் முதன்முதலாக வந்து இறங்கிய முக்கியஸ்தர் சுப்பராம ஐயர் என்றுதான் சொல்ல வேண்டும்.கோவில்பட்டியிலிருந்து அவர் மூன்றுநாட்களுக்கு முன் வந்திருந்தார். புதிதாகமாற்றுதலாகி வந்திருக்கும் ஸ்டேஷன்மாஸ்டருக்கு அவர் பால்ய நண்பர். சிறிது காலம்வரை பள்ளித்தோழர். சற்று எட்டியஉறவும்கூட. ஸ்டேஷன் மாஸ்டர் தன் நண்பருக்குஇந்தக் காட்டு ஸ்டேஷனில் வரவேற்பு அளித்து விருந்துபசாரம் செய்ய இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய பிள்ளைக்கு ஆறாம் ஆண்டு நிறைவுவந்தது. அதை ஒரு சாக்காக வைத்து நண்பரை அழைத்தார். சுப்பராம ஐயரும் அமைதியான சூழ்நிலையில் நண்பரோடு நிம்மதியாகப் பொழுது போக்கலாம் என்று வந்து சேர்ந்தார்.

ஆண்டு நிறைவு வைபவத்துக்கு வந்த ஒரே விருந்தினர் சுப்பராம ஐயர்தான்.
பால்ய நண்பர்கள் இருவரும் தத்தம் வாழ்க்கை வரலாறுகளையும், ஊர்விட்டு ஊர் மாற்றுதலாகிப்போன கதைகளையும், குடும்பச் செய்திகளையும் பற்றி விஸ்தாரமாக இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கோவில்பட்டியில் வசதிகள் எப்படி என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். குமாரபுரம் ஸ்டேஷனில் எப்படி நாட்களைத் தள்ள முடிகிறது என்று சுப்பராம ஐயர் கேட்டார்... ஒரு நாள் கழித்து.

மறுநாள் ஸ்டேஷன் மாஸ்டர் அடிக்கொரு தடவை தம் வேலையைக் கவனிப்பதற்காக அவரிடம் விடைபெற்றுப் போய்க் கொண்டிருந்தார். முற்பகலில் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத சமயங்களில், அவருடைய பையனோடு உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார் சுப்பராம ஐயர். பையன்களோடு விளையாடுவதோ பையன்களின் கூட்டுறவால் குதூகலம் அடைவதோ அவருக்கு வழக்கமில்லை. அவருடைய தொழில்தான் அதற்குக் காரணமோ என்னவோ! இருந்தாலும் பேச்சுத்துணைக்கு அங்கே அந்தச் சிறுவன்தானே இருக்கிறான்? அவனோடு ஒரு தினுசாக மத்தியானம்வரை பொழுதைக் கழித்தார். சாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் படுத்துத் தூங்கினார். மூன்று மூன்றரைக்கெல்லாம் எழுந்து, தாம் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.

பிளாட்பாரத்தில் ஐந்தாறு வேப்ப மரங்கள் இருந்தன. கோடைக்காலமானதால் நன்றாகப் பூத்துத் தரையில் படிக்கணக்கில் பூக்களை உதிர்த்திருந்தன. அடர்த்தியாகத் தளிர்த்திருந்த அந்த மரங்களிலிருந்து குளிர்ந்த காற்று சிறிது மலர் மணத்தோடு ஸ்டேஷனை நோக்கி வீசிக் கொண்டிருந்தது. அதனால் ஸ்டேஷன் கட்டடத்தில் காற்றுவரும் பக்கத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் தெற்கேயிருந்து வந்து ஒரு எக்ஸ்பிரஸ் வண்டி வழக்கம்போல் அந்த ஸ்டேஷனில் நிற்காமல் போய்விட்டது. இனி மாலை ஆறு மணிக்குமேல்தான் அங்கே வண்டிகள் வரும். ஆகவே ஸ்டேஷன் மாஸ்டர் நண்பரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். புத்தகத்தை மூடிக் கீழே வைத்த சுப்பராம ஐயர், ‘இந்த ஸ்டேஷனுக்குப் பிரயாணிகளும் வருவதுண்டல்லவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

“வராமல் என்ன? நேற்றுக்கூட ஒரு பிரயாணி வந்து இறங்கினாரே?” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். சுப்பராம ஐயர் உரக்கச் சிரித்தார்.நேற்று வந்து இறங்கிய பிரயாணி அவரேதான். “இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன்கள் இருந்தால் போதும், இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது” என்று அவரோகணச் சிரிப்போடு சொல்லிப் பேச்சையும் சிரிப்பையும் ஏககாலத்தில் நிறுத்தினார் சுப்பராம ஐயர்.

“அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. நாளை திங்கட்கிழமை. கோவில்பட்டியில்
சந்தை. பத்து டிக்கெட்டுகளுக்காவது ஆள் வந்து சேரும்.”

“அப்படியானால் நாளை ஸ்டேஷனுக்கு இரண்டு ரூபாய் வரும்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்!” இருவரும் சிரித்தார்கள். அப்போது போர்ட்டர் கருப்பையா வந்து ஒரு மூலையில் நின்று, இவர்கள் பேசுவதை ரஸித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“எதற்காகத்தான் இந்த ஸ்டேஷனைக் கட்டிப் போட்டானோ? இது இல்லையென்று எவன் அழுதான்?”

“இந்த ஸ்டேஷன் சுற்றுக் கிராமவாசிகளுக்கு வேறொரு வகையில் மிகவும்
பிரயோஜனப்பட்டு வருகிறது. இப்படியும் ஸ்டேஷனால் ஒரு நன்மை இருக்கமுடியும் என்பதை இங்கு மாற்றுதலாகி வந்த பிறகுதான் பார்த்தேன்.”

சுப்பராம ஐயர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ஸ்டேஷன்மாஸ்டர் தொடர்ந்து சொன்னார்.

“இது கோடை காலமாக இருப்பதனால்தான் சுற்றிலும் உள்ள இந்தப் புன்செய் நிலங்கள் இப்படிப் பயிர் பச்சையில்லாமல் வறண்டு கிடக்கின்றன. Ñற்ற சமயங்களில் இப்படி இராது. நவதானியங்களும் விளையும் செழுமையான பூமிதான். நிலத்தில் வேலை செய்பவர்கள் குடிதண்ணீர் பிடிப்பதற்கு மண் கலயங்களோடு இங்கே வருவார்கள். இருபது கலயம் தண்ணீராவது தினமும் தேவைப்படும். அந்த வகையில் இந்த ஸ்டேஷன் பிரயோஜனப்பட்டு வருகிறது.”

“அப்படியானால் தண்ணீர்ப் பந்தல் கட்ட வேண்டிய இடத்தில் ஸ்டேஷனைக் கட்டியிருக்கிறான் என்று சொல்லுங்கள்!”

ஸ்டேஷன் மாஸ்டர் இப்போது தமாஷை நிறுத்தி விட்டு மனப்பூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.

“இப்படித்தான் ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொண்டுபோய்க் கட்டுகிறான் மனிதன். ஒரு காரியத்துக்கென்று உண்டாக்கப்பட்டது, மற்றொரு காரியத்துக்குப் பிரயோஜனப்படுகிறது. நியாயமாகச்
செய்த செலவு தண்டச்செலவாக மாறிக்கொண்டு வருகிறது. உலகமே அப்படி
இருக்கும்போது இந்தக் குமாரபுரம் ஸ்டேஷனை மட்டும் பழித்துப் பேசுவானேன்?”
சுப்பராம ஐயர் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டு, ‘உலகத்தையே உங்கள் ஸ்டேஷன் ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள்! ஆறு மாதங்களுக்குள் இந்தக் கல்
கட்டடத்தின்மேல் உங்களுக்கு இவ்வளவு பாசம் ஏற்பட்டுவிட்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது’ என்றார்.

ஸ்டேஷன் மாஸ்டர் சற்று ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார்:

“கோவில்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறானே, எதற்காகக் கட்டியிருக்கிறான்? சொல்லுங்கள். பார்ப்போம்!”

“எதற்காகப் பள்ளிக்கூடம் கட்டுவான்? நூறு குழந்தைகள் படிப்பதற்காகத்தான் கட்டுவான்!”

“சரி, ஒப்புக்கொள்ளுகிறேன்! நூறு குழந்தைகளும் எதற்காகப் படிக்கிறார்கள்?” என்று கேட்டார் ஸ்டேஷன்மாஸ்டர்.

“இப்படியெல்லாம் கேள்வி போடுகிறீர்கள்?”

“காரியமாகத்தான் உங்களைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.”

“....”

“பிள்ளைகள் அறிவு வளர்ச்சிக்காகப் படிக்கிறார்கள் என்றுதானே
சொல்கிறீர்கள்?”

“நீங்கள் வேறு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறீர்கள்?”

“எந்தப் பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம்? படிக்காதவனுக்கும் உத்தியோகம் உண்டு என்று சட்டம் செய்யட்டும், எவனாவது மழைக்குக்கூடப் பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன்”
என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

சுப்பராம ஐயர் சிரிக்கும்போது போர்ட்டரும் சேர்ந்து சிரித்தான். அவனை வைத்துக்கொண்டு தமாஷ் பேச்சுப் பேசுவது மரியாதை இல்லை என்று நினைத்தோ என்னவோ, சுப்பராம ஐயர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். “என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று கிண்டினார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“உங்களிடத்தில் பேசி ஜெயிக்கவா? குமாரபுரம் ஸ்டேஷன் சந்திர சூரியர்கள்
உள்ளவரை நிலைத்திருக்கட்டும், எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை” என்று
சொல்லிவிட்டு ஐயர், ஏதோ ஒரு பக்கத்தைத் தேடியவராய்ப் புத்தகத்தைப்
புரட்டினார்.

ஸ்டேஷன் மாஸ்டர் போர்ட்டரை அழைத்து, “வீட்டுக்குப் போய்க் காபி போடச்
சொல், கருப்பையா” என்று சொல்லி அனுப்பினார்.

“நாமும் போகலாமே” என்றார் ஐயர்.

சிறிது நேரத்தில், இருவரும் எழுந்து ஸ்டேஷனை அடுத்திருந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். மூன்றாம் நாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் வடக்கே போகும் பாஸஞ்சர் வண்டி ஒன்று இருந்தது. அன்று திங்கட்கிழமை. கோவில்பட்டிச் சந்தைக்குச் செல்லும் பிரயாணிகள் நாலைந்து பேர் ஏழு மணிக்கு முன்னதாகவே சாக்குப் பைகள் சகிதம் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்து வெற்றிலை, பாக்குப் போட்டவண்ணம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஏழேகால் மணிக்கெல்லாம், சுப்பராம ஐயரும் பலகாரம் சாப்பிட்டு வந்து பிளாட்பாரத்தில் உள்ள வேப்பமரங்களில் கீழே கிடக்கும் ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து முந்தியநாள் கையில் வைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். ஆனால் நாட்டுப்புறப் பிரயாணிகளின் சுபாவமான உரத்த சம்பாஷணைகளால் அவரால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. சுகந்தமான வேப்பங்காற்றும் அவருடைய கவனத்தை திருப்பிக் கொண்டிருந்தது. “இந்தப் பாலைவனத்திலும் இப்பேர்பட்ட ஒரு நறுமணம்! இந்த மாதிரியான ஓர் இளங்காற்று!

பார்த்தால் ஒரே கருப்பு மண்ணாக இருக்கிறது. இங்கே இப்படிச் சில மரங்கள்
முளைத்து, இப்படி ஒரு திவ்யமான வாசனையைக் காற்றில் கலந்துகொண்டிருக்கிறது. இந்த வாசனை கூட இந்த மண்ணில்தான்
உற்பத்தியாகியிருக்கிறது.”

அவர் கண்கள் தூரத்தில் தெரியும் கிராமங்களை ஏறிட்டு நோக்கின.

“இந்த ஊர்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும்
இந்த மண்ணை நம்பித்தான் வாழ்கிறார்கள். இந்தக் கரிசல் மண்ணிலிருந்து
மணமும் கிடைக்கிறது; உயிரும் கிடைக்கிறது.”

அவருடைய சிந்தனைகளெல்லாம், அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் வசனங்களைப்போல் சுவை பெற்றிருந்தன. தொடர்ந்து படிப்பது போலவே எதிர்பாராத சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது மேற்கே சுமார் அரைமைல் தூரத்தில் நாலைந்து பேர் அவசரம் அவசரமாக ஸ்டேஷனை நோக்கி ஓட்டமும்  நடையுமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ‘வண்டிக்கு நேரம் இருக்கிறது. இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடிவருவானேன்?’ என்று ஐயர் நினைத்தார். அதைவிட அப்பாவித்தனமாக இருந்தது, சிலர் ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருந்தது.

“சூதுவாதில்லாத ஜனங்கள்” என்று ஒருமுறை அவர் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார். வேப்பங்காற்று இருக்க இருக்கச் சுகம் ஏற்றிக்கொண்டிருந்தது. இந்தக் காற்றுக்காகவே அங்கே கோடைகாலத்தைக் கழித்துவிடலாம் போல் அவருக்குத் தோன்றியது. இந்த அடிப்படையில், சுற்றிலும் உள்ள மண்ணிலும், புல்லிலும், புல் நடுவே பூத்துக் குலுங்கும் காட்டு மலர்களிலும், சாம்பல் நிறக் கற்றாழைகளிலும் அவருக்கு ஒரு அன்பும் அனுதாபமும் பிறந்தன. சிறிது நேரத்தில் ரயில் ஏறிவிடப் போகிறோம் என்ற நினைப்பில் அந்த அன்பும், அனுதாபமும் சற்று அழுத்தம் பெறவும் செய்தன.

‘மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்! மனிதர்களாகவும் வாழ்கிறார்கள்!’

இரண்டு மூன்று பேர் பிளாட்பாரத்துக்கு வந்து, கைகாட்டி மரத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அங்கேயே ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றார்கள். எப்போதோ மாடு வாங்கிய செய்தியை ஓர் ஆசாமி கதையாகச் சொல்ல, மற்றவர்கள் கவனமாக “உம்” போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சுப்பராம ஐயர் அவர்கள் பேச்சை உற்றுக்கேட்டார். அந்தப் பேச்சில் உண்மை மட்டுமல்ல, அர்த்தமும் சுவாரஸ்யமுமே இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர்களை அழைத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையெல்லாம் ஆதியோடு அந்தமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூட
அவர் ஆசைப்பட்டார்!

அரை மைல் தூரத்தில் வெள்ளை வேஷ்டிகளாகக் காட்சியளித்துக் கொண்டு ஓடிவந்தவர்கள், நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக இனம் காட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் வராததுமாக, “டிக்கெட் குடுத்தாச்சா?” என்று கேட்டார் ஓடி வந்த பெரியவர்.

பேசிக்கொண்டு நின்றவர்களில் ஒருவர், “இல்லை, இல்லை” என்றார்.

எல்லோரும் ஒரு மூச்சு விட்டுக்கொண்டார்கள். அந்த நான்கு சிறுவர்களின் கண்களும் ஏககாலத்தில் வேப்பமரத்தடியில் பெஞ்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த சுப்பராம ஐயரைத்தான் பார்த்தன. பார்த்த மாத்திரத்தில் மிகுந்த மரியாதை கொடுத்து, மூச்சு விடுவதைக்கூடக் கொஞ்சம் மட்டுப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் வருஷத்தில் ஒரு தடவை காண்பதே அபூர்வம். அவர்களுடைய பள்ளிக்கூடத்துக்கு எப்போதாவது வரும், பெரிய இன்ஸ்பெக்டரைப் போல் காலில் பூட்ஸ் போட்டுக்கொண்டு குளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாகக் காட்சி அளித்தார் ஐயர். தலையில் விழுந்திருந்த வழுக்கையும் அவருடைய கௌரவத்தை உயர்த்திக் காட்டியது. இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்ற சிறுவர்களை ஐயரும் பார்த்துக்கொண்டார். நான்கு சிறுவர்களும் ஏறக்குறைய ஒரே பிராயமுடையவர்களாக இருந்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது வரையிலும் மதிக்கலாம். ஒவ்வொருவனுடைய கையிலும் இரண்டொரு புத்தகங்களும், சில வெள்ளைக் காகிதங்களும் இருந்தன. சட்டைப்பைகளில் சீவித் தயாராக வைத்திருந்த பென்ஸில்கள், பள்ளி மாணவர்கள் என்பதைச் சொல்லாமலே தெரிவித்தன. சிறுவர்களோ, ஐயரோ பரஸ்பரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தச் சமயத்தில் கை இறக்கப்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டரும் ஐயரிடம் டிக்கெட்டோடு வந்தார். “இந்த இடம் உங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது போலிருக்கிறதே; இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்!”

“நல்ல காற்று!” என்றார் ஐயர். டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டார்.

“அப்படியானால் அடுத்த லீவுக்கு வந்துவிடுங்கள். இந்த மாதிரி மூன்று நாட்களில் புறப்பட்டுவிடாமல் சேர்ந்தார்போல், ஒரு பத்து நாட்களாவது இருந்துவிட்டுப் போகலாம்...”

“அப்படியே செய்யலாம்! பத்து நாட்கள்தானே? ராமன் பதினாலு வருஷம் வனவாசம் செய்திருக்கிறபோது நாம் பத்து நாட்கள் இங்கே இருக்க முடியாமலா போய்விடப் போகிறது?”

“அந்த வனவாசத்தில்தான், ராமன் தன் உயிர்த்துணைவர்களையெல்லாம் சம்பாதித்துக் கொண்டான். அவனை ராமனாக்கியதே அந்த வனவாசம்தான்” என்று சொன்னார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“பள்ளிக்கூடத்தைவிட்ட பிறகு புராணங்களையெல்லாம் நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சுப்பராமையர் தமாஷாகச் சொன்னார்.

ஆனாலும் நண்பரின் வார்த்தைகளில் ஏதோ ஒரு சுகமும் உண்மையும் இருப்பதுபோலவே அவருக்குத் தோன்றியது. மேற்கொண்டு சாவகாசமாகப் பேசச் சந்தர்ப்பம் இல்லை. வண்டி வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால், காரியார்த்தமாக ஸ்டேஷனுக்குள் போய்விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். சிறுவர்களை நிறுத்திவிட்டுப் பெரியவர் போய் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார். எல்லாப் பிரயாணிகளுமே டிக்கெட்டோடு பிளாட்பாரத்துக்கு வந்து தயாராக நின்றார்கள்.

உரிய காலத்தில் வண்டியும் வந்துவிட்டது. ஐயர் ஏறிய பெட்டியிலேயே கிராமத்துப் பெரியவரும், அவரோடு வந்த சிறுவர்களும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஏறினார்கள். வண்டியில் நிறையக் காலியிடம் இருந்தது. ஒரு ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்தார் ஐயர். அவருக்கு எதிர்வரிசைப் பெஞ்சியில் நிறைய இடம் இருந்தபடியால் சிறுவர்கள் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பெரியவர் ஐயருக்கு வலது கைப்பக்கத்தில் வந்து அமர்ந்தார். பெரியவருக்கு வலதுபுறத்தில் பூதாகாரமான ஆகிருதி படைத்த ஒருவர் ஏராளமான சாமான்களோடு உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஜன்னலை ஒட்டி, அவருடைய கனத்தில் முக்கால்வாசியாவது இருக்கும், ஒரு அம்மாள் இருந்தாள். அம்மாளின் பக்கத்திலும் என்னென்னவோ மூட்டை முடிச்சுக்கள், பண்டபாத்திரங்கள்...

குமாரபுரம் ஸ்டேஷனைவிட்டு வண்டி நகர்ந்துவிட்டது.

பையன்கள் இரண்டு பக்கத்து ஜன்னல்கள் வழியாகவும், மரம் மட்டைகள் எதிர்த் திசையில் ஓடத் தொடங்கியதை ரஸித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தையும், அங்கே தாண்டவமாடிய ஆனந்தத்தையும் பார்த்த சுப்பராம ஐயருக்கு, அந்தப் பையன்கள் வாழ்க்கையிலேயே அன்றுதான் முதல்முதலாக ரயில் பிரயாணம் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றியது. அவர்களோடு ஏதாவது பேசவேண்டுமென்று  ஆசை; அப்படியெல்லாம் அவரைப் போன்றவர்களால் சுலபமாகப் பேசிவிட முடிகிறதா? அவருக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

சில நிமிஷங்கள் கழிந்தபின், பையன்களைப் பார்த்து முதலில் பேச ஆரம்பித்தவர், மேற்குப்புற ஜன்னல் பக்கம் இருந்த பூதாகாரமான மனிதர்தான். எடுத்த எடுப்பிலேயே சௌஜன்யமாகப் பேச ஆரம்பித்தார்.

“ஏண்டா, எங்கே பிரயாணம்?” என்று கேட்டார். அவருடைய குரல் அவருடைய உருவத்தைவிடக் கனமாக இருந்தது.

பையன்களுக்கு அதற்குப் பதில் சொல்லவே தோன்றவில்லை.

அவர்கள் சார்பில் பெரியவர்தான் பேசினார்:

“கோவில்பட்டிக்குப் பெரிய பள்ளிக்கூடத்திலே சேரப்போறாக.”

பையன்கள் அவரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய வைரக் கடுக்கன், வைர மோதிரம், தங்கப்பொத்தான்கள், உள்ளங்கை அகலக் கைக்கடிகாரம் இத்தனையும் மாறிமாறி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தன.

“எந்தக் கிளாஸில் சேரப் போறாங்க?”

“நம்ம ஊரிலே ஆறு பாஸ் பண்ணியிருக்கிறாக. அங்கே ஏழிலே கொண்டுபோய்ச் சேர்க்கணும்.” “எந்த ஊர்ப் பையன்கள்?”

“இடைசெவல் கிராமம்.”

“இடைசெவலா? அங்கே ஏழாம் வகுப்பு இல்லையோ?”

“இல்லை; ‘சர்க்கார் சாங்ஸ்’னுக்கு எழுதிப் போட்டிருக்காக.”

“பாஸ் பண்ணினதுக்குச் சர்டிபிகேட் இருக்கா?”

“இருக்கு,”

“இருந்தாலும் பரீக்ஷை வெச்சுத்தான் சேர்ப்பாங்க,”

“அதுக்காகத்தான் பெரிய வாத்தியாரு ஒரு மாசமா வீட்டிலே வச்சிப் பாடம் சொல்லிக் குடுத்தாரு” என்றார் பெரியவர்.

பூதாகாரமான ஆசாமி ஒரு பையனைப் பார்த்து, “டேய், நான் மூணு கேள்வி கேட்க்கிறேன். நீ பதில் சொல்லிட்டா உன்னை ஏழிலே எடுத்துக்குவான்’ என்றார், உடனடியாக, ‘வாட்டீஸ் யுவர் நேம்?” என்று கேட்டார்.

“மை நேம் இஸ் ஸ்ரீநிவாசன்” என்றான் ஒரு பையன்.

“வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?” இது அவருடைய அடுத்த கேள்வி.

“மை பாதர் நேம் இஸ் ராமசாமி நாயுடு.”

“வாட் கிளாஸ் யூ பாஸ்?” என்று அவர் மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

அவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்துச் சுப்பராமையர் வாய்க்குள்ளேயே சிரித்தார்.

“ஸிக்ஸ்த் கிளாஸ்” என்று அடக்கமாகப் பதில் சொன்னான் ஸ்ரீநிவாசன்.

“போதும்டா! கெட்டிக்காரப் பையனா இருக்கே. இப்படித்தான் ‘டக் டக்’னு பதில் சொல்லணும். நிச்சயம் நீ ஏழாம் வகுப்புத்தான்.”

பையனுக்கு ஒரே சந்தோஷம்.

பெரியவர், அந்த ஆசாமியைப் பார்த்து, “மத்தப் பையன்களையும் ஏதாவது கேளுங்க” என்று கேட்டுக் கொண்டார்.

“நம்ம இங்கிலீஷ் அவ்வளவுதான்! அதுக்குமேலே எங்க வாத்தியார் கத்துக்குடுக்கல்லே!” என்று சொல்லிவிட்டுத் தொப்பை வயிறு குலுங்கக் ‘கடகட’ வென்று சிரித்தார்.

எதிரே உட்கார்ந்திருந்த அவருடைய மனைவியும் சுப்பராமையரும் இலேசாகச் சிரித்தார்கள்.

“நமக்கு எந்த ஊரோ?” என்று அவரை விசாரித்தார் கிராமத்துப் பெரியவர்.

“திருநெல்வேலி ஜங்ஷனிலே பங்கஜ விலாஸ் காபி கிளப் இருக்கில்லே, அது நம்ப கடைதான். பார்த்திருப்பேளே?”

“திருநெல்வேலிக்குச் சின்னப் பிள்ளையிலே ஒரு தரம் வந்தது தான்...”

“அது நம்ப கடைதான். இந்தப் பையன்களைப்போல் ஆயிரம் பையன்கள் நம்ப கடையிலே சாப்பிட்டுக்கொண்டு படிச்சிருக்கான்கள். ஜங்ஷனிலே நம்ப கடையை விட்டுக் காலேஜ் பையன்கள் வேறே எங்கேயும் போக மாட்டான்கள். இருபத்தஞ்சு வருஷமாய் பார்த்துண்டு வர்ரேன்.”

“நல்ல கடையை விட்டு யார்தான் போவாக!”

அவர் பையன்களைப் பார்த்துத் திரும்பி, “டேய் நீங்களும் காலேஜுக்கு வரப்போ நம்ம கடைக்குத்தாண்டா சாப்பாட்டுக்கு வரணும்....” என்றார்.

பையன்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு நகரவாசி தங்களிடம் இவ்வளவு அன்பாகப் பேசுவது அவர்களுக்கு ராஜோபசாரமாக இருந்தது. “நமக்குப் பிள்ளைகள் எத்தனையோ?” என்று நாட்டுப்புறப் பாங்கில்
விசாரித்தார் பெரியவர்.

“நம்ம கடையிலே சாப்பிட்டவன்களும், சாப்பிடப்போறவன்களும் நம்ம பிள்ளைகள்தான்” என்றார் அவர்.

பெரியவருக்கு அது விளங்கவில்லை. இதை ஹோட்டல்காரர் கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அவருடைய திகைப்பைப் போக்க முயற்சி
செய்யாமல், “சொந்தப் பிள்ளைகளுக்குப் பணம் வாங்கிண்டா சாப்பாடு போடுவான்னு நீங்க நினைக்கலாம். என்ன செய்யறது! ஹோட்டல்காரன் தர்மம் பண்ணமுடியாது. ஆனால், என்னாலே முடிஞ்ச தர்மத்தைப் பண்ணாமல் இல்லை. எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டப் பணம் கொடுத்திருக்கிறேன். அதிலே திருப்பி வாங்கினதும் உண்டு; வாங்காததும் உண்டு” என்று திருப்தியோடு சொன்னார். அடுத்த நிமிஷம் மனைவியைப் பார்த்துப் பலகாரங்களை எடுத்து வைக்கச் சொன்னார்  அவர் சாப்பிடுவதற்குத்தான்.

“ரொம்பத் தூரப் பிரயாணமோ?” என்று கிராமத்துப் பெரியவர் கேட்டார்.

“மதுரை வரைக்கும் போகிறோம். ஒரு கல்யாணம்,”

திரும்பவும் அந்தப் பெரியவர், “நமக்கு எத்தனை குழந்தைகளோ?” என்று
அதே கேள்வியைக் கேட்டார்.

“நான்தான் சொன்னேன், எல்லாக் குழந்தைகளும் நம்ம குழந்தைகள்தான்னு. பெத்தால்தான் குழந்தையா? இந்த நாலு பையன்களும் என் குழந்தைகள்தான். என்ன சொல்றீங்க?”

பெரியவருக்கு ஒருவாறு புரிந்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளும் முறையில், “குழந்தைகள் இல்லை போலிருக்கு! அதுக்கென்ன, ஐயா சொன்னாப்லே
உலகத்திலே உள்ள குழந்தைகளெல்லாம் நம்ம குழந்தைகள்தான். இப்போ பாருங்க, இதிலே ஒருத்தன்தான் என் பேரன். மத்த மூணு பேரும் கூடப் படிக்கிற பையன்கள்தான். எல்லாரையும் சொந்தப் பிள்ளைகள் மாதிரி நான்தான்
கோவில்பட்டிக்குக் கூட்டிக்கிட்டுப் போகிறேன். அந்தக் கடைசிப் பையன் குடும்பம் கொஞ்சம் ஏழைக்குடும்பம். எப்படிப் படிக்கவைக்கிறதுன்னு அவனோட அப்பன் கொஞ்சம் யோசனை பண்ணினான். பையன்களோட பையனாகப் படிக்கட்டும், இப்போ ஆகிற செலவை நான் தர்றேன், பின்னாலே பார்த்துக்கிடலாம்னு நான்தான் தைரியம் சொல்லிக் கூட்டியாரேன். அவனுக்குப் படிப்பிலே அக்கறை. மேலே படிக்கப் போகணும்னு மூனு நாளாச் சாப்பிடாம அழுதிருக்கான்...” என்று  கூறிக்கொண்டே போனார்.

ஹோட்டல் முதலாளியின் மனைவி பலகாரப் பாத்திரத்தைத் திறந்தாள். அதனுள் இருந்த பக்ஷணங்கள் ஒரு கல்யாணத்துக்கே போதும்போல் இருந்தன. இவர் சொல்லாமலே அந்த அம்மாள் ஒரு பெரிய இலையை ஐந்தாறு துண்டுகளாகக் கிழித்துப் பையன்களுக்கும், பெரியவருக்கும் சேர்த்து என்னென்னவோ பலகாரங்கள் எடுத்து வைத்துக்கொடுத்தாள். பையன்கள் வாங்கிக்கொள்ளத் தயங்கினார்கள்.

“டேய்! வயத்துக்கு வஞ்சகம் பண்ணாதீங்கடா. வாங்கிச் சாப்பிடுங்க” என்றார் ஹோட்டல் முதலாளி.

“உம், வாங்கிக்கோங்க” என்று பெரியவரும் சொன்னார்.

பையன்கள் கை நீட்டி அவற்றை வாங்கிக்கொண்டார்கள்.

ஹோட்டல்காரர் மற்றொரு இலையைச் சுப்பராமையர் பக்கம் நீட்டினார். அவர் நாசூக்காக, “இப்போதான் காபி சாப்பிட்டேன். வேண்டாம், நீங்க சாப்பிடுங்கோ” என்று சொல்லிவிட்டுக் கோட்டுப் பையிலிருந்து புத்தகத்தை வெளியே எடுத்தார்.

ஹோட்டல் முதலாளி விடவில்லை. கட்டாயப்படுத்தி ஒரு டம்ளர் காபியைக் குடிக்க வைத்துவிட்டார்.

எல்லோரும் பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, வண்டி நாலாட்டின் புத்தூர் ஸ்டேஷனில் வந்து நின்று, அதையும் விட்டு புறப்பட்டுவிட்டது.

சுப்பராமையர் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருந்தார். பையன்களும் எழுந்து போய்க் கையைக் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தார்கள். சுப்பராமையரின் கையிலிருந்த புத்தகத்தின் பெயரை எழுத்துக் கூட்டி, “அன்னா கரோனினா, லியோ டோல்ஸ்டோய்” என்று மெல்லிய குரலில் வாசித்தான் ஒரு பையன். அது ஐயர் காதில் விழுந்தது.

“டோல்ஸ்டோய்! அதுவும் சரிதான்! சொல்லிக் கொடுக்காத வரையில் யாருக்கும் டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்” என்று நினைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் சிறுவர்கள் தங்கள் கையிலிருந்த காகிதங்களை விரித்துப்
படிக்கத் தொடங்கினார்கள்.

“என்னடா அது?” என்று கேட்டார் ஹோட்டல்காரர்.

“எங்கள் ஹெட்மாஸ்டர் எழுதிப்போட்டது?”

“என்ன எழுதிப் போட்டிருக்கிறார்?”

ஒரு பையன் சொன்னான்: “பசுவைப்பற்றி இங்கிலீஷில் ஒரு வியாசம். ‘நரியும் திராக்ஷையும்’ கதை. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்’ கதை. நண்பனுக்கு ஒரு கடிதம்.”

“எல்லாம் இங்கிலீஷில்தான். பெரிய வாத்தியார் ரொம்பப் படிச்சவரு. நல்ல மனுஷன். பெத்த தகப்பன் மாதிரி இவுகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து எழுதிப் போட்டிருக்காரு” என்றார் பெரியவர்.

“நன்னாப் படிங்கடா. இப்படித்தான் ஏதாவது எழுதச் சொல்லிப் பரீட்சை வைப்பாங்க” என்றார் ஹோட்டல்காரர்.

புத்தகத்தைப் படிப்பதுபோல் பாவனை செய்து கொண்டு, பேச்சுக்களைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சுப்பராமையர்.

ஹோட்டல்காரர் காபியைச் சாப்பிட்டுவிட்டு, “பையன்கள் நன்னாப் படிக்கக்கூடிய பையன்கள்னு தோணுது” என்று பெரியவரிடம் சொன்னார்.

“பட்டிக்காட்டுப் புள்ளைகளானாலும் படிப்பு நல்ல படிப்புத்தான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைக மேலே பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேன்!” என்றார் பெரியவர்.

“அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர்.

இதைக் கேட்டதும் சுப்பராமையரின் உடம்பு சிலிர்த்தது. பெரியவர், “அதில் சந்தேகம் வேறேயா? இந்தப் பையன்கள் படிப்பிலே மட்டுமில்லே, வேலையிலும் சூட்டிகைதான்” என்றார்.

“வேலையா?”

“ஆமாம்; வேலை செய்யாம எப்படி? பள்ளிக்கூடம் போக முன்னாலே, மாட்டைப் பத்திக்கிட்டுப்போய் மேய்ப்பாக. பருத்திக்கொட்டை ஆட்டுவாக. இப்படி வீட்டு வேலைகளைச் செஞ்சிட்டுத்தான் பள்ளிக்கூடம் போறது...”

“பேஷ்! அப்படித்தான் இருக்கணும். பொழைக்கிறவனுக்கு அதுதான் லட்சணம்!
அழுக்குப் படாத படிப்பு படிப்பிலே சேத்தியா? அவனாலே ஊருக்குப் பிரயோசனம் உண்டோ? அவனுக்குத்தான் என்ன பிரயோசனமாயிருக்கு? என்னை எடுத்துக்கோங்க... நான் இரண்டாம் கிளாஸுக்கு மேலே படிச்சதில்லே. பி.ஏ., எம்.ஏ., படிச்சிருந்தா உத்தியோகம் பார்த்திருப்பேன். பார்த்திருந்தா, இத்தனை வருஷமாப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பண்ணி வந்த உபகாரத்தைப் பண்ணியிருக்க முடியுமா? நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்க்காரனை மெரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம். நான் சொல்றது எப்படி?”

“அதிலே சந்தேகம் வேறயா?” என்றார் பெரியவர். இப்படியே பேசிக்கொண்டிருந்தார்கள். வண்டி கோவில்பட்டிக்கு வந்துவிட்டது. வாசிப்பதுபோல், விரித்து வைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடிப் பழையபடியும் கோட்டுப்பைக்குள் வைத்தார் சுப்பராமையர். எல்லோரும் இறங்குவதற்கு ஆயத்தமானார்கள்.

“தைரியமாய்ப் பரீக்ஷை எழுதுங்கடா! நான் வயசானவன். ஆசீர்வாதம் பண்ணறேன்; எல்லோரும் பாஸ், போய்ட்டு வாருங்க. திருநெல்வேலியிலே படிக்க வரப்போ! பங்கஜ விலாஸை மறந்துட வேண்டாம். தெரிஞ்சதா?” என்று சொல்லி வழியனுப்பினார் ஹோட்டல் முதலாளி.

வண்டியை விட்டு சுப்பராமையரும், அந்தப் பையன்களும், பெரியவரும் இறங்கினார்கள். போகும்போது ஐயர், ஹோட்டல் முதலாளியைப் பார்த்துப் புன்னகைத் ததும்பும் முகத்தோடு வணங்கி விடைபெற்றுக்கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள் பையன்கள். முன்னே நடக்க ஒருவிதத் தயக்கம். அவ்வளவு தூரத்துக்கு அவரிடம் மரியாதை பிறந்துவிட்டது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், குதிரை வண்டியை
எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் சுப்பராமையர். கோவில்பட்டி ஸ்டேஷனில் போர்ட்டர் வேலை செய்யும் ஒருவன், அன்று தனக்கு இரவு வேலையானதால், வெளியே ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தான். பெரியவரையும், சிறுவர்களையும் பார்த்து, “வாங்க வாங்க” என்று சொல்லிக்கொண்டே வந்தான். அவர்கள் வந்த காரியத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்டான். அவனும் இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் என்பதைப் பேச்சிலிருந்து சுப்பராமையர்  ஊகித்துவிட்டார்.

பையன்களையும், பெரியவரையும், தன் வீட்டுக்கு அந்தப் போர்ட்டர் பலகாரம் சாப்பிட அழைத்ததோடு, அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஊருக்குப் போகலாம் என்று சொன்னான்.

சுப்பராமையருக்குக் குதிரை வண்டி கிடைத்துவிட்டது. அதில் ஏறிக்கொண்டு, வண்டி மூலை திரும்பும் வரையில் சிறுவர்களையே பார்த்துக்கொண்டு சென்றார். குமாரபுரம் ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்தோடு வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது, ஹோட்டல்காரரின் தர்மகுணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப் போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு  இப்படி, எல்லாமே அவருக்கு ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டது போன்ற ஆனந்தப் பரவசம்... கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும் போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகில் இருக்க முடியுமா என்றுகூட அவருக்கு ஒரு நிமிஷம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். “குமாரபுரம் ஸ்டேஷனுக்குப் பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேல்படிப்புக்காக இவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர் பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்...”

சுப்பராமையர் குதிரை வண்டியில் வீடுபோய்ச் சேர்ந்தார்.

பெரியவரையும், பையன்களையும் அந்தப் போர்ட்டர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ஊரிலேயே காலை ஆகாரம் பண்ணிக்கொண்டு வந்தவர்களானதால் அங்கே அவர்கள் ஒன்றும் சாப்பிடவில்லை. போர்ட்டருடைய கட்டாயத்துக்காகக் காபியை மட்டும் வாங்கிக் குடித்தார்கள்; மத்தியானம் சாப்பிட வருவதற்கும் சம்மதித்தார்கள். அப்புறம் எல்லோருமாக  போர்ட்டர் உட்பட பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். பள்ளிக்கூட வராண்டாவில் மற்றவர்களை நிறுத்திவிட்டுப் போர்ட்டர் மட்டும் நேரே தலைமையாசிரியரின் அறையை விசாரித்துத் தெரிந்துக்கொண்டு அங்கே போனான். இடைசெவல் கிராமத்திலிருந்து ஆறாவது வகுப்புத் தேறிய நான்கு பையன்கள் ஏழாம் வகுப்பில் சேர வந்திருக்கும் செய்தியை அவரிடம் தெரிவித்தான். அவர் உடனே ஓர் ஆசிரியரை வரவழைத்து, அவரிடம் இரண்டு மூன்று கேள்வித் தாள்களை எடுத்துக் கொடுத்து, அந்தக் கிராமத்துப் பையன்கள் ஏழாம் வகுப்புக்குத்தகுதி உடையவர்கள்தானா என்பதைச் சோதித்துப் பார்க்கும்படிச் சொல்லி அனுப்பினார்.

ஓர் அறையில் நான்கு சிறுவர்களும் தனித்தனியே உட்கார வைக்கப்பட்டார்கள். கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை எழுதிக்கொள்ளும்படிச் சொல்லி உதவி ஆசிரியர் வாசித்தார். எல்லாம் ஆங்கிலக் கேள்விகள். பையன்கள் எழுதிக்கொண்டார்கள். ஒரு மணி நேரத்துக்குள் பதில்களை எழுதிவிட வேண்டுமென்றும் சொன்னார் ஆசிரியர். பையன்களும் எழுதத் தொடங்கினார்கள். போர்ட்டரும் பெரியவரும் பள்ளியைவிட்டு வெளியே வந்து, ஒரு புளியமரத்து நிழலில் உட்கார்ந்து ஊர்ச் சமாச்சாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்

பத்தரை மணிக்கெல்லாம் ஆங்கிலப் பரிக்ஷை முடிந்தது. அப்புறம் கணக்கு, தமிழ், பொது அறிவு ஆகியவை சம்பந்தப்பட்ட பரீக்ஷைகள். எல்லாமே பன்னிரண்டு மணிக்குள் முடிந்துவிட்டன. பள்ளிக்கூடம் விட்டு எல்லாப் பையன்களும் மத்தியானச் சாப்பாட்டுக்காக வீடுகளுக்குப் போனார்கள். அவர்களை நான்கு சிறுவர்களும் மிரள மிரள விழித்துக்கொண்டு பார்த்தார்கள். உதவி ஆசிரியர் அவர்களை அந்த அறையிலேயே உட்கார வைத்துக்கொண்டு விடைத் தாள்களை வேகமாகத் திருத்தி மார்க் போட்டார். பிறகு எழுந்து தலைமை ஆசிரியரின் அறைக்குப் போனார். அப்போது பெரியவரும் போர்ட்டரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

“பரீக்ஷை நல்லா எழுதியிருக்கீங்களா?” என்று கேட்டான் போர்ட்டர்.

“கணக்குத்தான் கஷ்டமாக இருந்தது.”

“இங்கிலீஷ்?”

“ரொம்ப லேசு.”

“ஊரிலே ஹெட்மாஸ்டர் எழுதிப்போட்ட கேள்விகள்தான். ஒரு நொடியில் பதில் எழுதிவிட்டேன்” என்றான் ஒருவன். மற்றவர்களும் அப்படியே சொன்னார்கள்.

“இங்கிலீஷ் நல்லா எழுதினால் பாஸ்தான்” என்று போர்ட்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரியவர், “ஊர் வாத்தியார் வாத்தியார்தான்! எப்பேர்ப்பட்ட மனுசன்! இங்கே என்ன கேப்பாங்கன்னு அங்கேயே தெரிஞ்சி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, அதில்லே மூளை!” என்று இடைசெவல் கிராமத்துத் தலைமை ஆசிரியரை வானளாவப் புகழத் தொடங்கினார்.

“கெட்டிக்கார வாத்தியார் போலிருக்கு!”

“கெட்டிக்காரருன்னா, அப்படி இப்படியா! அதுக்கு ஏத்தாப்பலே கொணமும் அமைஞ்சுதே தம்பி, அதைச்சொல்லு. இப்படி ஒரு வாத்தியார் நம்ம ஊருக்கு வந்ததே இல்லை. பிள்ளைகள்கிட்டே பெத்த தகப்பன்கூட அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னா, அப்புறம் பார்த்துக்கோயேன்” என்றார் பெரியவர் பூரிப்புடன்.

எல்லோரும் வெற்றியை எதிர்நோக்கிக்கொண்டு கோலாகலமாகப் பேசிக்கொண்டிந்தார்கள்.

சிறிது நேரத்துக்குள்ளேயே, பரீக்ஷை வைத்த உதவி ஆசிரியர் வந்து, சிறுவர்களையும், பெரியவரையும் போர்ட்டரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துக் கொண்டு போனார். அப்போதுதான் அவர்களுடைய மனம் கோலாகலத்தை இழந்து, ‘திக்திக்’ என்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது.

“இப்படி வாருங்கள்” என்று அவர்களை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார் உதவி ஆசிரியர். எல்லோரும் உள்ளே போனார்கள். தலைமை ஆசிரியரைப் பார்த்ததும், போர்ட்டர் கும்பிட்டான். பெரியவருக்கோ கும்பிடப் போன கைகள் குவியாமல் நடுங்கின. பையன்கள் எதுவுமே செய்யாமல், அப்படியே நின்றுவிட்டார்கள். ஆச்சரியத்தினால் அவர்களுடைய கண்கள் அகல விரிந்துவிட்டன. மூடியிருந்த வாய்கள் தாமாகத் திறந்துகொண்டன. ஒவ்வொரு கையிலும் விரல்களை விரல்கள் பிசைந்துகொண்டிருந்தன.

குமாரபுரம் ஸ்டேஷனிலிருந்து டால்ஸ்டாய் புத்தகமும் கையுமாக அவர்களோடு பிரயாணம் செய்த அதே பிரமுகர்தான் இங்கே தலைமை ஆசிரியராக உட்கார்ந்து கொண்டிருந்தார்! இதைப் பையன்கள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

“வாருங்கோ” என்று சிரித்துக்கொண்டே அவர் வரவேற்றார்.

“பெரிய வாத்தியாரைக் கும்பிடுங்க” என்று போர்ட்டர் சொன்ன பிறகுதான், பையன்களும் பெரியவரும் வணக்கம் செய்தார்கள்.

“கேள்விகளெல்லாம் கஷ்டமாக இருந்ததா?” என்று கேட்டுவிட்டு மறுமுறையும் சிரித்தார் சுப்பராமையர். அந்தச் சிரிப்பில் இருந்த அழகும், கவர்ச்சியும், அன்புப் பெருக்கும் ஒரு பையனுடைய கண்களில் கண்ணீரையே வரவழைத்துவிட்டன.

அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் எல்லோரும் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

அடுத்தாற்போல், “உங்கள் பெயர்களைச் சொல்லுங்கள்” என்றார்.

“நாராயணசாமி, ‘ஸ்ரீனிவாசன்’, ‘சுப்பையா’, ‘திருப்பதி”

“எல்லோரும் பாஸ்!” என்றார் சுப்பராமையர். பையன்கள் நால்வருக்கும் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது.

“எல்லோரும் ஏழாம் வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள். நன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு பரீக்ஷையிலும் நல்ல மார்க் வாங்கவேண்டும்” என்று கூறிவிட்டு, “உங்கள் ஊர் வாத்தியார் மட்டுமல்ல இந்த ஊர் வாத்தியாருமே தகப்பனாரைப் போன்றவர்தான். பெரியவரே! நான் சொல்லுவது சரிதானே?” என்று சிரிப்பும் பரவசமுமாகக் கேட்டார் தலைமை ஆசிரியர்.

“அதிலே சந்தேகம் வேறயா?” என்று கிராமியப் பாணியில் சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு ஒரு முறை கும்பிட்டார் பெரியவர்.

சுப்பராமையர் மூன்றாவது தடவையும் அழகாகச் சிரித்தார்.

“போய் வாருங்கள்” என்று விடை அளித்து அவர்களை அனுப்பியபின், குமாரபுரம் ஸ்டேஷன்தான் அவர் மனக்கண்ணில் காட்சியளித்தது.

வாய்க்குள்ளேயே, ‘அது பெரிய பள்ளிக்கூடம்!’ என்று ஒரு முறை சொல்லிக்கொண்டார் சுப்பராமையர்.

தெரியவில்லை

Labels: ,

ந. பிச்சமூர்த்தி

2

மலையைப் பார்க்கிறேன்

சிலைக்காகும்

கோயிலுக்காகும்

பங்களாவின்

சுற்றுச் சுவர்க்காகும்

தாரோடும் வீதிக்கு

ஜெல்லிக் கல்லாகும்.

மலைச்சிகரம்

மனிதச் சாதனைக்காகும்.

எதெதோ தெரிந்தாலும்

மலையாகப் பார்க்கத் தெரியவில்லை.

மலரைப் பார்க்கிறேன்.

புலரும் காதலுக்குத்

தூண்டில் முள்ளாகும்

அத்தர்க்காகும்

படத்துக்காகும்

எதெதோ தெரிந்தாலும்

மலராகப் பார்க்கத் தெரியவில்லை.

என்னைப் பார்க்கிறேன்

கண் காணாச் சமூகத்தை

நிலை நிறுத்தும் கல்தூண்.

பரிணாமத்தின் பனிச்சிகரம்

சந்ததியின் சங்கிலியில்

காலம் காட்டும் கடைக்கரணை

எதெதோ தெரிந்தாலும்

நானாகப் பார்க்கத் தெரியவில்லை.

ந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்

Labels: , ,

ஜெயமோகன்

[22_08_2001 மாலை சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்த ந. பிச்சமூர்த்தி நினைவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை]

சிறந்த எழுத்தாளர்கள் இருவகை. மானுடத்தின் அடிப்படை, நன்மையே என்ற நம்பிக்கை உடையவர்கள் முதல் வகையினர். மானுடத்தின் தீமையினால் இவர்கள் சீண்டப்படுகிறார்கள், சமநிலைகுலைகிறார்கள். நன்மை மீதான தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறார்கள். அதன் போக்கில் ஒரு விடையை, நிலைபாட்டை அடைகிறார்கள். அல்லது நம்பிக்கை இழந்து வெறுமையில் முட்டி நின்றுவிடுகிறார்கள்.

இரண்டாம் வகையினர் மானுடத்தின் அடிப்படை இயல்பு, தீமையே என்ற நம்பிக்கை உடையவர்கள். மானுடத்தின் விரிவில் இருந்து நன்மையைத் தேடித் திரட்டி எடுக்க, நம்பிக்கையை நிறுவிக் கொள்ள தங்கள் முழு படைப்பு சக்தியாலும் தீவிரமாக இவர்கள் போராடுகிறார்கள். இப்போக்கும் தரிசனங்களையும் தத்துவ நிலைபாடுகளையும் உருவாக்குகிறது, சிலசமயம் வெறுமையையும்.

உலகத்துப் படைப்பாளிகள் அனைவரையும் இந்தக் கோணத்தைப் பயன்படுத்தி இரண்டாகப் பிரித்து விடலாம். இது ஒரு பகுப்பாய்வு அல்லது விமரிசனமுறை என்பதைப் பார்க்கிலும் ஒருவகை ரசனை முறை என்று கூறுவதே சரியானது. இதன்மூலம் உருவாகும் ஒரே பயன், நாம் படைப்பாளிகளைக் கூர்ந்து கவனிக்கிறோம் என்பதே. உண்மையில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி படைப்பாளிகளை ஆராயப் புகுந்தோமெனில் முக்கியப் படைப்பாளிகள் எப்படி சட்டகத்திற்கு வெளியே வழிந்து பரவி செல்கிறார்கள் என்பதையே காண நேரும். ஏனெனில் அது, படைப்பின் அடிப்படை இயல்பு. படைப்பியக்கத்தைச் சட்டகங்களுள் ஒடுக்கி நிறுத்த முடியாது. அதேசமயம் சட்டகப்படுத்தாமல் சட்டகங்களுக்கு வெளியே பரவும் படைப்பின் உயிரியக்கத்தைக் கண்டறியவும் இயலாது. படைப்பாளியை ஒட்டுமொத்தமாக வகுத்துக் கொள்ள முயல்வது அவனுடைய நுட்பங்களுக்குள் நுழைய மிகச்சிறந்த வழிமுறையாகும் என்பது என் அனுபவம்.

மீண்டும் வருகிறேன். தல்ஸ்த்தோய் மானுட நன்மையில் ஆழமான நம்பிக்கை உடையவர் என்றால் தஸ்தோயெவ்ஸ்கி மானுடத்தின் தீமையை நம்புகிறவர். இருவரும் தேடுவது மனிதனுள் உறையும் `கிறிஸ்து’வையே. என் இயல்பின்படி எனக்கு முதல்வகை படைப்பாளிகள் மீதுதான் எப்போதுமே ஆழமான ஈடுபாடு உள்ளது. ஹெர்மன் ஹெஸி, தாமஸ் மன், நிதாஸ் கசன் சாகிஸ், ஐசக் பாஷவிஸ் சிங்கர்.... இரண்டாம் வகைப் படைப்பாளிகளில் இருளின் வழியாக ஒளிநோக்கி முகம் திருப்ப முடிந்த தஸ்தயேவ்ஸ்கி எனக்கு முக்கியமானவர்; இருண்ட கோட்டையில் சுற்றிவரும் காஃப்காவும் காம்யூவும் எனக்கு முக்கியமானவர்கள் அல்ல; ஹெமிங்வேயை ஒரு இலக்கியக்கர்த்தாவாகவே என் மனம் ஏற்கவில்லை.

தமிழுக்கு வருவோம். `இருள் என்பது குறைந்த ஒளி’ என்று கூறியவன் முதல் இனத்தவன். `பற்றுகோடாக எதுவுமே இல்லையே’ என்று பரிதவித்தவன் இரண்டாம் வகை. பாரதியையும் புதுமைப்பித்தனையும் இப்படி இரண்டு வகைமாதிரிகளாகக் கொள்ளும் போக்கு தமிழில் ஏற்கெனவே வேரோடியுள்ளது. குறிப்பாக, சுந்தர ராமசாமி அவருடைய பிச்சமூர்த்தியின் கலை _ மரபும் மனித நேயமும் என்ற நூலில் இதை விரிவான ஒரு அட்டவணைக்குப் பயன்படுத்துகிறார். மணிக்கொடியுகப் படைப்பாளி-களில் புதுமைப்பித்தனைத் தவிர பிறர் அனைவரையும் பாரதிக்குப் பின்னால் நிற்க வைத்து புதுமைப்பித்தனை நேர் எதிர்வரிசையில் சமமாக அமரச் செய்கிறார்.

ந. பிச்சமூர்த்தியை அனைத்து வகையிலும் பாரதியின் பின்னால், மிக நெருக்கமாக நிறுத்தமுடியும். அவரைப் புரிந்து கொள்ள பாரதியில் இருந்து அவர் வேறுபடும் இடங்களையும், புதுமைப்பித்தனில் இருந்து அவர் முரண்படும் இடங்களையும் அடையாளம் செய்து கொண்டால் போதும். பிச்சமூர்த்தி குறித்த விவாதங்-களின் உடன் வினாவாக நம்முள் இலக்கியத்-தின் உள்ளே எப்போதும் இருந்தபடி இருக்கும் இந்தப் பிரச்சினையும் _ மானுடனின் அடிப்படையான நல்லியல்பு குறித்த நம்பிக்கை குறித்தது _ எழுந்த-படியேதான் இருக்கும்.

ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளில் தெரியும் நம்பிக்கை அம்சம் எத்தகையது? ஒளியின் அழைப்பு என்ற ந. பிச்சமூர்த்தியின் கவிதையை ஒரு முதற்கட்ட உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். பொதுவாக எந்த ஒரு படைப்பாளியைப் பற்றிப் பேசும்போதும் அவனுடைய மிகச்சிறந்த படைப்பு ஒன்றே எடுத்துக் கொண்டு அவனுடைய மொத்தப் படைப்பியக்கத்திற்கும் அதைப் படிமமாக ஆக்குவது ஒரு நல்ல உத்தியாகும். ஏனெனில் மிகச்சிறந்த படைப்புகளில் படைப்பாளியின் பலங்களும் பலவீனங்களும் எல்லாமே நுட்பமாக பிரதிபலிக்கும். ஒளியின் அழைப்பு அத்தகைய ஒரு கவிதை. `மணிக்கொடி’ இதழில் [1934 அக்டோபர் 28] வெளிவந்தது இக்கவிதை. `பிட்சு’ என்ற பெயரில் இக்கவிதையை அதில் ந. பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார். அதே இதழிலேயே `உதர நிமித்தம்’ என்ற கதையையும், ந. பிச்சமூர்த்தி சொந்தப் பேரில் எழுதியுள்ளார்.

இதோ விரிந்து வளரும் மரம்
பட்டப்பகலில் இரவைக் காட்டும் அதன் நிழல்
மரத்தடியில் ஒரு கழுகு...
ரத்தம் செத்த சோனிக் கழுகு...

பெரிய மரத்தின் பசிக்கு ஆளாகி, சுரண்டப்பட்டு, ரத்தம் செத்த சோனிக் கழுகு. சோனியாகக் காரணம் வாழ்க்கைப் போர்தான். அதற்காக அது விதியென்று-பேசி வீணில் இருக்கவில்லை. தியாகம் என்று நியாயம் கற்பிக்கவுமில்லை.

பிறவி இருளை துளைத்து
சூழ்வின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
எப்படி விண்ணினின்று வழியும் ஒளியமுதைத் தேடிப்போகிறது.
ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்புக்கிணங்கி
எப்படி உடலை நெளித்து நீட்டி வளைந்து வளருகிறது!
என்று சித்திரப்படுத்தும் ந. பி.
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

என்று கண்டடைகிறார்.

ஜீவா விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு ஒளியை நாடு
கழுகு பெற்ற வெற்றி நமக்குக் கூடும்

எனத் தன்னிடமே கூறிக் கொள்கிறார். இது அவரது ஆரம்பகாலக் கவிதை, அனேகமாக அவர் எழுதிய மூன்றாவது கவிதை இது.

அந்த மணிக்கொடி இதழின் மற்ற தலைப்புகள் இக்கவிதையுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளன? `தனுவுண்டு சத்யாக்ரகம் அதன் பேர்!’ என்று அதை கூறுகிறது ஒரு கட்டுரை. `பழையன கழிதலும் புதியன புகுதலும் _ இளமையின் எழுச்சியும் கிளர்ச்சியும்’ இன்னொரு கட்டுரை. `ஆசியாவை விழுங்கினதும் ஐரோப்பா மழுங்கினதும்’ நேருவின் கட்டுரை. `காங்கிரஸ் பிறந்த கதையும் வளர்ந்த கதையும். அன்று சிரித்தார்கள் இன்று எதிர்க்கிறார்கள்’ என்று இன்னொரு கட்டுரை.

ஒரு பெரிய போராட்ட உற்சாகத்தின் காலகட்டம் என்ற பிரமையைத் தருகிறது மணிக்கொடியின் இவ்விதழ். இது ஒரு பக்கம் தான். மறுபக்கம் ஒன்றுண்டு, ஒத்துழையாமை இயக்கத்தின் துவளல் காரணமாக காந்தியடிகள் காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து விலகி நின்ற காலம். பாபு ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவர். சூழலில் ஒரு சோர்வு படர்ந்திருந்தது என்று பிற சமகாலக் குறிப்புகளிலிருந்து ஊகிக்கலாம். மணிக்கொடியின் இவ்விதழில் `எங்கிருந்தாலும் ஓடிவருவேன் _ தேசத்துக்கு காந்தியடிகள் நிபந்தனை’ என்ற கட்டுரை ஒன்றும் பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரையின் உள்தொனி தெளிவானது, காந்தியடிகள் விலகியிருக்கிறார் என்ற உண்மை. அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பை விதைக்க முயல்கிறது இக்கட்டுரை. ஆகவே, `சூழ்வின் இருள்’ தான் உண்மை. மணிக்கொடியின் பிற கட்டுரைகளில் உள்ள தீவிரமான உற்சாகம் ஒரு சுயபாவனை. அது அப்போது தேவைப்படுகிறது போலும்.

ந. பிச்சமூர்த்தி `ஜீவா விழியை உயர்த்து’ என்று மீண்டும் மீண்டும் தன்னை நோக்கி, தன் சூழலை நோக்கி கூவியிருக்க வேண்டும். அக்கவிதை ஒளியைக் குறித்ததா இல்லை இருளைக் குறித்ததா என்று சொல்லுவது சிரமம். அமுதம் பொழியும் வானம் ஒவ்வொருவரின் தலைக்கு மேலேயும் எழுந்து பரந்துள்ளது குறித்து அவருக்கு ஐயமில்லை. அதை நோக்கி எழுவதே உயிரின் தர்மம் என்ற நம்பிக்கையே அவரது சாரம். ஒரு உயிரின் இயல்பான வேட்கை வானமுதம் மட்டுமே என்ற தரிசனம்தான் அவரை எழுதச் செய்கிறது. ஆயினும் சூழலின் இருள், சுரண்டும் வாழ்க்கைப் போட்டி, இருத்தலின் கசப்பான விதிமுறைகள் அவருக்குச் சவாலாக அமைகின்றன.

அவரது கதை `உதர நிமித்தம்’ இதற்கு எடுத்துக்காட்டு `வயிற்றுக்காக’ என்று பொருள்படும் அத்தலைப்பே கூறிவிடுகிறது. மனித நிலைமை குறித்த ஒரு தரிசனம், கூடவே மனித வாழ்வின் தவிர்க்க முடியாத போலி வேடங்கள் ஆகியவை குறித்த பிரக்ஞை இரண்டுக்கும் இடையேயான கூர்மையான முரண்பாட்டைச் சொல்லும் இக்கதை அவர் இருந்த `சூழலின் இருள் மங்கலை’ சுட்டிக் காட்டுவது (இலக்கிய படைப்பு என்ற முறையில் மிக சாதாரணமானது இது என்பதையும் கூறிவிடுகிறேன்) பாரதியில் இருந்து பற்ற வைத்துக் கொண்ட `ஒளிப்பிரக்ஞை’ ஒரு பக்கம், உதர நிமித்தம் அல்லாடும் அன்றாட வாழ்க்கை மறுபக்கம். இலட்சியவாதியின் தத்தளிப்பு இங்கு தொடங்குகிறது. பிச்சமூர்த்தியின் படைப்புலகு இங்குதான் தொடங்குகிறது. இப்பாதை-யினூடாகவே நகர்கிறது.

இதே இதழ் மணிக்கொடியில் புதுமைப்பித்தன் சொ. விருத்தாசலம் என்ற பெயரில் `கவிஞனின் மோகனக் கனவு’ என்று கவிதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இவ்விஷயத்துடன் தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டிய விஷயம் இது. கவிதை யதார்த்தத்தின் குரலாகவும், யதார்த்தங்களை உண்டு பண்ணுவதாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ள இன்று இது மிகப் பழைய ஒரு வாதம் ஆயினும் அன்று ஏறத்தாழ அத்தனைக் கவிஞர்களையும் ஆண்ட பிரக்ஞை இது. ந. பிச்சமூர்த்தி கூறும் அமுதத்தை உதிர்க்கும் அந்த வானம் கவிஞனின் மோகனக் கனவு மட்டும் தானா?

ந. பிச்சமூர்த்தியின் இன்னொரு முக்கிய கவிதையான `கிளிக்குஞ்சு’ அவரது போராட்டத்தை மேலும் தெளிவாகச் சுட்டுவது.

கூட்டிலிருக்கும் கிளிக்குஞ்சே
கண்மூடி ஏங்காதே
உன் பஞ்சரம் சிறையல்ல

என்ற முதல் வரியே கூண்டுக்கும் வானுக்குமான போராட்டத்தை, தீராத ஏக்கமாகத் தொடரும் ஒளிவேட்கையை சுட்டிவிடுகிறது.

மனமே காய்கனிகளின் ரசமே தெவிட்டா அமுதம்
மலர்களின் மணமே தெய்வ வாசனை
ஸ்பரிசமே தெய்வத் தீண்டல்
பார்வையே ஒளியின் அலை

என்று புலன்களையே விடுதலையின் கால்வாயாக, பிரபஞ்சத்தையே ஈசானாகக் கண்டு அக்கவிதை முடிவடைகிறது.

ந. பிச்சமூர்த்தி கலையின் எதிர்மறை அம்சம் என்ன? அவரை ஓர் இலக்கியப் படைப்பாளியாக எப்படி மதிப்பிடலாம்?

நான், ஒரு வாசகனாகவும் விமரிசகனாகவும், எழுத்தாளனாகவும் ந. பிச்சமூர்த்தி குறித்து மிதமான மரியாதையையே கொண்டிருக்கிறேன். ஒரு வாசகனாக அவரது பல படைப்புகள் என்னைக் கவரவில்லை. ஒளியின் அழைப்பு, கிளிக்குஞ்சு, சாகுருவி, ஆத்தூரான் மூட்டை போன்ற சில கவிதைகள் ஞானப்பால், மாங்காய்த்தலை முதலிய சில கதைகள் எனக்குப் பிடித்தவை. ஒரு பெரும் இலக்கியப் படைப்பாளியாக என் மனதில் அவரை நிறுவ இவை போதுமானவை அல்ல என்றுதான் படுகிறது. ஒரு விமரிசகனாக நான் ந. பிச்சமூர்த்தியை தமிழ் இலக்கிய மரபின் முக்கியமான முன்னோடியாகக் கருதுகிறேன். நவீனத் தமிழ்ச்சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றுக்கான அழகியல் அடிப்படை-களை உருவாக்கியதில் அவரது பங்கு முக்கியமானது. ஒரு இலக்கியவாதியாக தன்னை அவர் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று எதிர்மறையாகவும் மதிப்பிடுவேன். அதாவது இலக்கியவாதி தன் தேடலை முழுக்கவும் இலக்கியத்தினூடாகவே நிகழ்த்த வேண்டும். அவனது பாதை, அவனது ஊடகம், அவனது ஆயுதம் அதுவேயாகும். அவனது ஆன்மிகமும், அரசியலும் கூட அதனூடாக அவன் கண்டடைய வேண்டியவை மட்டுமே. பிரம்மம் அவன்முன் இலக்கிய வடிவமாகவே எழுந்தருளல் வேண்டும். ந. பிச்சமூர்த்தியின் தேடல்கள் (ஆன்மிகத்திலும், தத்துவத்திலும்) இலக்கியத்தினூடாக நிகழவில்லை என்பதை அவர் படைப்புகள் காட்டு-கின்றன என்று எனக்குப் படுகிறது. அவரது ஆளுமை-யில் பலபகுதிகள் கவிதைகளினூடாக அவ்வப்போது தெரிகின்றன. அவருக்கு அத்வைத ஈடுபாடு இருந்திருக்-கிறது. பக்தி இலக்கியத்தின் மீது பிடிப்பு இருந்திருக்-கிறது. நாமறியாது, ஒளிவிழாத பகுதியில் அவரது தேடல் நடந்து கொண்டிருந்திருக்-கிறது. அங்கு கண்டதை இங்கு கூறவே அவர் முயல்கிறார். ஆகவே, அவரது தேடல் வடிவம் சார்ந்ததே. பாரதியின் வசன கவிதையில் தொடங்கி நவீனத்துவக் கவிதையின் விளிம்பு வரை அவரது பயணம் நகர்ந்து வந்தது இந்த வடிவத் தேடலின் விளைவாகவேயாகும். மணிக்கொடி-யில் 1934இல் வெளியான `பிரிவில் தோன்றும் பேரின்பம் என்ற முதல் கவிதையை `பாரதியின் வசன கவிதையின் பலவீனமான பிரதி’ என்று கூறிவிடலாம். சாகுருவி ஒரு நவீனயுகக் கவிதை. தமிழ்க் கவிதையில் உருவான முதல் நவீனத்துவப் பிரதியும்கூட. இப்பயணமே ந. பிச்சமூர்த்தியை தமிழுக்கு முக்கியமானவராக ஆக்குகிறது. மூன்றாம் தலைமுறையின் ஒரு எழுத்தாளனாக என்னை ந. பிச்சமூர்த்தி பாதிக்கவே இல்லை. கண்டடைந்தபின் கூறுவதற்காக மேடையமர்ந்-தவர் அவர். எனக்கு அமர்தலில் நம்பிக்கை இல்லை. ஓயாத தத்தளிப்புடன் முட்டிமோதி அலைந்து ரயில்நிலையத்தில் செத்தவன்தான் எனக்கு முன்னோடி.

ஒரு படைப்பிலக்கியவாதியாக ந. பிச்சமூர்த்தியை பலவீனப்படுத்திய அம்சம் என்ன?

இது ஒரு விரிவான நூலுக்கான தலைப்பு. இவ்வாறு கூறுகிறேன். இலட்சியவாதக் கனவை முன்வைத்த ந. பிச்சமூர்த்தி அதற்கு எதிரான `சூழலின் இருளை’ மிக எளிமையாக உருவகப்படுத்திக் கொண்டார். அவரது படைப்புலகில் உள்ள மானுடத் தீமை மிகமிகப் பலவீனமானது. அதை வென்று `வானின் ஒளியமுதுக்கு’ சிரம் நீட்ட ஓரிருமுறை உடல் நெளிந்தாலே போதுமானது.

ந. பிச்சமூர்த்தி தன் காலகட்டத்து இருளை நோக்கி அரைக்கண் பார்வையையே திருப்பினர். அவர் கதைகளில் தீவிரமான, அத்தனை சுலபமாக இலட்சியவாதத்தால் பதில் கூறிவிட முடியாத பிரச்சினைகள் இல்லை. எம். வேதசகாய குமாரை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். `கோபாலய்யங்காரின் மனைவி’ என்ற புதுமைப்பித்தனின் கதையே உண்மையில் தமிழ்ச்சூழலால் பாரதியின் இலட்சியவாத `ஒளி வேட்கை’க்கு எதிராக விடப்பட்ட முதல் அறைகூவல். அது உருவாக்கும் `அப்பட்டமான’ யதார்த்தப் பிரக்ஞையை பாரதி வாரிசுகளின் இலட்சியவாதம் எதிர் கொண்டிருக்குமானால் அவர்கள் பெரும்படைப்புகளை உருவாக்கும் பெரும் நெருக்கடிக்-குள் சென்று விழுந்திருப்பார்கள். அப்படி நிகழவில்லை. ந. பிச்சமூர்த்தி எழுதிய அதே மணிக்கொடி இதழில்தான் `கோபாலய்யங்காரின் மனைவி’யும் வெளிவந்தது என்பது ஒரு முக்கியமான விஷயம். ஆனால், அதை ந. பிச்சமூர்த்தி எதிர்கொள்ளவில்லை.

சாதியால் பிளவுண்டு, மானுடச் சிறுமைகளால் சிதைந்து, கோழைத்தனத்துள் ஊறிக் கிடந்த ஒரு சூழலில் நின்று கொண்டு ஒரு கவிஞன் `ஜீவா விழியை உயர்த்து’ என்று சொல்லலாமா என்ன?

தஸ்தயேவ்ஸ்கி விழியை உயர்த்துமிடம், `போரும் அமைதியும்’ என்ற மாபெரும் நாவலிலேயே ஒரே ஒரு இடம்தான். ஆன்ட்ரூ இளவரசன் நெப்போலி-யனுடனான போரில் புண்பட்டு விழுந்து கிடக்கும் மரணத்தின் விளிம்புத் தருணம். மற்ற தருணங்களில் எல்லாம் மானுடத்தின் மகத்தான நாவலாசிரியனின் பார்வை மண்மீதுதான். மனிதர்கள் மீதும் இயற்கை மீதும் தான். அதுவே மகத்தான கலையை உருவாக்-கியது. ந. பிச்சமூர்த்தி மூன்றாவது கவிதையிலேயே விழிகளை உயரத் தூக்கிவிட்டார்.

ஆகவே, ந. பிச்சமூர்த்தியின் படைப்புலகில் இலக்கியத்தின் ஆதாரமான போராட்டம், முரண்பாடுகளில் மோதிச் சிதறி முன்னகரும் கலைப்பயணம் நிகழவில்லை. பிட்சு முதலிலேயே சின் முத்திரையுடன் அமர்ந்து விட்டார். அமர்ந்தபின் அவர் கூறியவை முக்கியமான உண்மைகள் அல்லவா என்று கேட்கலாம். இலக்கியம் கூறுவதற்காக உள்ள ஊடகமல்ல. தேடலுக்கான ஊடகம் அது. இலக்கியம் காட்டும் உண்மை அதன் புனைவின் ஒரு பகுதி மட்டுமே. இலக்கியத்திற்கு வெளியே அதற்கு மதிப்பில்லை. அப்படைப்பை படிக்கும் வாசகன் தன் தேடலினூடாகத் தன் உண்மையைக் கண்டடைய அது வழிவகுக்கிறது. அவ்வுண்மையே _ அதற்கு அப்படைப்புடன் எவ்விதமான நேரடித் தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட, அந்த படைப்பு உருவாக்கும் உண்மை ஆகும். எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மிக முக்கியமானவர். ஆனால், அவர் `கூறும்’ உண்மைகள் ஏதும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் நூல்களினூடாக நான் அடைந்தவையே எனக்கு முக்கியம். அவர் தன் நூல்களின் பரப்பில் உணர்ச்சிகளையும் யதார்த்தங்களையும் மோதவிட்டு உருவாக்கும் மாபெரும் மானுட நாடகம்தான் எனக்கு முக்கியம். அங்குதான் அவர் தன் தேடலையும் நிகழ்த்துகிறார். அதை எழுதாது முடிவுகளை மட்டுமே அவர் எழுதியிருப்பாரெனில் அவர் எனக்கு ஒரு படைப்பாளியே அல்ல. ந. பிச்சமூர்த்தி பெரும்பாலும் முடிவுகளையே எழுதினார். மோதலும் பயணமும் அவரது கவிதைகளில், அதிகமும் வடிவரீதியான தேடலில், மட்டுமே நிகழ்ந்தன.

கவிதையின் [கலைகளின்] சித்தாந்தம் குறித்து எழுதுகையில் ந. பிச்சமூர்த்தி எழுதுகிறார். ``அழகுத் தெய்வமும் அன்புத் தெய்வமும் அகத்துள் அடிவைத்துச் செல்லும் கால் கலையுணர்ச்சி பொங்குகிறது’’. [காவியத்தின் மூன்று கிளைகள். கலை விளக்கம் மணிக்கொடி 1935 ஜனவரி] கலைகளை வாழ்க்கைக்கு மறுமொழியாகவோ, வாழ்வின் விடுதலையாகவோ, வாழ்வு மீதான நேசமாகவோ காணலாம் என்கிறார் ந. பிச்சமூர்த்தி. இக்கட்டுரையில் ருஷ்ய தேச இலக்கியம் குறித்து அவர் அறிந்திருப்பதற்கான தடயங்கள் உள்ளன. இரண்டாம் வகை எழுத்துக்கான உதாரணமாக அவற்றை அவர் சுட்டவும் செய்கிறார்.

ஆனால், இந்த அழகுதெய்வமும் அன்புத் தெய்வமும் தங்கள் நிழலுடன் மட்டுமே அகத்துள் அடியெடுத்து வைக்க முடியும் என்கிறது இந்திய செவ்வியல் மரபு, சீதேவியின் நிழல் மூதேவியேதான். அவளது பின்பக்கமே மூதேவி என்று இன்னொரு ஐதீகம். இன்னொரு ஐதீகப்படி அவள் சீதேவியின் அக்கா. அவர்கள் பிரிக்க முடியாதவர்கள். அவர்களின் தீராத மோதலில் கலையைக் கண்டது செவ்வியல். நமது சிற்ப மரபில் இதற்கு எண்ணற்ற உதாரணங்களை காணலாம்.

அப்படியானல் ந. பிச்சமூர்த்தியை நமது மரபின் செவ்வியல் பண்புகளின் வழிவந்தவர் என்று கூறிவிட முடியாது என்பது தெளிவாகிறது. அது உருவகிக்கும் முழுமையும் சமநிலையும் அவரது கலைப்பிரக்ஞைக்குள் இல்லை. அவர் கற்பனாவாதிதான் (ரொமான்டிக்) அவரது கற்பனாவாதமே மரபில் இருந்து `உகந்த’ `இனிய’ விஷயங்களைப் பொறுக்கச் செய்தது. சூழலில் இருந்து `எளிய’ விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளச் செய்தது.

பாரதியும் கற்பனாவாதியே. அவரது கற்பனாவாதம் புதிய யுகம் சார்ந்தது. புதுமைக்கான கொப்பளிப்பு. பிச்சமூர்த்தியின் கற்பனாவாதம், பின்நோக்கி நிற்பது, இறந்தகாலம் நோக்கி ஏங்குவது இதுவே இவர்கள் இருவரிடையே உள்ள வித்தியாசம் என்று கூறலாம். ந. பிச்சமூர்த்தியை பாரதியுடன் ஒப்பிட்டு அவரது `பழைமை’யை உணர்வது மிக எளிய ஒரு விஷயம். அவரைப் புதுமைப்பித்தனிடம் ஒப்பிட்டு அவரது `பழைமை’யை வேறு விதமாக உணர்வது சற்று சிரமம். காரணம் ந. பிச்சமூர்த்தியின் மனிதாபிமானம் _ பாவனையற்ற இயல்பான சகஜமான மானுட நேயம் _ இருபதாம் நூற்றாண்டுப் பிரக்ஞையில் வேரூன்றியது. அது அவரை காத்துநிற்கும். ஆனால், ந. பிச்சமூர்த்தி-யின் படைப்புலகில் `நாசகார கும்பல்’ `துன்ப கேணி’ `கோபாலய்யங்காரின் மனைவி’ போன்ற அழுத்தமான சமூக யதார்த்த சித்திரிப்புகள் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதே போல `சிற்பியின் நரகம்’ `கபாடபுரம்’ போன்ற தத்துவார்த்த யதார்த்தம் உடைய கதைகளையும் அவர் எழுதவில்லை. யதார்த்தம் என்ற அம்சமே அவர் உலகில் பெரிதும் மௌனமாக்கப்பட்டுள்ளது. அங்கு இலக்கியவாதத்தின் கொடி பறக்கிறது. அதன் பொருட்டு அவர் தன் ஒரு விழியை மூடிக் கொள்கிறார் எனலாம். ந. பிச்சமூர்த்தியை ஆன்மிக கற்பனைவாதி (ஷிஜீக்ஷீவீtuணீறீ க்ஷீஷீனீணீஸீtவீநீ) எனலாம் என்று நான் எண்ணிக் கொள்கிறேன்.

மணிக்கொடி 1935 ஜனவரி 20 இதழில் பிச்சமூர்த்தி எழுதினார் (பிரார்த்தனை என்ற கவிதை)

வானகம் செல்லும் வண்ணம்
கூரையில் புறாவைப்போல்
கானக மன நெருக்கில்
உழலாமல் விண் எய்ததாலே...
பித்தனென பேரைப் பெற்றேன்
பித்தனாயிருக்க அருள்வாய்
பித்தரே பித்தர் குருவே.

மிக ஆரம்பகால கவிதையிலேயே இவ்வாறு கானக மனநெருக்கை விட்டு விலகி, விண் எய்த முயலும் பாவனை அவரிடம் கூடிவிட்டிருந்தது

துரதிர்ஷ்டவசமாகக் கலைகளும் இலக்கியம் கானக மனநெருக்கில் மட்டுமே விளைபவை. விண்ணில் அவை மலர்வதில்லை. மண்ணில் தெரியும் வானமே கலை. ஆம், வானமானாலும் அது மண்ணில் தெரிந்தாக வேண்டும்.

ந.பிச்சமூர்த்தி

Labels: ,

* * *
சிறுகதை படைப்பாளியாகவே ஆரம்பத்தில் தமிழில் அறிமுகமானார் பிச்சமூர்த்தி.
பின்னர் பாரதி சோதனை செய்து பார்த்த வசன கவிதை முயற்சியைத் தொடர்ந்து புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வகையில் தமிழ்ப் புதுக் கவிதையின் தந்தை என்று அறியப்பட்டவர். என்றாலும் காலத்தை கடந்து இன்று முக்கியனவாக இருப்பன அவரது கவிதைகளைவிட கதைகளே. மரபு வழிப்பட்ட மனோபாவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தபோதிலும் இவரது கதைகள் மனிதனின் மேன்மைகளையும் மனித நேயத்தையும் வலியுறுத்துவன.

  clip_image001பிச்சமூர்த்தி ஆகஸ்ட் 15, 1900ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். தகப்பனார் நடேச தீக்ஷிதர். ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்தியம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். அவர் காலமாகியபோது பிச்சமூர்த்திக்கு ஏழு வயது. பிறகு கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்புறம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தத்துவத்தைப் பாடமாக எடுத்து பி.ஏ. முடித்தார். அதன்பின் சென்னைச் சட்டக்கல்லூரியில் பிளீடர்ஷிப் படிப்பையும் முடித்தார். 1925ஆம் ஆண்டு பிச்சமூர்த்திக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சாரதா. 1924 முதல் 1938 வரை கீழ் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இக்காலங்களில் கும்பகோண நகரசபை கவுன்சிலராகவும் பிச்சமூர்த்தி இருந்தார். பிறகு பதினெட்டு ஆண்டுகாலம் தொடர்ந்து இந்து மத அறநிலையப் பாதுகாப்பு போர்டு அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் ‘ஹனுமான்’, ‘நவ இந்தியா’ பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1938ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘ஸ்ரீராமானுஜர்’ திரைப்படத்தில் பிச்சமூர்த்தி ஆளவந்தார் வேடத்தில் நடித்தார்.

  பிச்சமூர்த்தி ஆத்மீகச் சிந்தனைகள் மீதும், காந்தீயத்திலும் ஈடுபாடு கொண்டவர். 1935ஆம் ஆண்டு திருவண்ணாமலைச் சென்று ரமண மகரிஷியைப் பார்த்தபோது “துறவறம் கொள்ளவேண்டும் என்ற உந்துதல்’’ இருந்ததாக பிச்சமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இளமையிலேயே காந்தீய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதிலும், நகரச் சுத்திகரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். பிச்சமூர்த்தியின் இளம் வயது தொட்டு கு.ப. ராஜகோபாலன் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார்.

  ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதிய பிச்சமூர்த்தி, பின்னர் பாரதி இலக்கியத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தமிழில் எழுதத் தொடங்கினார்.

  பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்ச் சிறுகதை ‘ஸயன்ஸுக்குப் பலி’ 1932ஆம் ஆண்டு கலைமகளில் பிரசுரமானது. முதல் கவிதை ‘காதல்’ 1934ஆம் ஆண்டு வெளியானது. கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற ‘முள்ளும் ரோஜாவும்’ கதைதான் பரவலான அறிமுகத்தைப் பிச்சமூர்த்திக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கலைமகள், வ.ரா. ஆசிரியராக இருந்த மணிக்கொடி, பின்னர் ராமையாவின் மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகியவற்றில் பிச்சமூர்த்தியின் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 1934 முதல் 1947 வரை புதுக்கவிதை முயற்சிகளை மேற்கொண்ட பிச்சமூர்த்தி சிறு இடைவெளிக்குப் பிறகு 1959இல் செல்லப்பாவின் ‘எழுத்து’வில் அதனைத் தொடர்ந்தார். நாடகம், மனநிழல் என்ற தலைப்பில் கட்டுரைகள், சிறுவர்களுக்கான கதைகள், ஓரங்க நாடகங்கள், மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார். பிக்ஷு, ரேவதி ஆகியவை பிச்சமூர்த்தியின் புனைபெயர்கள்.

  பிச்சமூர்த்தியின் புத்தகங்கள் முறையே, பதினெட்டாம் பெருக்கு (1944); காளி (1946); ஐம்பரும் வேஷ்டியும் (1947); மோகினி (1951); குடும்ப ரகசியம் (1959); பிச்சமூர்த்தியின் கதைகள் (1960); மாங்காய்த் தலை (1961); வழித்துணை (1964); குயிலின் சுருதி (1970); காக்கைகளும் கிளிகளும் (1977); மனநிழல் (1977); பிச்சமூர்த்தி கவிதைகள் 1985ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. ஆகஸ்ட் 15, 2000_த்தில் பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதி நிலையம் பிச்சமூர்த்தியின் மொத்தக் கதைகள் மற்றும் கவிதைகள் அடங்கிய மூன்று புத்தகங்களைக் கொண்டு வந்தது. சாகித்திய அக்காதமி தமிழ்ப் பிரிவு வெங்கட் சாமிநாதன் தொகுத்த தேர்ந்தெடுத்த கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்தது.

  1976ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் பிச்சமூர்த்தி காலமானார்.

காவல்

Labels: ,

ந.பிச்சமூர்த்தி

சேவு செட்டியார் திடீரென்று இறந்துபோயிருக்கக் கூடாது. ஆனால், ஓரணா காசு கொடுத்து வாங்குகிற பலூனே பட்டென்று உடையும்பொழுது, காசு கொடுத்து வாங்காத பலூன் உடையக்கூடாதென்று யாரால் கட்டளையிட முடியும்? சேவு செட்டி இருந்தபொழுது செங்கமலத்தின் மகிழ்ச்சி ஒன்றும் பொங்கி வழிந்துகொண்டு இருக்கவில்லை. கண்ணில் விழுந்த தூசியைப்போல் சதா வாழ்வு உறுத்திக்-கொண்டே இருந்தது. செங்கமலம் கொஞ்சம் அசடு. அவன் லேசான போக்கிரி. ஊர் வம்பை .ஏதாவது கிளறிவிடாமல் நாளை விடமாட்டான். அவனைக் கண்டால், ஊரில் பயம் தான். அவன் போனதிலே செங்கமலத்திற்கு வேதனை குறைந்ததென்றாலும், வாழ்வு பெரிய மலைபோல் எழுந்தது. கண்ணில் விழுந்த மணலை எடுத்துவிடலாம். மலையை எப்படித் தாண்டுவது? புருஷன் கடன் வைத்துவிட்டுப் போகவில்லை. ஆனால், ஒன்பது வயதுள்ள நரியனை வைத்துவிட்டுப் போய்விட்டான். பிழைப்புக்கு ஒன்றும் வைக்கவில்லை. ஒரு ஓடு போட்ட சின்ன வீட்டை வைத்திருந்தான். பெரிய வீடாக இருந்தாலாவது சோறு போடும். அதுவுமில்லை பின்-? அதனால் தான் மலையை எப்படித் தாண்டுவதன்று செங்கமலம் புரண்டு புரண்டு அழுதுகொண்டிருந்தான்.

  செத்த பதினேழாவது நாள் நரியன் அழுகையை வலுக்கட்டாயமாக ஓய வைத்துவிட்டான். திடுதிப்பென்று மற்றொரு செக்கானை வீட்டுக்-கழைத்துக் கொண்டு வந்து, செக்கை விற்று விடலாமா என்று தாயாரை நரியன் கேட்டான். தகப்பனைப்போல் வெகு தீர்மானமாகக் காரியம் செய்திருந்ததைப் பார்க்கச் செங்கமலத்திற்கு வியப்பாக இருந்தது. அதோடு ஒரு ஆறுதல்! எந்த யோசனையும் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த செங்கமலத்திற்கு நாலு பணம் கிடைக்கச் சிறு பையன் தெளிவுடன் வழி செய்துவிட்டானே என்ற மகிழ்ச்சி! சிறு பையனும் பெண்பிள்ளையும் செக்கு வைத்துக்கொண்டு தொழில் நடத்தி வெற்றி கண்டுவிட முடியுமா? மூன்று நாளைக்குள் செக்கையும் மாட்டையும் செங்கமலம் விற்றுவிட்டாள்.

  கைக்குப் பணம் வந்த பிறகு, அவளுக்கு ஒரு புதுக் குழப்பம் வந்துவிட்டது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாளை முழுதும் ஓட்டிவிட முடியுமா? பணம் தீர்ந்துபோய்விட்டால்? அரளி வேரும் நல்லெண்ணெயுமா? இல்லை என்றால், நரியனையா யோசனை கேட்பது? இருப்பதை இல்லாமல் செய்வதற்கு வழி சொல்லிவிட்டான்; அவளும் ஏமாந்துவிட்டாள்! இல்லாமல் இருப்பதைக் கொண்டு வருவதற்கு வழி சொல்ல அவனுக்கு என்னத் தெரியும்? கையில் பணம் இருந்தவரையில் யோசித்துக்கொண்டே இருந்தாள்.

  சேவு செட்டி செத்த ஏழாவது மாதம் நரியன் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு வந்தான். தனக்கல்ல, தன் தாயாருக்கு. உணவும் கொடுத்து ஒன்பது ரூபாய் பணமும் கொடுப்பதாக ஒரு கிளப்புக்காரர் சொல்லுகிறார் என்று தாயாரிடம் சொன்னான். வேண்டும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலையில் செங்கமலம் இல்லாததால் சரி என்று சொல்லிவிட்டாள். அப்பனைப்போல் மகனும் இருப்பான் போலிருக்கிறதே என்று நினைத்துக்-கொண்டாள்.

  மறுநாள் முதல் கிளப்பு வேலைக்குப் போகத் தலைப்பட்டாள். காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்திருந்தாள். நரியன் தூங்கிக்கொண்டிருக்கிறானே, எப்படி எழுப்புவது என்று மயங்கிக்கொண்டிருக்கும் பொழுதே, அவனும் எழுந்து உட்கார்ந்தான். ‘போகலாமா வேலைக்கு?’ என்று நரியன் கேட்டதும், அவளுக்கே வியப்புத் தாங்கவில்லை. நரியன் பிழைத்து விடுவான் என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது.

  இருவருமாகக் கிளப்புக்குப் போய்ச் சேர்ந்தார்கள். தண்ணீர் கட்டுவது, பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவது, எச்சில் இலைகளைத் தொட்டியில் போடுவது, கூட்டுவது _ இவைதான் அவளுடைய முக்கிய வேலை. ரொம்பப் பழக்கப்பட்டவள்போலச் செங்கமலம் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.

  காலை எட்டு மணி இருக்கும். கொல்லைக் கிணற்றண்டை அவள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள். கிளப்புப் பையன் ஒருவன் அவளுக்கு நாலு இட்லியும் காப்பியும் கொண்டுவந்து கொடுத்தான்.

  “இது எனக்கும் அவனுக்குமா?’’ என்றாள் செங்கமலம்.

  ``தெரியாது’’ என்று சொல்லிவிட்டுப் பையன் உள்ளே போய் விட்டான்.

  ``இது உனக்குத்தான். உன்னைத்தானே வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எனக்கெப்படிக் கொடுப்பார்கள்?’’ என்றான் நரியன். அவன் செய்கையிலும் பேச்சிலும் ஒரு உறுதி இருந்தது. அவள் மனத்தில் தைத்துக்கொண்டே இருந்தது.

  பதினொரு மணிக்குமேல் பெரிய பாத்திரங்களைத் தேய்க்கும் வேலை, மளிகை சாமான்களைப் புடைக்கும் வேலை, கொழிக்கும் வேலை, பொறுக்கும் வேலை, அரைக்கும் வேலை _ இப்படி ஏதேதோ வேலை செய்து, ஓய்ந்தபொழுது ஒரு மணி ஆகிவிட்டது. ஒன்றரை மணிக்குப் பழைய பையன் சாப்பாடு போட வந்தான். செங்கமலம் இரண்டு இலையை எடுத்துப் போட்டுக்கொண்டாள். பையன் செங்கமலத்தை விறைக்குப் பார்த்தான். ``போடுவதை இரண்டு இலையிலும் நிரவிப் போட்டுவிட்டுப் போய்யா’’ என்று சொன்னதும், அவன் ஊமைக் கோட்டனைப்போல விழித்தபடியே காரியத்தை நிறைவேற்றிவிட்டான்.

  சாப்பாட்டுக்குப் பிறகு கொஞ்ச நேரம் ஓய்வு. வீட்டுக்கப் போய்விட்டுத் திரும்புவோம் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கவனிக்கவேண்டிய காரியம் எதுவாவது இருந்தால்தானே வீட்டுக்குப் போகக் கால் இழுக்கும்?

  இலைக்கட்டு, கறிகாய் அறையில் உடம்பை நீட்டிக் கொண்டு படுத்தாள். நரியன் பக்கத்தில் படுத்துப் பார்த்தான். தூக்கம் வரவில்லை. எழுந்து காவல் நாயைப்போல் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு சின்ன உருளைக்கிழங்கைக் கோலியாக்கி, விளையாடிக்கொண்டிருந்தான்.

  பிறகு மூணு மணியிலிருந்து எட்டு மணி வரையில் வேலை. அதற்குமேல் மத்தியானத்தைப்போல் சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு வீடு திரும்பினார்கள்.

  அன்று முதல் இதுவேதான் மாமூலாக இருந்தது. வேலை முறையிலே முக்கிய மாற்றம் எதுவும் இல்லை.

  ஒன்பதாவது நாள் காலையில் கிணற்றங்கரையில் செங்கமலம் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். நரியன் நாரத்தை மரத்திலிருந்து தொங்கிய மஞ்சள் சிட்டுக் கூட்டண்டை ஏதோ நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

  குனிந்த தலை நிமிராமல் அவன் தாயார் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்ததால், முதலாளி கொல்லைப் பக்கம் வந்து வெந்நீர் அறை ஒரமாக நின்றதைக் கவனிக்கவில்லை. பாம்பு இருந்தால் மாட்டுக்கு வாசனை தெரியும் என்பார்களே, அதைப்போல நரியன்மட்டும் இதைக் கவனித்துவிட்டான். அதற்குப் பிறகு மஞ்சள் சிட்டுக் கூட்டண்டை இருந்தபடியே கவனத்தை எல்லாம் முதலாளியின்மேல் திருப்பினான். முதலாளி அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தாரே ஒழிய வேறு எதுவும் செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் உள்ளே போய்விட்டார். தன்னையும் அறியாமல் நரியன் மனது உஷாரடைந்துவிட்டது. ஆனாலும், தன் தாயாரிடம் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.

  மறுநாளும் தாயார் வழக்கம்போலப் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அதே மஞ்சள் சிட்டுக் குருவி கூட்டண்டை நரியன் நின்றுகொண்டிருந்தபோதிலும் அவன் பார்வை எல்லாம் கொல்லைப் புறத்து வாசலிலேயே இருந்தது. எதையோ தேடுபவர்போல முதலாளி கொல்லைப்புறம் வந்தார். முதலாளி வந்ததைச் செங்கமலம் இன்று பார்த்துவிட்டாள். விருட்டென்று ஆடை கலைய எழுந்திருந்தாள். முதலாளி ஒன்றையும் கவனிக்காதவர்போல் ஏதோ பேசத் தொடங்கினார். நரியன் இருந்த இடத்தைவிட்டுத் தாயாருக்கருகில் வந்து நின்று கொண்டான். ``சாப்பாடு எல்லாம் வேளைக்கு வருதா?’’ என்றார்.

  செங்கமலம் வாய் திறந்து பேசாமல் கிடைத்தது என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினாள். ``வேலை எப்படி இருக்கிறது? செக்காத்திக்கு இந்தமாதிரி வேலை பழக்க மிருக்காதே?’’

  ``வயிறு இருக்கல்ல. எதுவும் பழகிப்போகும்’’ என்றாள். மெதுவாக.

  ``வாஸ்தவம்தான். வேறென்ன _இந்த வேலை செய்கிற பயல்கள்_’’ என்று என்னவோ சொல்ல வந்தார் முதலாளி.

  அதற்குள் செங்கமலம் குறுக்கிட்டுவிட்டாள்.

  ``கவுடு சூதில்லாமெ, திருட்டு புரட்டில்லாமே வேலை செய்யுறாங்க. சும்மா சொல்லலாமா?’’ என்றாள்.

  ``மறந்து போய்விட்டேன். இந்த நரியனுக்கு எதாவது கொடுக்கிறாங்களா?’’

  ``எங்க ஆயாவுக்குக் கொடுக்கிறதே எனக்கும் கண்டு போகுதுங்க’’ என்றான் நரியன்.

  முதலாளி நரியன் பக்கம் திரும்பவில்லை. செங்கமலத்தை உற்றுப் பார்த்துவிட்டு, வேறு ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார்.

  ``ஏண்டா! ஐயா என்னைக் கேட்டால் நீ குறுக்கே மாட்டை விட்டு ஓட்றாப்போலப் பேசறே? அவரு என்னா நெனைச்சுக்குவாரு?’’ என்றாள் செங்கமலம் நரியனைப் பார்த்து.

  ``நடக்கறதை யார் சொன்னா என்ன?’’

  ``ஒங்கப்பாரு மாதிரி எதாவது வம்புலே இழுத்து வச்சுடப் போறெ?’’

  ``பயப்படாதே ஆயா’’ என்று தைரியம் சொன்னான் நரியன்.

  செங்கமலத்துக்கு அப்பொழுதுதான் ஒரு விஷயம் தோன்றிற்று. நரியன் எப்பொழுதும் தன் கூடவே இருக்கிறானே அன்றி, வேறெங்கும் செல்வதில்லையே! வாயோ துடியாக இருக்கிறது! முதலாளியை மற்றொரு சமயத்தில் ஏதாவது சொல்லிவிட்டால், பிழைப்புக்குத் தீம்பு ஏற்பட்டு விடுமே!

  ``ஏண்டா நரியா! நீ என்ன எனக்கு இடுப்புப் பிடிக்கிறாயா, இங்கியே சுத்திகிட்டுக் கிடக்கிறே? சின்னப் புள்ளையா அங்கே இங்கே விளையாடறதில்லை’’ என்றாள்.

  ``இனிமேத்தான் போவணும். எல்லாமே புதுசல்ல’’ என்று பெரிய அறிவாளிபோல பதிலளித்தான்.

  மறுநாள் வழக்கம்போல் நரியன் தாயாருடன் சென்றான். நாரத்தை மரத்தின்கீழே ஒரு சிறிய பள்ளத்தைத் தோண்டி முந்திரிக்கொட்டைகளை வைத்துக்கொண்டு, வல்லா விளையாடிக்கொண்டிருந்தான். செங்கமலம் தன் பொறியைத் தொலைத்துக் கொண்டிருந்தாள்.

  வழக்கம்போல, எட்டு மணிக்கு செங்கமலத்துக்கு ஹோட்டல் பையன் காலை உணவு கொண்டு வந்தான். ஆனால், வழக்கத்துக்கு விரோதமாக, நரியனுக்கு வேறு தனியாக உணவு கொண்டு வந்திருந்தான்.

  “இவனுக்கா?” என்று வியப்புடன் கேட்டாள் செங்கமலம்.

  “ஆமாம்” என்றான் ஹோட்டல் பையன்.

  “யாரு குடுக்கச் சொன்னாங்க?”

  “முதலாளி” என்று கூறிவிட்டு, அவன் உள்ளே போய் விட்டான்.

  முதலாளியின் கருணையைச் செங்கமலத்தால் மனத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால், நரியன் மட்டும், முதலாளி இந்தக் காரியத்தை எதற்காகச் செய்தார் என்று யோசித்துக்கொண்டே, இட்லியைத் தின்றுகொண்டிருந்தான். செங்கமலம் வாழ்த்திக்கொண்டே தின்றுகொண்டிருந்தாள்.

  அப்பொழுது ஓட்டலில் இலை நறுக்கும் மலையாளி அங்கு வந்து சேர்ந்தான். கிளப்புக்கு வேலை செய்ய வந்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே யார் யார் அங்கு வேலை செய்கிறார்கள் என்பது இவர்களுக்கு அத்துப்படியாகிவிட்டது. சிலருடன் பேசிக்கூடப் பழக்கமுண்டாய்விட்டது. இலை நறுக்குகிற மலையாளி, பிந்திய வகுப்பைச் சேர்ந்தவன்.

  வந்தவன் கையிலிருந்த பேனாக் கத்தியைக் குழாய் அடியில் தேய்த்து அலம்பிவிட்டுத் திரும்பினான். இவர்கள் உட்கார்ந்து சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த இடத்தைத் தாண்டிக் கத்தியில் இருந்த தண்ணீரைப் போக்குவதற்காகக் கையை ஆட்டி, மலையாளி ஒருதரம் உதறினான். தாயார்மேல் நான்கைந்து தண்ணீர் துளிகள் தெறித்தன. ஆனால், ஒன்று கூட இவன்மேல் விழவில்லை. ஏதோ தவறுதலாக விழுந்திருக்கிறதென்றுதான் இருவரும் முதலில் நினைத்தார்கள். இரண்டாவது தடவையும் செங்கமலத்தின்மீதே துளிகள் விழுந்தன.

  “பார்த்துத் தண்ணீரை உதறதில்லே _ மேலே எல்லாம் விழுதே” என்றாள்.

“ஒடம்பு மழையா நனைஞ்சு போச்சா _ சவுக்கம் கொணாந்து தாரேன்” என்று சிரித்துக்கொண்டே உள்ளே போய்விட்டான்.

  மலையாளி செய்ததோ பேசினதோ நரியனுக்குப் பிடிக்கவில்லை. விஷமத்திற்காகத்தான் செய்தான் என்று நரியன் மனது சொல்லிவிட்டது. ஆனால், அவன் தாயாருக்குக் கோபமே வரவில்லையே, ஏன்? தன்மீது தண்ணீர் தெறித்திருந்தால் கட்டாயம் சண்டைக்குப் போயிருப்பான். தாயாருக்கு வரவில்லையே, ஏன்?

  இப்படி ஏதோ நினைத்துக்கொண்டி-ருக்கும்-பொழுதே, உள்ளே இருந்து குஞ்சான் வந்தான். கிளப்பிலே குஞ்சானுக்கு இன்ன வேலைதான் என்று இல்லை. அவன் கிளப்பில் எப்பொழுதும் இருப்பான். எல்லா இடத்திலும் இருப்பான். தலைமயிரை எப்பொழுதும் சாய்த்து முடிபோட்டிருப்பான் _ கிராப் வைத்த உலகத்திலே ஒரு விதிவிலக்கு.

  பெரிய பாத்திரங்கள் தேய்த்த களைப்பிலே செங்கமலம் உட்கார்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்தாள். கொட்டைப்பாக்கில் ஆணி அடித்து, நரியன் பம்பரம் செய்து கொண்டிருந்தான்.

  “என்ன செங்கமலம், குஷியாக வெற்றிலைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?’’ என்று குஞ்சான் ஆரம்பித்தான்.

  தன்னுடன் பேச வந்திருக்கிறான் என்று அவள் நினைக்கவில்லை.

  “சும்மாத்தான்’’ என்றாள்.

  “அது சரி, குடி இருக்க உங்கள் வீட்டிலே ஒரு ரூம் இருக்குன்னு சொன்னாங்களே’’ என்று குஞ்சான் செங்கமலத்தின் முகத்தைப் பார்த்தான்.

  “யார் சொன்னாங்க?”

  “யாரோ!’’

  “யாருக்கு?’’

  “எனக்கேதான். எட்டாக் கையிலிருந்து இங்கே போகவர கஷ்டமாயிருக்கு’’ என்று சொல்லிக்கொண்டே சிரித்தான்.

  “இடமில்லையே” என்று சொல்லிவிட்டு, பிசகுக்கு மன்னிப்புக் கேட்பதுபோல அவளும் சிரித்தாள்.

  யாரோ சொன்னாங்க கேட்டேன். ஒண்ணும் நெனச்சுக்கிடாதே!’’ என்று கண்ணைச் சிமிட்டினான்.

  கண் சிமிட்டலுக்குள்ள பொருள் செங்கமலத்திற்குத் தெரியாதென்று சொல்லமுடியாது. ஆனால், அவள் மறுபடியும் சிரித்தாளே ஒழிய, வேறு பதில் சொல்லவில்லை.

  குஞ்சான் அவளை விட்டுவிட்டு நரியன் பக்கம் திரும்பினான்.

  “ஏண்டா பயலே! கோழிக் குஞ்சுபோல ஆயாவையே சுத்திக்கிட்டுக் கிடக்கிறே? பம்பரம் கிம்பரம் எல்லாம் ரோடிலே ரெண்டு பயல்களோடே போய் விளையாடறதில்லே?’’

  நரியன் அவனை வெறிக்கப் பார்த்தானே ஒழிய, பதில் சொல்லவில்லை.

  “சொன்னால்கூடப் போறதில்லை” என்று செங்கமலம் குறுக்கிட்டாள்.

  “சின்னப் பயதானே!’’ என்று சொல்லிவிட்டு, குஞ்சான் அரைச் சிரிப்பு சிரித்துக்கொண்டே, உள்ளே போய்விட்டான்.

  அன்று மத்தியானம் செங்கமலம் வழக்கம்போல இலைக்கட்டு அறையில் சாப்பாட்டுக்குப் பிறகு கண்ணயர்ந்தாள். நரியனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, கிளப்பை விட்டு வெளியே கிளம்பினான். அவன் கிளம்பிப் போன பொழுது முதலாளி பெட்டி அடியில் உட்கார்ந்திருந்தார். நரியனுக்குக் குறிப்பு எதுவும் இல்லை. கால் போன வழியே போனதில் சிறிது நேரத்திற்குள் குளத்தங்கரை அண்டை வந்துவிட்டான்.

  நல்ல உச்சிப் பொழுது. குளம் வெய்யிலிலே தவித்துக் கொண்டிருந்தது. கரையோரத்திலிருந்து மரங்களும் செடிகளும் சேர்ந்திருந்தன. நரியன் குளத்தைச் சுற்றி வந்தான். காவல்காரனைக் காணோம். குளத்தில் மூலைக்கொருவராய்த் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள். காவல்காரனில்லாவிட்டால் எத்தனை பேர் மீன் பிடிக்கிறார்கள்!

  இவர்களை எல்லாம் பார்த்ததும் ஏனோ அவனுக்குத் தாயாரின் நினைப்பு வந்துவிட்டது. வழக்கமாக அவள் தூங்கும்பொழுது பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன், இப்பொழுது சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டான்! குளத்துக் காவல்காரன் செய்த காரியத்தைத் தானும் செய்துவிட்டான்! இந்த ஞாபகம் வந்ததும் கிளப்புக்குத் திரும்பினான்.

  இலைக் கட்டறையில் அவன் தாயார் தூங்கிக்கொண்டிருந்தாள். முதலாளி இலைக் கட்டுகளைப் பரிசோதித்து, அழுகினதையும் கிழிந்ததையும் ஒதுக்கிக்கொண்டிருந்தார். நரியன் திரும்பி வந்ததைப் பார்த்ததும், திடுக்கிட்டவர்போல கைவேலை ஒரு நிமிஷம் தானாக ஓய்ந்தது. “எங்கேடா வெய்யிலில் சுத்திவிட்டு வருகிறாய்?’’ என்றார். அவர் கேட்ட மாதிரி, ஏன் திரும்பி வந்தாய் என்று கேட்பது போலிருந்தது. தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறையில் முதலாளி இலைக்கட்டைப் பரிசோதிக்க வந்தது அவன் மனத்தில் கோபத்தையும் வெறுப்பையும் தூண்டிற்று. அவன் பதில் சொல்லவில்லை.

  “ஏண்டா, கேட்கிறேன்_?’’

  நரியன் அமைதியாகப் பதில் கூறினான்:

  “சும்மா குளத்தங்கரைப் பக்கம் போனேன். காவல்காரன் இல்லை. ஆளுக்கொரு பக்கமாகத் தூண்டில் போட்டுக்கிட்டு இருந்தாங்க. பாத்துட்டு வரேன்.”

  நரியன் பதில், முதலாளிக்குச் சுருக்கென்று தைத்தது. அவசர அவசரமாக இலைக்கட்டுகளைக் கட்டி வைத்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினார்.

  சிறிது நேரம் கழித்து, செங்கமலம் தூங்கி எழுந்தாள்.

  “நல்ல தூக்கம்போல இருக்கு’’ என்றான் நரியன்.

  “காலையில் இருந்து வேலை செய்யறது சோறு தின்னதும் தலையை அமட்டுது. நல்லாத் தூங்கிட்டேன்.’’

  “நான் இப்போ குளத்தங்கரைப் பக்கம் போயிருந்தேன். குளத்திலே காவல்காரன் இல்லை. ஆளுக்கொரு பக்கமாகத் தூண்டி போட்டுக் கிட்டிருந்தாங்க. குளத்துத் தண்ணி சின்னச் சின்ன அலையா சிரிச்சு ஓடிக்கிட்டிருந்துச்சு, வேடிக்கை பாத்துட்டு வரேன்... ஆமாம், முதலாளி இங்கே வந்து இலைக்கட்டை எல்லாம் சரிப்படுத்திக்கிட்டிருந்தாரே, தெரியுமா?”

  “நான்தான் தூங்கிட்டேனே! அறைக்கா வந்தாரு?’’ என்று செங்கமலம் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

  “அதான் இங்கெல்லாம் தூங்கக்கூடாதுன்னு சொல்றேன். இனிமே உருமத்திலே சோறு தின்னூட்டு, ஊட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தா என்னவாம்?’’

  திரும்பி வர நேரமாகிவிடும் என்று தாயார் சொன்ன போது, நரியனுக்குச் சரியாகப் படவில்லை. இருந்தாலும் தாயாருடன் தர்க்கத்திற்கு ஆரம்பிக்கவில்லை. மனதிற்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்து கொண்டான். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆயா இருக்கும் இடத்தை விட்டுப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டான்.

  ஆனால், கிளப்பிலிருந்தவர்கள் மட்டும் நரியனை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை, சின்னப்பயல் என்று நினைத்துக்கொண்டு, அவன் இருந்தால்கூட ஏதோ சாக்கிட்டு செங்கமலத்திடம் பேசினார்கள். செங்கமலம் எல்லாரிடத்திலும் சின்னச் சிரிப்பும் பெரிய சிரிப்புமாக எதிர்க்கடைப் போட்டாள். நரியனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. குளத்துக்குக் காவல்காரன் இல்லை என்று நினைத்துக்கொண்டே இருக்கட்டும்; பிறகு தெரியும் என்று, நரியன் நினைத்துக் கொண்டான்.

  இப்படியே சில நாட்கள் போன பிறகு, நரியன் ஒரு மாறுதலைக் கண்டான். மலையாளி, குஞ்சான் முதலியவர்கள் தாயாருடன் பேச முயல்வதில்லை. அது ஒரு ஆச்சர்யமாக இருந்தது நரியனுக்கு. ஆனால், அதைவிடப் பெரிய ஆச்சர்யமொன்று அன்றிரவு காத்துக் கொண்டிருந்தது.

  இரவில் கிளப் வேலை எல்லாம் முடிந்து சாப்பிட்ட பிறகு செங்கமலமும் நரியனும் வீட்டுக்குத் திரும்பினார்கள். வழக்கம்போலக் கால் கையைக் கழுவிக்கொண்டு செங்கமலம் முற்றத்தின் ஓரத்தில் சிம்மிணி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, வந்து உட்கார்ந்துகொண்டாள். தன் இடுப்பிலிருந்த இரண்டு மூன்று பொட்டலங்களைப் பிரித்துக் கீழே வைத்து, நரியனைப் பார்த்து, “சாப்பிடு’’ என்றாள்.

  நரியனுக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது.

  “இதேது, வாங்கினியா?’’

  “இல்லியே?’’

  “பின்னே ஏது?’’

  “முதலாளி குடுத்தாரு.’’

  “எதுக்காக?’’

  “சொச்சமிச்சம் இருந்தா, கிளப்புங்களிலெல்லாம் வேலைக்காரிக்குக் குடுக்கிற வழக்கம்தான்.’’

  “எப்பொ குடுத்தாரு?’’

  உடல் அயர்ந்து வீட்டுக்கு வந்திருந்தவளுக்கு, நரியன் நச்சுநச்சென்று கேட்பது பிடிக்கவில்லை.

  “எப்போ குடுத்தாரு _ உனக்குக் காட்டினப் புறவுதான் குடுக்கணுமா என்ன? தின்னுன்னா திம்பியா?” என்று அதட்டினாள்.

  ஆயா சொல்வதற்காக இரண்டை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டான். தூக்கம் வருது என்று அந்த இடத்திலேயே குப்புறப்படுத்துக் கொண்டு விட்டான்.

  அப்பொழுதுதான் செங்கமலத்துக்கு முதல் முதலாக மகனிடத்தில் _ சின்னப் பையனிடத்தில் _ பயம் வந்தது. தவறுதல் ஒன்றுமில்லாத போதே, என்னென்னவோ பேசுகிறானே! இவன் வாய்த் துடுக்கு எங்கேபோய் நிற்குமோ என்று பயந்தாள்.

  மறுநாளைக்குக் கிளப்புக்குப் போய்விட்டுத் திரும்பு காலில் நரியன் ரொம்ப எச்சரிக்கையாக இருந்தான். கிளப்பை விட்டு வெளியே போகும்போது முதலாளி தாயாரிடத்தில் பொட்டலம் கொடுத்ததைப் பார்த்தான். பார்த்தவன் சும்மா இருக்கவில்லை.

  “இது என்னாத்துக்குங்க? கொசறா?’’ என்றான்.

  “ஒனக்குத் தாண்டா; ஊட்டுலே போய்ச் சாப்பிடு’’ என்றார்.

  மேலே நரியன் பேச முடியாதபடி செங்கமலம் நடையைச் கட்டிவிட்டாள். நரியனும் மனதிற்குள் ஏதோ நினைத்துக்கொண்டே கிளம்பிவிட்டான்.

  அதற்குப் பிறகும் நாள் தவறாமல் வீட்டுக்குப் பொட்டலங்கள் வந்து கொண்டிருந்தன. நரியன் சிலநாள் பட்சணம் தின்பான். சிலநாள் தின்ன மறுத்துவிடுவான். அவன் சிலநாள் தின்றபோதிலும் செங்கமலத்திற்கு நரியனிடத்தில் இருந்த பயம் நீங்கவில்லை.

  பதினைந்து நாளைக்குப் பிறகு வழக்கம்போல் செங்கமலமும் நரியனும் வீட்டுக்குத் திரும்பிக்-கொண்டி-ருந்தார்கள். முதலாளி கொஞ்ச தூரம் பின்னால் வந்து-கொண்டிருந்தார். இதை இருவரும் பார்த்தார்கள். வழக்கமாக இந்த வழியே அவர் வீடு செல்வதில்லை. “முதலாளி வருகிறாரோ?’’ என்று கேட்டான் நரியன்.

  “எங்கே போறாரோ?’’ என்றாள் செங்கமலம்.

அதற்குப் பிறகு செங்கமலம் வீட்டுக்கு வந்து சிம்மிணி விளக்கை ஏற்றிக்கொண்டு, முற்றத்தின் ஓரத்தில் உட்கார்ந்தாள். நரியனும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். முதலாளி திடீரென்று வீட்டுக்குள் நுழைந்ததும், செங்கமலத்திற்குத் திகைப்பாய் இருந்தது. நரியனக்கு குப்பென்று உடலில் சூடுண்டாயிற்று.

  “என்னங்க’’ என்றாள் செங்கமலம்.

  “ஒண்ணுமில்லை; நாலு பசங்களுக்கு என் பிறந்த நாளைக்குச் சட்டைத் துணி வாங்கிக் குடுக்கிற வழக்கம். மூணு பேருக்குக் கொடுத்து விட்டேன். இந்தா நரியனுக்கு’’ என்று ஒரு கடுதாசுப் பொட்டலத்தை அவிழ்த்து ஒரு டிராயரையும் சட்டையையும் செங்கமலத்தினிடம் நீட்டினார்.

  செங்கமலத்தின் முகம் மலர்ந்தது. ஆனால், வாக்கில் மட்டும் “இதெல்லாம் என்னாத்துக்குங்க’’ என்ற சம்பிரதாயமான பேச்சு வெளிப்பட்டது. வாய் பேசிற்றே ஒழிய, கை அவைகளை வாங்கிக்கொண்டது. அவைகளைப் பிரித்துப் பார்க்காமல், “இந்தா’’ என்று நரியனிடம் கொடுத்தாள்.

  நரியன் தயங்காமல் வாங்கிக்கொண்டான். ஆனால், அடுத்த நிமிஷம் அவன் செய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. துணிகளைச் சுருட்டி அவர் காலடியில் விசிறி எறிந்தான். முதலாளிக்கு முகம் தொங்கிவிட்டது. “வெறும் தறுதலை’’ என்றார்.

  “இவன் அப்பாரைப்போல் எதுனாச்சும் நல்ல இடத்திலே பொல்லாப்பைக் கொண்டாந்துடுவான்னு
நெனைச்சேன்; சரியாப் போயிட்டுது. சின்னப் பயல், மனசுலே வச்சுக்காதிங்க” என்றாள்.

  முதலாளி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, வெளியே போய்விட்டார்.

  செங்கமலம் நரியனுடன் பேசவில்லை. பாயைப் போட்டுக் கொண்டு தூங்கிவிட்டாள். மறுநாள் காலையில் வழக்கம்போல் கிளப்புக்கு வேலை செய்யக் கிளம்பும் சமயம். நரியனும் அப்பொழுது எழுந்துவிட்டான். “ஆயா?’’ என்றான்.

  “ஏண்டா’’ என்று எரிந்து விழுந்தாள்.

  “இம்மே இந்த வேலை வேண்டாம். காவல்காரன் இல்லாத குளமின்னு நெனைச்சுக்கிறான்கள். ஆயா வரமாட்டான்னு நான் போய்ச் சொல்லிடறேன்” என்று நரியன் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டான்.

  செங்கமலம் திகைத்து உட்கார்ந்துவிட்டாள்.