Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

புதுமைப்பித்தன்

Labels: ,

புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருதாச்சலம். 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, திருப்பாதிர்புலியூரில் அவர் பிறந்தார். தந்தை பெயர் வி. சொக்கலிங்கம் பிள்ளை; அம்மா பெயர் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனின் உடன் பிறந்த-வர்கள் இரண்டுபேர். முதலில் தங்கை ருக்மணி அம்மாள், பிறகு தம்பி சொ. முத்துசாமி.

pudu3தாசில்தாராகப் பணியாற்றிய வி. சொக்கலிங்கம் பிள்ளை பணிநிமித்தம் பல ஊர்களுக்கு மாற்றலாகிப்-போனபோது, புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வியும் அந்தந்த ஊர்களுக்கு மாற்றப்பட்டது. செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிஞ்சி ஆகிய ஊர்களில் தொடக்கக் கல்வி கற்ற புதுமைப்பித்தன், 1918இல் வி. சொக்க-லிங்கம் பிள்ளை ஓய்வுபெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பி, ஆர்ச்யோவான் ஸ்தாபனப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931 இல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதேவருடம் ஜுலையில் கமலாம்மாளுக்கும் புதுமைப்-பித்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கமலாம்மாள் (1917_1995) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.

1933 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி புதுமைப்பித்தனின் முதல் கதையான `குலோப் ஜான் காதல்’ காந்தியில் வெளிவந்தது. பிறகு 1934 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து அவருடைய பல கதைகள் மணிக்-கொடியில் வெளிவரத் தொடங்கின. மணிக்கொடி பி. எஸ். ராமையாவுடன் அவருக்கு நெருங்கியத் தொடர்பிருந்தது. 1934 ஆம் முற்பகுதியில் புதுமைப்பித்தன் சென்னைக்கு சென்றார். 1934 ஆகஸ்டு மாதம் ஊழியனில் உதவியாசிரியராக சேர்ந்து 1935 பிப்ரவரி வரை ஊழியனில் பணியாற்றினார். பிறகு 1936 முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியில் உதவியா-சிரியராக இருந்தார். நிர்வாகத்துடனான மோதலின் காரணமாக ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் தினமணியிலிருந்து விலகியபோது பிற உதவியா-சிரியர்களோடு சேர்ந்து புதுமைப்பித்தனும் விலகினார்.

புதுமைப்பித்தனின் புத்தகங்கள், முறையே 1939இல் உலகத்துச் சிறுகதைகள், பேஸிஸ்ட் ஜடாமுனி கப்சிப் தர்பார், ஆகியவையும் 1940 இன் தொடக்கத்தில் புதுமைப்-பித்தன் கதைகள்_ம் பிறகு ஆறு கதைகள்_ம் 1943 இல் காஞ்சனையும், 1947 இல் ஆண்மை, உலக அரங்கு ஆகியவையும் வெளிவந்தன.

1944 ஆம் ஆண்டு டி. எஸ். சொக்கலிங்கம் தினசரி_யை தொடங்கிய போது புதுமைப்பித்தன் அதில் சேர்ந்தார். பிறகு தினசரியிலிருந்து விலகித் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1946 இல் ஜெமினியின் `அவ்வை’ மற்றும் `காமவல்லி’ படங்களில் பணியாற்றினார். பின்பு `பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை தொடங்கினார். 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் புதுமைப்பித்தனின் மகள் தினகரி பிறந்தாள்.

1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 1948 மே தொடக்கம் வரை புதுமைப்பித்தன் எம். கே. டி. பாகவதரின் `ராஜமுக்தி’ படத்திற்காக புனேயில் தங்கி பணியாற்றினார். அங்கு அவர் கடுமையான காசநோய்க்கு ஆளானார். நோய் முற்றி மருத்துவர்கள் கைவிட்டு-விட்ட நிலையில் 5 மே 1948 இல் திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார். அதே ஆண்டு ஜுன் 30 இல் மறைந்தார்.

காலம் தாண்டும் ஆற்றல்

Labels: , ,

சுந்தர ராமசாமி

`நோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா?’

என்கிற கேள்விக்கு சுந்தர ராமசாமி காலச்சுவடு; இதழ் 10, ஜனவரி 1995-_ல் எழுதிய பதிலின் சுருக்கம்.


  புதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல் சிந்தனை-களின் தெறிப்புகளாக முடிந்து போகின்றன. கவிதைகள், பொருட்படுத்தத் தகுந்த சோதனை முயற்சிகள், ஆகக் கூடிய வெற்றியை அவர் பெற்றிருப்பது சிறுகதை-களில்தாம்.

புதுமைப்பித்தனுக்கு காலத்தின் மீதான பயணம் சாத்தியப்பட்டிருப்பது. இப்போது நிரூபணமாகிக்-கொண்டிருக்கிறது. அவர் எழுதி முடித்து இன்று அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. வாழ்க்கைக் கோலங்களும், வாழ்க்கைப் பார்வைகளும் எவ்வளவோ மாறி-விட்டன. அவருக்குப்பின் வந்த பல படைப்பாளிகள் அவர் காட்டாத சோபைகளையும், விரிவுகளையும், ஆழங்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் அவருடைய சிறுகதைகள் நம்முடன் நெருக்கமான உறவு கொள்கின்றன. நமக்கும் அவருக்குமான உறவில் சென்றுபோன காலத்தின் அலுப்பு ஊடுருவ முடியாமல் திணறுகிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் பலவும் நிறைவின் அமைதி கூடாதவைதாம். ஆனால் நிறைவு கூடியவையும் கூடாதவையும், அன்றும் சரி, இன்றும் சரி படைப்பு வீரியம் கொண்டவையாகவே காட்சி அளித்து வருகின்றன. இந்த வீரியம் ஆழ்ந்த, நெருக்கமான உறவை வாசகர் மனதில் உருவாக்குகிறது. இதன் கவர்ச்சியும் அலாதியானது. கவர்ச்சியின் பளபளப்புக்கு நேர் எதிரான கவர்ச்சி இது. கவர்ச்சியின் பளபளப்பு கோலங்கள் சார்ந்தது எனில், வீரியம் சாராம்சம் சார்ந்தது. இன்றைய வாசகனும், அந்த வீரியத்தை அவருடைய மொழி சார்ந்தும் அவர் தேர்வு கொண்ட பொருள் சார்ந்தும், படைப்பை முன் வைத்த விதம் சார்ந்தும், ஊடுருவி நிற்கும் விமர்சனத்தின் கூர் சார்ந்தும் படித்து அனுபவிக்கலாம்.

நோபல் பரிசு பெற்ற இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகள் எல்லாமே ஆகத் தரமானவையாக இருக்கக்கூடும் என்பது நம் கற்பனை. வாசிப்பின் மூலம் நேர் பரிச்சயம் கொள்ளத் தவறும் போதும், தரத்தை சுய நிர்ணயம் செய்யும் ஆற்றலைப் பெறாத நிலையிலும் உருவாகிவரும் பிரமைகள், தாழ்வு மனப்பான்மையில் ஊறி நம் பார்வையைக் கெடுக்கிறது. அத்துடன் நோபல் பரிசுகள் தர நிர்ணயத்தில் வெற்றி பெற்றவையாக எப்போதும் அமைவதும் இல்லை. தோல்ஸ்தாய், காஃப்கா, ஜேம்ஸ் ஜாÊய்ஸ், இப்ஸன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்பெர்க், வலேரி, ரில்கே, மெர்சல் ப்ரூஸ்ட், கசாந்த் ஸாக்கீஸ் போன்றவர்களுக்குத் தரப்படாத நோபல் பரிசின் மீது உலக அரங்கில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இவ்வுன்னதப் படைப்பாளிகள் பெறாத பரிசை இவர்களுக்குக் கீழ்நிலையில் நிற்கும் படைப்பாளிகள் பலரும் பெற்றும் இருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற பலரும் காலத்தை எதிர்கொள்ள முடியாமல் சரிந்து கொண்டிருப்பது இப்போது கண்கூடு. இவர்களுடைய எண்ணிக்கையும் கணிசமானது. ஜவான் புனின், ஷோலக்கோவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும், ஜான் ஸ்டீன்பெக், சிங்ளேர் லூயி, பேள் எஸ் பக் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ஜான் கால்ஸ்வர்த்தி என்ற ஆங்கில ஆசிரியரும் காலத்தின் முன் பின்னகர்ந்து கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர், ரவீந்திரநாத் தாகூரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது நமக்கு மனச் சோர்வை தரக்கூடியதுதான். ஆனால், காலம் ஒரு படைப்பாளியை ஏந்தும் போதோ உதறும் போதோ அவன் பிறந்த தேசத்தைப் பற்றியோ அவன் எழுதிய மொழியைப்பற்றியோ அவ்வளவாகக் கவலைப்படுவது இல்லை.

ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகர்கள் நான் குறிப்பிட்டிருக்கும் இவ்வாசிரியர்களின் படைப்புகளில் ஒரு சிலவற்றையேனும் படித்து இவர்களுடைய எழுத்தை புதுமைப்பித்தனின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஆசிரியர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடிப்பதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நோபல் பரிசு பெற்றவர்களின் புத்தகங்களைப் பெறுவது சுலபமாக இருப்பது நம் விசித்திரத் தலைவிதி. இவர்களின் எழுத்தின் ஒரு பகுதியைப் படித்துப் பார்த்தால் கூட காலத்தின் களிம்பு இவர்கள் மீது படிந்துவிட்டிருப்பது தெரியும். நமக்கும் இவர்களுக்கும் இடையிலான காலம் இவர்களுடனான நம் உறவிலும் பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. இன்று இவர்களின் வீரியத்தை நம்மால் உணர முடிவதில்லை. புதுமைப்பித்தன், அவரிடம் நாம் எதிர்ப்பார்ப்பதைவிட குறைவாகத் தந்திருக்க, இவர்கள் ஒவ்வொருவரும் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகம் தந்து நம்மை அலுப்புக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற உணர்வையே நாம் பெறுகிறோம். நம் சிரத்தையை இவர்களால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இவர்களைப் படித்து ஒப்பிட்டுப்பார்த்தால் புதுமைப்பித்தனின் காலம் தாண்டும் ஆற்றலும், அவர் அளிக்கும் புத்துணர்ச்சியும் தற்பெருமை சார்ந்த மதிப்பீடு அல்ல என்பது தெரியவரும். தமிழ் வாசிப்பில் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தமிழில் நிறையவே படிக்கக் கிடைக்கிற ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளுடன் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் படிக்கக் கிடைக்கும் நோபல் பரிசு பெற்ற ஆசிரியையான பேள் எஸ். பக்கின் `நன்னிலம்’ என்ற நாவலின் தரத்துடன் புதுமைப்-பித்தனின் எழுத்தின் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்யலாம்.

சிற்பியின் நரகம்

Labels: ,

புதுமைப்பித்தன்

சூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும் விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேச வாசிகளும். வெளுத்து ஒதுங்கிய கடாரவாசிளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்!

800px-coral_castle_1 

அஸ்தமன சூரீயனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது, கீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.

இந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோக்கா காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது. பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல் வார்ப்பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்?

பைகார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.

திடீரென்று, ''சிவா!'' என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி!

''யவனரே! உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ? நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா?எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம்! கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான்! எல்லாம் ஒன்றில் லயித்தால்...?''

''உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்ச மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை... அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை  ஒப்புக்கொண்டால், உமது கட்டுக்கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்... எனக்கு அது வேண்டாம்... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்...''

''சிவ! சிவ! இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது?''

''உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால்தான் அர்த்தமுண்டு. எங்கள் *ஜூபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை...'' என்று சிரித்தான் பைலார்க்கஸ்.

''சிவ! உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுத்தான்!'' என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்துகொண்டார் பரதேசி.

''நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா?'' என்றார் மீண்டும் அச்சந்நியாசி.

''ஆமாம்! அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு... அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்...''

''ஓஹோ! அந்தச் சிலை செய்கிற கிழவனையா? உமக்கு ஏற்ற பைத்தியக்காரன்தான்... ஏதேது! அவனே அதோ வருகிறானே!'' என்றார் சாமியார்.

பைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.

சாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, ''பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடிவந்தேன்! வீட்டிற்கு வருகிறாயா? எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது...!'' என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.

''இவரைத் தெரியுமா? பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி... அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்... பைலார்க்கஸிடம் முடியுமா?'' என்று கேலியாகச் சிரித்தான் யவனன்.

''சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்'' என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.

''என்ன, என்ன! நீயுமா?'' என்றான் பைலார்க்கஸ்.

''பைலார்க்கஸ்! நீ நீரசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே...''

''அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா! எனது வேலை அது...''

''சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்!'' என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.

வண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக்கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன்? அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரத்தத்தின் அடியில்தான்! சாத்தனின் வண்டி அதில் முட்டிக்கொள்ளவிருந்தது.

*ஜூபிட்டர்: யவன இதிகாசங்களில் குறிப்பிடப்படும் தேவர்களுக்கு அரசன்; கிரகங்களில் வியாழன்.

‘'தெய்வச்செயல்!'' என்றான் சாத்தன்.

''உன் சிருஷ்டி சக்தி'' என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக்கொண்டு.

''பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன்! அது உனக்குத் தெரியுமா? நீ நேற்றுப் பிறந்தவன்... கூத்து!... அதில் எவ்வளவு அர்த்தம்? மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப்பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு  கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன! நீ கேலிக்காரன் - உபநிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை! என்ன ஏமாற்றம்!... ஆசைதான் வழிகாட்டியது. அந்த ரூப செளந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடினேன்!... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்?''

''நீதான் சாதித்தாய்! நீதான் பிரம்மா! உன் சாதனைதான் அது. சிருஷ்டி! மயங்காதே! பயப்படாதே! நீதான் பிரம்மா! சிருஷ்டித் தெய்வம்!'' என்று பைலார்க்கஸ் அடுக்கிக்கொண்டே போனான்.

சாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.

வண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.

மூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.

''சுவாமி வரவேண்டும்! பைலார்க்கஸ், இப்படி வா!'' என்று இருவரையும் அழைத்துக்கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தான்... அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்!

''மூபாங்கோ, தீபம்!'' என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.

''இங்குகூடவா விளக்கு இல்லை! திரையை ஒதுக்கு! ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை!'' என்று திரையை ஒதுக்கினான்.

இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபஒளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்கிரகம்! விரிந்த சடையும் அதன்மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக்  காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு!

சந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்...

பனித்த சடையும், பவளம்போல்
மேனியும், பால் வெண்ணீறும்,
குனித்த புருவமும், கொவ்வைச்
செவ்வாயும், குமிண் சிரிப்பும்,

இனித்தங்கசிய எடுத்த பொற்
பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மா நிலத்தே!

''சுவாமி, அப்படி சொல்லக் கூடாது!''

''சாத்தா! அவர் சொல்லுவதுதான் சரி! இது கலையா! இது சிருஷ்டி! இதை என்ன செய்யப்போகிறாய்?''

''அரசன் கோவிலுக்கு... இதென்ன கேள்வி?''

''என்ன! இந்த அசட்டுத்தனத்தை விட்டுத்தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு...'' என்று வெறி பிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ்.

''சீ, பைலார்க்கஸ்! உனது வெறிபிடித்த கொள்கைகளுக்கு யவனத்தான் சரி! அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத்தான் சரி உன் பேத்தல்!''

''சாத்தனாலே! உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலைதூக்கப் போகிறார்கள்...!'' என்றார் சாமியார்.

''இந்த வெறிபிடித்த மனிதர்களைவிட, அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது...'' என்று கோபித்துக்கொண்டு பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான்.

2

அன்றுதான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம். சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூற வேண்டும். சாத்தனுக்கு இலட்சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக்கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம்.

புதிய கோவிலிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்த ஜாமமாகி விட்டது.

வயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான்...

அப்பா! என்ன ஜோதி! அகண்டமான எல்லையற்ற வெளி! அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த, ஒரு புன்சிரிப்பு! மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம்! என்ன ஜீவன்! என்ன சிருஷ்டி!

திடீரென்று எல்லாம் இருண்டது! ஒரே கன்னக் கனிந்த இருள்! ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு!

பிறகும் ஒளி... இப்பொழுது தங்கத்தினாலான கோவில்! கண்கள் கூசும்படியான பிரகாசம்!... கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன... உள்ளே அந்தப் பழைய இருள்!

சாத்தன் உள்ளே செல்லுகிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது! என்ன! இதுவா பழைய சிலை! உயிரில்லை! கவர்ச்சிக்கும் புன்னகையில்லையே!...எல்லாம் மருள்!... மருள்...!

அந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.

''எனக்கு மோட்சம்! எனக்கு மோட்சம்!'' என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை! இப்படியே தினமும்...

நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன - அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே!

''எனக்கு மோட்சம்...!'' இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்!

சாத்தன் நிற்கிறான்...

எத்தனை யுகங்கள்! அவனுக்கு வெறி பிடிக்கிறது. ''உயிரற்ற மோட்சச் சிலையே! உன்னை உடைக்கிறேன்! போடு! உடை! ஐயோ, தெய்வமே! உடைய மாட்டாயா! உடைந்துவிடு! நீ உடைந்து போ! அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...!'' இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கணத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா! பழைய புன்னகை!...

சாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.

‘'என்ன பேய்க் கனவு, சீ!'' என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.

''பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்...'' சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.

நினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்

Labels: ,

ramana_ps75@yahoo.com

தமிழ்ப் புனைவுபரப்பிலும், கவிதை புலத்திலும் நகுலனின் இடம் தனித்தது. தமிழ் நவீன கவிதையின் இரு பாதிக்கத்தக்க குணாம்சங்களாக பிரமிளையும் நகுலனையும் சொல்லலாம். பிரமிளுடையது, மரபின் செழுமையையும் சமத்காரத்தையும் எடுத்துக்கொண்டு படிம மொழியில் பேசுவது. நகுலனின் கவிதையை, மரபை clip_image002[3]அழைத்தும், மரபிலிருந்து விடுபட்டுக் கொண்டும் எழுதிக் கொண்ட நேர் கவிதை எனலாம். முதல் தலைமுறை நவீன கவிஞர்களை உருவாக்கிய சி.சு. செல்லப்பா அவர்களின் எழுத்துப் பத்திரிகையில்தான் நகுலனின் (டி.கே துரைஸ்வாமி) கவிதைகளும் தொடங்கின. எழுத்தில் எழுதிய பல கவிஞர்களின் கவிதைகள் இன்றைய வாசகன் படிக்கும்போது உணர்வெழுச்சியைத் தராமல் அலுப்பை தந்து கொண்டிருக்கும் வேளையில், மஞ்சள் ஒளி படிந்த அபத்த நிலையை எதிர்கொள்ளும் வினோதத்தை நகுலனின் கவிதைகள் தந்தபடியிருக்கின்றன.

நகுலனின் வீடு தமிழ்நாட்டுக்கு வெளியே திருவனந்தபுரத்தில் கெளடியார் ஹில்ஸ் சாலையில் நவீன பங்களாக்களுக்கு இடையில், கேரள நிலப்பரப்புக்கேயுரிய விசித்திரமான திடீர் இறக்கத்தில் உள்ளது. நிலம் சார்ந்து அவரின் வாழ்விடம் அன்னியப்பட்டிருப்பதற்கும், அவருடைய எழுத்துகளுக்கும் நுட்பமான உறவிருக்கிறது. வட்டார நாவல்களும், சிறுகதைகளும் வரவேற்புடன் எதிர்கொள்ளப்பட்ட காலத்தில்தான் இவரது புத்தகங்களும் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ, பிற புனைவுகளிலோ தமிழ் புனைவில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதை மாந்தர் உருவாக்கம், பின்னணி தொடர்ச்சி இவை எதுவும் இருக்காது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் இயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில், ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஊரைப்பற்றிய கவனிப்பாக இருக்கும். (அந்த ஊரில் நிறைய பேர் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பார்கள்) ஒர் ஊர் பற்றி எந்த ஒட்டுதலும், விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு, நகுலனின் ஜன்னலிலிருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது.

தமிழில் தத்துவ சாய்வு எழுத்துக்கள் நிறைய உண்டு. மனத்தடையற்று எண்ணங்கள் முன்னும், பின்னும் ஊடறுத்த நகுலனின் சுய அவதானத்திலிருந்து, தத்துவமும் புனைவும் ஒரே வெளியில் உருக்கொண்டன.

யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம்.

இந்தப் பார்வைதான் வட்டார கலாச்சாரத்தின் நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்குக் காரணம். கலாச்சாரம், தான் உருவாக்கியிருக்கும் தளைகளை எழுத்தாளன் ஊடறுக்கும்போது முதலில் பலத்த எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னைப் போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதாக பாவனை செய்து கொண்ட - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விழிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், இரகசியக் கனவுகளின் மீதும் கட்டப்பட்டதுதானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி இரகசியத் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும், மரணமும் ஒரே கணத்தில் நடந்து, வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நகுலனின் கவிதைத் தொகுப்புகள்:

1. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

2. மூன்று

3. ஐந்து

4. சுருதி

5. இரு நீண்ட கவிதைகள்

நகுலனின் உரைநடை:

1. நினைவுப்பாதை (நாவல்)

2. நாய்கள் ( '' )

3. நிழல்கள் ( '' )

4. வாக்குமூலம் ( '' )

5. நவீனின் டைரி ( '' )

6. நகுலனின் கதைகள்(சிறுகதைகள்)

கோட்ஸ்டாண்ட் கவிதைகள்

Labels: ,

நகுலன்

clip_image002

வழக்கம்போல்

வழக்கம் போல் வெளி வாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கின்றான்.
   அந்தி மயங்கும் வேளை--_ -
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர_சக்தி அவனை ஆட்கொள்
கிறது.
      வெயில் மறைகிறது.
நிழல் மெல்ல மெல்ல இல்லாமல்
ஆகும் நேரம் நெருங்குகிறது.
இலைகளும் மரங்களும்
மங்கலாக மயங்கிக் கிடக்கும்
தோற்றம். தென்னை மரத்தின்
உச்சியில் ஒரு ஒற்றைக்
காகம் மெல்லக் கா கா என்று
குரல் கொடுக்கிறது. கையெழுத்து
மறையும் வேளை என்று
சொல்கிறார்கள். பிரமலிபியும்
என்று கூடச் சொல்லத் தோன்
றுகிறது. 'பட்'டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் 'கப்'பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு -
எல்லாமே மறைகின்றன.
எங்கும் 'திட்டு' 'திட்டாக'
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.

தன் மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
   அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
          என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
                என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் அவனை
   விடுவித்துக்கொள்ள
   முடியவில்லை
   ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது,
* * *
வேறொரு நண்பனைப் பார்க்கச்
   சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
   பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
   என்று.


கடைசிக்கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
   எல்லாம்.

நகுலன்

Labels: ,

நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி, டி.கே. துரைசாமி என்கிற பெயரிலும் எஸ். நாயர் என்கிற பெயரிலும் நகுலன் எழுதியிருக்கிறார். 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகுலன் பிறந்தார். ஆங்கிலத்தில் clip_image001முதுகலைப்பட்டம் பெற்று பின்னர் நகுலன் திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மறைந்த பெண் கவிஞர் திரிசடை, நகுலனின் சகோதரி. நகுலனின் வெளிவந்திருக்கும் படைப்புகள்: நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி (1978), மூன்று (1979), ஐந்து (1981), கோட்ஸ்டாண்ட் கவிதைகள் (1981), இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983) இரு நீண்ட கவிதைகள் (1991). இப்பொழுது நகுலன் சுகவீனமடைந்து விட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தன்னைச் சந்திக்க வந்த ஒரு நண்பரிடம் நகுலன் இப்படிச் சொன்னார்: ``நான் இறந்த பின்பு தயவு செய்து எனக்கு எவரும் இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்திற்கு என்னால் வர இயலாது’’.

நவீனத் தமிழ்க் கவிதையில் நகுலனின் முக்கியத்துவம் சமீப காலமாய் மௌனமாய் மறக்கப்பட்டு வரும் ஒன்று. அனேகமான நாற்பது வயதைக் கடந்துவிட்ட எல்லா கவிஞர்களுக்கும் மொத்த கவிதைத் தொகுதி வெளி வந்து அவை மறுபிரசுரமும் கண்டுவிட்ட இக்கால கட்டத்தில் இதுவரை நகுலன் கவிதைகளைத் தொகுத்து வெளியிட எந்தப் பதிப்பகமும் முன்வரவில்லை. நகுலனின் புத்தகங்கள் எவையும் மறுபிரசுரமும் காணவில்லை, ஆனால் நகுலனிடமிருந்து பாதிப்பை பெற்று நகருவதுதான் நவீனத் தமிழ்க் கவிதைச் சூழலுக்கு ஆரோக்கியமானது என்பது தமிழ்க் கவிஞர்கள் தொடர்ந்து சொல்லிவரும் ஒன்று. நகுலன் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர். அவருடைய எழுத்துக்கள் அவை கவிதை, கதை, கட்டுரை என எதுவானாலும் நகுலனுடையவை என்ற பிரத்யேகக் குறியுடையனவையாகவே இருந்திருக்கின்றன. தத்துவ விசாரம் என்று கருதிவிடத் தக்க ஆனால் சிந்திக்கும் எந்த மனத்தையும் பாதிக்கும் காலம் காலமான மனிதாயப் பிரச்னைகளை நகுலனின் கவிதைகள் ஆராய்கின்றன. வியாபாரத் தனமும் அரசியல் தனமும் இலக்கியத்தையும் கலைகளையும் பாதித்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் அந்தக் கறை சிறிதளவும் படியாத எழுத்துகள் நகுலனுடையவை.

கு.ப. ரா கலையின் தனித்துவம்

Labels: , ,

கரிச்சான் குஞ்சு

(1990_ல் வானதி பதிப்பகம் வெளியிட்ட `கு.ப.ரா.’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கு.ப.ரா. சிறுகதைகள் பற்றிய நீளமான கட்டுரையின் சுருக்கம்)

எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ காண முடியாது. மென்மையான குழந்தை உள்ளமும், பெண்மையின் பிடிவாதமும், அழகும் கொண்ட அற்புதமான நடையுடன் அவரது ஒவ்வொரு கதையும் தனித்தனி உலகங்களாக இப்பொழுதும் சுழல்கின்றன. வாழ்வில் காணும் உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே கு.ப. ரா கலையின் தனித்துவம்.

வாழ்க்கையின் ஆழங்களுக்கு, அனாயசமான பல தளங்களுக்கு மிகச் சாதாரணமாக தனது வாசகனை அழைத்துச் சென்று வாழ்வின் மூலாதாரங்களை அதன் முழு வேகத்துடன் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கு.ப.ரா. சிக்கல்கள் நேரும்போது முடிச்சுகளை அவிழ்க்க அவனுக்கு வழி சொல்லித் தந்ததில்லை, புதியதோர் வாழ்க்கையைக் கனவு காண வைக்கவில்லை, கோஷங்களை எழுப்பவில்லை. ஆனால், வாழ்வின் சாதாரணங்களை எளிமையை, சிறிய சம்பவங்களின் மூலமாக நுட்பமான இலக்கிய சாதனைகள் மூலமாக மிக உயர்ந்த தளங்களுக்கு வாசகனை உயர்த்தினார். எனவேதான் அவரது கதைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பொழுதும் புத்தம் புதியதாய், அழகாய், இளமையாய், துடிப்பும் உணர்வும் நிறைந்து ததும்பும் புதுமைகளாய் இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டு, ஒடுங்கி வீட்டின் மூலையில் நிறுத்தப்பட்ட விக்கிரகங்களாக, மாலையிட்டு, கட்டிலில் கிடத்தப்பட்ட அடிமைகளாக சமையலறையின் மூலையில் புகையும் எண்ணெயில் வேகும் பெண்களை, கு.ப.ரா. சித்தரித்த விதம் எளிமை, பின்பு யாருக்கும் கைவராதது. ஏறத்தாழ நூறு அல்லது நூற்றி இருபத்தி ஐந்து கதைகளை அவர் எழுதியிருக்கலாம். வாழ்வில் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத அதே கணத்தில் ரசக்குறைவான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், சிக்கனமான வார்த்தைகளை உபயோகித்து எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள அவரால் முடிந்தது.

தமிழில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் இன்றும் சிறுகதை என்பதை ஏதோ ஒரு சிறு சம்பவம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சம்பவம் ஒரு செய்தியாகலாம் ஒரு சிறுகதை ஆக முடியாது. ஆனால், அன்றே சிறுகதை உருவ பிரக்ஞை கு.ப.ரா. கதைகளில் நிலைபெற்றிருக்கும் விதம் ஆச்சரியமும் அபூர்வமும் கூடியது. இந்த உருவப் பிரக்ஞையை கடைசிவரை அவர் காப்பாற்றி வந்தார்.

ஆணைக்கண்டு பெண் அஞ்சுவதும், பெண்ணைக் கண்டு ஆண் வெறிப்பதும், முறைப்பதும், இச்சை-யில்லாத இடங்களில் உற்றுப் பார்ப்பதும் இருபாலாரிடமும் காணப்படும் மனோபாவம். இந்த மனோபாவத்தை மனித மனங்களின் ரகசியங்களைத் தேடித் துருவி எழுதிக் காட்டிய கதை கனகாம்பரம். கட்டுப்பெட்டியான கிராமத்துப் பெண் பேசியது மட்டும் அல்ல, வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்து விட்டாள். வந்தவனுக்கு திகைப்பு, ஆச்சர்யம்; ஏதோ ஒரு ரசக்குறைவு; நடக்கக் கூடாது நடந்துவிட்ட பதைபதைப்பு. கணவன் இல்லாத வீடு, நாகரிகமே என்றாலும் தனி பெண்; வந்தவன் நிலைகுலைந்து விட்டான். வெளிச்சம் கண்கூச வைத்துவிட்டது. அவள் இருக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவசரமாக பாய்ந்து வெளியேறினான் அவன். அவளுக்குத் திகைப்பு. உட்காரச் சொன்னது தவறா? அவன் ஏன் ஓடவேண்டும். தடால் என்று கதவு திறக்கும் சத்தம். கணவனுக்கு நிகழ்ந்தது கேள்விப்பட்டு ஆத்திரம் பொங்கியது. “உள்ளே வந்து உட்காரச் சொன்னாயா-?’’ என்று அழுத்தி கேட்கிறான். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. “நீ என்ன சொன்னே சினேகிதங்கிட்ட’’

“ஒண்ணும் சொல்லலியே, இப்ப வந்துடுவார் என்று சொன்னேன்’’

“அதற்காக உள்ளே வந்து உட்காரச் சொல்லணுமா?’’

1940களில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய விசயமாகவும், இன்றைக்கு அப்படியொன்றும் முக்கியத்துவமான விசயம் அல்ல என்றும் மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தெரியலாம். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்றென்-றைக்குமாக நிகழும் இந்த மனோ விசித்திரங்கள், சமுத்திர புயல் என்றைக்கும் சாதாரணமானது அல்ல. மிகச் சிறிய சம்பவம் ஒன்றை அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்கட்சியைத் தாக்காமல், உலக இயல்பு மாறாமல் இந்தக் கதையை கு.ப.ரா. உருவப் பிரக்ஞையுடன் சாதித்து இருக்கிறார். அவர் சொல்வதற்கு மேலும் இந்தக் கதையை ஒரு வார்த்தைக்கூட நகர்த்த முடியாது. இந்த இடத்தில் இப்படித்தான் முடியும், முடியவேண்டும் என்ற உருவ அமைப்பு இந்தக் கதையில் மட்டும் அல்ல கு.ப.ராவின் அனைத்துக் கதைகளிலும் காணப்படும் அதிசயமாகும்.

பெண்களைப் பற்றி, கு.ப.ரா. கதைகளில் காணப்படும் நுட்பமான இந்த இலக்கிய விளைவுகளைத் தமிழில் வேறு எந்த இலக்கிய ஆசிரியர்களும் சாதித்தது கிடையாது. பெண்களின் குறிப்பாக தமிழ்ப் பெண்களின் மனப்பூட்டுகளைத் திறப்பதற்குரிய சாவிகளைத் தமது கதைகளில் பெரும்பாலும் சாதுர்யமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர். ஆணும் மற்றொரு ஆணும் சினேகமாக இருப்பதுபோல் இன்றும், ஒரு பெண்ணும் ஆணும் சினேகமாக இருக்க முடியாதா-? என்ற கேள்வியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தக் கதை எதிரொலி செய்துகொண்டே இருக்கும்.

இந்தக் கதை மட்டுமல்ல கு.ப.ராவின் ஏனைய மற்றக் கதைகளும் குறிப்பாக நூருண்ணிசா, ஆற்றாமை, விடியுமா, பண்ணை செங்கான், பாலம், சிறிது வெளிச்சம்_ அவர் ஒரு மிகச் சிறந்த தொடக்கம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

சிறிது வெளிச்சம் கதையில் சாவித்திரி வாழ்வு இருண்டு கிடக்கிறது. புருஷன் பகல் முழுவதும் வீட்டில் இருக்கமாட்டான். இரவில் இருப்பதாக பெயர் பண்ணுவான். பெரும்பாலும் ராத்திரி 2 மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். பக்கத்து வீட்டில் கதை சொல்லும் எழுத்தாளன் குடியிருக்கிறான். தினமும் சாவித்திரியை அவன் கணவன் போட்டு அடிக்கிறான், உதைக்கிறான். ஒருநாள் இதுபோல் சாவித்திரியை அடித்துவிட்டு புருஷன் பின் வருமாறு சொல்லிவிட்டு வெளியே போகிறான். சாவித்திரி கதை சொல்லும் எழுத்தாளன் வீட்டிற்குள் வருகிறாள். இனி கதையிலிருந்து...

“நான் இங்கே படுத்துக் கொள்ள முடியாது. சோலி இருக்கிறது’’, என்று அந்த மனிதன் வெடுக்கென்று புறப்பட்டான். என்ன மனிதனவன், அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை. சாவித்திரி உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற் கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என்முன் நின்றது. நல்ல யௌவனத்தில் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேநீர் பார்த்ததுபோல் தென்பட்டது. 18 வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்கிறோமே அது மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்துளிர்கள் போல் இருந்தன. அப்பொழுது தான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளை நன்றாகப் பார்த்தேன். கண்களுக்கு இதமான மெல்லிய பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒளி அவள் தேகத்தில் இருந்து வீசிற்று. தாழ்ப்பாள் விடுபடும் சத்தம் கேட்டது. நான் படுக்கையில் இருந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போல் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

“வேண்டாம் விளக்கு வேண்டாம் அணைத்து விடுங்கள் அதை’’ என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். புருஷன் ஒருவிதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சர்யம்.

“உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேன் என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.’’

“அம்மா...’’

“என் பெயர் சாவித்திரி.’’

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப்போய் விட்டது?’’

“இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது? பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை, குருவி போலத்தான் மனிதர்களும்... இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?’’

“புருஷன்....’’

“என்னடா இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா! புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண்கள் புதிதாக இருக்கிறாள்... பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...’’

“நீங்கள் அப்படி...’’

“நீங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள், நீங்கள்தானே பெரியவர். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும் எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா?’’

“இல்லை.’’

“ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’’

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில் தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்து துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவனாக இருந்தன.

“அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக் கொண்டு...’’

“இனிமேல் என்னை என்ன செய்துவிடப் போகிறான். கொலைதானே செய்யலாம்?- அதற்குமேல்?-’’

“நீ இப்படி பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்குப் புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்...’’

“நல்ல வார்த்தையா-? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?’’

“பின் என்ன செய்யப் போகிறீர்கள்?’’

“என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை_ அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிறவரை அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.’’

“அடடா, இப்படியேயா!’’

“வேறு வழி என்ன இருக்கிறது?’’

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை.

“என்ன? பதில் இல்லை?’’ என்று அவள் சிரித்தாள்.

“நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?’’ என்று திடீரென்று கேட்டேன்.

“கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே, சில மாதங்களுக்குப் பிறகு...?’’

“என்ன சாவித்திரி...’’

“அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும் போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புதுமுகத்தைப் பார்ப்பீர்கள்...’’

“நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்போது நானும் பேசலாமா?’’

“தாராளமாக’’

“என்னைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது.’’

“அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்ற உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு அழகு கொடுக்காது...’’

“நீ எப்படி அந்த மாதிரி பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?’’

“எப்படியா? என் புருஷனைப் போல என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல; கிழவியல்ல; நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்கிறேன்... மிருக இச்சைக்குப் பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?’’

“சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?’’

“எது சுகம்? நகை போட்டுக் கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப் பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர். புடவை, ரவிக்கை_ நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி, சரீர சுகம்; நான் ஒரு நாளும் அடையவில்லை இதுவரையில்.’’

“அதாவது...’’

“என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக் கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’’

“பின் எதைத்தான் சுகம் என்கிறாய்?’’

“நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும்கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலும் என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்?’’

“உன் புருஷன் ஏன்...?’’

“என் புருஷனுக்கு என் சரீரம் சலித்து போய்விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.’’

“சாவித்திரி! தைரியமாக ஒன்று செய்யலாமே.’’

“நான் எதையும் செய்வேன்; ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம், அவ்வளவுதான்.’’

உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்துப் பார்க்கிறேன்.

“வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கி விட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்கு என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.’’

“எது சொன்னாலும்...’’

“ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.’’

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

“நான் போய் படுத்துக் கொள்ளட்டுமா.’’

“தூக்கம் வருகிறதா?’’

“தூக்கமா? இப்பொழுது இல்லை.’’

“பின் சற்றுதான் இரேன்.’’

“உங்கள் தூக்கமும் கெடவா?’’

“சாவித்திரி...’’

“நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.”

“நிஜமா!’’ என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“பொய் சொன்னால்தான் நீ உடனே...’’

“அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்!’’

“சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.’’
“அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக்கட்டும், என் கட்டை சாய்ந்த பிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.’’

“ஏன் அப்படி சொல்லுகிறாய்?’’

“இல்லை, இனிமேல் இந்தச் சரீரம் என் சோகத்தை தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கே ஒரு திருப்தி ஏற்படுகிறது.’’

“நான் சொல்லவில்லையா?-’’ என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக் கொண்டேன். அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் சாய்ந்து கொண்டாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததைப் பூசி, மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்தேன், என் படுக்கையில்! அப்பொழுதும், அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகசியங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்து போனது போல பிரித்தபடியே கிடந்தன.

திடீரென்று “அம்மா! போதுமடி!’’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

“சாவித்திரி, என்னம்மா?’’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்.

“போதும்.’’

“சாவித்திரி விளக்கு...’’

அவள் திடீர் என்று எழுந்து உட்கார்ந்தாள்.

“ஆமாம். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இந்த வெளிச்சம் போதும்!’’ என்று எழுந்து நின்றாள்.

“நீ சொல்லுவது அர்த்தமாகவில்லை சாவித்திரி.’’

“இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக் கொள்ளுங்கள்.’’

“ஏன்... ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்.’’

“ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக்கூடாது. ஆபத்து’’ என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டு சிறிதும் தயங்காமல் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.’’

சட்டென்று என் உள்ளத்திலும் எரிந்த விளக்கு அணைந்தது.

`போதும்.’

போதும்__எது போதும் என்றாள். தன் வாழ்க்கையையா? துக்கமா? தன் அழகா, என் ஆறுதலா அல்லது இந்தச் சிறிது வெளிச்சமா?’ என்று முடிகிறது கதை.

இதுதான், இவைதான் கு.ப. ராஜகோபாலன் சிறப்பு.