நகுலன்
நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு.
நமக்குப் பழக்கமான விஷயங்களைப் பழக்கமான முறையில் காரியத்திறமையால் செய்வதால் சிறப்புப்பெறும் சிறப்பு கிருஷ்ணன் நம்பி கதைகளில் இல்லை. எந்த விஷயங்களையும் கலா பூர்வமாக உருவாக்குவதில் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இலக்கியத் தன்மையைப் பெற்றிருப்பது அவருடைய கலையின் சிறப்பு. இதனால்தான் அவருடைய கதைகளை முதல்முறை படிப்பதிலிருந்து அவைகளின் சிறப்பை நம்மால் உணரமுடிவதில்லை. ஒரு முறைக்கு இரு முறையாக நின்று நிதானமாகப் படிக்கையில் நமக்கு அவை ஒரு தனி இலக்கிய சுகத்தைத் தருகின்றன.
இவ்வாறு படிப்பதற்கு ஒரு பயிற்சியும் பக்குவமும் வேண்டும். நாம் சம்பிரதாயமாக ஏற்றுக் கொண்டு பழகிய சிறுகதை உருவை மறந்து அவர் சிருஷ்டி செய்திருக்கும் உருவை அறிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் எந்த அனுபவமும் நம்மை நேரிடையாகத் தாக்குகையில் அந்தத் தாக்குதலுக்குள்ள ஒரு சக்தியும் வசீகரமும் பிற்காலத்தில் நமக்கு ஷணித்து விடுகிறது. இதற்கு ஒரு காரணம் வயது ஆக ஆக நாம் த்வைத அடிப்படையில் இயங்கும் அறிவினால் வகை செய்யப்பட்ட அனுபவத்தின் நளினமான வடிவத்தைத்தான் காண்கிறோம்.
அனுபவத்திற்கும் அதை உணர்த்தும் மொழிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாத அளவில் மொழியையே அனுபவமாகக் குழப்பமடையவும் செய்கிறோம். அனுபவத்தைச் சம்பிரதாய உருவத்தில் காண்கிறோம். இதனால் தான் க.நா.சு. சொல்கிற மாதிரி ஒரு கவிஞனின் பார்வை சம்பிரதாய உருவத்திலிருந்து வேறுபட்டு இருப்பதால் நமக்கு அது கவர்ச்சியை அளிக்கிறது.
மேலும் எந்த அனுபவத்திலும் அவன் ஒரு நோக்கைப் பிரதானமாக வைத்துப் பார்க்கும்பொழுது கூட அதில் அமைந்திருக்கும் மாறுபட்ட பார்வைகளை ஒரு விகிதாம்சமாகக் காண்கிறான். அதனால்தான் அனுபவத்தை முழுமையாக வாங்கிக் கொள்ளும் குழந்தை நோக்கும் கலைஞன் நோக்கும் ஒரு மையத்தில் சந்திக்கின்றன என்று சொல்ல வேண்டும். இந்தத் தகுதிதான் ஒரு கலைஞன் பார்வையின் அடிப்படை என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
மேலும், குழந்தையின் பார்வையில் அனுபவமும் மொழியும் வேறு பிரிந்து கிடக்கின்றன என்று சொல்ல வேண்டும்.
`கிருஷ்ணன் நம்பி கதைகள் சிலவற்றில் இந்த அடிப்படையை விளக்க விரும்புகிறேன். நீலக்கட’லின் ஆரம்பம் பாலியக் கட்டத்தைத் தாண்டியவன் சொல்வது, முடிவும் வயசானவன் பார்வைதான். நடுவில்தான் குழந்தை அனுபவ உலகை விவரிக்கும் குழந்தைப்பார்வை. பிரச்சினை இதுதான், சாவை நாம் எப்படி அணுகுகிறோம் _ குழந்தையாக இருக்கும் பொழுதும் பின்னரும். குழந்தைப் பருவத்தில் சாவு என்ற வார்த்தை தெரிந்தாலும் அதன் பயங்கரம் நம் கண்ணில் தென்படுவதில்லை. பின்னர் இதன் அடிப்படையே மாறுகிறது. ஒரு குழந்தையின் மரணம் `பால்ய’ அனுபவத்தில் இவ்வாறு விவரிக்கப்படுகிறது. `என் தம்பி ராமகிருஷ்ணனிடம் அன்றொரு நாள் ஸாமி அன்பு வைத்தார்.’ மேலும் ``இப்படி எல்லாம் பேசுகிற பாட்டிதான் `நீ எப்போது சாவாய்?’ என்று ஒருநாள் கேட்டதற்கு என்னிடம் கோபித்துக்கொண்டாள்’’ என்ற பகுதியையும் படிக்கின்றோம். சாவு தினத்தில் குப்பு மாமியின் பிட்டு வழக்கம்போல் சுவையாக இருந்ததைக் குழந்தைமனம் விகல்பமின்றி குறிக்கிறது. வேறு ஒரு இடத்தில் `நான் பெரியவனானபின் நன்றாக இங்கிலீஷ் படித்து (அப்பாவைப்போல) சிரிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்’ இந்தக் குழந்தை இயல்புதான் மனிதனை மிருக இனத்திலிருந்து வேறுபடுத்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். கடைசியாகச் சாவதைக் கண்டு சிரித்தவனே, சாவைக்கண்டு பயப்படுவதாகக் கதை முடிகிறது.
குழந்தைப் பிராயத்திலிருந்து வயோதிகத்தில் சென்று அமையும் மனித உள்ளத்தின் ஒரு அனுபவச் சரித்திரம் இங்கு குறிப்பிடப்படுகிறது. கதையின் `நீலக்கடல்’ என்ற தலைப்பு ஒரு பாவனை நிறைந்த இலக்கியச் சிறப்பை உடையது. `எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்பது ஒரு `கிறுக்கன்’ மனதைச் சித்திரிக்கிறது. முப்பது வயதானாலும் இவன் ஒரு மூன்று வயதுக் குழந்தையைப் போல் அனுபவத்தின் ஸ்தூல வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்கிறான். இங்குகூட நம்பி இவனுக்கு எங்க ராஜப்பா எப்படி ஒரு மாதிரியாக அமைகிறான் என்பதிலிருந்து இந்தப் பாத்திர சிருஷ்டிக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்து விடுகிறார். இந்தக் கதையிலும் ஆரம்பமும் முடிவும் கலாரீதியாக அமைந்திருக்கின்றன.
விளையாட்டுத் தோழர்களில் ஒரு சின்னப் பாப்பாவுக்குக்கூட நாம் கூறுவதுமாதிரி அதற்குத் தேவாம்சம் மாத்திரம் இல்லாமல் அசுராம்சமும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார். நம்பி ஒரு கதையிலும் பிரத்யஷ உலகை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மாட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
`சுதந்திர தினம்’ என்பது ஒரு பையனின் சுதந்திர தினம் என்பதின் அனுபவத்தை விவரிக்கிறது. கொடி பிடிப்பது ; டீ பார்ட்டி, கலெக்டர் வருகை, ஒரு உருப்புரியாத பவித்திர உணர்ச்சி இவைதான் பையன் சுதந்திரத்திற்கு கொடுக்கக்கூடிய அர்த்தம். ஒரு கூட்டத்தில் தானும் கலெக்டரைப்போல கறுப்பா இருந்தாலும் தான் ஏன் ஒதுக்கப்பட வேண்டும் என்று அவன் உள்ளம் நினைக்கிறது. ஆனால், அந்தக் கூட்டம் அடுத்த கட்டத்தில் மாய்ந்து விடுகிறது.
`கணக்கு வாத்தியார்’ ஒரு சிறந்த கதை. அதுவும் நீலக்கடல்போல் வயதான பிறகு குழந்தை அனுபவத்தைப் பார்க்கும் முறையில் எழுதப்பட்டிருக்கிறது. கதை முடிவும் வயதானவனின் முடிவு. `கணக்கு வராத பிள்ளை மக்கு’ என்ற குரூரமான அபிப்பிராயத்தை நாம் எல்லோருமே அனுபவித்திருக்கிறோம் ; இங்கு `கணக்கு வாத்தியார்’ ஒரு பாவனா சிருஷ்டி. கதையின் முடிவு, கடவுளே கணக்கு வாத்தியாராகக் காட்சி அளிப்பது கதைக்கு ஒரு ஆழத்தைக் கொடுக்கிறது.
`தங்க ஒரு . . . ’ கதையும் சிறந்தது. தங்க ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதைத் தங்க ஒரு . . . என்று குறிப்பிடுவதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது கலிவரின் யாத்திரையைப் பின்பற்றியது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப் பித்தனின் `கடவுளும் கந்தசாமி பிள்ளையையும்’ விடச் சிறப்பாக வந்திருக்கிறது என்பது என் அபிப்பிராயம். சமூக வாழ்வின் கொடுமைக்கு வளைந்து கொடுத்து கருவில் சிசுவாக மனிதன் குறுகும் அனுபவத்தைக் காரமாகக் காட்டுகிறது. செல்லா, நம்மை விடவும் அந்தக் குறுகல் பேர்வழி அதிருஷ்டசாலி இல்லை என்று உன்னால் நினைக்க முடிகிறதா? செருப்புக்கு ஏற்றபடியெல்லாம் அவனைச் சின்னது படுத்திக் கொண்டே வந்திருக்கிறான் இறைவன். இதை நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற காந்தியத் தத்துவத்தின் விபரீத உருவமாகவே ஆசிரியர் சித்தரித்திருக்கிறாரோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் நம்பி குழந்தை மனதை நுணுகி ஆராய்வதில் மனித மனதின் விகிதாம்சமான ஆசா பாசங்களைக் காட்டுகிறார். அவர் பார்வை மனிதனை மையமாகக் கொண்டது. பிரத்யஷ உலகிலிருந்து முன்கூறியபடி ஒரு அங்குலம் கூட நகராதது.
இங்கு கலைஞன் அனுபவத்தைப் பார்க்கும் பார்வைதான் முக்கியம். குறுகிய நீதி _ அநீதி வரம்புகளைத் தாண்டி அனுபவத்தைக் குழந்தைக் காண்பது போல், அதன் முழு வடிவத்தில் கண்டு _ வாழ்க்கையின் சம்பிரதாய மதிப்புகளைப் புறக்கணித்துவிட்டு கலைஞன் வாழ்க்கையைத் தன் போக்கில் பரிசீலனை செய்வதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு கதையையும் ஒரு கவிதை மாதிரி ரசிக்கலாம்.
சில கதைகளையே குறிப்பிடுகிறேன். `காணாமல் போன அந்தோனி’, `சிங்கப்பூர் பணம்’, `நாணயம்’, `சத்திரவாசலில்’, `சட்டை’, `கருமிப்பாட்டி’ எல்லாமே ஒரு வகையில் ஓ.ஹென்றியுடன் இணைத்துப் பேசப்படும் எதிர்பாராத முடிவைத்தாங்கியவை. ஆனால் ஒவ்வொன்றும் எடுத்துக்கொண்ட விஷய வேறுபாட்டாலும், ஆசிரியர் அனுபவத்தைப் பரிசீலனை செய்யும் போக்கிலும் சிறப்புப் பெறுகிறது. `நாணயம்’ தர்மத்தைப் பற்றிய பரிசீலனை. `சட்டை’ சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவது, `சிங்கப்பூர் பணம்’ குழந்தை மனதை ஆராய்வதின் மூலம் வாழ்க்கையைப் பரிசீலனை செய்வது. சில கதைகளில் கதையம்சம் சொட்டையாக இருப்பதாகத் தோன்றினாலும் ஆசிரியரின் வாழ்க்கை பரிசீலனைக்காகவே கவிதையைப் போலப் படித்து ரசிக்கலாம். இங்குதான் நம்பியின் விளையாட்டுத் தன்மை கலாபூர்வமாக இருக்கிறது. இதை ஒட்டிக் கதை அம்சம், அதை ஒட்டிப் பாத்திர சிருஷ்டி, இவைகளை வைத்துக்கொண்டு கதைகளை எடைபோடுவது சரியான முறையன்று. `சத்திரத்து வாசலில்’ மனோதத்துவம் மிகவும் இலக்கியப் பூர்வமாகக் கையாளப்படுகிறது.
இந்தத் தொகுதியில் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டிலும் கதை அம்சம் குறைவு, இலக்கியச் சிறப்பு மிகுதி. ஒன்று எக்ஸெண்ட்ரிக். ஒரு ஏழையின் அனுபவத்தை விவரிக்கிறது.
இக் கதையில் வரும் கார், நாய் வர்ணனைகள் இலக்கியப் பூர்வமானவை. சில பகுதிகள் அசட்டு உணர்ச்சி சொட்டச் சொட்ட எழுதும் கதாரீதிகளைப் பரிகசிப்பதாக அமைத்திருக்கிறது. மேலும் விவிதாம்ச குணங்களைச் சித்திரிக்கும் பாத்ர சிருஷ்டி ஒரு சிறந்த வெற்றி.
`காலை முதல்’ கதையின் முடிவு சற்றுப் பலவீனமானது. இருந்தாலும் கம்பளிப் போர்வையினுள் உடம்பை நுழைத்துக் கொண்டு கூட்டுப் புழுவைப்போல் இயங்கும் ஒரு மனிதப் புழுவின் வாழ்க்கையைத் திறம்பட விவரிக்கிறது. படித்து ரஸிக்க வேண்டிய கதை.
நம்பி ஒரு அக உலகக் கலைஞர். அவர் பார்வை விளையாட்டுத் தன்மையும் விஷயமும் நிறைந்தது. அவர் உலகம் யதார்த்த நிலை பிறழாதது. ஆரம்பத்தில் கூறியபடி ஒரு `புற உலகக்’ கலைஞனாகத் தூய நிலையில் சிறந்த படைப்புக்களைப் படைத்து வெற்றியும் பெயரும் பெறுவதைவிட, ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல், தோல்வி (இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்.
0 comments:
Post a Comment