Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

நெற்றிக் கண்

Labels: , ,

- லா. ச. ராமாமிருதம்

[ஓம் ' பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.]

பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத்திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ரஸமி புகுந்ததும், அது இளகிப் புளகித்தது. நடைவழியிலேயே, அவனது சிருஷ்டியின் சிறப்பு அவனையே பிரமிக்கச் செய்த்து. வண்டுகள் தேனைப் பூக்கிண்ணங்களினின்று வாரி வாரிக் குடித்துவிட்டு, அவனது காதருகே சென்று, ரீங்காரம் செய்தன. அத்துடன் புட்களின் கானமும் சேர்ந்து இழைந்தது. ஆநிரைகள் அமைதியாய், பச்சைகளை மேய்ந்தன. வேளையின் வெறியில், மான் குட்டிகள் துள்ளி விளையாடின. சர்வம் செளந்தர்யம். ஈதெல்லாம் அவன் செயல். உள்ளம் உவகை பூத்தது. விருப்பு வெறுப்பற்ற அந்த மனத்தின் பரந்தவெளியில், பூமியின் உன்மத்தம் பற்றியதும், எடுத்த காரியம் பிடித்த காரியமாயிற்று.

பொன் வெயில்தான், அவனது மண் ஓட்டில் தன் பொன் கிரணத்தை முதற் பிச்சையாயிட்டது. அந்த மகிமையில் ஓடு பொன்னாய் மாறியதும், அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

இதோ அக்ரஹாரம்.

'தாயே தேஹி-- '

உள்ளிருந்து மெட்டிச் சப்தம் அணுகியது. அவனது முகத்தில் முறுவல் அரும்பியது. தன் அற்புதமான அழகின் முள்ளை, தன் குரலினிமையால் மறைத்தான்.....

வந்தாள். வந்து வாசலில் நின்றவள்தான். அவனுடைய கண்கள், மெதுவாய் உயர்ந்து, அவளைக் காலினின்று தலை வரைக்கும் கணித்து, சட்டென அவளுடைய கண்களைச் சந்தித்து, கனிந்த விஷத்தைக் கக்கின. காமனைப் பழித்த அம் மாபெரும் அழகிலும் அதிக வேதனையுமுண்டோ ? அவளுடைய மானமும் உள்ளமும் கழன்று, அவனது ஓட்டில் விழுந்தன. புன்னகை புரிந்த வண்ணம், கபாலி, மறு வாசலை நோக்கி நடந்தான்.

அன்று அவன் வாங்கிய பிச்சையே வினோதம். வளையும் பவித்ரமும், செவியினின்று கழலும் குழையும், கண்டத்தினின்று சரிந்த சரமும் பிரம்ம கபாலத்தில் குவிந்தன. வீட்டுக்கு வீடு அந்த பிரம்மச்சாரி இழைத்த அலங்கோலத்துக்கு அளவு இல்லை '

கண்டதும் கல்லாய்ச் சமைந்தவர் எத்தனைபேர் ' அவன் கையைப் பிடித்திழுப்பவர் எத்தனைபேர் ' அவனைப் பங்கிட ஒருத்தரோடொருவர் பூனைபோல் பிறாண்டிச் சண்டையிடுபவர் எத்தனையோ ? அவசரமாய், வற்கலமும் புடவையும் இடையினின்று நெகிழ, மெய்ம்மறந்து மயங்கி நிற்பவர் எத்தனை பேர் ? அந்த காட்சி அவனுக்குத்தான் அற்புதம். சகல் ஆசாரங்களும் உறைவிடமாயிருந்த அவ்வாசிரமம், சடுதி நேரத்தில் ஆபாசம் நிறைந்த அனங்களின் போர்க்களமாயிற்று.

இன்னும் ஒரு வீடுதான். அத்துடன் அவனது வெற்றியும் முழுமை பெற்றுவிடும்.

'பிச்சை... ' ' அது என்ன பிச்சைக் குரலாவாயிருக்கிறது ? மெட்டி குலுங்க, ஓட்டமற்று, நிதானமான நடையோசை.

அவனது குனிந்த புருவம், ஆச்சரியத்தால் உயர்ந்தது. முதன் முதலாய், கபாலத்தில், அரிசி விழுந்தது. பொறுக்குப் பொறுக்காய், ஒரு அள்ளு அரிசி.

அவன் தலை நிமிர, பார்வை அவள் மேல் பாய்ந்தது. ஆனால், முப்புரத்தையும் எரித்த அது ஆகாயத்தில் எய்த அம்புபோல், பயனற்று, நிஷ்களங்கமான அவளுடைய கண்களைச் சந்தித்துக் கீழே விழுந்தது. அவனது மனதில் களங்கம் புகுந்தது. என்ன இருந்தால்தான் நர உருவம் எடுத்தால், அதன் நச்சு விடுமோ ?

ரிஷிபத்தினியே ஆயினும், ராஜ லட்சணங்கள் அவளுடைய முகத்தில் பிரகாசித்தன. தாருகாவன ரிஷிகளுக்குள்ளேயே, மஹா கொடியன் வல்லபன். எந்தச் சமண ராஜனிடம் எந்த உபகாரத்துக்கு ஈடாய் இவளைப் பெற்றானோ ? ஆனால், அதிலும்தான் என்ன விந்தை ' நச்சுமிக்க நாகத்திடம்தானே, மாணிக்கம் உறைகிறது ?

அவளது இதயத்தின் விசாலம், அவளுடைய கண்களுக்கு நேர். மயிரின் இருள், அவனது மனதில் புகுந்த இருளுக்கு இணை. அவளுடைய அங்கங்களை அத்தனை அளவுடனும் உருவுடனும் கடைய, அவள் அப்பன் தொழும் அருகன், எத்தனை நாள் உழைத்தானோ '

அவளது முகத்தில், இவ்வுலகம் பிறந்து, அதில் ஜீவன் அவஸ்தையுறுமுன்னே தேங்கிய அகண்ட அமைதி நிலவியது. அதைக் கண்டதும், அவனது உள்ளம் நடுங்கிற்று; உடல் நடுங்கிற்று; கையில் பிடித்த ஓடும் நடுங்கியது. அவளது உருவம் பதிந்து கனத்த நினைவுடன், அவன் அவ்விடம் விட்டு அகன்றான். நீந்துபவனை நீர்ச்சுழல் இழுப்பது போன்று, அவன் சென்ற காரியத்துக்கு அவனே பலியானான்.

காமன் தன் கறுவைத் தீர்த்துக்கொண்டு விட்டான்.

கிள்ளைகள், முகத்துடன் முகம் சேர்த்து, கொஞ்சி மொழியாடின. கொம்பும் கொடியும் நாணிக் குழைந்து பிணைந்தன. பட்டு பூச்சிகள் ஒன்றுடனொன்று ஒட்டிப் பறந்தன. அதோ, அந்த மரத்தின் மறைவில், கலைமான், பேடையைத் துரத்துவதேன் ? வானமே, வையத்தைப் புல்லி, அதன் மேல் கவிந்து குவிந்து குலவியது. இப் புலவியின் பெருமிதத்தில், பூமி, பூவும் பச்சையுமாய்ப் பொங்கி வழிந்தது. இது அத்தனையும் பொய்யா ? ஏ கடவுளே, இத்தனையும் உன் செயல்தானே ? எல்லாம் பொய்யென்று போதித்துவிட்டுக் கையில் ஓடும் எடுத்துவிட்டாயே ? இப்போது என்ன செய்வாய் ?

அடிபட்ட சிங்கம் போன்று, பகவான் மூச்சு வாங்கிய வண்ணம், ஓர் அரச மரத்தடியில் விழுந்தான். அவனது சிருஷ்டி அவனை ஏளனம் செய்தது.

முட்புதரில், ஸ்பரிச வேதனையே படாது, மலர்ந்து வெற்றியுடன் நகைக்கும் ரோஜாவை யொத்து, அவள் கைக் கெட்டாது புஷ்பித்திருந்தாள். அவளது நினைவில் கமழ்ந்த மணத்தின் இன்பம் தாங்கமுடியவில்லை. அவளைப் பறித்து முகரா ஒவ்வொரு விநாடியும் தாளமுடியவில்லை. மூர்க்க வெறி அவ்வாண்டியைப் பிடித்து அலட்டியது. அவன் மயக்கு அவளிடம் பலியாததில், அவனது வேதனை அதிகரித்தது. தான் வந்த காரியத்தை மறந்தான்; தன்னை மறந்தான்.

கட்செவி உணர்வது போன்று, அவள் அங்கே வருவதை அவன் எப்படியோ உணர்ந்தான்.

ஆம், அவள்தான்; இடுப்பில் குடத்தை யூன்றி, சரிந்து, நடந்து அவனிடம் வரவில்லை. அவனைப் பார்க்கவுமில்லை. குடத்தைக் கரையில் வைத்துவிட்டு, தடாகத்தில் இறங்கினாள். அவள் புனர் ஸ்னானம் செய்வானேன் ?

அவளைத் தரிசிக்கும் ஆவலும் அவசியமும் தூண்ட, பகவானும் எழுந்து, ஆடையைக் களைந்து, கெளபீனதாரியாய், மறுபுறம் வந்து ஜலத்தில் இறங்கினான். அவனைக் கண்டு நடுநடுங்கி புனலும் சலசலத்தது.

அவள் அவனைக் கண்டாள், அவனது உள்ளம், துள்ளிய துள்ளலில், உடலைவிட்டே வெளி வந்துவிடும் போலிருந்தது. அவளுடைய கரங்கள் குவிந்து, தலை குனிந்து வணங்கி நிமிர்ந்தது. அக் கண்களில், எள்ளளவும் சஞ்சலமேனும் இருக்க வேண்டுமே ' அலைகளுக்கப்பால், சப்தமற்றுத் தூங்கும் கடல் நீலம் போல், தன்னுள்தானே நிறைந்து, அவளது உள்ளத்தே அமைதி அசைவற்று நின்றது அவனது உடல் மறுபடியும் நடுங்கியது. அவளையோ சாந்தமே கவசமாய்க் கவிந்திருந்தது.

'சூர்ய கதி உயர்ந்துவிட்டாற் போலும் ' ' ---என்றான், ஏதாவது பேசியாக வேண்டுமே, அதற்காக. அவள் வாய் வார்த்தையில் சொரியும் தேனுக்கு ஏங்கி அலைவுற்றது மனம்.

'ஆம் ' என்னும் முறையில், அவள் தலையை அசைத்தாள்.

பேச மாட்டாளா ? வாயில் கொழுக்கட்டையா ?

'தண்டகாரண்யம் இங்கிருந்து இன்னும் எவ்வளவு தூரம் ? '

'சுவாமி, நான் அறியேன். வேணுமானால், இங்கிருந்து கிழக்காய்ப் போனீர்களானால், ரிஷிகளின் யாகசாலை இருக்கிறது. அங்கே விசாரியுங்கள்-- '

ஆச்சு, அத்துடன் பேச்சும் முடிந்தது. அவனது உள்ளம் வெள்ளையாயிருந்தால் பேச்சும் வெள்ளமாய் வரும். ஆனால், அதில்தான் கள்ளத்தனம் புகுந்து விட்டதே '

அவள் ஈரச் சேலையுடன், நிறை குடத்தைத் தாங்கிய வண்ணம், ---அக்ரஹாரத்துக்குப் போகவில்லை--அதோ தெரிந்த மூங்கிற் காட்டை நோக்கிச் சென்று, புதர்களிடை மறைந்தாள்.

சேலையைச் சரிபடுத்திக் கொள்ளவோ ?

அவனது நெற்றியில் வியர்வை அரும்பிப் பொட்டுப் பொட்டாய் நின்றது. மேலுதட்டைக் கீழ்ப் பல்லால், இழுத்துக் கடித்துக் கொண்டு நின்றான். அவளது உடலின் விறுவிறுப்பும், நடையின் துள்ளலும் அவனது மனத்தில் புகுந்து துடிக்க ஆரம்பித்துவிட்டன. வேதனை சஹிக்க முடியவில்லை. அவளை---

மதம் பிடித்த களிறு ஆகிவிட்டான் கடவுள். அவனுடைய நடையின் வீச்சும் கடிய நேரத்தில், வாவிக்கும் வேய்க் காட்டுக்கும் உள்ள இடை வெளியைக் கடந்தது.

சல சலப்புக் கேட்டு, அவள் சட்டென்று திரும்பினாள். புதர்களை இரண்டு கைகளாலும் விலக்கிக் கொண்டு, கால்களை அகல விரித்து, அழுந்த ஊன்றிய வண்ணம், தலை நிமிர்ந்து, ஆஜானுபாகுவாய் கோவணாண்டியாய் நின்றானவன். புஜங்களிலும் மார்பிலும் தொடைகளிலும், நரம்புகள் புடைத்து விம்மியெழுந்தன. ஒரே செளரிய உருவாய் விளங்கினான் கடவுள். அவனுடைய இரு கண்களும் நெருப்பாய் ஜ்வலித்தன. முதன் முதலாய், அவனது மனதில், அவனது நோக்கிலும் அவன் நின்ற நிலையிலையும் சந்தேகம் பிறந்தது. சாந்தக் கடல்களான, அவளுடைய கண்களில் கொந்தளிப்பு உண்டாக்கிவிட்டது.

ஓர் அணுவளவு நேரத்தில், துணுக்களவு நேரம், உலக இறுதியின் நிசப்தம்.

'கீச்---கீச்---கீச்--- '

எங்கோ ஒரு குருவி அலறியது.

அவள் காதில் ஒரு பயங்கர வெள்ளம் இரைந்தது.

'நீ எவ்வளவு சுந்தரமாய் இருக்கிறாய் ' '

'சுவாமி, நீங்கள் இப்படிப் பேசுவது உங்களுக்குத் தகாது. கையிலே ஓடு தாங்கி, இடையில் காஷாயம் பூண்டிருக்கிறீர்கள். '

'பாதகமில்லை. ' அவள் பக்கத்தில் அவன் நெருங்கினான். அவனது அனல் மூச்சு, அவளுடைய முகத்தைச் சிவக்க செய்தது. 'உனக்கு என்னைப் பார்த்தால் என் காஷாயம்தானா தெரிகிறது ? வேறொன்றும் தெரியவில்லையா ? '

'தெரிகிறது, காஷாயம் உமக்கு வேஷமென்று. தயவு செய்து ஒதுங்கும். தனிமையாயிருக்கும் ஒரு ஸ்திரீயிடம் உமக்கு என்ன வேலை ? '

'உன்னிடம்தான் எனக்கு எவ்வளவோ வேலை. உனக்கு இன்னும் புரியவில்லையா ? பெண்ணே, எல்லோரையும் போலல்ல நான்---நான்---நான். '

'ஐயா, நான் பரஸ்திரீ; பரத்தையல்ல. உம் பேச்சு உம் கோலத்துக்குத் தகாது. தர்ம சாஸ்திரத்துக்குத் தகாது--- '

'ஓஹோ ' தாருகா வனத்தவர்க்குத் தரும சாஸ்திரமுமுண்டோ ? பெண்ணே ஊடாதே. எதற்கும் சமயாசமயமுண்டு---வா---- '

'அட பாவி---விட்டுவிடடா---என்னைத் தொடாதே---தொடாதே--- '

அவளது அலறலைக் கேட்டு, பட்சிகள் பயந்து கதறின; மிருகங்கள் மிரண்டோடின; காற்றும் அஞ்சி அலைந்தது. ஆனால், அவன் செவியில் எது ஏறும் ? முகத்தில் வெறி நகைக்க, அவன் அவளைத் தொடர்ந்தான். அவளைத் துரத்த, வேய்க்காடு, அவர்களைச் சுற்றி அடர்ந்தது.

காட்டின் மத்தியில் ஓங்கி வளர்ந்ததோர் ஆலமரத்தை நோக்கி அவள் ஓடினாள்.

ஒரு பக்கம் ஆத்திரம் பொங்கியெழுந்தது. அவனுடைய கால்கட்டை விரலின் அழுந்தலில், அஷ்ட குலாசலங்களும் குலையுமே ' அவனுடைய ஆற்றொணா ஆற்றலைக் கேவலம் ஒரு பெண் குலைப்பதா ?

ஓடும் வேகத்தில், அவளது ஆடை புதர்களில் சிக்குண்டு கிழிந்தது. அவளது வெண்தொடை பளீரென மின்னிற்று.

'ஆணை ' ஆணை ' ' --- நான் தொழும் தெய்வத்தின் மேல் ஆணை '---தொடாதே---ஐயோ ' '

வேர் தடுக்கிற்று. என்னத்தையோ அணைப்பது போன்று, கைகளை வீசி, குப்புற வீழ்ந்து மூர்ச்சையானாள். தூரத்திலிருந்து அவளை நெருங்குகையிலே, அம்மரத்தடியில் வீற்றிருக்கும் மணல் லிங்கத்தை அவளுடைய கரங்கள் தழுவியிருப்பதைக் கண்டான்.

அவள் தொழும் தெய்வம் '

அவள் அதை அந்தரங்கத்துடன் நம்பிக் கதறிய அபயத்தின் வேகம், அவனது வேஷத்தை, அவனையறியாமலே உரித்துவிட்டது. அவன் வந்து அவளண்டை நின்றபொழுது, ஜடையும் கங்கையும் சூலமும், மானும் மழுவும், பாம்பும் தாங்கி, பரமசிவனாய் நின்றான். அவன் மனதில், ஆச்சரியம், வெட்கம், துயரம் இன்னும் பல்வேறு உணர்ச்சிகள் பொங்கி யெழுந்தன.

அவன் அவளை அழித்தான்; நெற்றிக் கண்ணால் சுட்டு எரித்தான். வேறு வழியில்லை ?

சர்வ ஜீவராசிகளும் வாழ்க்கையில் சறுக்கி விழுந்ததும், தட்டுத்தடுமாறிச் சேர முயலும் லட்சியத்தின் சிகரம் அவன். அந்த லட்சியத்தின் தோல்வியாய் அவன், இப்பொழுது நின்றான். ஆதலின், அந்த நினைவை அழிக்க, அவளை அழிப்பது தவிர வேறு வழியேது ? நெற்றிக் கண்ணைத் திறந்து அவளைச் சுட்டெரிந்தான்.

சகலமும் அவனுக்கு அடக்கம்; அவன் அவனது நெற்றிக் கண்ணுக்கு அடக்கம். தன்னுடன் சமரிட்ட மாறனை எரிக்கவோ வாதில் வென்ற கீரனை ஒறுக்கவோ, தன் கட்டுக் கடங்காது தெறிக்க முயலும்பொழுது, அதை அழிக்கவோ எதற்கும் திறப்பது அந்த நெற்றிக் கண்தான். அது, அவனுடைய தோல்வியற்ற வெற்றியின் சின்னம்.

ஆகையால், அவன் அவளை சுட்டெரித்தான்.

கல்லையே வெல்லப் பாகாய் உருக்கிய, அந்த கண்ணின் வீட்சண்யத்துக்கு, மாந்தளிர் போன்ற அவளது சரீரம் எம்மாத்திரம் ? இமைப் பொழுதில் அவள் விழுந்த இடத்தில், ஒரு சாம்பற் குவியல் கிடந்தது. அதில் விழுந்து புரண்டு எழுந்தான் பெருமான். அவனுடைய கண்களினின்று, இரண்டு நீர்த்துளிகள் கிளம்பி, கன்னத்தில் வழிந்து, முகவாய்க் கட்டையினின்று உதிர்ந்து, கீழே விழுந்து புகைந்து, தீ காட்டைப் பற்றியது.

ஸ்னானத்துக்குச் சென்ற மங்களமுகி வேய்க்காட்டுத் தீயில் மறைந்தாள் என்று வதந்தி சொல்லிற்று.

* * * *

[பூர்வ கதையில், பகவானானவர், பவித்திரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்தலையும் தாருகா வனத்து ரிஷிகளை, அவர்களுடைய மனைவிமாரின் கற்பையழித்துப் பங்கப்படுத்தி, அவர்களின் செருக்கை அடக்கி, பிறகு அவர்களையும் ஆட்கொண்டார். ஓம்......]

0 comments: