நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி, டி.கே. துரைசாமி என்கிற பெயரிலும் எஸ். நாயர் என்கிற பெயரிலும் நகுலன் எழுதியிருக்கிறார். 1922 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகுலன் பிறந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின்னர் நகுலன் திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். மறைந்த பெண் கவிஞர் திரிசடை, நகுலனின் சகோதரி. நகுலனின் வெளிவந்திருக்கும் படைப்புகள்: நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி (1978), மூன்று (1979), ஐந்து (1981), கோட்ஸ்டாண்ட் கவிதைகள் (1981), இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983) இரு நீண்ட கவிதைகள் (1991). இப்பொழுது நகுலன் சுகவீனமடைந்து விட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தன்னைச் சந்திக்க வந்த ஒரு நண்பரிடம் நகுலன் இப்படிச் சொன்னார்: ``நான் இறந்த பின்பு தயவு செய்து எனக்கு எவரும் இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்திற்கு என்னால் வர இயலாது’’.
நவீனத் தமிழ்க் கவிதையில் நகுலனின் முக்கியத்துவம் சமீப காலமாய் மௌனமாய் மறக்கப்பட்டு வரும் ஒன்று. அனேகமான நாற்பது வயதைக் கடந்துவிட்ட எல்லா கவிஞர்களுக்கும் மொத்த கவிதைத் தொகுதி வெளி வந்து அவை மறுபிரசுரமும் கண்டுவிட்ட இக்கால கட்டத்தில் இதுவரை நகுலன் கவிதைகளைத் தொகுத்து வெளியிட எந்தப் பதிப்பகமும் முன்வரவில்லை. நகுலனின் புத்தகங்கள் எவையும் மறுபிரசுரமும் காணவில்லை, ஆனால் நகுலனிடமிருந்து பாதிப்பை பெற்று நகருவதுதான் நவீனத் தமிழ்க் கவிதைச் சூழலுக்கு ஆரோக்கியமானது என்பது தமிழ்க் கவிஞர்கள் தொடர்ந்து சொல்லிவரும் ஒன்று. நகுலன் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர். அவருடைய எழுத்துக்கள் அவை கவிதை, கதை, கட்டுரை என எதுவானாலும் நகுலனுடையவை என்ற பிரத்யேகக் குறியுடையனவையாகவே இருந்திருக்கின்றன. தத்துவ விசாரம் என்று கருதிவிடத் தக்க ஆனால் சிந்திக்கும் எந்த மனத்தையும் பாதிக்கும் காலம் காலமான மனிதாயப் பிரச்னைகளை நகுலனின் கவிதைகள் ஆராய்கின்றன. வியாபாரத் தனமும் அரசியல் தனமும் இலக்கியத்தையும் கலைகளையும் பாதித்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் அந்தக் கறை சிறிதளவும் படியாத எழுத்துகள் நகுலனுடையவை.
0 comments:
Post a Comment