Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

கு.ப.ரா

Labels: ,

கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். திருச்சி நேஷனல் காலேஜில் `இண்டர் மீடியட்’ படித்துக்கொண்டிருந்தபோது clip_image001[13]அவரது தந்தை ஏ. பட்டாபிராமய்யர் இறந்துவிட, தாய் ஜானகி அம்மாளுடன் கும்பகோணத்திலிருந்த சொந்தமான மிகப் பழைய வீட்டிற்கு வந்தார். அங்கு, கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலனுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் ந. பிச்சமூர்த்தி. பிறகு கல்லூரியிலும், வாழ்விலும், ரஸனையிலும், இலக்கியத்திலும் தொடர்ந்து 20 ஆண்டு காலம் _கு.ப.ரா.வின் மரணம் வரை_ `கும்பகோணம் இரட்டையர்கள்’ என்று மற்றவர்கள் கூறும்படி இணைபிரியாதவர்களாய் இவர்கள் இருவரும் இருந்தனர்.

  1926ஆம் ஆண்டு கு.ப.ரா, அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா ஆபீஸில் அவருக்கு வேலை கிடைத்தது. விரைவில் `ரிவென்யூ இன்ஸ்பெக்டர்’ ஆகப் பதவி உயர்வு பெற்றார். ஆனால், அப்போது திடீரென்று அவருக்கு கண் பார்வை மிகக் குறைந்துவிட்டதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு 1936ஆம் ஆண்டு தொடங்கி சிறிது காலம் `தமிழ்நாடு’ என்ற தினசரியில் வ.ரா. ஆசிரியராக இருந்தபோது சி.சு. செல்லப்பாவும் கு.ப.ரா.வும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்கள். `தமிழ்நாடு’ தினசரி நின்றுவிட்டதும் கு.ப.ரா. மீண்டும் கும்பகோணம் வந்தார்.

  கும்பகோணத்தில் ஆர். மஹாலிங்கம், என்ற கண் மருத்துவர் செய்த சிகிச்சையால், ஒரளவு கண் பார்வை மீண்டது. உடனே சென்னைக்குத் திரும்பிவந்தார். குடும்பம் கும்பகோணத்தில் இருந்தது. 1937ஆம் ஆண்டு இறுதியில் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்துக்கொண்டார். நண்பர்களின் ஏற்பாட்டின் பேரில் கிடைத்த மொழிபெயர்ப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் சிரமப்பட்டுதான் இக்காலகட்டங்களில் கு.ப.ரா. வாழ்ந்தார். 1939ஆம் ஆண்டு ஜுலை மாதம் வ.ரா. வை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட `பாரத தேவி’ வாரப் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். மற்றொரு துணையாசிரியர் சி.சு. செல்லப்பா. `பாரத தேவி’யில் கு.ப.ரா `பாரத்வாஜன்’, `சத்யம்’, `கரிச்சான்’ ஆகிய புனைபெயர்களில் எழுதினார். `பாரத தேவி’யும் நீடிக்கவில்லை. பிறகு க.சீ.வெங்கட் ரமணி நடத்திய `பாரத மணி’ பத்திரிகையில் சேர்ந்தார்.

  பிறகு இரண்டாவது உலகப் போர் தொடங்கியதும் கு.ப.ரா. மீண்டும் கும்பகோணம் சென்றார். அங்கு `மறுமலர்ச்சி நிலையம்’ என்ற பெயரில் அவருடைய வீட்டுத் திண்ணையிலேயே புத்தக கடை ஒன்றைத் தொடங்கினார். விற்பனைக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை அவருக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்குப் பதிலாக பதிப்பகத்தார் கொடுத்தவை. விற்று காசாக்கிக் கொள்ளவேண்டியது அவர் பொறுப்பு, ஆனால், விற்பனைக்கு பதிலாக புத்தக கடை நூலகமாக மாறிவிட்டது. நண்பர்கள் பலர் வந்து கடையிலேயே படிக்கத் தொடங்கினர். சிலர் எடுத்துக்கொண்டு போய் படித்துவிட்டு திரும்பத் தந்தனர். சில நாட்களுக்குப் பின் கு.ப.ரா. சிரமப்படுவதைக் கண்டு மனம்பொறுக்காத தொண்டர் ஒருவர் புத்தகங்களை விற்றுத் தருவதாக எடுத்துக்கொண்டு போய் தன்கடையில் வைத்துக்கொண்டார்.

  புத்தகக் கடை முயற்சி தோல்வியில் முடிந்தபின் 1943 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள துறையூர் என்ற சிற்றூரில் இருந்து வெளிவந்த `கிராம ஊழியனில் கௌரவ ஆசிரியராகச் சேர்ந்தார். திருலோக சீதாராமை ஆசிரியராகக்கொண்ட கிராம ஊழியனுக்கு கு.ப.ரா. கும்பகோணத்தில் இருந்தவாறே எழுதினார்.

  கு.ப.ரா.வுக்கு இரண்டு சகோதரிகள். இளைய சகோதரிதான் கு.ப. சேது அம்மாள். மிகச் சிறிய வயதிலேயே கு.ப.சேது அம்மாள் கணவனை இழந்துவிட்டார். இது கு.ப.ராஜகோபலனைச் சங்கடம்கொள்ளச் செய்தது. 1943ஆம் ஆண்டு கு.ப.ரா. முயற்சிக்குப் பின் கு.ப. சேது அம்மாளுக்கு மறுமணம் நடைபெற்றது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு விரைவிலேயே சேது அம்மாள் காலமானார். கு.ப.ராஜகோபாலனுடைய பல கதைகள் சேது அம்மாளின் இளவயது வாழ்க்கையுடன் தொடர்புடையவை.

  கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தின் போதே கு.ப.ரா.வுக்கு இலக்கியத்தின் பேரிலும் எழுத்தின் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காகவே வங்காளி கற்றுக்கொண்டார். கல்லூரியில் பிச்ச மூர்த்தி மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து `ஷேக்ஸ்பியர் சங்க’த்தைத் தொடங்கினார். தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் `ஷேக்ஸ்பியர் சங்க’ கூட்டங்களில் கு.ப.ரா. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதி வாசித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் பிச்சமூர்த்தியுடன் சேர்ந்து கும்பகோணத்தில் `பாரதி சங்கம்’ நிறுவினார். இக்காலகட்டத்தில் சுதந்திரச் சங்கு, மணிக்கொடி இரண்டு பத்திரிகைகளிலும் தொடர்ந்து கு.ப.ரா.வின் கதைகள், கவிதைகள் வெளிவந்தன. 1938ஆம் ஆண்டு நவயுகப் பிரசுராலயத்திற்காக ஸ்டீவன்ஸனின் ¡ `Dr. Jekyll and Mr. Hyde’ நாவலை இரட்டை மனிதன் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். பிறகு துர்கேச நந்தினி, தேவி சௌதுராணி என்ற இரண்டு வங்காளி நாவல்களை மொழிபெயர்த்தார்.

  1934ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டுவரை _ இடைப்பட்ட இந்தப் பத்து வருடங்களில், புத்தகங்களாக இப்போது கிடைக்கும்படி, கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறார். புத்தக உருப் பெறாதவை அனேகம். அவருடைய கட்டுரைகள் எவையும் புத்தகமாகத் தொகுக்கப்படவே இல்லை. 1943க்கு முன்பே முடிக்கப்பட்ட டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லயன்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

  செக்ஸ் விஷயங்களை எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டு கடைசிக் காலம் வரை கு.ப.ரா. மீது சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது. `கனகாம்பரம்’ என்கிற சிறுகதை வெளிவந்தபோது `பழகுகிற நண்பனின் மனைவி காமக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தினால் அதை எழுதலாமா?’ என்கிறவிதமாய் சர்ச்சை உருவானது. ராஜாஜி கு.ப.ரா பெயரைக் குறிப்பிடாமல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று எழுதினார்.

  `தாய்’ சிறுகதையைப் பத்திரிகைகள் பிரசுரம் செய்ய மறுத்துவிட்டன. 1943ஆம் ஆண்டு இன்னொரு சிறுகதையை இதே காரணம் சொல்லி கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் பிரசுரிக்க மறுத்துவிட்டார். கு.ப.ரா. சொன்னார்: ``ஸெக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில் _ அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி’’.

குறிப்பிட்டபடி கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த விஷயத்தை தவிர்த்து அவர் கதைகளையோ கவிதைகளையோ எழுதவில்லை என்றும்கூட சொல்லலாம். ஆண் பெண் உறவுகளை, குறிப்பாக பால் உணர்ச்சிகளை அப்பட்டமாகவும் உரக்கவும் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக ஆகிவிட்டது. ஆனால், அதை சூட்சுமமாகவும் கலையுணர்ச்சியுடனும், ஒரு சிறுகதையில் அதன் கட்டுக்கோப்பும் செறிவும் குலையாமல், முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற லாவகம் கு.ப.ரா.வுக்கு மிகவும்  சிறப்பாகக் கூடிவந்திருப்பதை இன்றும் படிக்கும் போது உணரமுடிகிறது. கு.ப. ராஜகோபாலனிடம் கூடிவந்த அந்த மென்மையும் கலை நேர்த்தியும், இன்று பக்கம்பக்கமாக பச்சையாக எழுதுவதாலேயே தன்னை ஒரு பெரிய புரட்சிகரமான எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் பல தமிழ் எழுத்தாளர்கள் உணராத ஒரு விஷயம். ஆபாசமாகவோ அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, துணிச்சலாக எழுதிவிட்டதாகவும் அவை பலத்த சர்ச்சைக்கு இடமாகி சூழலை மாற்றிவிடப் போவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவர்களிடம் இருக்கும் தன்மைகள் எப்போதும் கு.ப.ரா.விடம் காணப்பட்டதில்லை. சர்ச்சைகளை உருவாக்கவோ, புரட்சிகளை ஏற்படுத்தவோ கு.ப.ரா. எழுதவில்லை. அவர் வாழ்க்கையிலும் அநுபவத்திலும் கண்டவற்றை எழுதினார். புரட்சி பேசும் அந்தத் தமிழ் எழுத்தாளர்கள் பாடம் பெற்றுக் கொள்ளவேண்டிய நிலையில்தான் இன்றும் கு.ப.ரா இருக்கிறார் என்பதுதான் காலஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் முன்னேறி வரும் கு.ப.ரா.வின் முக்கியத்துவம்.

  1944ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சாவூரில் கலாமோஹினி ஆசிரியரான `சாலிவாஹனன்’ திருமணத்திற்குச் சென்று திரும்பிய வழியில் கு.ப.ரா.வுக்கு கால்களில் வலி எடுக்க ஆரம்பித்தது. கால்கள் வீக்கம் ஏற்பட்டு எரிச்சலுடன் தொல்லை தந்தபோதும் இரண்டு மூன்று நாட்களாக மருத்துவரிடம் போகமலே வீட்டிற்குள்ளேயே சிரமப்பட்டார். கண் மருத்துவர் ஆர்.மஹாலிங்கம் தற்செயலாக கு.ப.ரா.வை பார்க்க வந்தவர், கால் வீக்கத்தின் தீவிரம் உணர்ந்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு காங்கரின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. `காலின் சதைகள் உயிரற்றுவிட்டன. உடனே முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களையும் எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து’ என்று மருத்துவர்கள் கூறினர். தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சுவும் அப்போது மருத்துவமனையில் கு.ப.ரா. உடனிருந்தனர். இருவரும் மிகவும் கெஞ்சிக் கேட்டும் பிறகு கோபப்பட்டுக் கூறியபோதும் கு.ப.ரா. `ஆப்ரேஷன்’_க்கு மறுத்துவிட்டார். அவர் நனைந்த கண்களுடன் தி. ஜானகிராமனிடம் சொன்னார்: ``Let me die a peaceful death’’.

  42வது வயதில் 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் காரிலேயே கு.ப.ராஜகோபாலன் உயிர் பிரிந்துவிட்டது.

_ தளவாய் சுந்தரம்

0 comments: