நகுலன்
வழக்கம்போல்
வழக்கம் போல் வெளி வாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கின்றான்.
அந்தி மயங்கும் வேளை--_ -
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர_சக்தி அவனை ஆட்கொள்
கிறது.
வெயில் மறைகிறது.
நிழல் மெல்ல மெல்ல இல்லாமல்
ஆகும் நேரம் நெருங்குகிறது.
இலைகளும் மரங்களும்
மங்கலாக மயங்கிக் கிடக்கும்
தோற்றம். தென்னை மரத்தின்
உச்சியில் ஒரு ஒற்றைக்
காகம் மெல்லக் கா கா என்று
குரல் கொடுக்கிறது. கையெழுத்து
மறையும் வேளை என்று
சொல்கிறார்கள். பிரமலிபியும்
என்று கூடச் சொல்லத் தோன்
றுகிறது. 'பட்'டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் 'கப்'பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு -
எல்லாமே மறைகின்றன.
எங்கும் 'திட்டு' 'திட்டாக'
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.
தன் மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.
ஸ்டேஷன்
ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் அவனை
விடுவித்துக்கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது,
* * *
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.
கடைசிக்கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்.
0 comments:
Post a Comment