கரிச்சான் குஞ்சு
(1990_ல் வானதி பதிப்பகம் வெளியிட்ட `கு.ப.ரா.’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கு.ப.ரா. சிறுகதைகள் பற்றிய நீளமான கட்டுரையின் சுருக்கம்)
எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ காண முடியாது. மென்மையான குழந்தை உள்ளமும், பெண்மையின் பிடிவாதமும், அழகும் கொண்ட அற்புதமான நடையுடன் அவரது ஒவ்வொரு கதையும் தனித்தனி உலகங்களாக இப்பொழுதும் சுழல்கின்றன. வாழ்வில் காணும் உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே கு.ப. ரா கலையின் தனித்துவம்.
வாழ்க்கையின் ஆழங்களுக்கு, அனாயசமான பல தளங்களுக்கு மிகச் சாதாரணமாக தனது வாசகனை அழைத்துச் சென்று வாழ்வின் மூலாதாரங்களை அதன் முழு வேகத்துடன் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கு.ப.ரா. சிக்கல்கள் நேரும்போது முடிச்சுகளை அவிழ்க்க அவனுக்கு வழி சொல்லித் தந்ததில்லை, புதியதோர் வாழ்க்கையைக் கனவு காண வைக்கவில்லை, கோஷங்களை எழுப்பவில்லை. ஆனால், வாழ்வின் சாதாரணங்களை எளிமையை, சிறிய சம்பவங்களின் மூலமாக நுட்பமான இலக்கிய சாதனைகள் மூலமாக மிக உயர்ந்த தளங்களுக்கு வாசகனை உயர்த்தினார். எனவேதான் அவரது கதைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பொழுதும் புத்தம் புதியதாய், அழகாய், இளமையாய், துடிப்பும் உணர்வும் நிறைந்து ததும்பும் புதுமைகளாய் இருக்கின்றன.
ஒடுக்கப்பட்டு, ஒடுங்கி வீட்டின் மூலையில் நிறுத்தப்பட்ட விக்கிரகங்களாக, மாலையிட்டு, கட்டிலில் கிடத்தப்பட்ட அடிமைகளாக சமையலறையின் மூலையில் புகையும் எண்ணெயில் வேகும் பெண்களை, கு.ப.ரா. சித்தரித்த விதம் எளிமை, பின்பு யாருக்கும் கைவராதது. ஏறத்தாழ நூறு அல்லது நூற்றி இருபத்தி ஐந்து கதைகளை அவர் எழுதியிருக்கலாம். வாழ்வில் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத அதே கணத்தில் ரசக்குறைவான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், சிக்கனமான வார்த்தைகளை உபயோகித்து எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள அவரால் முடிந்தது.
தமிழில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் இன்றும் சிறுகதை என்பதை ஏதோ ஒரு சிறு சம்பவம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சம்பவம் ஒரு செய்தியாகலாம் ஒரு சிறுகதை ஆக முடியாது. ஆனால், அன்றே சிறுகதை உருவ பிரக்ஞை கு.ப.ரா. கதைகளில் நிலைபெற்றிருக்கும் விதம் ஆச்சரியமும் அபூர்வமும் கூடியது. இந்த உருவப் பிரக்ஞையை கடைசிவரை அவர் காப்பாற்றி வந்தார்.
ஆணைக்கண்டு பெண் அஞ்சுவதும், பெண்ணைக் கண்டு ஆண் வெறிப்பதும், முறைப்பதும், இச்சை-யில்லாத இடங்களில் உற்றுப் பார்ப்பதும் இருபாலாரிடமும் காணப்படும் மனோபாவம். இந்த மனோபாவத்தை மனித மனங்களின் ரகசியங்களைத் தேடித் துருவி எழுதிக் காட்டிய கதை கனகாம்பரம். கட்டுப்பெட்டியான கிராமத்துப் பெண் பேசியது மட்டும் அல்ல, வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்து விட்டாள். வந்தவனுக்கு திகைப்பு, ஆச்சர்யம்; ஏதோ ஒரு ரசக்குறைவு; நடக்கக் கூடாது நடந்துவிட்ட பதைபதைப்பு. கணவன் இல்லாத வீடு, நாகரிகமே என்றாலும் தனி பெண்; வந்தவன் நிலைகுலைந்து விட்டான். வெளிச்சம் கண்கூச வைத்துவிட்டது. அவள் இருக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவசரமாக பாய்ந்து வெளியேறினான் அவன். அவளுக்குத் திகைப்பு. உட்காரச் சொன்னது தவறா? அவன் ஏன் ஓடவேண்டும். தடால் என்று கதவு திறக்கும் சத்தம். கணவனுக்கு நிகழ்ந்தது கேள்விப்பட்டு ஆத்திரம் பொங்கியது. “உள்ளே வந்து உட்காரச் சொன்னாயா-?’’ என்று அழுத்தி கேட்கிறான். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. “நீ என்ன சொன்னே சினேகிதங்கிட்ட’’
“ஒண்ணும் சொல்லலியே, இப்ப வந்துடுவார் என்று சொன்னேன்’’
“அதற்காக உள்ளே வந்து உட்காரச் சொல்லணுமா?’’
1940களில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய விசயமாகவும், இன்றைக்கு அப்படியொன்றும் முக்கியத்துவமான விசயம் அல்ல என்றும் மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தெரியலாம். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்றென்-றைக்குமாக நிகழும் இந்த மனோ விசித்திரங்கள், சமுத்திர புயல் என்றைக்கும் சாதாரணமானது அல்ல. மிகச் சிறிய சம்பவம் ஒன்றை அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்கட்சியைத் தாக்காமல், உலக இயல்பு மாறாமல் இந்தக் கதையை கு.ப.ரா. உருவப் பிரக்ஞையுடன் சாதித்து இருக்கிறார். அவர் சொல்வதற்கு மேலும் இந்தக் கதையை ஒரு வார்த்தைக்கூட நகர்த்த முடியாது. இந்த இடத்தில் இப்படித்தான் முடியும், முடியவேண்டும் என்ற உருவ அமைப்பு இந்தக் கதையில் மட்டும் அல்ல கு.ப.ராவின் அனைத்துக் கதைகளிலும் காணப்படும் அதிசயமாகும்.
பெண்களைப் பற்றி, கு.ப.ரா. கதைகளில் காணப்படும் நுட்பமான இந்த இலக்கிய விளைவுகளைத் தமிழில் வேறு எந்த இலக்கிய ஆசிரியர்களும் சாதித்தது கிடையாது. பெண்களின் குறிப்பாக தமிழ்ப் பெண்களின் மனப்பூட்டுகளைத் திறப்பதற்குரிய சாவிகளைத் தமது கதைகளில் பெரும்பாலும் சாதுர்யமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர். ஆணும் மற்றொரு ஆணும் சினேகமாக இருப்பதுபோல் இன்றும், ஒரு பெண்ணும் ஆணும் சினேகமாக இருக்க முடியாதா-? என்ற கேள்வியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தக் கதை எதிரொலி செய்துகொண்டே இருக்கும்.
இந்தக் கதை மட்டுமல்ல கு.ப.ராவின் ஏனைய மற்றக் கதைகளும் குறிப்பாக நூருண்ணிசா, ஆற்றாமை, விடியுமா, பண்ணை செங்கான், பாலம், சிறிது வெளிச்சம்_ அவர் ஒரு மிகச் சிறந்த தொடக்கம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
சிறிது வெளிச்சம் கதையில் சாவித்திரி வாழ்வு இருண்டு கிடக்கிறது. புருஷன் பகல் முழுவதும் வீட்டில் இருக்கமாட்டான். இரவில் இருப்பதாக பெயர் பண்ணுவான். பெரும்பாலும் ராத்திரி 2 மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். பக்கத்து வீட்டில் கதை சொல்லும் எழுத்தாளன் குடியிருக்கிறான். தினமும் சாவித்திரியை அவன் கணவன் போட்டு அடிக்கிறான், உதைக்கிறான். ஒருநாள் இதுபோல் சாவித்திரியை அடித்துவிட்டு புருஷன் பின் வருமாறு சொல்லிவிட்டு வெளியே போகிறான். சாவித்திரி கதை சொல்லும் எழுத்தாளன் வீட்டிற்குள் வருகிறாள். இனி கதையிலிருந்து...
“நான் இங்கே படுத்துக் கொள்ள முடியாது. சோலி இருக்கிறது’’, என்று அந்த மனிதன் வெடுக்கென்று புறப்பட்டான். என்ன மனிதனவன், அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை. சாவித்திரி உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற் கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என்முன் நின்றது. நல்ல யௌவனத்தில் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேநீர் பார்த்ததுபோல் தென்பட்டது. 18 வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்கிறோமே அது மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்துளிர்கள் போல் இருந்தன. அப்பொழுது தான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளை நன்றாகப் பார்த்தேன். கண்களுக்கு இதமான மெல்லிய பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒளி அவள் தேகத்தில் இருந்து வீசிற்று. தாழ்ப்பாள் விடுபடும் சத்தம் கேட்டது. நான் படுக்கையில் இருந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போல் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.
“வேண்டாம் விளக்கு வேண்டாம் அணைத்து விடுங்கள் அதை’’ என்றாள் அவள்.
உடனே அதை அணைத்துவிட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். புருஷன் ஒருவிதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சர்யம்.
“உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேன் என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.’’
“அம்மா...’’
“என் பெயர் சாவித்திரி.’’
“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப்போய் விட்டது?’’
“இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது? பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை, குருவி போலத்தான் மனிதர்களும்... இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?’’
“புருஷன்....’’
“என்னடா இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா! புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண்கள் புதிதாக இருக்கிறாள்... பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...’’
“நீங்கள் அப்படி...’’
“நீங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள், நீங்கள்தானே பெரியவர். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும் எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா?’’
“இல்லை.’’
“ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’’
வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில் தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்து துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவனாக இருந்தன.
“அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக் கொண்டு...’’
“இனிமேல் என்னை என்ன செய்துவிடப் போகிறான். கொலைதானே செய்யலாம்?- அதற்குமேல்?-’’
“நீ இப்படி பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்குப் புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்...’’
“நல்ல வார்த்தையா-? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?’’
“பின் என்ன செய்யப் போகிறீர்கள்?’’
“என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை_ அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிறவரை அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.’’
“அடடா, இப்படியேயா!’’
“வேறு வழி என்ன இருக்கிறது?’’
என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை.
“என்ன? பதில் இல்லை?’’ என்று அவள் சிரித்தாள்.
“நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?’’ என்று திடீரென்று கேட்டேன்.
“கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே, சில மாதங்களுக்குப் பிறகு...?’’
“என்ன சாவித்திரி...’’
“அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும் போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புதுமுகத்தைப் பார்ப்பீர்கள்...’’
“நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்போது நானும் பேசலாமா?’’
“தாராளமாக’’
“என்னைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது.’’
“அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்ற உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு அழகு கொடுக்காது...’’
“நீ எப்படி அந்த மாதிரி பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?’’
“எப்படியா? என் புருஷனைப் போல என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல; கிழவியல்ல; நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்கிறேன்... மிருக இச்சைக்குப் பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?’’
“சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?’’
“எது சுகம்? நகை போட்டுக் கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப் பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர். புடவை, ரவிக்கை_ நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி, சரீர சுகம்; நான் ஒரு நாளும் அடையவில்லை இதுவரையில்.’’
“அதாவது...’’
“என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக் கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’’
“பின் எதைத்தான் சுகம் என்கிறாய்?’’
“நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும்கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலும் என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்?’’
“உன் புருஷன் ஏன்...?’’
“என் புருஷனுக்கு என் சரீரம் சலித்து போய்விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.’’
“சாவித்திரி! தைரியமாக ஒன்று செய்யலாமே.’’
“நான் எதையும் செய்வேன்; ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம், அவ்வளவுதான்.’’
உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்துப் பார்க்கிறேன்.
“வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கி விட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்கு என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.’’
“எது சொன்னாலும்...’’
“ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.’’
நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.
“நான் போய் படுத்துக் கொள்ளட்டுமா.’’
“தூக்கம் வருகிறதா?’’
“தூக்கமா? இப்பொழுது இல்லை.’’
“பின் சற்றுதான் இரேன்.’’
“உங்கள் தூக்கமும் கெடவா?’’
“சாவித்திரி...’’
“நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.”
“நிஜமா!’’ என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
“பொய் சொன்னால்தான் நீ உடனே...’’
“அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்!’’
“சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.’’
“அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக்கட்டும், என் கட்டை சாய்ந்த பிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.’’
“ஏன் அப்படி சொல்லுகிறாய்?’’
“இல்லை, இனிமேல் இந்தச் சரீரம் என் சோகத்தை தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கே ஒரு திருப்தி ஏற்படுகிறது.’’
“நான் சொல்லவில்லையா?-’’ என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக் கொண்டேன். அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் சாய்ந்து கொண்டாள்.
இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததைப் பூசி, மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.
மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்தேன், என் படுக்கையில்! அப்பொழுதும், அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகசியங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்து போனது போல பிரித்தபடியே கிடந்தன.
திடீரென்று “அம்மா! போதுமடி!’’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.
“சாவித்திரி, என்னம்மா?’’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்.
“போதும்.’’
“சாவித்திரி விளக்கு...’’
அவள் திடீர் என்று எழுந்து உட்கார்ந்தாள்.
“ஆமாம். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இந்த வெளிச்சம் போதும்!’’ என்று எழுந்து நின்றாள்.
“நீ சொல்லுவது அர்த்தமாகவில்லை சாவித்திரி.’’
“இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக் கொள்ளுங்கள்.’’
“ஏன்... ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்.’’
“ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக்கூடாது. ஆபத்து’’ என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டு சிறிதும் தயங்காமல் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.’’
சட்டென்று என் உள்ளத்திலும் எரிந்த விளக்கு அணைந்தது.
`போதும்.’
போதும்__எது போதும் என்றாள். தன் வாழ்க்கையையா? துக்கமா? தன் அழகா, என் ஆறுதலா அல்லது இந்தச் சிறிது வெளிச்சமா?’ என்று முடிகிறது கதை.
இதுதான், இவைதான் கு.ப. ராஜகோபாலன் சிறப்பு.
0 comments:
Post a Comment