Labels

அசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)

Search This Blog

ந.பிச்சமூர்த்தி

Labels: ,

* * *
சிறுகதை படைப்பாளியாகவே ஆரம்பத்தில் தமிழில் அறிமுகமானார் பிச்சமூர்த்தி.
பின்னர் பாரதி சோதனை செய்து பார்த்த வசன கவிதை முயற்சியைத் தொடர்ந்து புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வகையில் தமிழ்ப் புதுக் கவிதையின் தந்தை என்று அறியப்பட்டவர். என்றாலும் காலத்தை கடந்து இன்று முக்கியனவாக இருப்பன அவரது கவிதைகளைவிட கதைகளே. மரபு வழிப்பட்ட மனோபாவத்தின் வெளிப்பாடுகளாக அமைந்தபோதிலும் இவரது கதைகள் மனிதனின் மேன்மைகளையும் மனித நேயத்தையும் வலியுறுத்துவன.

  clip_image001பிச்சமூர்த்தி ஆகஸ்ட் 15, 1900ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். தகப்பனார் நடேச தீக்ஷிதர். ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்தியம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். அவர் காலமாகியபோது பிச்சமூர்த்திக்கு ஏழு வயது. பிறகு கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்புறம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தத்துவத்தைப் பாடமாக எடுத்து பி.ஏ. முடித்தார். அதன்பின் சென்னைச் சட்டக்கல்லூரியில் பிளீடர்ஷிப் படிப்பையும் முடித்தார். 1925ஆம் ஆண்டு பிச்சமூர்த்திக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சாரதா. 1924 முதல் 1938 வரை கீழ் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இக்காலங்களில் கும்பகோண நகரசபை கவுன்சிலராகவும் பிச்சமூர்த்தி இருந்தார். பிறகு பதினெட்டு ஆண்டுகாலம் தொடர்ந்து இந்து மத அறநிலையப் பாதுகாப்பு போர்டு அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் ‘ஹனுமான்’, ‘நவ இந்தியா’ பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1938ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘ஸ்ரீராமானுஜர்’ திரைப்படத்தில் பிச்சமூர்த்தி ஆளவந்தார் வேடத்தில் நடித்தார்.

  பிச்சமூர்த்தி ஆத்மீகச் சிந்தனைகள் மீதும், காந்தீயத்திலும் ஈடுபாடு கொண்டவர். 1935ஆம் ஆண்டு திருவண்ணாமலைச் சென்று ரமண மகரிஷியைப் பார்த்தபோது “துறவறம் கொள்ளவேண்டும் என்ற உந்துதல்’’ இருந்ததாக பிச்சமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இளமையிலேயே காந்தீய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதிலும், நகரச் சுத்திகரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். பிச்சமூர்த்தியின் இளம் வயது தொட்டு கு.ப. ராஜகோபாலன் அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தார்.

  ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதிய பிச்சமூர்த்தி, பின்னர் பாரதி இலக்கியத்துடன் ஏற்பட்ட தொடர்பால் தமிழில் எழுதத் தொடங்கினார்.

  பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்ச் சிறுகதை ‘ஸயன்ஸுக்குப் பலி’ 1932ஆம் ஆண்டு கலைமகளில் பிரசுரமானது. முதல் கவிதை ‘காதல்’ 1934ஆம் ஆண்டு வெளியானது. கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற ‘முள்ளும் ரோஜாவும்’ கதைதான் பரவலான அறிமுகத்தைப் பிச்சமூர்த்திக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கலைமகள், வ.ரா. ஆசிரியராக இருந்த மணிக்கொடி, பின்னர் ராமையாவின் மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகியவற்றில் பிச்சமூர்த்தியின் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 1934 முதல் 1947 வரை புதுக்கவிதை முயற்சிகளை மேற்கொண்ட பிச்சமூர்த்தி சிறு இடைவெளிக்குப் பிறகு 1959இல் செல்லப்பாவின் ‘எழுத்து’வில் அதனைத் தொடர்ந்தார். நாடகம், மனநிழல் என்ற தலைப்பில் கட்டுரைகள், சிறுவர்களுக்கான கதைகள், ஓரங்க நாடகங்கள், மற்றும் இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார். பிக்ஷு, ரேவதி ஆகியவை பிச்சமூர்த்தியின் புனைபெயர்கள்.

  பிச்சமூர்த்தியின் புத்தகங்கள் முறையே, பதினெட்டாம் பெருக்கு (1944); காளி (1946); ஐம்பரும் வேஷ்டியும் (1947); மோகினி (1951); குடும்ப ரகசியம் (1959); பிச்சமூர்த்தியின் கதைகள் (1960); மாங்காய்த் தலை (1961); வழித்துணை (1964); குயிலின் சுருதி (1970); காக்கைகளும் கிளிகளும் (1977); மனநிழல் (1977); பிச்சமூர்த்தி கவிதைகள் 1985ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. ஆகஸ்ட் 15, 2000_த்தில் பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மதி நிலையம் பிச்சமூர்த்தியின் மொத்தக் கதைகள் மற்றும் கவிதைகள் அடங்கிய மூன்று புத்தகங்களைக் கொண்டு வந்தது. சாகித்திய அக்காதமி தமிழ்ப் பிரிவு வெங்கட் சாமிநாதன் தொகுத்த தேர்ந்தெடுத்த கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்தது.

  1976ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் பிச்சமூர்த்தி காலமானார்.

0 comments: